சிவில் தேசியமும் இனமத தேசியமும்!! (கட்டுரை)
“இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்” என்பது, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை எடுத்துரைக்கும் திம்புக் கோட்பாடுகளின் முதலாவது கோட்பாடாகும்.
இலங்கையில் தமிழர்கள் தனித்தேசமா என்பது, மிகுந்த வாதப்பிரதிவாதத்துக்கு உரியதொரு விடயமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, பெரும்பான்மைச் சிங்கள மக்களிடம், தமிழர்கள் தனித்ததொரு தேசம் என்ற கருத்தியலுக்கான ஆதரவு, மிகக் குறைவாகவே உள்ளது. அத்துடன், அதை அவர்கள் மறுதலித்து வருவதையும் நாம் அவதானிக்கலாம்.
இலங்கை என்பது ஒரு நாடு, ஒரு தேசம். அதற்குள் வாழும் சிறுபான்மை இனங்களில் தமிழர்களும் ஒருசாரார் என்பது, பெரும்பான்மைச் சிங்கள மக்களின் நிலைப்பாடாகும். மறுபுறத்தில், ‘கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி’, ‘ஆண்டகுடி’ என்ற, ‘உயர்வு நவிற்சி வழி மனநிலை’ தமிழ் மக்களிடம் பகட்டாரவாரப் பிரசாரப் போக்கால் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. புறநிலை நின்று நோக்கின், இந்த இரு எல்லைகளும் பிரச்சினைக்குரியவை.
தமிழர்களின் தனித்த தேச உரிமை கோரலையும் தாயகத்துக்கான உரிமை கோரலையும் நிராகரிக்கும் காமினி ஈரியகொல்ல போன்றோர், அதனை நியாயப்படுத்த வரலாற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
இன்று தம்மைத் தனித்ததொரு தேசமாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘இலங்கைத் தமிழர்’ எனப்படுவோர், வரலாற்றுக் காலத்திலிருந்து இன்றுவரை, தம்மை ஒரு தேசமாகக் கருதி இயங்கியமைக்கான, திருப்திகரமான சான்றுகள் இல்லை என்பது, இலங்கைத் தமிழர் ஒரு தேசம் அல்ல என்று வாதிடுபவர்களின் கருத்தாகும்.
புறநிலை நின்று அணுகினால், இவர்களது வாதம் ஒருவகையில் சரியாகத் தோன்றலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இன்று நடைமுறையிலுள்ள ‘தேசம்’, ‘தேசியம்’ என்ற கருத்தியல், கடந்த இரண்டரை நூற்றாண்டுகளில் மேற்கில் உருப்பெற்று, வளர்ச்சி அடைந்ததொன்றாகும்.
இந்த ஒப்பீட்டளவில், நவீனமான சித்தாந்தக் கண்கொண்டு, அதற்குக் காலத்தால் முற்பட்டதொரு சமூக முறையை ஆராய்வதன் பொருத்தப்பாடுகள் கேள்விக்குரியவையாகும்.
மறுபுறத்தில், இலங்கைத் தமிழர் ஒரு தேசமல்ல என்பதற்கான அதேவாதங்கள், வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கையும் ஒரு தேசமல்ல, தேசமாக இருந்ததில்லை என்ற வாதத்துக்கும் பொருத்தமாகவே அமையும். இலங்கைத் தீவில் வரலாற்றுக் காலத்திலிருந்து இராச்சியங்கள், இன்றைய நவீனகால அரசு, தேசம், தேசியம் ஆகிய கருத்தியல்களுக்கு இயைபுடையவையாக இருக்கவில்லை,
மாறாக அவை, ‘அண்ட ஆட்சியமைப்பு’களாக (galactic polities) இருந்தன என்ற, மானுடவியல் ஆய்வாளர் ஸ்ரான்லி ஜே தம்மையாவின் கருத்து இங்கு குறிப்பிட்டு நோக்க வேண்டிய, முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
துட்டகைமுனு, இலங்கைத் தீவை ஆட்சிக் குடை ஒன்றின் கீழ் கொண்டுவந்தான் என்ற புனைகதை வரலாற்றின் கூற்றானது, அந்தக் குடையொன்றின் கீழான ஆட்சி, இன்றைய காலகட்டத்தின் நவீன மேற்கத்தேயப் பாணியிலான ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்கு நிகரானது என்ற எடுகோள் தவறானதாகும். இரண்டும் சமதளத்தில் ஒப்புநோக்கப்படக் கூடியவை அல்ல. அதனால்தான், ஸ்ரான்லி ஜே தம்பையாவின் ‘அண்ட ஆட்சியமைப்பு’கள் என்ற கருத்தியல், வரலாற்றுக் கால இலங்கைக்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.
