அழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 54 Second

மேக்கப் போட்டா ஒருவரை அழகாக்கலாம்… இது பழசு. மேக்கப் மூலம் ஒருவரை டிரான்ஸ்பார்ம் செய்ய முடியும்…இது புதுசு என்கிறார் ராதிகா. கடந்த 21 வருஷமாக மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். சாதாரண அழகுக்கலை நிபுணராக இருந்தவர் தற்போது மாடலிங், விளம்பர துறையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் முக்கிய ஸ்டைலிஸ்டாக வலம் வருகிறார்.‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே மேக்கப் செய்து கொள்ள பிடிக்கும். வீட்டில் எப்போதும் கண்ணாடியில முகம் பார்த்து பவுடர், லிப்ஸ்டிக் ேபாட்டுக் கொண்டு இருப்பேன்.

அதனால நிறைய உதை, திட்டு வாங்கி இருக்கேன். அப்படி இருந்தும் என்னவோ எனக்கு மேக்கப் போடுவதில் ஆர்வம் குறையவே இல்லைன்னு தான் சொல்லணும். நான் படிச்சிட்டு இருந்த பாலிடெக்னிக் பயிற்சி மையத்திற்கு எதிரே தான் அழகுக் கலைக்கான பயிற்சி இருந்தது. எனக்கு அங்கு பயிற்சி எடுக்கணும்ன்னு விருப்பம். எங்க வீட்டில ரொம்ப ஸ்ட்ரிக்ட். அப்பாவுக்கு பொம்பள பசங்க மேக்கப் போட்டுக்கிறது பிடிக்காது. அப்படி இருக்கும் போது, அவர்கிட்ட நான் அழகுக்கலை பயிற்சி எடுக்கிறேன்னு சொன்னது தான் தாமதம். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார்’’ என்றவர் திருமணத்திற்கு பிறகு தான் இதற்கான பயிற்சியை எடுத்துள்ளார். ‘‘படிப்பு முடிஞ்சதும் எல்லாரையும் போல எனக்கும் திருமணம், இரண்டு குழந்தைகள்ன்னு இல்லற வாழ்க்கை சந்தோஷமா நகர்ந்து கொண்டு இருந்தது.

கணவரின் வீடு செங்கல்பட்டு என்பதால் அங்க ெசட்டிலாயிட்டேன். என்னதான் குடும்பம், குழந்தைகள்ன்னு வீட்டைகவனித்துக் கொண்டாலும், நாம் விரும்பிய விஷயத்தை செய்ய முடியலைன்னு ஒரு சின்ன வருத்தம் இருக்கும் தானே. என் கணவரிடம் அனுமதி கேட்ட போது, முதல்ல தயங்கினார். காரணம் குழந்தைங்க. நான் இருவரையும் பார்த்துப்பேன்னு சொன்ன பிறகு தான் எனக்கு அனுமதியே கொடுத்தார். பெரியவனை பள்ளியில் விட்டுட்டு சென்னைக்கு ரயில் ஏறுவேன். சின்னவன் அம்மா வீட்டில் இருப்பான். அவன் பள்ளியில் இருந்து வரும் முன் நான் பயிற்சியை முடிச்சிட்டு கிளம்பிடுவேன். மூன்று மாச பயிற்சி என்பதால், சமாளித்து பயிற்சியை முடிச்சேன்’’ என்றவர் பயிற்சி முடிச்ச கையோடு இதனை தொழிலாக செய்ய துவங்கியுள்ளார்.

