மோடிக்கு இரண்டாவது வாய்ப்புக் கிடைக்குமா? (கட்டுரை)

Read Time:13 Minute, 54 Second

நாடாளுமன்றத்தின் இறுதி நாள் கூட்டத் தொடர் முடிவு பெற்று, அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகி விட்டது ‘இந்திய ஜனநாயகம்’.

மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டில் மக்களவையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தது. வேறு கட்சிகளின் ஆதரவு தேவையின்றி, மோடியால் மக்களவையில் தான் நினைத்ததைச் சாதிக்க முடிந்தது.

பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் விரும்பிய எந்த மசோதாவையும் முதலில் மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றும் பலம், பா.ஜ.கவுக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்தமை, 16ஆவது நாடாளுமன்றத்தின் தனிச் சிறப்பாகும். ஏறக்குறைய 35 வருடங்களுக்குப் பிறகு, மத்தியில் ஆளும் கட்சிக்குத் தனிப்பட்ட பெரும்பான்மை கிடைத்தது இந்த முறைதான். அதுவும் நரேந்திர மோடிக்குத்தான் அந்த யோகம் கிடைத்திருந்தது. ஆனால், இறுதிவரை அவருக்கு முட்கிரீடமாக இருந்தது மாநிலங்களவைதான்.

தனிப்பட்ட பெரும்பான்மை பெற்ற கட்சியாக பா.ஜ.க மத்தியில் ஆண்டாலும், நரேந்திர மோடி, தன்னிச்சைத் தனமாகவே செயற்பட்டார் என்பதை, அவரது கட்சிக்காரர்களே ஒப்புக்கொள்ளும் நிலையில்தான், இந்த ஐந்து வருடங்களும் ஆட்சி செய்திருந்தார்.

அமைச்சரவைச் சகாக்கள் இருந்தாலும் பிரதமரும் அவரது அலுவலகமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமே அரசாங்கத்தின் அதிகார மய்யங்களாகத் திகழ்ந்தார்கள். அக்கட்சியின் சி​ரேஷ்ட அமைச்சர்களான உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் போன்றவர்கள் கூட, தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதை உணராமல் இல்லை.

இன்னொரு மூத்த அமைச்சரான நிதின் கட்கரியின் சமீப காலப் பேட்டிகள், பேச்சுகள் எல்லாம், மோடி தலைமையிலான அமைச்சரவைக்குள் இருக்கும் கசப்புகளை, வெளியே கக்கும் விதத்தில் அமைந்தன. “தைரியமாகக் கருத்துச் சொல்லும் அமைச்சர் நிதின் கட்கரிதான்” என்று ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் பாராட்டும் நிலை ஏற்பட்டு, பா.ஜ.கவுக்கே தலைவலியாக மாறியது.

பா.ஜ.கவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோசி போன்றவர்கள், இந்த ஐந்து வருடத்தில் முன்னணிக்கு வரவே இல்லை. குடியரசுத் தலைவர் பதவிக்கு, அத்வானி மிக முக்கியமான தெரிவு என்றிருந்த நிலையில் கூட, அவருக்கு எதிராகத் திடீரென்று கிளப்பப்பட்ட ‘ராம் மந்திர்’ வழக்கு, அதற்குத் தடையாக இருந்தது.

குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்ற பிறகு, அந்த வழக்கை விரைவு படுத்தப்படுவது பற்றிய பேச்சையே காணவில்லை. பா.ஜ.கவின் இந்த அளவு பலத்துக்கு வித்திட்ட தலைவர்களில், மிக முக்கியமானவர் அத்வானி. ஆனால், அவருக்கு, அவர் கட்சியின் ஆட்சியிலேயே, குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருந்தும், கிடைக்காமல் போய் விட்டது என்பதற்கு எவ்வித பொருத்தமான காரணங்களும் இதுவரை வெளியில் வரவில்லை.

