#No Makeup Movement!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 51 Second

தென் கொரியாவில், #No Makeup Movement மற்றும் Escape the Corset என்ற இயக்கம் மக்களிடம், குறிப்பாக பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கார்ஸட் (Corset) என்பது, பெண்கள் அணியும் இறுக்கமான ஆடை. இது பெண்களுக்கு நல்ல வடிவம் தரும் தான். ஆனால் மிகவும் இருக்கமாக இருப்பதால் அசௌகரியமாகவும் ஆரோக்கியமற்றதாகவும் இருக்கும். இப்படி பெண்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் இறுக்கமான அழகியல் நிபந்தனைகளில் இருந்து விடுதலை பெறுவதே இந்த போராட்டத்தின் நோக்கம்.

மீடூ போராட்டத்தின் தொடர்ச்சியாக வந்தது தான் இந்த போராட்டமும். தென் கொரியாவை பிளாஸ்டிக் அறுவைசிகிச்சையின் தலைநகரம் என்றே அழைப்பர். நம் ஊரில் தெருவிற்கு ஒரு ப்யூட்டி பார்லர் இருப்பது போல அங்கு தெருவிற்கு ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையங்களை காணலாம். நெடுஞ்சாலைகள், சுரங்கபாதைகள் என எங்குத் திரும்பினாலும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையங்கள் குறித்த பிரமாண்டமான விளம்பர பேனர்கள் இருக்கும். அந்நாட்டின் புகழ் பெற்ற அழகு சிகிச்சை மருத்துவமனை ஒன்றில், ஆண்டுக்கு 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வருவதாகவும், அதில் பாதி வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

நம்மூரில் பார்க் வாசலில் செல்போன் சிம்கார்டுகளுக்கான துண்டு விளம்பரங்கள் போல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பற்றிய துண்டு விளம்பரங்கள் பள்ளி வாசலில் வழங்குவது இங்கு மிகவும் சாதாரணமான விஷயம். ஒரே அறுவை சிகிச்சை மூலம் நீங்களும் டி.வி நடிகைகள் போல் மாறலாம் என்ற விளம்பர நோட்டீஸ்கள் மூலம் பள்ளி மற்றும் டீன் ஏஜ் மாணவிகள் தான் இவர்களின் டார்கெட். அது மட்டும் இல்லை… இங்கு இளைஞர்கள் தங்களின் பிறந்த நாள் பரிசாக பெற்றோர்களிடம் கேட்பது விதவிதமான அறுவை சிகிச்சைகள் என்றால் நம்ப முடிகிறதா!

கண்களை பெரிதாக்க, கன்னங்களை சிறியதாக்க, மூக்கை கூர்மையாக்க, சருமத்தை பளபளப்பாக்க என இதில் பல வகை அறுவை சிகிச்சைகள் உள்ளன. அதில் டீன் ஏஜ் பெண்கள் அதிகம் விரும்பி செய்து கொள்வது இரட்டைக் கண்ணிமை அழகு சிகிச்சை. கொரியாவில் இருக்கும் மக்களுக்கு கண்கள் சற்று இடுங்கி தான் இருக்கும். அதனால் அது பார்க்க சோகமாகவும், சோர்வாகவும் இருப்பதாக அவர்களின் நம்பிக்கை. அதற்கு இவர்கள் கண்டறிந்த தீர்வு தான் இரட்டை கண்ணிமை அறுவை சிகிச்சை. இதனால் கண்கள் விரிந்து, பிரகாசமாக, என்றும் சிரித்த முகத்துடன் இருக்கலாம். இதற்கு பெற்றோர்களும் சம்மதித்து ஆதரிப்பதுதான் வருத்தம்.

சரி, அறுவை சிகிச்சை செய்த பிறகாவது திருப்தியுடன் இருப்பார்கள் என நினைத்தால், அதுவும் இல்லை. பெண்கள் தினமும் மேக்கப் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் இரண்டு மணி நேரம். எந்திரன் சிட்டி ரோபோவுக்கு ஈடாக இவர்கள் மேக்கப் செய்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. தொடர்ந்து அழகை மட்டுமே முன்னிறுத்துவதால் அந்நாட்டு பெண்கள் உடல் மற்றும் மன ரீதியான பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். அதை எதிர்க்கும் விதமாக, தென்கொரிய பிரபல தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் Hyun-ju Yim என்ற பெண் முதன் முதலில் கண்களில் பொருத்தி இருந்த காண்டாக்ட் லென்ஸ்களை நீக்கிவிட்டு, கண்ணாடி அணிந்து செய்தி வாசித்தார்.

இது கொரியாவில் மிகப்பெரிய புரட்சியாகும். இதுவரை பல ஆண்டுகளாக செய்திவாசிப்பாளர்கள் குறிப்பாக பெண் செய்தி வாசிப்பாளர்கள் யாரும் மூக்குக்கண்ணாடி அணிந்து சின்னத்திரையின் முன் வந்ததே கிடையாது. காரணம், ஒருவர் அழகு நிலையங்களிலும், மேக்கப் பொருட்களுக்காவும் தன் சம்பளத் தின் பாதியினை செலவிடுகின்றனர். அது மட்டும் இல்லை… நண்பர்களின் நட்பினை தொடர்வதற்கும் டி.வி நடிகைகள் போல் தங்களை அழகுபடுத்திக் கொள்ள மெனக்கெடுகிறார்கள். Yimயை தொடர்ந்து மற்ற பெண்களும் இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தங்கள் நீண்ட முடியை ஒட்ட வெட்டி, மேக்கப் பொருட்களை சிதைத்து, சமூக வலைத்தளங்களில் தங்களின் எதிர்ப்பை பகிர்ந்து வருகின்றனர்.

மேக்கப்பை முற்றிலுமாக தவிர்த்த பெண்கள், தங்களுக்கு இப்போது அதிக நேரம் இருப்பதாகவும் முக்கியமாக மன அமைதியுடன் இருப்பதாக கூறியுள்ளனர். இந்தியாவில், பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், மேக்கப் இல்லாத தன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இளம் பெண்கள் தன்னை திரைப்படங்களில் பார்த்து அவர்களும் அப்படி இருக்க வேண்டும் என எண்ண வேண்டாம். ஏனென்றால் சினிமாவில் பார்ப்பது நிஜமில்லை எனக் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் தினந்தோறும் உண்ணும் உணவை விட, தன் முகத்தில் பூசப்படும் க்ரீம்கள் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவரைப் போலவே தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா என முக்கிய நடிகைகளும் மேக்கப் செய்வது குறித்து போர்க்குரல் எழுப்பி இருப்பது வரவேற்கத்தக்கது. ஆரோக்கியமான அழகே நிலையான உண்மையான அழகு என உணராமல் பிஞ்சு குழந்தைகளின் மேல் கத்தியை வைத்து அனைவரையும் பார்பி பொம்மைகள் போல் தயாரித்து அனுப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொரியன் பெண்கள் இந்த ஆணாதிக்க சமூக எதிர்பார்ப்புகளை எதிர்த்து விழித்துக் கொண்டு குரல் கொடுப்பது பாராட்டுக்குரியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 99 புள்ளைங்க என் பக்கம் .! ஆபாச வீடியோ இளைஞர் சவால்!! (வீடியோ)
Next post கருவுற்ற காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை என்ன? (மருத்துவம்)