யோகாவில் 200 ஆசனங்கள் அத்துப்படி. அசத்தும் மாணவ ஆசான்.!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 16 Second

12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது கலாச்சாரத்தில் தோன்றிய யோகா எனும் அற்புதக்கலை இன்றும் மனித நல்வாழ்வுக்கான வழிகாட்டியாக திகழ்சிறது. உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி உறுதிக்கு துணை நிற்கும் இந்த அரிய கலை குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும் என்பதற்காகவே, ஐநா சபை ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி யோகாவில் ஆர்வம் காட்டுபவர்களில் 50சதவீதம் பேர், 50 வயதை கடந்தவர்களாகவே உள்ளனர். இளைஞர்களிடம் யோகா குறித்த ஆர்வம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதிலும் மாணவர்களை எடுத்துக்கொண்டால் யோகா என்றால் இது எந்த விளையாட்டு என்று கேட்கும் நிலைதான் நீடிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் யோகாவில் 200க்கும் மேற்பட்ட ஆசனங்களை அசார்த்தியமாக செய்து காட்டி அசத்துகிறார். 16வயது நிரம்பிய மாணவர் நவீன்ராஜ்

தேசிய அளவிளான யோகா போட்டியில் 4 தங்கப்பதக்கம் வென்ற நவீன்ராஜ், அடுத்து பாங்காங்கில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க ஆயத்தமாகி வருகிறார். பத்மாசனம், சிரசாசனம், சாந்தியாசனம், நித்ராசனம், சர்வாங்காசனம், கூர்மாசனம், பவனமுக்தாசனம், சலபாசனம், மயூராசனம், காலாசனம், திரிகோணாசனம், பத்மசிராசனம், என்று ஆசனங்களில் முத்திலை பதித்து மாணவ ஆசானாக உருவெடுத்து விழிகளை வியக்க வைக்கிறார் நவீன்ராஜ்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்களை எம்எஸ்எம் கார்டன் பகுதியைச் சேர்த்த வரதராஜன்- கீதா தம்பதிகளின் மகன் நவீன்ராஜ். தந்தை எல்ஐசியில் டெவலப்மென்ட் ஆபீசர். தாயார் கீதா இல்லத்தரசி. இந்த மாணவரின் இதயத்தில் யோகா எப்படி இடம் பிடித்தது? மனம் திறக்கிறார் நவீன்ராஜ்.

எனது தந்தை வரதராஜன், ஊத்தங்கரையில் உள்ள யோகா மையத்திற்கு தினமும் செல்வார். எனது எட்டாவது வயதில் பொழுதுபோக்குக்காக அந்த மையத்திற்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் செய்த ஆசனங்கள் எனது கவனத்தை ஈர்த்தது. அதை வீட்டுக்கு வந்து நானே செய்து பார்க்க முயற்சித்தேன். எனது ஆர்வத்தை கண்ட பெற்றோர் எனக்கு ஊக்கமளித்தனர். இதன் காரணமாக 2010 ல் ஓசூரில் நடந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் 3ம் பரிசு கிடைத்தது.

இதன் பிறகு யோகா ஆசிரியர் ஒருவரிடம் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் பெற்ற பயிற்சி 2010 ல் திருப்பூரில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் எனக்கு 2வது இடத்தை பெற்றுத்தந்தது. அதே வருடம் டெல்லி மற்றும் திண்டுக்கல்லில் நடந்த தேசிய போட்டிகளில் முதல்பரிசு மற்றும் தங்கப்பதக்கத்தை வென்றேன். என்னை பொறுத்த வரை முதலில் யோகாவின் மீது ஒரு ஈர்ப்பு நண்பர்களும் தங்களுக்குள்ள சிறிய உடல் பாதிப்புகளை கூறி, அதற்கு யோகாவில் தீர்வு உள்ளதா? என்று கேட்பார்கள்.

அப்படி கேட்ட சிலருக்கு நான் சொல்லிக் கொடுத்த ஆசனங்கள், நோயிலிருந்து நிரந்தர தீர்வை தந்ததாக கூறினர். அதுவே இந்த கலைக்குரிய மகிமை என்று கருதுகிறேன். மாநில அளவிலும், தேசிய அளவிலும் இதுவரை 10க்கும் மேற்பட்ட பரிசுகள் பதக்கங்களை வென்றாலும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதே தற்போதைய இலக்காக உள்ளது.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று பெரியோர்கள் சொல்வார்கள். நிச்சயமாக இந்த சொல் யோகாவுக்கு மிகவும் பொருந்தும். குழந்தை பருவத்தில் இருந்தே ஆர்வமாக இதை கற்றால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். வயது முதிர்ந்த காலத்தில் நல்ல உடல்நலத்திற்கு வழிவகுக்கும்.

பள்ளி பருவத்தில் மாணவர்களுக்கு பல்வேறு மனஉளைச்சல்கள் இருக்கும். படிப்பை பாதிக்காத வகையில் நாம் தினமும் அரைமணி நேரம், ஏதாவது ஒரு யோகாசனத்தை செய்தால் மனது ஒருமுகப்படும். கவனச்சிதறல்கள் குறைந்து, நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்பதற்கு நானே முக்கிய சாட்சி. வருங்காலத்தில் டாக்டராக வேண்டும். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் பயனளிக்கும் யோகாவின் பெருமைகளை மக்களிடம் சொல்லி மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்பதே லட்சியம் என்று நிறைவு செய்கிறார்…

சாந்தியாசனம்

மூளைக்கு நல்ல ஓய்வை கொடுத்து உடல் முழுவதையும் உறுதிப்படுத்தி ஊக்கமளிக்கிறது.

நித்ராசனம்

உடலில் உள்ள ஒட்டு மொத்த சுரப்பிகளையும் ஒரே சீராக இயக்குகிறது. அடைப்பட்ட வியர்வை கண் திறக்கப்பட்டு உடலில் இருந்து துர்நீரை வெளியேற்றுகிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால் இதை நீக்கி ரத்தத்தை சீராக பாயச் செய்கிறது.

பவனமுத்தாசனம்

வாயுத்தொல்லையை நீக்கி, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடை தொப்பையை குறைத்து வயிற்று பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

புஜபாதபீடாசனம்

அதிக உடல் எடை கொண்டவர்கள், தொடர்ந்து வானம் ஒட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கு முதுகுதண்டு பாதிப்பு, எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படும். இதனால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்துகிறது. இதே போல் அனைத்து ஆசனங்களுக்கும் ஒரு பலன் உள்ளது என்கின்றனர் யோகா கலை வல்லுநர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…!! (மருத்துவம்)
Next post அசத்தல் பேச்சு தெறிக்கவிட்ட சீமான்!! ( வீடியோ)