மேலும், ‘தேசியம்’ பற்றிய முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான அன்டனி டி ஸ்மித் குறிப்பிடுவது போல, தேசங்கள் என்பவை மனிதனால் கட்டமைக்கப்படுபவை ஆகும். பிரஞ்சுப் புரட்சிக்கு முன்பு, பிரான்ஸ் தேசமென்று ஒன்று கிடையாது. அமெரிக்க விடுதலைக்கு முன்பு, அமெரிக்க தேசமொன்று கிடையாது. அவை, அந்தந்த மக்கள் கூட்டத்தால், அவர்களிடையே உருவாக்கப்பட்டவை.
பிரான்ஸ், அமெரிக்க அரசுகளின் பிறப்போடு, அந்த அரசுகளுக்குரிய சிவில் தேசமாக, முறையே பிரான்ஸ் தேசமும், அமெரிக்க தேசமும் உருவாகின. ஆனால், இது தொடர்பில், இன்னொரு தவறான புரிதலும் எழக்கூடும். பிரான்ஸ், அமெரிக்கா என்பவை ஓர் அரசு; மேலும் அந்தவோர் அரசு, ஒரு சிவில் தேசமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசொன்றுக்குள் ஒரு தேசம்தான் இருக்க முடியும் என்ற கருத்து, இதிலிருந்து பிறப்பதை அவதானிக்கலாம்.
ஆனால், இதில் இரண்டு முக்கிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக, பிரான்ஸ், அமெரிக்க தேசங்கள் என்பவை, சிவில் தேசங்கள். அவை இன, மத, சாதி, வர்க்க அடிப்படையில் கட்டமைந்த தேசங்கள் அல்ல; மாறாக, தாராளவாத ஜனநாயக அடிப்படையிலான இன, மத, சாதி, வர்க்க வரையறைகளற்ற சிவில் தேசங்கள். அடுத்ததாக, ஓர் அரசுக்குள் ஒரு தேசம்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இரண்டாவது, இரண்டுக்கு மேற்பட்ட தேசங்கள், ஓர் அரசுக்குள் இருக்க முடியாது என்ற வாதத்தில் உண்மையில்லை. இதற்கு மிகப்பெரிய உதாரணம், ஐக்கிய இராச்சியமாகும். ஆங்கிலேய, ஸ்கொட்லாந்து, வெல்ஷ், அயர்லாந்து ஆகிய தேசங்களை உள்ளடக்கியதே இன்றைய ஐக்கிய இராச்சியம் எனும் ஒற்றையாட்சி அரசாகும்.
மேலும், இங்கு குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு மிக முக்கியமான விடயம், பிரான்ஸ், அமெரிக்கா போன்று, சிவில் தேசமொன்றைக் கட்டியெழுப்பும் எண்ணமும் முயற்சியுமே கொலனித்துவ இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்தமையையும் நாம் அவதானிக்கலாம். அது ‘இலங்கை’ (சிலோனிஸ்) தேசம் என்ற அடிப்படையில் பிரான்ஸ், அமெரிக்கா போன்ற இன, மத, சாதி, வர்க்க வரையறைகளைக் கடந்த, இந்தத் தீவில் வாழும் யாவரையும் அரவணைக்கும் தேசமாகக் கட்டியெழுப்பும் முயற்சி அது.