‘‘பயிற்சி முடிச்சிட்டு வீட்டிலேயே செய்தேன். ஆனா நான் பண்ண அந்த தப்புதான் என்னை இப்ப பெரிய அளவில் கொண்டு வந்திருக்கு. நான் சின்ன வயசில் இருந்தே மத்தவங்கள பார்த்து தான் மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் செய்ய கத்துக்கிட்டேன். அதனால வீட்டில் மத்தவங்களுக்கு போடும் போது, அவங்க சூப்பர்ன்னு பாராட்டினது எனக்கு எல்லாம் தெரியும்ன்னு ஒரு மமதையை ஏற்படுத்தியது. பயிற்சி எடுக்கும் போது நமக்கு தான் எல்லாம் தெரியுமேன்னு நினைச்சு செயல்பூர்வமா பயிற்சி எடுக்க தவறிட்டேன். அது மட்டுமில்லை, வீட்டில் குழந்தைகள் இருப்பாங்க. அவங்கள நேரத்தில் போய் பார்க்கணும்ன்னு பரபரப்பு. இதன் பாதிப்பு நான் தனியா அழகு நிலையத்தை வீட்டில் துவங்கிய போது தான் தெரிந்தது.

செங்கல்பட்டில் முதன் முதலில் இது போன்ற அழகு நிலையம் நான் தான் துவங்கினேன். அந்த ஊரு மக்களுக்கு இது புதுசு. நிறைய பேர் வர ஆரம்பிச்சாங்க. அவங்க முடியை திருத்தம் செய்யுங்க, புருவத்தை சரி செய்யுங்கன்னு சொன்ன போது தான் எனக்கு எதுவுமே வரலைன்னு புரிந்தது. ஒரு புருவம் கூட சரியா திருத்த வரலையேன்னு கனவுல எல்லாம் பயந்து இருக்கேன். வாடிக்கையாளர்களை எல்லாம் தட்டிக் கழிக்க ஆரம்பிச்சேன். ஆனா அவங்க என்ன விடல. நாங்க காத்து இருக்கோம். வேலைய முடிச்சிட்டு செய்யுங்கன்னு காத்து இருக்க ஆரம்பிச்சாங்க. என்னாலையும் தவிர்க்க முடியல. என்னோட ஒரே அதிர்ஷ்டம் நான் தப்பா செய்ய மாட்டேன். எங்க சரியா செய்யாம போயிடுவேனோன்னு ரொம்ப ஸ்லோவா செய்வேன்.

ஒரு முடி டிரிம் செய்ய ஒரு மணி நேரம் எடுத்துப்பேன். என்னோட வாடிக்கையாளரும் எனக்கு ரொம்பவே ஒத்துழைச்சாங்க. அதன் பிறகு அழகுக் கலை குறித்த செமினார் மற்றும் வொர்க்‌ஷாப் நடந்தாலும் முதல் வரிசையில் போய் உட்கார்ந்திடுவேன். அவங்க என்ன செய்றாங்கன்னு கவனத்தோட பார்க்க ஆரம்பிச்சேன். என்னை மேலும் அப்கிரேட் செய்துக்க மும்பை, தில்லின்னு போனேன்’’ என்றவர் கடந்த நான்கு வருடமாக மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.‘‘பல செமினார் வொர்க் ஷாப்புன்னு போனதால, எனக்கு அங்கு வரும் புகைப்பட நிருபர்களின் அறிமுகம் கிடைச்சது. அவங்க மூலமா தான் கோகுலம் மாத இதழுக்கு முதன் முதலில் மாடலிங் செய்து கொடுத்தேன். அதன் பிறகு வார இதழ்கள், ஃபேஷன் ஷோக்கள்ன்னு வாய்ப்பு வர ஆரம்பித்தது. அதன் அடுத்த கட்டம் தான் விளம்பரம். என்னுடைய துறை மாறமாற நானும் என்னை தொழில்நுட்ப ரீதியா அப்கிரேட் செய்துகொள்ள ஆரம்பிச்சேன்.