காங்கிரஸ் கட்சி ஆளும் போது, பிரனாப் முகர்ஜி எப்படிப் பிரதமராகாமல் டொக்டர் மன்மோகன் சிங் பிரதமரானாரோ, அதேபோல், பா.ஜ.க ஆளும் நேரத்தில், எல்.கே. அத்வானி குடியரசுத் தலைவராக முடியவில்லை. ஆகவே, ஒட்டு மொத்தமாக பா.ஜ.க என்பது, பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா இருவருக்கும் கீழ் வந்து விட்டது. இருவரின் கட்டளை மட்டுமே, அக்கட்சியை வழி நடத்தும் என்ற சூழலில், மூத்த பா.ஜ.க தலைவர்கள் எல்லாம் முணுமுணுப்பில் உறைந்து போயிருக்கின்றார்கள்.

கூட்டணிக் கட்சிகளில் பலவும், தங்களின் முந்தைய நட்பு மீண்டும் திரும்புமா என்ற கேள்விக்குறியுடன் இருக்கின்றன. குறிப்பாக, மஹாராஷ்டிராவில் சிவசேனாவும் பஞ்சாபில் அகாலிதளமும் பா.ஜ.க மீது, மிகுந்த பாசத்தில் இருந்து, இப்போது ‘வெட்டிக் கொள்வோமா’ அல்லது ‘மீண்டும் ஒட்டிக் கொள்வோமா’ என்ற நிலையில் உள்ளன.

ஐந்தாண்டு கால ஆட்சியில், ஊழல் இல்லை என்பது பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் வாதம். ஆனால், ‘ரபேல் ஊழல்’ என்று முதலில் புகார் கொடுத்தது, பா.ஜ.கவின் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த சின்காவும் இன்னொரு முன்னாள் அமைச்சர் அருண்சோரியும்தான் என்பதை யாரும் மறந்து விட முடியாது.
“பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு விட்டது” என்று கூறுவது, பா.ஜ.க அரசாங்கம்தான். ஆனால், “எங்கள் அமைச்சருக்கு பொருளாதாரம் தெரியாது” என்று பேட்டி கொடுப்பவரோ, பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி.

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்” என்று கூறுவது, பா.ஜ.க அரசாங்கம். ஆனால், “ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும், 15 இலட்சம் ரூபாய் ஏன் போடவில்லை” என்று கேட்ட கேள்விக்கு, “நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று நினைத்து, வாக்குறுதிகளைக் கொடுத்தோம்; என்ன செய்வது” என்று வருத்தப்பட்டு, கருத்துத் தெரிவித்தது, பா.ஜ.கவின் மூத்த அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி.

“சி.பி.ஐ அமைப்பு சுதந்திரமாகச் செயற்படுவது இப்போதுதான்” என்று பா.ஜ.க அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்தவுடன், “சி.பி.ஐ அமைப்பு, ‘புலனாய்வுச் சாகசம்’ (Investigative Adventurism) செய்கிறது” என்று குற்றம் சாட்டியதும் மத்திய நிதி அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லிதான். அதுவும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டே, இப்படியொரு கருத்தை வெளியிட்டு “சி.பி.ஐ ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயற்படுகிறது” என்று, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு, மேலும் தீனி போட்டார்.

ஆகவே, பா.ஜ.க அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பது ஒருபுறமிருக்க, அக்கட்சியின் அமைச்சர்களும் கட்சியில் உள்ளவர்களுமே இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்த, வித்தியாசமானதோர் ஆட்சியாகக் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி அமைந்தது.

ஆகவே, சொந்தக் கட்சியினரின் குற்றச்சாட்டுகள், சொந்தக் கட்சிக்குள்ளேயே குமுறல்கள், மூத்த தலைவர்களின் முணுமுணுப்புகள் என்று பல்வேறு சிரமங்களின் சிறகுகள் முளைத்துள்ள நிலையில், இந்தத் தேர்தலை, குறிப்பாக 2019 நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க சந்திக்கிறது. பா.ஜ.கவுக்கு உள்ள ஒரே பலம், நரேந்திர மோடிதான். அவரே, மக்களவையில் “100 சதவீதம் நாட்டுக்காக உழைத்திருக்கிறோம்” என்று ​ பேசியிருந்தார்.

