சூரிய நமஸ்காரம்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 0 Second

சூரிய நமஸ்காரத்தின் வரலாற்றை சிறிது தொட்டு விட்டு, மீண்டும் பயிற்சிக்குப் போகலாம். சூரியனை வணங்குவது என்பது பல நாடுகளில் நீண்ட காலமாய் இருந்து வரும் வழக்கம். மனித இனம் நாகரிகம் அடைந்த காலத்திலிருந்து வழிபடும் கடவுள்களில் முக்கியமான இடம் சூரியனுக்கு உண்டு. ‘தன் சக்தியாலும் தவறாத சுழற்சியாலும் இந்த பூமியில் உயிர்கள் ஜீவித்திருக்க சூரியனே ஆதாரமாக இருக்கிறது’ என்ற உண்மையை மனித இனம் எப்போதும் உணர்ந்திருந்தது.

இந்தியாவில் சூரிய வழிபாடு பலவிதங்களில் அமைந்துள்ளது. அவற்றுள் ஒரு முறைதான் இந்த சூரிய நமஸ்காரம். இது எப்போது தோன்றியது என்பது தெரியவில்லை. அதேபோல் இந்தப் பயிற்சிகளிலும் ஒரே முறைதான் இருந்தது என்று சொல்ல முடியவில்லை. பலவிதமான சூரிய நமஸ்காரப் பயிற்சிகளைச் செய்தவரும், கிருஷ்ணமாச்சாரி யோக மந்திரம் என்ற உலகப் புகழ்பெற யோக மையத்தின் நிர்வாக அறங்காவலருமான தரன் அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன்.

அவரது கருத்து இது: ‘‘சூரியனை வெறும் கோளமாகப் பார்க்காமல், உயிர் வாழ்வுக்கு ஆதார சக்தியாகவே நாம் கொள்கிறோம். வடமொழி வேதத்தில் சூரியனைக் குறித்து பல மந்திரங்கள் உள்ளன. இதில் முக்கியமாக ஓதப்படுவது ‘அருணம்’ (அல்லது) சூரிய நமஸ்கார மந்திரம். இது கிருஷ்ண யஜுர் வேதத்தில் வருகிறது. இதை தினமும் சூரிய உதயத்தில் ஓதுவது வழக்கம். இது பெரிய மந்திரம். இதில் ஒவ்வொரு பகுதி முடிவிலும் ஒரு நமஸ்காரம் உடலால் செய்வது வழக்கத்தில் இருந்ததாகவும் முன்னோர்கள் சொல்வர். இதுவே பின்னால் ஓர் உடற்பயிற்சி முறையாக மாறியிருக்க வேண்டும்.

இந்த நமஸ்காரம் ‘ஷாஸ்டாங்கம்’ முறையிலானது. அதாவது உடலின் எட்டு அங்கங்கள் தரையில் படும்படியாக உடல் ஒரு கோல் போல் தரையில் இருக்கும். இதை அடைந்து திரும்பவும் பழைய நின்ற நிலைக்குச் சேருவது. பல படிநிலைகளில் ஒரு வட்டமாக மாறி, சில ஆசனங்களால் தள்ளப்பட்டு தற்கால சூரிய நமஸ்காரப் பயிற்சியாக மாறியிருக்கிறது. ஆகவேதான் இப்பொழுதும் இதில் சூரிய மந்திரங்களை உரக்கச் சொல்லி செய்யும் பயிற்சியும் இருக்கிறது!’’

பண்டைக்காலத்தில் சூரிய நமஸ்காரப் பயிற்சி ஒரு சமூக நிகழ்வு போலவே இருந்துள்ளது. ‘‘அதாவது, நன்கு பயிற்சி செய்பவர்கள் பிற வீடுகளுக்குப் போய், பலரின் முன்னிலையில் மந்திரங்களைச் சொல்லி சூரிய நமஸ்காரத்தைச் செய்ய வேண்டும். இப்படியான நேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஒருசிலரும் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு கற்றுக் கொள்வதுண்டு’’ என்கிறார் 103 வயதாகும் சுப்ரமணிய சாஸ்திரிகள்.

