50 வயதை நெருங்கும் பெண்ணா நீங்கள்? (மகளிர் பக்கம்)
பெண்களின் முக்கியமான காலம் பருவமடையும் காலம். இந்த காலத்தை கூட சமாளித்து விட முடியும். ஆனால் மெனோபாஸ் என்ற கட்டத்தை கடக்கும் போது மனரீதியாக பல பிரச்னைகளை சந்திக்க வேண்டும். என் வயது 50. நானும் இப்போது அந்தக் கட்டத்தில் தான் இருக்கிறேன். என்னால் முன்பு போல சகஜமாக இருக்க முடியவில்லை. யாரை பார்த்தாலும் அவர்கள் மேல் கோபம் கொள்கிறேன். ஒரு வித எரிச்சல் ஏற்படுகிறது. இந்த மெனோபாஸ் பிரச்னையில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வினை கூறுங்கள்.
– கஜலட்சுமி, ராமநாதபுரம்
‘‘ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும் போது அவள் கர்ப்பப்பையில் லட்சத்துக்கும் மேற்பட்ட கருமுட்டைகள் இருக்கும். பருவமடைந்த பிறகு ஒவ்வொரு மாதம் ஒரு கருமுட்டை உடையும். பெண்ணின் நாற்பதாவது வயதில் சராசரி பத்தாயிரம் கருமுட்டைகள் தான் இருக்கும். இந்த கருமுட்டைகள் குறைந்து முற்றிலும் இல்லாமல் போகும் போது தான் ஒரு பெண் மெனோபாஸ் கட்டத்தை அடைவாள்” என்கிறார் மகப்பேறு நிபுணர் டாக்டர் ராதாபாய். “மெனோபாஸ் பெரும்பாலும் 45 முதல் 50 வயதுக்குள் தான் ஏற்படும்.
இந்த நிலை ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் தென்படும். சின்ன சின்ன விஷயத்திற்கு கோபப்படுவார்கள். தலைவலி, படபடப்பு, ஒரு வித பய உணர்வு, மனச்சோர்வு போன்ற பிரச்னை ஏற்படும். இந்த அறிகுறிகள் குறைந்த பட்சம் இரண்டு வருஷங்கள் இருக்கும். அதன் பின் நாளடைவில் குறைந்து அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பிவிடுவார்கள். பொதுவாக பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். இது பெண்களின் பாதுகாப்பு வளையம்ன்னு சொல்லலாம். இது குறையும் போது உடல் எடை அதிகரிக்கும், முடி கொட்டும், சருமத்தில் சுருக்கம்.
எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்த காலக்கட்டத்தில் எலும்பு தேய்மானம் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னையால் மூட்டுவலி, உடல்வலியால் அவதிப்படுவார்கள். சாதாரணமாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே தரையில் நடக்கும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். டாக்டரின் ஆலோசனைப் படி கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். உணவில் பால், முட்டை, கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
கால்சியம் உடலில் சேர விட்டமின் டி அவசியம். அதனால் காலை மற்றும் மாலை நேர சூரிய வெளிச்சத்தில் நடப்பது நல்லது. சூரிய ஒளி நம் மேல் படும்போது அது நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை அதிகரிக்க உதவும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும் வரை பெண்களுக்கு மாரடைப்பு போன்ற பிரச்சனை ஏற்படாது. இந்த ஹார்மோன் ஹைடென்சிட்டி லைப்போ புரோட்டீன் என்ற புரதத்தை வெளியேற்றும். இது உடலில் சேரும் கெட்ட கொழுப்பை நீக்கும் வல்லமை கொண்டது. மெனோபாஸ் காலத்தில் இந்த வேலையை ஈஸ்ட்ரோஜென் செய்யாது. அந்த சமயத்தில் பெண்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்து வருவது நல்லது.
இதன் மூலம் இருதய பிரச்னையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஈஸ்ட்ரோஜென் இதயத்திற்கு மட்டுமில்லை மூளை செயல்பாட்டிற்கும் அவசியம். ஹார்மோன் குறைவதால், மறதி, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற மனரீதியான பிரச்னைகள் ஏற்படும். பிறப்புறுப்பில் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதற்கான பிரத்யேக கிரீம் உள்ளது. அதனை பயன்படுத்தினால் தொற்று பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.
பெண்களுக்குத் தேவையான ஈஸ்ட்ரோஜென் சோயாவில் உள்ளது. மெனோபாசுக்கு பிறகு வாரம் 50 கிராம் சோயாவை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
அதிக அளவு காபி, மசாலா மற்றும் காரம் நிறைந்து உணவினை தவிர்ப்பது நல்லது. வெயில் காலத்தில் பருத்தி உடைகள் அணியலாம். தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். இதனால் சரும பிரச்னை ஏற்படாமல் இருக்கும். மெனோபாஸ் காலத்தில் பெண்கள் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளலாம். அது அவர்களுக்கு மனரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். மெனோபாஸ் என்பது எல்லா பெண்களும் தங்களின் வாழ்நாளில் சந்திக்கக் கூடிய தருணம். அதை மனதைரியத்துடன் மற்றும் ரிலாக்சாக எதிர்கொள்ளுங்கள்’’ என்கிறார் மகப்பேறு நிபுணர் டாக்டர் ராதாபாய்.
Average Rating