லைட்ஸ்… கேமரா… நான்..! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 55 Second

அவளுக்கு ஆறு வயது தான் இருக்கும். எண்ணெய் வைத்து படிய சீவிய ரெட்டை சடை பின்னல். சுற்றி இருக்கும் மனிதர்களை கண்டு, அச்சம் வெளிப்படும் கண்கள். இவைதான், இவளின் அடையாளம். பள்ளியில் நண்பர்கள் என யாரும் கிடையாது. ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின் போது, கரும்பலகையில் சாய்ந்து் கொண்டு, தனக்கான தனி உலகில் மூழ்கிக் கிடந்தாள். அவள் தோளை யாரோ தட்டிய உணர்வு நெட்டித்தள்ள, ஒரு கணம் அதிர்ந்து போய் திரும்பியவளுக்கு அதிர்ச்சி. அவள் வகுப்பு மாணவிகள் வரிசை யாக நின்று, வகிடு எடுத்து சீவிய அவள் பின்னலையும், தோற்றத்தையும் கிண்டல் பேச்சினால் குத்திக் கிழித்தனர். கூனிக்குறுகிப் போன அந்த சிறுமியின் கண்களில் வழிந்த கண்ணீர், மெல்ல அவள் உதடுகளை நினைத்தது. அந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் அந்த கண்ணீரின் உவர்ப்பு அவள் உடலெங்கும் இறங்குகிறது.

கிண்டலுக்கும் கேலிக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொண்ட, அந்த சிறுமிக்கு இப்போது வயது 27. இன்றோ அவர் ஒரு ரோயிங் சாம்பியன், மேடை நாடகம் மற்றும் சினிமாவில், தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகை. இப்போது, எழுத்தாளர் என்ற அடுத்த தளத்திற்கு தாவியிருக்கிறார். ‘லைட்ஸ் கேமரா ஹியூமன்’ என்ற தலைப்பில், தன் தாழ்வு மனப்பான்மையையும், அதில் இருந்து வெளியேற வாழ்க்கை கற்றுத் தந்த பாடங்களையும், அனுபவங்களையும் தன்னுடைய முதல் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் ‘இறைவி’ படத்தில் நடித்த பூஜா தேவரியா. பூஜா என்பதை விட, ‘மலர்’ என்றால், உடனடியாக கண்டுகொள்ள முடியும். ‘இறைவி’ படத்தில் அவர் நடித்த மலர் என்ற கதாபாத்திரம், பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் மனதிலும் நறுக்கென்று தெறித்தது.

‘‘உண்மையில் நான் ரொம்பவே சாதாரணமான பொண்ணு. நடிகை என்ற அடையாளம் என்னுடைய முகமூடி தான். அதற்குள் மென்மையான பூஜா இன்றும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கா. நான் வாழ்வில் சந்தித்த பல விஷயங்களை தான் என்னுடைய புத்தகத்தில் பதிவு செய்து இருக்கேன். பள்ளி நாட்களில் சந்தித்த கேலிகளிலும், அவமானங்களிலும் இருந்து எப்படி வெளியேறினேன், என் பாதையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் ‘லைட்ஸ் கேமரா ஹியூமன்’ புத்தகத்தில் பதிவு செய்திருக்கேன். ரோயிங் என் உலகமானது. எப்படியாவது ஒலிம்பிக்கில் கலந்துகிட்டு ஜெயிக்கணும்னு பயிற்சி எடுத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு விபத்தினால், என்னால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. ஒரு வருடம் பெட்ரெஸ்ட்ன்னு டாக்டர் சொல்லிட்டார். அந்த வலியில் இருந்து விடுபெற என் கவனத்தை பெயின்டிங் பக்கம் திருப்பினேன்.

