பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்! (கட்டுரை)
கடந்த 4 மாதங்களாக, இழுப்பறி நிலையில் காணப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் (28), கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கைச்சாத்தானது. இதனால், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை விட, ஒப்பந்தத்துக்குப் பின்னர், மலையகம், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன.
இவ்வாறு எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாள் சம்பளமான ஆயிரம் ரூபாய், கனவாகியே போனது.
முதலாளிமார் சம்மேளனம், இரண்டு பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் என்பவற்றுக்கிடையில், மிகவும் தந்திரோபாயமாக, அலரி மாளிகையில், இந்தக் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டமையானது, தொழிலாளர்களின் தலையில் விழுந்த பேரிடியாகும். இது, மக்களுக்குக் கடும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
காரணம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பக்கமே அரசாங்கம் எப்போதும் இருக்குமென்ற அரசாங்கத் தரப்பினரின் மார்தட்டல்களுக்கு மத்தியில், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி, நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறிந்திருக்காமலில்லை. அனைத்தையும் அறிந்த அவரது மாளிகையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானமையானது, பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை விரக்திக்கு மத்தியில், இந்தக் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பின்வருமாறு,
“போராட்டங்களை தொழிற்சங்கங்கள் கொச்சைப்படுத்தியுள்ளன” -அமைச்சர் திகாம்பரம்
“1000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைக் கோரி பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களைக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கொச்சைப்படுத்தியுள்ளன.
பல போராட்டங்களுக்கு மத்தியில் கூட்டு ஒப்பந்தத்தில் திடீரென்று கைக்சாத்திட்டுள்ளனர். குறைந்த தொகையில் கைச்சாத்திட்டு 40சதவீத சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்து விட்டதாக ஆறுமுகன் தொண்டமானும், வடிவேல் சுரேஸும் மார்தட்டுகின்றனர்.
இந்தத் துரோகத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குறித்த கூட்டு ஒப்பந்தத்திலிருந்தே வெளியேறுமாறு, தொடர்ந்து குரல் கொடுத்தோம். ஆனால், அவர்கள் அதைக் கேட்காமல் பொறிமுறைகளைக் கேட்கின்றனர்”
“ஒப்பந்தத்தை இரத்துச் செய்க” – அமைச்சர் மனோ கணேசன்
“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்ய வேண்டும். அதைவிட, இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்பினர், ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அலரி மாளிகைக்குச் சென்று முன்னெடுத்த கலந்துரையாடலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடன் இருந்தமை கவலையளிக்கின்றது.
“700 ரூபாய் போதுமானதல்ல. குறைந்தது 1,000 ரூபாயே எமது கோரிக்கை. இதில் எவ்வித மாற்றமுமில்லை. சம்பள அதிகரிப்பு ஊடாக, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியாதெனின், அதற்கான மாற்றுத் திட்டத்தைக் கொண்டுவரவும். இதில், அரசாங்கம் இவ்வளவு நாள்களும் தலையிடாமல் இருந்தமைக்கான காரணம், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்.
“இந்த நேரத்தில், நாடுபூராகவும் இந்தச் சம்பள அதிகரிப்புக்காகப் போராடும் மக்களுடன், நாமும் கைகோர்ப்போம். இது தொடர்பில், அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம்.”
‘ஏற்கப்போவது இல்லை’ -அமைச்சர் இராதாகிருஷ்ணன்
“கூட்டு ஒப்பந்தம், மீண்டும் தொழிலாளர்களை ஏமாற்றிவிட்டது. பல்வேறு போராட்டங்களின் பின்பு, வெறும் குறைந்த தொகையே சம்பள அதிகரிப்பாகக் கிடைத்திருக்கின்றது. இந்தக் கூட்டு ஒப்பந்தத்தை, மலையக மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை.
“வழமைபோல, இந்தக் கூட்டு ஒப்பந்தமும், தொழிலாளர்களை ஏமாற்றிய ஒர் ஒப்பந்தமாகவே அமைந்திருக்கின்றது. இதன் மூலமாக, தொழிலாளர்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பது, தெளிவாகத் தெரிகின்றது. ஏற்கெனவே, இந்தக் கூட்ட ஒப்பந்தத்தில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தித் திறன்படி கொடுப்பனவு – 140.00 ரூபாயும் வரவுக்கான கொடுப்பனவு – 60.00 ரூபாயும் இல்லாது செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், மிகக் குறைந்த ஒரு தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது.
