டைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்!! (மருத்துவம்)
எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான மருத்துவத்தை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், அத்திப்பழம், கீழாநெல்லி, ஆல்பகோடா ஆகியவற்றை கொண்டு டைபாய்டு காய்ச்சலை போக்கும் மருத்துவத்தை காணலாம். குடல் காய்ச்சல் எனப்படும் டைபாய்டு காய்ச்சல் மாசுபட்ட உணவு, தண்ணீர் மூலம் பரவுகிறது. இந்த காய்ச்சலால் உடல் வலி, சளி, கண்கள் சிவந்து போகுதல், அதிகளவில் வயிறு வீக்கம், மண்ணீரல் வீக்கம், தோலில் அரிப்பு, தடிப்பு ஏற்படும். இது வெள்ளை அணுக்களை குறைக்கும்.
அத்திப்பழத்தை பயன்படுத்தி டைபாய்டு காய்ச்சலின்போது ஏற்படும் உடல் வலி, சோர்வை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். பதப்படுத்திய 5 அத்தி பழத்தை எடுத்து துண்டுகளாக்கி ஒரு டம்ளர் நீர்விட்டு ஊறவைக்கவும். நீருடன் அத்திபழத்தை பாத்திரத்தில் எடுத்து கொதிக்க வைக்கவும். பின்னர், தேன் சேர்த்து குடித்துவர உடல் வலி, சோர்வு நீங்கும். குடல் கெடும்போது உஷ்ணம் அதிகமாகி காய்ச்சல் ஏற்படுகிறது.
உடல் சோர்வு, பசியின்மை, மயக்க நிலை, தசை வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு அத்திப்பழம் அற்புதமான மருந்தாகிறது. உடலுக்கு பலத்தை கொடுக்கிறது. கீழாநெல்லியை பயன்படுத்தி டைபாய்டு காய்ச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, திரிகடுகு சூரணம், தனியா பொடி, பனங்கற்கண்டு.
கீழாநெல்லி செடியை வேருடன் ஒரு கைபிடி எடுத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் திரிகடுக சூரணம், அரை ஸ்பூன் தனியா பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை என 5 நாட்கள் குடித்துவர டைபாய்டு காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வு நீங்கும். சுக்கு, மிளகு, திப்லி சேர்ந்தது திரிகடுக சூரணம். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட கீழாநெல்லி, தனியா ஆகியவை டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்தாகிறது. டைபாய்டு காய்ச்சலின்போது ஏற்படும்
வயிற்று வலி, குமட்டல், வாய் கசப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆல்பகோடா பழம், சீரகம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஆல்பகோடா பழம் நான்கு எடுக்கவும்.
இதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காலை, மாலை குடித்துவர வாய்கசப்பு விலகி போகும். உடலுக்கு சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். குமட்டல் சரியாகும்.உடலில் அதிக உஷ்ணம் ஏற்பட்டாலும், காய்ச்சல் வந்தாலும் வாய்க்கசப்பு ஏற்படும். வாய்கசப்பால் பசியின்மை ஏற்பட்டு சோர்வு உண்டாகும். ஆல்பகோடா புளிப்பு சுவை உடையது. உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆல்பகோடாவை சாப்பிடுவது நல்லது. பனி, மழைகாலத்தில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே, இந்த பாதுகாப்பான மருத்துவத்தை செய்து பயன்பெறலாம்.நுரையீரல் பாதிப்பை தடுக்கும் மருத்துவத்தை காணலாம். சாலையோரங்களில் வளரும் அம்மான் பச்சரி மூலிகையை ஒரு கைப்பிடி எடுத்து சிறிது மிளகு, சீரகம், சுக்கு சேர்த்து தேனீராக்கி அன்றாடம் இரண்டு வேளை குடித்துவர ஆஸ்துமா, நெஞ்சக சளி, நுரையீரல் தொற்று பிரச்னைகள் குணமாகும்.
Average Rating