முன்பெல்லாம் அழகா இருக்க மேக்கப் ேபாடுவாங்க. இப்ப அந்த டிரண்ட் மாறிடுச்சு. அதாவது ஒருவரின் முகத்தில் கண்கள் எடுப்பா இருக்கும். அது அவங்களுக்கே தெரியாது. மேக்கப் போடும் போது அதை ஹைலைட்டா காட்டும் போது அவங்க லுக்கே மாறிடும். இன்னும் அழகா தெரிவாங்க. இப்ப இருக்கிற தொழில் நுட்பம் மூலமா அழகா இருக்கிறதை மேலும் எடுப்பா காட்டலாம். அதே சமயம் தேவையில்லாததை மறைக்கவும் செய்யலாம். உதாரணத்துக்கு முகத்தில் சின்ன தழும்பு இருந்தா, அதை மேக்கப் மூலம் தெரியாதபடி செய்ய முடியும். இது தான் சர்வ தேச அளவிலும் செய்யப்படும் மேக்கப். எடுப்பாக இல்லாத உதட்டையும் மாற்றி அமைக்கலாம். முகத்தில் மாற்றம் செய்வது போல ஹேர்கட் மற்றும் ஹேர்ஸ்டைல் மூலமாகவும் ஒருவரின் தோற்றத்ைத மாற்றி அமைக்க முடியும். முடியின் நுனியை நேராக வைத்து கத்தரித்தால் ஒரு ஸ்டைல், அதையே சாய்த்து வைத்து வெட்டினா வேற ஸ்டைல். இந்த அடிப்படையை புரிந்து கொண்டேன்’’ என்றவர் நடிகர் சந்தானத்துக்கு ஹேர்ஸ்டைல் அமைப்பை மாற்றிக் கொடுத்துள்ளார்.

‘‘மாடலிங் செய்திட்டு இருக்கும் போது, நடிகர் சந்தானத்துக்கு வேற லுக் கொடுக்கணும், செய்து தர முடியுமான்னு கேட்டாங்க. தனிக்காட்டு ராஜா, சக்கப்போடு போடு ராஜா படத்துக்கு அவருக்கு புது லுக் கொடுத்தேன். அதை பார்த்திட்டு அருண் ராஜா காமராஜ் அவருடை ஹேர்ஸ்டைலை மாற்றி அமைக்க சொன்னார். அவருக்கும் நான் செய்த ஸ்டைல் பிடிச்சு போக அவரின் ‘கனா’ படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன்… என ஐந்து பேருக்கு ஸ்டைல் செய்து இருக்கேன். இப்ப தீரஜ் என்பவருக்கு செய்து இருக்கேன். இவர் அறிமுக கதாநாயகர், படம் பெயர் இன்னும் முடிவாகல’’ என்றவர் ஆரம்பத்தில் பலரால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

‘‘மத்தவங்களை அழகாக்க தெரிந்த எனக்கு என்னை முதல்ல அழகுப்படுத்திக்க தெரியல. நான் சாதாரண குடும்ப பெண் தான். எங்க வீட்டில் இந்த துறையில் அடி எடுத்து வைத்த முதல் தலைமுறைன்னு கூட சொல்லலாம். என்னை நான் அழகுபடுத்திக் கொள்ளணும்ன்னு தெரியல. நமக்குள் திறமை இருந்தாலும், வெளித்தோற்றத்தை கொண்டு தான் நம்மை கணக்கிடுவாங்கன்னு முதல்ல தெரியல. ஆரம்பத்தில் நிறைய கல்யாண ஆர்டர்கள் எல்லாம் கைநழுவி போனது. ஏன் இந்த பின்னடைவுன்னு அப்ப எனக்கு புரியல.

மும்பைக்கு போன போது தான் ஒருவரின் வெளித்தோற்றம் எவ்வளவு முக்கியம்ன்னு தெரிந்தது. என்னுடைய தோற்றத்தை மாற்றினேன். இப்ப என் தோற்றம் மட்டும் இல்லை, என் வீட்டில் உள்ளவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. ஆரம்பத்தில் சென்னைக்கு என்னை பயிற்சிக்காக அனுப்ப பயப்படுவாங்க. இப்ப நான் செய்யும் ஒவ்வொரு வேலை குறித்து மிகவும் ஆர்வமா கேட்கிறாங்க. இன்னிக்கு யாருடைய மூக்கை எப்படி எடுப்பா மாத்தினேன்னு கேட்கிற அளவுக்கு அவங்களும் மாறி இருக்காங்க’’ என்றார் ஸ்டைலிஸ்ட் ராதிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்!! (வீடியோ)
Next post டயாலிசிஸ்!! (மருத்துவம்)