சாஸ்திரிகள் சொல்வதற்கும், இன்று உலகம் பயிற்சி செய்து வரும் நமஸ்காரத்திற்கும் வித்தியாசங்கள் நிறைய உள்ளன. ஆனால் சுப்ரமணிய சாஸ்திரிகள் சொல்வது போல ஒவ்வொரு வீட்டிலும் காலை நேரத்தில் சூரிய மந்திரங்கள் ஒலிப்பதும், நமஸ்காரங்கள் இடம்பெறுவதும் குடும்பத்திற்கு நல்லது என்கிறார்கள். அதனால்தான் பணம் கொடுத்தாவது ஆட்களை வரவழைத்து, வீட்டில் அப்படியான ஓர் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

‘சூரிய மந்திரங்களைக் கேட்பதால் கூட ஆரோக்கியம் பெற முடியும்’ என்று சொல்லியிருக்கிறார் யோகி  கிருஷ்ணமாச்சாரி அவர்கள். உடல்நிலை சரியில்லாமல் யாராவது படுத்த படுக்கையாக இருக்கும் வீடுகளில் இப்படியான நமஸ்கார மந்திரங்கள் ஒலிக்கப்பட்டுள்ளன. அதற்காக வீதிகளில் சூரிய நமஸ்காரங்களை உரக்க ஒலித்துக் கொண்டே போவதும் நடைமுறையில் இருந்துள்ளது. மந்திரங்களோடு, அவர்களுக்குள் இருக்கும் சூரியன் பற்றிய எண்ணங்களும் உணர்வுகளும் கூட உடலில், மனதில் மாற்றங்கள் கொண்டுவர உதவியிருக்கும்.

நாம் அறிந்த உலகில் சூரியனே வலிமையானவன். சூரியன் தொடர்பான எதுவானதாக இருந்தாலும் இப்படித்தான் வலிமையாக இருக்குமோ!‘கண்கெட்ட பிறகா சூரிய நமஸ்காரம்?’ என்ற சொலவடை கிராமங்களில் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. ஒன்றை உரிய நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த சொற்றொடர், சூரிய நமஸ்காரம் கண்களுக்கு நல்லது என்பதையும் உணர்த்துகிறது.

சூரியனின் கதிர்களில் குளிப்பது குறிப்பாக நம் உடலின் தோல் பகுதிக்கு நல்லது. இதனால் வைட்டமின்-டி சத்து கிடைக்கிறது என்பது மருத்துவ உலகமும் ஏற்றுக் கொண்ட ஒன்று. இதற்காக ‘சன்பாத்’ என்று கடற்கரை, ஆற்றங்கரை, வெளிப்புறங்களில் சிறு அளவு உடைகளுடன் பல நாடுகளில் சூரியனைப் பார்த்து மக்கள் படுத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

மருத்துவ உலகம் சொல்லும் இந்தப் பலன்களைத் தாண்டி, ஒவ்வொருவரும் சூரியனை எப்படிப் பார்க்கிறார்கள், எந்த உணர்வோடு தொடர்புபடுத்துகிறார்கள் என்பது வேறு பல பலன்களையும் கொடுக்கும். எவ்வளவு தூரம் நம்பிக்கை உள்ளதோ அவ்வளவு பலன்கள் சாத்தியம்! அந்தக் காலத்தில் வீடு வீடாக சூரிய நமஸ்காரம் செய்யும்போது, செய்பவரோடு வீட்டினர் இணைந்து செய்தார்களோ என்னவோ, ஆனால் உடன் இருந்து சூரிய நமஸ்காரத்தை எண்ணுவார்களாம்… ‘சுப்ரமணிய சாஸ்திரிகள் 143 முறை செய்கிறாரா?’ என்று; ‘சரியாகத் தரையில் விழுந்து வணங்குகிறாரா?’ என்று. ‘இந்த 143 முறை நமஸ்காரம் ஒரு வீட்டில் மட்டுமல்ல, இரண்டு, மூன்று வீடுகளில் செய்யவேண்டி இருந்தது’ என்கிறார் அவர்.