நான் பிறந்தது பெங்களூரில் வளர்ந்து படிச்சது எல்லாம் சென்னை. சின்ன வயசில் இருந்தே, கலை மேல காதல் உண்டு. 90களில் அம்மாவிடம் நான் நடிகையாக போறேன்னு சொன்னா, சும்மாவா இருப்பாங்க. அப்பா விளையாட்டு துறையில் இருந்ததால், நான் என்னுடைய கவனத்தை விளையாட்டின் பக்கம் செலுத்த ஆரம்பிச்சேன். கால்பந்து, ஓட்டப் பந்தையம்ன்னு எதையும் விட்டு வைக்கல. என்னதான் நான் எல்லா விளையாட்டிலும் இருந் தாலும் எனக்கான அடையாளம் என்ன என்று எனக்கே தெரியல. கூட இருந்த தோழிகள் எல்லாம், டாக்டர், இன்ஜினியர், ஆடிட்டர், பாடகர்னு ஆளக்கொரு துறையை தேர்ந்தெடுத்து, அதுக்காக தயாராகிட்டு இருந்தாங்க. ஆனா என்னை பொறுத்த வரை, இலக்கில்லாமல் ஓடிட்டு இருந்தேன். அந்த நாள் நான் வாழவேண்டும். அது தான் என் இலக்காக இருந்தது. காரணம், என்னை ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் திணித்துக் கொள்ள முடியவில்லை. ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்பேன். காரணம், நான் என்னவாக வேண்டும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

அந்த சமயத்தில் தான் என் அம்மா என்னை ரோயிங் எனும் படகு சவாரி விளையாட்டில் சேர்த்துவிட்டார். அந்த புது விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது. தேசிய அளவில் பதக்கம் பெற்று இருக்கேன். அந்த விளையாட்டு எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டும் இல்லாமல் எனக்குள் ஒரு தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியது. ஒலிம்பிக்கில் விளையாடணும்ன்னு திட்டமிட்டு இருந்தேன்’’ என்றவரின் வாழ்க்கை, எதிர்பாராத ஒரு தருணத்தில் திசை மாறியது. ‘‘நான் வரைந்த 12 பெயின்டிங்குமே கண்காட்சியில் விற்று தீர்ந்தது. அந்த இடம் எனக்கு வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என எதையும் என்னால் சந்திக்க முடியும் என்ற தைரியத்தை கொடுத்தது. அதன் பிறகு நாடக குழு ஒன்றில் சேர்ந்தேன். எனக்கு அது பிடித்து போனது. என்னால் இனிமேல் ரோயிங் செய்ய முடியாது. அதற்கான மாற்று நடிப்பு என்று தீர்மானித்தேன். எங்களுக்கு சினிமா பேக்ரவுண்ட் கிடையாது.

இருந்தாலும் என்னுடைய ஆர்வத்தை பார்த்து அம்மா பச்சைக் கொடி காட்டினார். நானும் நாடகத்துடன் பயணம் செய்ய துவங்கினேன். நான் நடிக்க மட்டும் இல்லாமல், குழு சம்பந்தமாக எல்லா வேலையும் கற்றுக் கொண்டேன். நாடகத்திற்கான செட் முதல் லைட்டிங் வரை எல்லாம் செய்து இருக்கேன். அதன் பிறகு ‘ஸ்ட்ரே பேக்டரி’ என்ற நாடக குழுவை நான் எடுத்து நடத்தினேன். சினிமாவில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை ஆறு வருடம் அந்த குழுவுடன் இணைந்து பயணித்தேன்’’ என்றவர் கொரிய நாடக குழுவுடனும் இணைந்து செயல்பட்டுள்ளார். ‘‘ஒரு முறை கொரியாவில் இருந்து நாடக குழு சென்னையில் ஆடிஷன் செய்ய வந்திருந்தாங்க. அதில் என்னை தேர்வு செய்தாங்க. சென்னையில் மூணு மாசம் ரிகர்சல் பிறகு சென்னை, பெங்களூர், கொச்சினில் நிகழ்ச்சி நடத்தினோம். அதன் பின் கொரியாவில் 22 நிகழ்ச்சிகள் செய்தோம்.

