ஆரிய மாயை!! (கட்டுரை)
அநகாரிக தர்மபாலவுக்குப் பின்னர் தோன்றிய ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அடையாளம், மய்யநிலை அரசியலுக்குள் நுழைய, நீண்ட காலம் கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில், இலங்கை அரசியலில் செல்வாக்கு நிலையிலிருந்த உயர்குழாம் அரசியல் தலைமைகளுக்கு, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அடையாள அரசியலில், பெரும் ஈர்ப்பு இருக்கவில்லை என்பதுடன், அதற்கான தேவையும் அவர்களுக்கு இருக்கவில்லை.
ஏனெனில், 1931இற்கு முற்பட்ட அரசியலில், இந்நாட்டின் பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்தவோ, அவர்களது விருப்பை வெற்றிகொள்ளவோ வேண்டிய அவசியம், அரசியல் தலைமைகளுக்கு இருக்கவில்லை. இதற்கு அர்த்தம், அன்றைய சூழலில் இன, மதப் பிரச்சினைகள் இருக்கவில்லை என்பதல்ல. பல சமூகங்கள் வாழும் எந்தச் சூழலிலும் இன, மத, அடையாள வேறுபாடுகள் சார்ந்த பிரச்சினைகள் இருப்பது, தவிர்க்க முடியாதது.
இந்த இன, மத, சமூக வேறுபாடுகளை, கொலனித்துவ ஆட்சியாளர்கள் தமக்குச் சாதகமாகத் தமது பிரித்தாளும் தந்திரத்துக்கு ஏதுவாகக் கையாண்டார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை, ஆனால், அன்றைய சூழலில், அரசியல் மய்யவோட்டத்தில் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அரசியல் இருக்கவில்லை.
டொனமூர் அரசியலமைப்பு 1931ஆம் ஆண்டு, சர்வசன வாக்குரிமையை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன், இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டதை நாம் அவதானிக்கலாம். மாற்றுத்தலைமைகளாக முயன்று கொண்டிருந்தவர்கள், மக்கள் ஆதரவைத் திரட்ட, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அடையாளத்தை முன்னிறுத்தத் தொடங்கினார்கள்.
இதில், ஏ.ஈ.குணசிங்ஹ போன்ற இடதுசாரிகள் குறிப்பிடத்தக்கவர்கள். மக்களாதரவைத் தக்க வைப்பதற்காக, முன்னர், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் பேசாத தலைமைகளும், அதை நோக்கி நகரத் தொடங்கின.
புனைகதை வரலாற்றிலிருந்து, ‘சிங்கள-பௌத்த’ தேசியம், தனக்கான வேர்களைப் பெற்றுக்கொள்கிறது. அந்தப் புனைகதை வரலாறு, மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டு, போசிக்கப்பட்டு, காலவோட்டத்தில் மெதுவாக வளர்த்தெடுக்கப்பட்டது.
‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் மய்யக்கருவை, சில வரிகளில் இரத்தினச் சுருக்கமாகச் சொல்வதானால், 1939இல் அன்றைய விவசாய அமைச்சராக இருந்த, இலங்கையின் ‘தேசபிதா’ என்று, இன்று பிரபலமாக வர்ணிக்கப்படும் டீ.எஸ்.சேனநாயக்க ஆற்றிய உரையொன்றிலிருந்து மேற்கோள் காட்டலாம்.
“நாம் ஒரே இரத்தம்; நாம் ஒரே தேசம். நாம் தான் தெரிவு செய்யப்பட்ட மக்கள். தன்னுடைய மதம் 5,500 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று புத்தர் சொன்னார். அதன் அர்த்தம், அந்த மதத்தின் பாதுகாவலர்களான நாம் அவ்வளவு காலம் நிலைத்திருப்போம்”
இது, டீ.எஸ்.சேனநாயக்க 1939இல் ஆற்றிய பகட்டாரவாரப் பேச்சு. இதுதான், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் சுருக்கம். சிங்களவர்களே, பௌத்தத்தைப் பாதுகாக்க, புத்தரால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இலங்கை என்பது சிங்களவர்களுக்குரித்துடைய நாடு. ஆகவே, ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்தைப் பாதுகாப்பதே, சிங்கள-பௌத்தர்களுடைய கடமை.