“எங்கள் பிரதமர் மீது எந்த ஊழல்க் குற்றச்சாட்டும் இல்லை” என்ற வாதத்தை, பா.ஜ.க பிரசாரத்துக்காக முன்னெடுத்துச் செல்கின்றது. “தனிப்பெரும்பான்மை உள்ள அரசாங்கத்தால்த்தான், நாட்டுக்கு நல்லது செய்ய முடியும்” என்பதையும் சுட்டிக்காட்டி, பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

ஆகவே, நிலையான ஆட்சியா, கூட்டணிக் கட்சிகளின் நிலையில்லாத ஆட்சியா என்ற முழக்கத்தை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன் வைக்க, மோடியும் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் முடிவு செய்து விட்டார்கள். அதனால்தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றால், திங்கள் முதல் சனி வரை ஒவ்வொரு கட்சியின் தலைவரும் பிரதமர். ஞாயிற்றுக்கிழமை பிரதமர் பதவிக்கு விடுமுறை” என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா, எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பார்த்து கிண்டலடித்துள்ளார்.

2014இல் ​நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கும் போது, நரேந்திர மோடிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இருந்த செல்வாக்கு, இப்போது இல்லை என்பதே உண்மை. அந்தச் செல்வாக்குப் பற்றாக்குறையின் காரணமாக, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, பல முக்கிய கூட்டணிக் கட்சிகள் தேவை என்ற சூழலை, பா.ஜ.கவுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ‘நிலையான ஆட்சி’ என்ற பா.ஜ.கவின் முழக்கத்தை, எதிர்கொள்ளத் தயாராகி விட்டது. மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், டெல்லியில் சந்தித்து, பொது வேலைத் திட்டம் உருவாக்குவது பற்றி, விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.

அதுதவிர, “நிலையான பா.ஜ.க ஆட்சி, சர்வாதிகார ஆட்சிக்கு, வித்திட்டு விட்டது”, “அரச அமைப்புகள் எல்லாம் சீர்குலைந்து விட்டன”, “ரபேல் ஊழலிலிருந்து நரேந்திர மோடி தப்ப முடியாது”, “பொருளாதாரம் பின்னோக்கிச் செல்கிறது” போன்ற பிரசார முழக்கங்களை, முன்வைத்து பா.ஜ.கவை எதிர்கொள்ள, கூட்டணி திட்டமிட்டுள்ளது. கடந்தமுறை, பா.ஜ.க வெற்றிபெற்ற 282 நாடாளுமன்றத் தொகுதிகளில், 224 தொகுதிகளுக்கும் மேல், வட மாநிலங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றியை, இந்தமுறை பா.ஜ.கவால் பெற முடியாது என்று எதிர்க்கட்சிகள் திடமாக நம்புகின்றன.

இந்த, ‘வடமாநில இழப்பை’, தென் மாநிலங்களிலோ, வேறு மாநிலங்களிலோ பா.ஜ.கவால் ஈடுகட்ட முடியாது என்ற நெருக்கடி பா.ஜ.கவுக்கு உருவாகி விட்டதாகவே எதிர்க்கட்சிகள் அழுத்தமாக நம்புகின்றன.
ஆகவே, 17ஆவது மக்களவைத் தேர்தல், அதாவது 2019 மக்களவைத் தேர்தல், வித்தியாசமான தேர்தல்க் களத்தைச் சந்திக்கிறது. ஆட்சியில் இருந்த கட்சியே, மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு பா.ஜ.கவில் பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு, 1998, 1999இல் கிடைத்தது. காங்கிரஸ் சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு 2004, 2009இல் கிடைத்தது.

ஆனால், நரேந்திர மோடிக்கு, அந்த இரண்டாவது முறை ஆட்சி கிடைக்குமா என்பதுதான், இப்போது இந்திய ஜனநாயகத்திடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தீர்ப்பு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயற்கை வேகங்களை அடக்காதே! (மருத்துவம்)
Next post அஜீத்தின் உண்மையை உடைத்த ராணுவம் ! வெளியான அதிர்ச்சி வீடியோ!!