அந்த நாடகம் திருநங்கை, திருநம்பி போன்ற சிறுபான்மையினர் குறித்த நாடகம். அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் பிரச்னைகளை நாடகம் மூலம் வெளிப்படுத்தினோம். இதில் நான் சலிமா என்ற உண்மையான கதாபாத்திரத்தை ஏற்று நடிச்சேன். ஒருவரின் உண்மையான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது ரொம்பவே வித்தியாசமா இருந்தது’’ என்றவரின் சினிமா வாழ்க்கை, செல்வராகவனின் ‘மயக்கம் என்ன?’ திரைப்படம் மூலம் தொடங்கியது. ‘‘சினிமாவே இருந்தாலும் எனக்கு பிடிச்சு இருந்தா தான் செய்வேன். நான் தேர்வு செய்த ஒவ்வொரு கதாபாத்திரமும் நான் விரும்பி ஏற்றுக் கொண்டது. ‘மயக்கம் என்ன?’, ‘குற்றமே தண்டனை’, ‘இறைவி‘, ‘ஆண்டவன் கட்டளை’, கன்னட படமான ‘கதையுண்டு சுருவாகிதே’ எல்லா கதாபாத்திரமும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமானது.

‘குற்றமே தண்டனை’ அனுப்பிரியா, அப்படியே என்னை பிரதிபலிக்கும் கதாபாத்திரம். எதிர்காலத்தை பற்றி யோசிக்க மாட்டா. நிகழ்காலம் தான் அவளுக்கு எல்லாமே. ‘இறைவி’, மலர்விழி. கணவனை இழந்தவள். இவளால் மற்றவரின் வாழ்க்கை பாதிச்சால், அந்த உறவையே வேண்டாம் என்று உதறிடுவாள். ‘ஆண்டவன் கட்டளை’, ஆர்த்தி இன்டி பெண்டென்ட் பொண்ணு. ‘கதையுண்டு சுருவாகிதே’, தான்யா, எல்லாப் பிரச்னைக்கும் நேரம் பதில் சொல்லும் என்று நினைப்பவள். என்னுடைய கதாபாத்திரம் எல்லா படத்திலும் தனித்து இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை தான் தேடி தேடி தேர்வு செய்கிறேன்’’ என்ற பூஜா, எழுத்தாளர் அவதாரம் பற்றி பேசத் தொடங்கினார். ‘‘அமெரிக்க கான்ஸ்லேட், கல்லூரி மாணவர்களுக்கான இளைஞர் மாநாடு ஒன்றை நடத்தினாங்க. அதில் நான் விருந்தினரா சென்று இருந்தேன். அவர்கள் முன் ஒரு நடிகையா இல்லாமல், நான் வாழ்வில் சந்திச்ச போராட்டங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ள நினைச்சேன். நடிகை, நான் போட்டுக் கொண்டிருக்கும் முகமூடி.

அந்த முகமூடிக்கு பின்னால் நிறைய போராட்டங்கள் இருக்கும். அது யாருக்கும் தெரியாது. இது தான் என்னை புத்தகம் எழுத தூண்டியது. இதில் நான் சந்திச்ச அனுபவங்கள், கேலிகளை பதிவு செய்து இருக்கேன். என்னுடைய வாழ்க்கை பயணம் தான் ‘லைட்ஸ், கேமரா, ஹியூமன்’. இப்ப அடுத்து ஒரு புத்தகம் எழுதிக்கிட்டு இருக்கேன். அது ஒரு நாவல் டைப். இப்பதான் ஆரம்பிச்சு இருக்கேன்’’ என்றவரிடம், வாழ்த்து கூறி விடைபெற்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு!!(மருத்துவம்)
Next post போதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்!! (கட்டுரை)