தன்னுடை ஆய்வுக்கட்டுரையொன்றில், இந்தச் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை ஹிட்லரின் ‘ஆரிய’ தூய்மைவாதத்துடன் ஒப்பிடும் குமாரி ஜெயவர்தன, ஹிட்லர், தான் ஆரியர்கள் என்று வரையறுத்தவர்களைப் பாதுகாக்கவும், ஆரியர்களின் தூய்மையைப் பேணவும் முயன்றதைப் போலவே, ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்தைப் பாதுகாக்கக் கூடிய தலைமையை, ‘சிங்கள-பௌத்த’ தேசியம் வேண்டியதாகக் கருத்துரைக்கிறார்.
1930களில், ஹிட்லரின் பெயர் உலகளவில் பிரபல்யமடைந்தபோது, இலங்கையின் பகட்டாரவார இடதுசாரிகளால், ஹிட்லர் ஓர் ஆதர்ஷ புருஷராகக் காண்பிக்கப்பட்டமை, குறிப்பிடத்தக்கதொரு நகைமுரண். குறிப்பாக ஹிட்லருடைய ‘ஆரிய’த் தூய்மைவாதம், ஏ.ஈ.குணசிங்ஹ போன்ற இடதுசாரித் தலைமைகளால், பல இடங்களிலும் மேற்கோள் காட்டிப் பேசப்பட்டது.
1936இல் ஒரு கூட்டத்தில் பேசிய ஏ.ஈ.குணசிங்ஹ, “சிங்களப் பெண்கள், மலையாளிகளின் வலையில் விழுதல், இலங்கைக்கே பெரும் இழுக்காகும். சிங்களப் பெண்கள் மலையாளிகளை மணம் முடிக்கக் கூடாது” என்று பேசியிருந்தார்.
இடதுசாரிப் பத்திரிகையான ‘வீரய’வில் 1936இல் வௌியாகியிருந்த கட்டுரையொன்று, ஆரியர்கள், ஆரியரல்லாதோர் இடையேயான திருமணத்துக்கு எதிரான அறைகூவலாக வௌிவந்திருந்தது. அது, ஆரியர்களின் மேன்நிலையை, ஹிட்லரை உதாரணமாகக் காட்டி உரைத்திருந்தது.
ஜேர்மனியின் தலைவரான ஹிட்லர், “ஆரிய இரத்தம் அல்லாதோரிடமிருந்து நாம், தலைமைத்துவத்தை எதிர்பார்க்க முடியாது” என்று கூறியிருந்தார். ஆகவே, அவருடைய நாட்டில் அவர், ஆரியர்களுக்கும் ஆரியர் அல்லாதோருக்கும் இடையிலான திருமண உறவைத் தடைசெய்திருந்தார். மேலும், இளம் ஆரியப் பெண்கள், ஆரியரல்லாதோர் வீடுகளில் பணிபுரிவதையும் ஹிட்லர், முற்றாகத் தடைசெய்திருந்தார். பேர்ஷியா உள்ளிட்ட நாடுகளிலும், அந்நியர்களைத் திருமணம் செய்வதானது தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தினதும் நோக்கம் தூய ஆரிய இனத்தை உருவாக்குதலாகும் என்று, ‘வீரய’வில் வௌியாகிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிங்களவர்களை, ஆரியர்களாகக் கருதும் வரலாற்று, விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் ஏதுமற்ற கூற்றுகள் கோயபெல்ஸின் ‘பெரும்பொய்’ தந்திரோபாயத்தையொத்த, அதாவது, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பெரியளவில் சொல்வதனூடாக, அதை மெய்யாக் கருதச் செய்தலின் ஊடாக, மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கை ஆழமாக விதைக்கப்பட்டது.
இதற்கு, எந்த அடிப்படையும் இல்லை. ‘ஜெர்மனிய ஆரியர்’ எனத் தம்மைக் கருதிக்கொள்வோரும், ‘பேர்ஷிய ஆரியர்’ எனத் தம்மைக் கருதிக்கொள்வோரும், ‘சிங்கள ஆரியர்’ என தம்மைக் கருதிக்கொள்வோரும், ஒரே இனமாக இருக்க முடியாது என்பது, வெற்றுப் பார்வைக்கே வெட்டவௌிச்சமானது. எனினும், அதை மரபணு ஆய்வு மிகத்தௌிவாக எடுத்துரைக்கும்.
