விடுதலைப் புலிகள் தாக்கும் அபாயம்: சொந்த ஊரை காலி செய்து தீவுக்கு தப்பிய 1400 முஸ்லிம்கள்

Read Time:3 Minute, 23 Second

MUTTUR_PHOTOS_1.jpgவிடுதலைப் புலிகள் திடீரென தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்பட 1400 முஸ்லிம்கள் மூதூரில் உள்ள சொந்த வீடுகளைவிட்டு கிண்ணியா தீவில் தஞ்சம் அடைந்துள்ளனர். மூதூர் நகரம் இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து கிழக்கே 230 கிமீ தொலைவில் உள்ளது. இந்த பகுதி முஸ்லிம்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் தேடிச் செல்வது ஆகஸ்டிலிருந்து இது இரண்டாவது முறையாகும்.

ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஏராளமானோர் இறந்ததால் பாதுகாப்பு கருதி ஏற்கெனவே வீடுகளை விட்டு வெளியேறி இருந்தனர் மூதூர் பகுதி முஸ்லிம்கள். 2 வாரங்களுக்கு முன்புதான் மீண்டும் சொந்த இடம் திரும்பினர்.

இப்போது மறுபடியும் வெளியேறுகின்றனர். தற்போது சுமார் 1400 முஸ்லிம்கள் கிண்ணியா தீவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஆயிரக்கணக்கானோர் அந்த தீவை அடைய, மூதூர் கடற்கரையில் திரண்டுள்ளனர். படகு கிடைத்ததும் அவர்கள் தீவு வந்து சேருவார்கள். வீடுகளை விட்டு வெளியேறியதால் இவர்களில் பலர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சியையும் கைவிட நேர்ந்துள்ளது.

புலிகளின் துண்டுப்பிரசுரம்

மூதூர் பகுதி தற்போது அரசின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. எனவே ராணுவத்தை விரட்டி அடிக்கும் நோக்கில் திடீர் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்து விடுதலைப் புலிகள் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர்.

இதை அறிந்த தவ்பீக் (50) தனது மனைவி, 6 குழந்தைகளுடன் மூதூரை காலி செய்துவிட்டு கிண்ணியா தீவுக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தார். இந்த தீவில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்று தாற்காலிக புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பேர் இந்த தீவுக்கு வருவதற்காக காத்திருக்கின்றனர். ஆனால் மூதூரிலிருந்து வெளியேற தற்போது யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது என்றார் தவ்பீக்.

இதனிடையே, மூதூரிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறுவதை தடுக்க உள்ளூர் தலைவர்களுடன் அதிகாரிகள் சனிக்கிழமை பேச்சு நடத்தினர். அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

MUTTUR_PHOTOS_1.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post `நடனக்கலையில் முத்திரை பதித்தவர்’ பத்மினியின் வாழ்க்கை குறிப்பு
Next post இலங்கை முன்னாள் தமிழ் எம்.பி.க்கள் குழு டெல்லி வந்தது