“இந்தளவு குறைந்த தொகையை அதிகரிப்பாகப் பெற்றுக் கொள்வதற்கு, எத்தனை போராட்டம், எத்தனை வேலை நிறுத்தங்கள்? இவை ஒன்றுமே இல்லாமல், இந்த அதிகரிப்பைப் பெற்றிருந்தால் கூட, மனதளவில் திருப்தி அடைய முடியும்.
அது மட்டுமல்லாமல், இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில், வெறுமனே சம்பள உயர்வு மாத்திரமே பேசப்பட்டுள்ளது. ஒரு தோட்டத் தொழிலாளி இறந்தால், அதற்கான கொடுப்பனவாக இன்னும் 2,000.00 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது. வருடத்துக்கான ஊக்குவிப்பு போனஸ்- 750.00 ரூபாய் வழங்கப்படுகின்றது. இவை போதுமானதாக இல்லை.
“இந்தக் கொடுப்பனவுகள் எல்லாம், கடந்த பல வருடங்களுக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்டவை. இவை, இன்றைய காலத்துக்கு ஏற்றாற் போல மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதனை கட்டாயமாக இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் பேசப்பட்டு அதிகரித்திருக்க வேண்டும்.
“தொழிலாளர்களின் சுகாதார வசதிகள் தொடர்பாக, கூட்டு ஒப்பந்தத்தில் பேசப்பட வேண்டும். இன்றைய நிலையில் , தொழிலாளர்களுக்கான சுகாதார வசதி, பாதை, தண்ணீர், வீடு போன்ற அனைத்து வசதிகளையும், அரசாங்கமே செய்து வருகின்றது. இதில் எதிலுமே, பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு பங்கும் இல்லை. அவர்கள், இதனைக் கண்டு கொள்வதும் இல்லை.
“அது மாத்திரமன்றி, தொழிலாளர்கள் தொழில் செய்கின்ற போது, குளவிக் கொட்டுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களில், அவர்களுக்கான வாகன வசதிகளைக் கூட, ஒரு சில பெருந்தோட்டக் கம்பனிகள் செய்து கொடுப்பதில்லை.
“எனவே, இப்படி பல்வேறு குறைபாடுகளுடன் இந்தக் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கூட்டு ஒப்பந்தத்தை, எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது.”
“ரூ. 1,000ஐ வழங்க முடியும்” -அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
“பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தமக்கான நாளாந்தச் சம்பளமாகக் கோரும் 1000 ரூபாயை வழங்க முடியாத நிறுவனங்கள், சகல பெருந்தோட்டங்களையும் அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும்.
“தொழிலாளர்கள் கோரும் 1000 ரூபாய் சம்பளத்தை, குறித்த நிறுவனங்களால் வழங்க முடியும். பெருந்தோட்ட நிறுவனங்கள், அதிகமாக இலாபத்தைச் சம்பாதிக்கின்றன. ஆனால், அந்த இலாபத்தை மறைக்கின்றன. ஒருநாளும், இந்த நிறுவனங்கள், சரியான கணக்குகளைக் காண்பிப்பதில்லை.
“நான், பெருந்தோட்டத்துறை அமைச்சராக 2 வருடங்கள் கடமையாற்றியவன் என்ற ரீதியில், 1000 ரூபாய் சம்பளத்தை நிறுவனங்களால் மக்களுக்கு வழங்க முடியும் என்பது எனக்குத் தெரியும். முடியாவிட்டால் பெருந்தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு சவால் விடுக்கின்றேன். இந்த அரசாங்கம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பக்கமே உள்ளது.”
“உடன்பாடு இல்லை” -எம். திலகராஜ் எம்பி
இந்தக் கூட்டு ஒப்பந்த விடயமானது, பிரதமர் முன்னிலையிலோ அல்லது வேறு எவர் முன்னிலையில் செய்தாலுமே, கூட்டொப்பந்தம் என்ற விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆரம்பத்திலிருந்தே, தொழிற்சங்கங்கள் இதிலிருந்து வெளியேற வேண்டுமென, நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
“இலங்கை தேசிய தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினரான வடிவேல் சுரேஸ், பிரதமரின் கட்சி உறுப்பினர் என்ற வகையில், அந்தக் கட்சி சார்பான உறுப்பினர் என்ற ரீதியில், பிரதமர் அவ்விடத்தில் இருந்திருக்கலாம். இப்படித் தான் நான் பார்க்கின்றேன். அவர் எங்களையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி, அவ்விடத்தில் நிற்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.