ஹிட்லரின் எழுச்சியை, தமக்குச் சாதமாகப் பயன்படுத்த நினைத்த, பகட்டாரவார அரசியல்தலைமைகள் சில, ஹிட்லர் முன்னிறுத்திய பகட்டாரவார பரப்புரையை, இங்கு கையாண்டிருந்தன என்பதைத்தாண்டி, ‘சிங்கள ஆரிய’ உரிமைக்கோரலுக்கு, வேறு வலிதான அர்த்தங்கள் ஏதுமில்லை.
ஹிட்லரின் வீழ்ச்சியோடு, ஹிட்லரை மேற்கோள்காட்டும் போக்கும் ஓய்ந்துபோனது. ஆனால், ஹிட்லரின் ஆரியத் தூய்மைவாதமும் இனவெறியும் யூதர்களை எவ்வாறு அடக்குமுறைக்கும், பெரும் இன அழிப்புக்கும் (Holocaust) உள்ளாக்கியது என்பது, இங்கு குறிப்பிட்டு உற்றுநோக்கப்பட வேண்டியதொன்றாகிறது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில், கருவுற்ற ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் பற்றித் தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் கருத்துரைக்கும் குமாரி ஜெயவர்தன, சிங்கள-பௌத்த தேசியவாதத்தை பாஸிசத்துடன் ஒப்பிடுகிறார்.
19ஆம் நுற்றாண்டு, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களில், சிறு முதலாளித்துவ சிங்களவர்களால், ‘சிங்கள-பௌத்த’ பிரக்ஞையானது, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிடும் குமாரி ஜெயவர்தன, இந்தத் தத்துவமானது 1930களில் சிங்கள உழைக்கும் வர்க்கத்திடமும் பரவியது என்கிறார்.
மேலும், ‘1930களில் கையாளப்பட்ட வலிமைமிகு பிரசாரமானது, சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற, சிங்களவர்களே பௌத்தத்தைப் பாதுகாக்கத் தெரிவுசெய்யப்பட்ட இனம் என்ற, அவர்களது இனத்தூய்மை, அவர்களே இந்த மண்ணுக்கு உரித்துடைய மண்ணின் மைந்தர்கள் என்ற, நம்பிக்கைகளை மீளவிதைத்ததுடன், சிங்களவரல்லாத, பௌத்தரல்லாத அந்நியர்கள் மீதான கண்டனமும் அவர்களுக்கெதிரான புனிதப் போருக்கான தேவை தொடர்பிலான சமிக்ஞைகளும் தோன்றின. இந்தச் சிங்கள-பௌத்த மேலாதிக்க சிந்தனையும், சிங்கள மக்கள் அந்நியர்களால் ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள்; சிங்கள மக்களின் தொழிலையும் வணிகத்தையும் அந்நியர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்ற தர்மபாலவின் பழைய போர்ச்சூளுரையும் இந்தக் காலப்பகுதியில் உழைக்கும் வர்க்கத்தின் பத்திரிகைகளால் மிக வலிமையாக முன்னிறுத்தப்பட்டது. இடதுசாரிகளின் பொதுக் கூட்டங்களிலும், ஏன், மே தினக் கூட்டங்களிலும் கூட, வர்க்கப் பிரச்சினைகளான சம்பளம், வேலைத் தள நிலைமைகள் என்பவற்றை மேவி, சிறுபான்மையினருக்கு எதிரான பிரசாரங்கள் முன்னிலை பெற்றன. இந்தக் காலப்பகுதியில், தொழிலாளர்களிடம் தொடர்ந்து, அவர்கள் சிங்கள-பௌத்தர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் வர்க்கத்திடையே சிங்கள-பௌத்த பிரக்ஞையை வளர்ப்பதற்காகத் தொழிற்சங்கங்கள் வெசாக், சிங்கள புதுவருடம் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுத்தன. அதுமட்டுமல்லாது, சிங்களவர்களின் ஆரிய வேர்கள் தொடர்பான பிரசாரம் மீட்டெடுக்கப்பட்டதுடன், ஐரோப்பாவில் எழுச்சிபெற்ற பாஸிச அலை, சிங்கள – ஆரிய பிரசாரத்துக்குப் புத்துயிர் அளித்தது. உழைக்கும் வர்க்கமானது, ஆரம்பகால