அதிகாலையில் எழுந்து தயாராகிக் கிளம்பிவிட்டால், பல மணி நேரம் நமஸ்காரங்களில்தான் கழியும். குறிப்பாக மார்கழி மாதத்தின் எல்லா நாட்களுமே நமஸ்கார மயம்தான். அவ்வாறு உடலை நமஸ்காரத்திற்கு சமர்ப்பணம் செய்ததாலோ என்னவோ, 103 வயதிலும் நினைவுகளை ஞாபகப்படுத்தி சுறுசுறுப்பாகப் பேசவும் இயங்கவும் அவரால் முடிகிறது. ‘‘இன்றும் என்னை சர்க்கரை நோயோ, உயர் ரத்த அழுத்தமோ நெருங்காமல் இருப்பதற்கு நான் செய்த சூரிய நமஸ்காரப் பயிற்சிதான் காரணம்’’ என்கிறார் அவர்.

‘‘இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமாக இருக்க ஒழுங்காய் சூரிய நமஸ்காரம் செய்தாலே போதும்’’ என்கிறார் அவர் அழுத்தமாக. அதிகாலை நேரத்தில் எழுவதோடு, சூரிய நமஸ்காரம் போன்ற முழு உடலுக்கும் மூச்சுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் தரும் பயிற்சிகளும் சேர்ந்து விட்டால், வாழ்க்கையில் பல வளங்கள் சேரும்; அர்த்தமாய் நேரங்கள் செலவாகும்; எதிர்காலத்தில் வருவதாய் இருக்கும் நோய்கள் திசை மாறிப்போகும்.

யோக தத்துவ வகுப்பில் எனது ஆசிரியர், ‘‘இதை வெறும் தத்துவமாய்ப் பார்க்காமல், எத்தனை ஆயிரம் ஆண்டுகள், எப்படிப்பட்டவர்கள் எல்லாம் இதைப் படித்துள்ளனர்… எத்தனை தலைமுறைகள் தாண்டி நமக்குப் படிக்கக் கிடைக்கிறது என்று பாருங்கள். அக்கறையைக் கூட்டுங்கள். பவ்யமாய் உள்வாங்குங்கள்’’ என்பார். சூரிய நமஸ்காரத்திற்கும் அது பொருந்தும்.

இது தலைமுறை தலைமுறையாய் ஒரு பயிற்சியாக கை மாறி தொடர்ந்து வருவதாகும். அதே நேரம், பாரம்பரியம் மிக்கது என்பதற்காக மட்டுமே யாரும் இதைப் பயிற்சி செய்யவில்லை என்பதை நினைவில் வையுங்கள். பலன்களை, நலன்களை வேறெந்தப் பயிற்சியை விடவும் கூடுதலாக அள்ளித் தருவதால்தான் பலரும் ஆர்வத்தோடு இந்தப் பயிற்சியைச் செய்கிறார்கள். காலத்தால் நீண்டும், ஒவ்வொரு காலத்தின் தேவையாகவும் இருக்கிற சூரிய நமஸ்காரம், தன் சக்திவாய்ந்த கரங்களை நீட்டி உலகெங்கும் வாழும் மக்களை அரவணைக்கிறது. எத்தனையோ கோடிப் பேரின் வாழ்வு இதனால் அர்த்தமுள்ளதாகிறது!

அதிகாலை நேரத்தில் எழுவதோடு, சூரிய நமஸ்காரப் பயிற்சியும் செய்தால், வாழ்க்கையில்பல வளங்கள் சேரும்; எதிர்காலத்தில் வருவதாய் இருக்கும் நோய்கள் திசை மாறிப்போகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி? (மகளிர் பக்கம்)
Next post பாரதம் உடைந்த கதை!! (வீடியோ)