ஆனால், அது வெற்றியளிக்கவில்லை என்பதுதான் இலங்கையின் துரதிர்ஷ்டம். இந்த இடத்தில், ‘தமிழர்கள் ஒரு தேசமல்ல’ என்று கருத்துரைப்போர் சொல்கின்ற இன்னொரு காரணமான, 1950களுக்கு அதாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்துக்கு முன்னரான தமிழ்த் தலைமைகள், ‘தமிழர் ஒரு தனித்த தேசம்’ என்ற கருத்தை முன்வைக்கவில்லை. மாறாக, அவர்கள், தம்மைச் சிறுபான்மையினராகப் பார்த்தார்கள் என்பதுடன், சிறுபான்மையினருக்கான பாதுகாப்பையே வேண்டினார்கள். ஆகவே, தமிழர்கள், சிறுபான்மை இனக்கூட்டமேயன்றி, ஒரு தனித்த தேசம் அல்ல என்ற வாதம், உற்றுநோக்கப்பட வேண்டியது.
இதில் 1950களுக்கு முன்னதான, தமிழ்த் தலைமைகள், தமிழர் ஒரு தனித்த தேசம் என்று கோரவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். இலங்கைத் தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த பின்னர், சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் ஈழத்தமிழரின் அடையாளப் பிரக்ஞையின் அவசியம் பற்றிப் பேசினாரேயன்றி, தனித்த தேசம் என்ற கருத்தை முன்வைக்கவில்லை. 50:50 கேட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலம் கூட, சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக 50:50 கேட்டாரேயன்றி, தமிழர் தனித்த தேசம் என்ற கருத்தை முன்வைக்கவில்லை.
இது உண்மை. ஆனால் இதைப் புரிந்துகொள்ள, இதன் சூழலமைவும் இதற்குப் பின்னரிருந்த காரண காரியங்களையும் கருத்தில் கொள்ளுதல் அவசியமாகும்.
அன்றைய தலைமைகள், இலங்கைத் தீவில் மேற்கத்தேய பாணியிலான ‘சிவில் தேசியமாக’ சிலோனிஸ் தேசமொன்றை கட்டமைக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால், மேற்கின் தேசிய சித்தாந்தங்களுக்கு இயைபடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டிருந்த இலங்கைத் தீவில், அதைச் சாத்தியப்படுத்துவது இலகுவாக இருக்கவில்லை.
மேலும், இலங்கையில் ‘சிலோனிஸ்’ சிவில் தேச முயற்சிக்குத் தடையாக, பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களிடம் ‘சிங்கள-பௌத்த’ இனமத தேசியவாதம் உருவாகிக் கொண்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழத்தொடங்கிய இந்தப் பெரும்பான்மை இனமதப் பிரக்ஞை, இலங்கையில் சிவில் தேசமொன்று கட்டமைக்கப்படுவதற்கு எதிரான பெருஞ்சவாலாக மாறிக்கொண்டிருந்தது.
ஆகவே, ஜீ.ஜீ. பொன்னம்பலம் 50:50 கேட்டதானது, இலங்கை என்ற சிவில் தேசம் வெற்றிகரமானதாக இயங்கவேண்டுமானதாக இருந்தால், இலங்கை அரசாங்கமானது, எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மை கொள்ளத்தக்க வாய்ப்புடைய, பெரும்பான்மை இனமத தேசியத்தின் பிடியில் சிக்கிவிடக்கூடாது; அதைத் தடுக்கவே, அவர் 50:50 கோரியிருந்தார்.
சேர். பொன்னம்பலம் இராமநாதன் முதல், ஜீ.ஜீ.பொன்னம்பலம் வரை, இலங்கை ‘சிலோனிஸ்’ எனும் சிவில் தேசத்தை கட்டமைக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தனர் என்பதுதான் நிதர்சனம்.
