துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்!! (கட்டுரை)
சிரியாவுக்கு எதிரான துருக்கியின் நடவடிக்கை, வடக்கு சிரியாவில் உள்ள வலுவானதொரு குர்திஷ் அமைப்பின் தோற்றத்துக்கான நேரடிப் பதிலீடாகவும், இப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளின் (YPG) படைகளை இலக்கு வைத்தும் இருக்கின்றமை, சிரியாவின் போரில் துருக்கியின் பங்கு தொடர்பில், குழப்பமான ஒரு நிலையையே காட்டுகின்றது. இது, நேரடியாகவே துருக்கி தனது உள்ளார்ந்த பாதுகாப்புத் தொடர்பிலேயே கவனம் செலுத்துவதையையும், அதன் பிரதிபலிப்பாகவே சிரிய விவகாரத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுவதையும் காணமுடிகின்றது என்ற போதிலும், இது துருக்கிக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய போரொன்றின் (நகர்வுகள்) அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு, நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றமையை அவதானித்தல் அவசியமாகும்.
ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் மீள்வளர்ச்சியைத் தவிர்க்கும் காரணமாக, ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பிலில் இருந்து மத்திய தரைக்கடல் கடல் வரை, பாதுகாப்பு வளையமொன்றை உருவாக்கப்போவதாக, ஐ.அமெரிக்கா அறிவித்திருந்தது. ஐ.அமெரிக்கா தலைமையில் 30,000 இராணுவத்தினர் குறித்த எல்லைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் எனவும், சிரியாவைச் சேர்ந்த குர்திஷ் போராளிகளும் இதில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தது. இந்நடவடிக்கையானது, சிரியாவில் உள்ள குர்திஷ் ஆதிக்க சக்திகளுக்கு ஐ.அமெரிக்க ஆதரவு வழங்குவதாகவே கருதப்பட வேண்டும் என, தனது அதிருப்தியைத் துருக்கி வெளிப்படுத்தியிருந்தது.
யுத்தத்துக்கு பின்னரான சிரியாவின் பூகோளவியலில் குர்திஷ் அமைப்பின் இருப்பை ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆதரிக்கின்றன. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில் குர்திஷ் அமைப்பினரின் முக்கிய பாத்திரத்தை அவர்கள் அடிக்கடி வலியுறுத்துகின்றனர். மறுபுறத்தில் துருக்கி, YPGஐ, சிரியாவின் அங்கமாகவே பார்க்கிறது; எனவே, பிராந்தியத்தில் உள்ள ஒரு குர்திஷ் அமைப்பான YPGஐ, துருக்கியிலுள்ள PKK குழுவை ஒத்ததாகவே துருக்கி கருதுகின்றது. இது, துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களில் PKK குர்திஷ், மக்களுக்கு தனித்துவமானதோர் அடையாளத்துக்கான அழைப்பை எவ்வாறு விடுக்கிறதோ, அதேபோன்று, பிராந்தியத்தில் துருக்கிக்கு எதிரான குர்திஷ் தன்னாட்சி அரசொன்று அமைவதற்கு YPG வழிவகுத்துவிடும் எனக் கருதுகின்றது. இருந்தபோதிலும், ஐ.அமெரிக்காவும் ரஷ்யாவும், YPG-ஐ, பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட மறுத்துவிட்டன என்பதுடன், மாறாக, ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில் அவை களநிலைமையில் முக்கியமானதொரு நட்பு அமைப்பாகவே கருதுகின்றன.
2018இல், துருக்கிய இராணுவம், வடக்கு சிரியாவில் YPG இலக்குகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. அது தொடர்பில் ஐ.அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன. மறுபுறத்தில், வட சிரியாவில் உள்ள குர்திஷ் பிரிவினைவாத சக்திகளை ஐ.அமெரிக்கா ஆதரிக்கும் இச்செயலானது, ஐ.அமெரிக்கா அதன் சொந்த புவிசார் அரசியல் இலக்குகளை குறித்த பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் நிலைநாட்ட வழிவகுக்கும் என்பது, பின்வரும் காரணங்களால் அறியப்படலாம்.