“ஒப்பந்தத்துக்கு எதிரான மாற்றுத்திட்டம் என்னவென்பது தொடர்பான நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றோம். இந்த மாற்றுத்திட்டத்தை, நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளோம். எதிர்வரும் காலங்களில், ஜனாதிபதி அல்லது பிரதமராகப் போட்டியிடுபவர்களிடம், இந்த மாற்றுத் திட்டத்தை அரசியல் பேரம் பேசுபொருளாக முன்வைத்து ஆதரவு திரட்டவுள்ளோம்.”
“மாயையை ஏற்படுத்தி கைச்சாத்து” அரவிந்தகுமார் எம்.பி
ஒரு மாயையை ஏற்படுத்திவிட்டு, பிரதமரையும் ஏமாற்றிவிட்டே, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர், 500 ரூபாயாக இருந்த தொழிலாளர்களின் சம்பளம், இம்முறை 700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து, இதிலுள்ள உள்ளடக்கங்கள் பற்றி பிரதமருக்கு அறிவிக்காமல், பிரதமரை ஏமாற்றி, அவரது முன்னிலையில் இக்கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
“தற்போதைய வாழ்வாதாரச் சூழல், தொழிலாளர்கள் வேலை செய்யும் சூழல் என்பவற்றைப் பார்த்தால், சம்பள அதிகரிப்பென்று தற்போது கூறப்படும் தொகை போதாது.”
“ஜனநாயகத்தை பறித்துவிட்டனர்” -அருட்தந்தை மா. சத்திவேல்
“நாட்டில் நிலவிய அரசியல் குழப்பகரமான சூழ்நிலைகளின் போது, ஜனநாயகத்தின் காவலன் என்று அலரி மாளிகையில் குறப்பிட்டுக் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கூட்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட ஒத்துழைப்பு வழங்கியமையானது, ஜனநாயகத்தைப் பறித்துவிட்டதாகவே பார்க்கப்படுகின்றது.
“அத்தோடு, கூட்டு ஒப்பந்தத்துக்காக இடப்பட்ட இந்தக் கைச்சாத்து, மலையக மக்களுக்குச் செய்யப்பட்ட பாரிய ஒரு துரோகமாகும். பிரதானமாக, மலையகத் தமிழ் மக்களின் வாழ்வைப் பறிக்கும் ஒரு செயற்பாடாகும்.
“தற்பொழுது கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் பின்புலமானது, மலையக மக்களை வெளியேற்றுவதற்கான செயற்பாடாகும். 20 ரூபாய் அதிகரிப்பால் ஏமாற்றமடைந்த மலையக மக்கள், இனி வேறு வழிகளிலின்றி இடம்பெயர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
“இந்த 20 ரூபாய் அதிகரிப்பின் முக்கிய நோக்கமே, மலையகம் வாழ் மக்களை, சுயாதீனமாக அவர்களே வெளியேறும் வகையில் வழிசமைத்துவிட்டு, குறித்த இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வதேயாகும். அதற்கான நடவடிக்கைகளே கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் பிரதமர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
“மக்கள் கோரிய சம்பள அதிகரிப்பைப் பெற்றுத்தர முடியாத இந்த அரசியல் தலைமைகளால், மலையக மக்களின் எதிர்காலம் இல்லாமல் போய்விட்டது. ஒரு காலத்தில், தொழிலாளர்களுக்குச் சார்பாகப் பேசிய அரசியல் தலைமைகள் சில, தற்பொழுது, தொழிற்சங்கங்களுக்குக் சார்பாகப் பேசுகின்றன. இந்நிலைமையானது, மலையக மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இல்லாமல் செய்துள்ளது.”
“நான் அமைச்சராக வந்து பிரச்சினையைத் தீர்ப்பேன்” -மஹிந்தானந்த எம்.பி
“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில், அரசாங்கம் தலையிட வேண்டும். அத்துடன், மலையகக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர் திகாம்பரம், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி உள்ளிட்டவர்கள், ஒரே மேசையில் அமர்ந்து, இந்தப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்தால் தான், இந்தச் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம். அத்துடன், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.
“தமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காவிடின், அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், இவர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் தக்கவைப்பதற்காக,தோட்ட மக்களைக் காட்டிக்கொடுத்துள்ளனர்.
“இதில் இன்னொரு விடயம், நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க கூட, இந்தச் சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனத்தையே பாதுகாத்துள்ளார்.
“எனவே, இந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவேனும், இனி உருவாகவுள்ள மஹிந்த ராஜக்ஷவின் அரசாங்கத்தில், நானே பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியைக் கேட்டுப்பெற்று, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன்.”
Average Rating