ஆனால், 1950களில் அநகாரிக தர்மபாலவிலிருந்து தோன்றி வளர்ந்து வந்த ‘சிங்களபௌத்த’ இனமத தேசியத்துக்கு எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க அரசியல் முன்னணியில் இடமளித்ததுடன், ‘சிலோனிஸ்’ எனும் சிவில் தேசக் கனவு கலையத் தொடங்கியது. அதன் சவப்பெட்டியின் மீதான, இறுதி ஆணியாக 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசமைப்புடனான இலங்கை ‘ஸ்ரீ லங்கா’ என்ற குடியரசின் பிறப்பு அமைந்தது.
சிலோனும் ஸ்ரீ லங்காவும் தமிழில் இலங்கை என்றே தொடர்ந்து அழைக்கப்பட்டாலும், இரண்டுக்குமான வேறுபாடு இதுதான். ‘சிலோன்’ என்பது கொலனித்துவப் பெயர்; பிரித்தானியப் பேரரசின் அடிமைப் பெயர் என்று, சுதேச எண்ணம் கொண்டவர்கள் சொல்லவதுண்டு.
ஆனால், சிலோன் என்பது, மேற்கத்தேய பாணியிலான சிவில் தேசமொன்றைக் கட்டமைக்கும் கனவுப் பெயர் என்பதும் நிதர்சனமானதே. அது, இந்தத் தீவில் வாழும் மக்கள் கூட்டம் அனைவரையும் அவர்களது இன, மத, மொழி, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, சிவில் தேசமாக ஒன்றிணைக்கும் கனவு.
மேற்கத்தேயப் பாணியில், பிரான்ஸ் தேசத்தைப் போன்று, அமெரிக்க தேசத்தைப் போன்று, ‘சிலோனிஸ்’ தேசத்தை வடிவமைக்கும் கனவு அது. ஆனால், எழுச்சி கண்ட பெரும்பான்மை இனமத தேசியவாதத்தின் விளைவால் அந்தக் கனவு கலைந்தது.
அந்தப் பெரும்பான்மை இனமத தேசியம், சிறுபான்மையினருக்கு எதிரான கட்டமைவாகவும் பெருந்திரள்வாதப் போக்குடைய பாதையில் பயணித்ததன் விளைவாக, பெரும்பான்மை இனமத தேசியவாதத்தின் மேலாதிக்கத்தை, அடக்குமுறையை எதிர்கொள்வதற்குச் சிறுபான்மை மக்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள், ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுவதைப் போன்று, ‘தற்காப்புத் தேசியவாதத்தை’க் கையிலெடுத்தார்கள். 20ஆம் நூற்றாண்டின் மய்யப்பகுதியில் இந்தத் ‘தற்காப்புத் தேசியவாதத்தின்’ பிறப்பை நாம் அவதானிக்கலாம்.
ஆகவே, எப்படி ‘சிங்கள பௌத்த’ தேசியவாதம் என்பது 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உருவான தேசியவாதமோ, அதைப்போன்று, தமிழ்த் தேசியம் என்பது, அந்தச் ‘சிங்கள பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதத்தில் இருந்தும், அதன் மேலாதிக்கம், அடக்குமுறை என்பவற்றில் இருந்துமான தற்பாதுகாப்புக்காக 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் உருவானது.
ஆகவே, இன்றுள்ளதைப் போன்ற ‘சிங்கள பௌத்த’ தேசம் என்பது, வரலாற்றுக் காலத்திலிருந்து, விஜயனின் வருகையிலிருந்து, அநுராதபுர, பொலநறுவைக் காலத்திலிருந்து இருப்பது என்பதும், ‘தமிழ்த் தேசம்’ என்பது கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றியது என்பதும் ஏற்புடைய கருத்துகள் அல்ல.
இந்தத் தீவில், மக்கள் கூட்டம் 19ஆம் நூற்றாண்டுவரை, தன்னை சமகாலத்தில் அடையாளம் காண்பது போன்ற தேசங்களாக, அடையாளம் கண்டு கொண்டதில்லை என்பதுதான் மானுடவியல், வரலாற்று ஆய்வுகள் வௌிக்காட்டி நிற்கும் உண்மை.
Average Rating