முதலாவதாக, பிராந்திய சமநிலையின்மையை ஏற்படுத்துவதற்கு, ஏற்கனவே அதிக முறிவுகளையும் அரசியல் சிதைவுகளையும் சந்தித்த நாடுகளைப் பலவீனம் செய்தல் அவசியமாகும். இதுவே ஐ.அமெரிக்காவை குறித்த பிராந்தியத்தில் நிலையாக வைத்திருக்க உதவும் என்பதுடன், சிரியாவின் உள்நாட்டு நெருக்கடிகள் நீடிக்கவும் வழிவகுக்கும். நிலையானதொரு சிரியா, எப்போதுமே ஐ.அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை இரு நாடுகளும் அறியத்தவறவில்லை. அத்தோடு, சிரியாவின் குறித்த நிலையான தன்மையானது, ஏற்கனவே பிராந்தியத்தில் ஒரு வல்லரசாக ஈரான் வளர்ச்சியடைந்தமையைத் தொடர்ந்து, பிராந்திய சமநிலையில் சவூதி அரேபியாவும் அதனோடிணைந்த ஐ.அமெரிக்காவின் நட்பு நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முரணாக அமையும் என்ற காரணத்தினாலும், சிரியாவின் நிலையற்ற தன்மை என்பது, ஐ.அமெரிக்காவின் நீண்டகால பிராந்திய இராஜதந்திர, அரசியல் காய் நகர்த்தல்களுக்கு அவசியமானவொன்றாக அமைகின்றது.
இரண்டாவதாக, துருக்கியானது தொடர்ச்சியாக வட அத்திலாந்திக் பாதுகாப்பு அமைப்பு (NATO) உறுப்பினராக இருந்தாலும், ஐ.அமெரிக்கா குறித்த பிராந்தியத்தில் தனது நீண்டகால நிலையைத் தக்கவைப்பதற்கு துருக்கியின் இராணுவத் தளங்களில் மூலதனம் செய்வதில் விருப்பம் கொண்டிருக்கவில்லை. இதற்கு முதலாவதாக, நிலையானதொரு ஜனநாயக நாடாக துருக்கி இல்லாமை, இஸ்லாமிய ஆயுதப் போராட்டங்களுக்கு எதிரான போரில் வினைத்திறனுடன் துருக்கி பங்குபற்றுகின்ற போதிலும், துருக்கியின் அரசாங்கம் இஸ்லாமிய அரசாங்கமாகவே இருந்து வருகின்றமை, நீண்டகால நோக்கில் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்துவதற்கு குர்திஷ் அரசாங்கத்தின்/ குர்திஷ் இனமக்களின் உதவி தேவைப்படுகின்றமை, குர்திஷ் இனக்குழுக்களுடன் துருக்கி அரசாங்கம் கொண்டுள்ள மோதல் நிலைமை என்பன காரணமாக, துருக்கியின் உள்நாட்டுப் பாதுகாப்புக் கட்டமைப்பில் தங்கியிருப்பதைக் காட்டிலும் தனக்கான இராணுவ கட்டமைப்பொன்றைக் குறித்த பிராந்தியத்தில் ஏற்படுத்துவதற்கு ஐ.அமெரிக்கா முனைகின்றது.
மூன்றாவதாக, குர்திஷ் அடையாளத்தை மறைமுகமாகவேனும் அங்கிகரித்தல், சிரியாவிலும் துருக்கியிலும் மட்டுமல்லாது, ஈராக்கினதும் ஈரானினதும் உள்நாட்டு அரசியல் நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஐ.அமெரிக்கா கருதுகின்றது. இது, குறித்த பிராந்தியத்தில் ஏற்கனவே ஈராக்கின் கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்ட குர்திஷ் அரசாங்கத்தை வலுப்பெற செய்வதுடன், ஐ.அமெரிக்காவின் நீண்டகால இருப்புக்கு உதவும் என்பதில் ஐ.அமெரிக்கா நம்பிக்கையாய் உள்ளது.
நான்காவதாக, ஐ.அமெரிக்காவின் மத்திய கிழக்குத் தொடர்பான வெளிவிவகாரக் கொள்கைகளின் வெற்றி, இஸ்ரேலின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது. குறித்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்குதல், இஸ்ரேலின் இரண்டாவது தலைநகரான டெல் அவிவ்க்கு நேரடியான பாதுகாப்பை வழங்கும் என்பதுடன், இது பிராந்தியத்தில் இஸ்ரேலின் இராணுவ, அரசியல் வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கும் வழிவகுக்கும் என ஐ.அமெரிக்கா நம்புகின்றது. குறித்த இந்நிலை, பிராந்தியத்திலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஐ.அமெரிக்காவுக்கு ஏற்பட்டாலும், அதன் வெளியேற்றத்துக்கான தாக்கத்தை குறைக்கும், அல்லது ஐ.அமெரிக்காவின் மூலோபாயத் திறனை தக்கவைக்கும் எனவு ஐ.அமெரிக்கா கருதுகின்றது.
இவற்றின் அடிப்படையிலேயே, துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான அண்மைய மூலோபாய அரசியல் நகர்வுகள் பார்க்கப்படவேண்டியதாய் உள்ளன.
Average Rating