போராட்ட நடவடிக்கைகளால் கட்டியெழுப்பப்பட்ட வர்க்க ஒற்றுமையை மறந்து, இதுபோன்ற சித்தாந்தங்களை ஏற்று, மாறியமையானது இன்றைய காலத்துக்கும் முக்கியத்துவமுள்ள ஒரு விடயமாகும். இது, சகல வர்க்க மக்களிடையேயுமுள்ள சிங்கள-பௌத்த அடையாளப் பிரக்ஞையினது வலிமையைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. இந்தப் பிரக்ஞையானது, சில காலப்பகுதியில் அடங்கியிருந்தாலும், மிக இலகுவாக எழுச்சிபெறச் செய்யப்படக்கூடியது. குறிப்பாக, அவர்களது பிழைப்பு சவாலுக்கு உட்படுத்தப்படும் போது, இது மிக இலகுவாக எழுச்சிபெறச் செய்யப்பட்டு விடுகிறது’ என்று, குமாரி ஜெயவர்தன தனது ஆய்வுக் கட்டுரையில் விவரிக்கிறார்.
தேசியவாதம் என்பது, ஒரு குழுப் பிரக்ஞை. ஒரு குறித்த மக்கள் கூட்டம், தம்மை ஒரு மக்கள் குழுவாகவோ, சமூகமாகவோ உணர்வதில் பிழையில்லை. அதைத் தடுக்கவோ, தடை செய்யவோ முடியாது. அதற்கான தேவையுமில்லை. சிங்களவர்கள், சிங்களப் பௌத்தர்கள், தம்மை ஒரு தனித்த தன்மைகளுடைய மக்கள் கூட்டமாகவோ, சமூகமாகவோ கருதுவது பற்றி, விமர்சிக்கவும் முடியாது.
ஆனால், அந்தத் தேசியவாதக் குழு உணர்வானது, மற்றவர்களை எதிரிகளாக, அந்நியர்களாகப் பார்க்கும் நிலையைத் தோற்றுவித்து, அவர்களுக்கெதிரான வெறுப்புணர்வு, கண்டனவுணர்வு, அடக்குமுறை, வன்முறை என்பவற்றைத் தோற்றுவிக்கும் போது, அந்தத் தேசியவாதம், பேரினவாதமாக மாற்றம் பெறுகிறது.
‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்பது, அதன் கூறுகளால் வலிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, ‘சிங்கள-பௌத்தர்’ அல்லாதோர் மீதான எதிர்ப்புணர்வு, வெறுப்புணர்வு, காழ்ப்புணர்ச்சி, வன்முறை என்பவற்றால் வலிமைப்படுத்தப்பட்டதுதான், பெரும் சோகத்துக்கும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரியது.
20ஆம் நூற்றாண்டில், ஹிட்லரின் வழியிலான இனத் தூய்மைவாதத் தேசியத்தை ஒத்த பாதையில், ‘சிங்கள-பௌத்த’ தேசியத்தை முன்னிறுத்தி, இலங்கை நகர்ந்தமையானது, இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் நிலையை மோசமாக்கியது.
இது, சிறுபான்மையினங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேனும், தமக்கான தனி அடையாளங்களைப் பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டன.
‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை எதிர்கொள்ள, அதற்கு மாற்றானதொரு தேசியவாதத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் சிறுபான்மை இனங்களுக்கு, குறிப்பாக இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஏற்பட்டது.
இதைத்தான் ஏ.ஜே.வில்சன் ‘தற்காப்புத் தேசியவாதம்’ என்கிறார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், கருவுற்று உதித்த ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்திலிருந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, 20ஆம் நூற்றாண்டின் மய்யப் பகுதியில், தற்காப்புத் தேசியவாதமாகத் ‘தமிழ்த் தேசியம்’ இலங்கையின் பிறப்பெடுத்தது.
Average Rating