ஷேக் ஹசீனா தொடர்ந்து 3 வது முறையாகவும் வெற்றி!! (உலக செய்தி)
பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மிகப் பெரும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்தலில் வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 350 பாராளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி, இதுவரை 281 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது அக்கட்சி முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட கூடுதலான இடங்கள் ஆகும்.
தேர்தல் முறைகேடு புகார்கள், வாக்குசாவடிகளை கைப்பற்றுதல் மற்றும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட இத்தேர்தலை ´´ஒரு கேலிக்கூத்தான தேர்தல்´´ என்று பங்களாதேஷ் எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் இதுவரை 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளை ஏற்காத எதிர்கட்சிகள் மறுதேர்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.
´´இதுபோன்ற கேலிக்கூத்தான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் தவிர்த்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்´´ என்று எதிர்க்கட்சி தலைவர் கமல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
´´நடுநிலை அரசு ஒன்றின் மேற்பார்வையில் மிக விரைவில் ஒரு புதிய பாராளுமன்ற தேர்தல் நடத்திட வேண்டும்´´ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே நாட்டில் நடைபெற்ற தேர்தல் வன்முறை குற்றச்சாட்டுக்கள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அந்நாட்டின் தேர்தல் ஆணையம், தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற குற்றச்சாட்டுககள் தங்கள் கவனத்துக்கு வந்ததாகவும் அது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் நேற்று (30) நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற மோதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.
16 கோடி மக்கள்தொகை அந்நாட்டில் இஸ்லாமியவாதத் தீவிரவாதம், வறுமை, பருவநிலை மாற்றம், ஊழல் ஆகியன இந்தத் தேர்தலின் முக்கியப் பேசுபொருட்களாக இருந்தன.
அதன் அண்டை நாடான மியான்மரின் வன்முறைக்கு உள்ளான பல லட்சம் ரோஹிஞ்சா இன முஸ்லிம்கள் தஞ்சமடைந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷ் சர்வதேசத் தலைப்புச் செய்திகளில் சமீப ஆண்டுகளில் இடம் பிடித்தது.
2014 இல் நடந்த தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி புறக்கணித்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து முக்கியக் கட்சிகளும் போட்டியிடும் தேர்தலாக இத்தேர்தல் அமைந்தது.
இதனிடையே, வாக்குப்பதிவு முடிவதற்கு முன்பாகவே வாக்குசாவடிகளை கைப்பற்றுதல் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றுக்கு அஞ்சி, எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த குறைந்தது 47 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரதமர் ஷேக் ஹசீனா, ´´எதிர்க்கட்சியினர் ஒருபுறம் எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். மறுபுறம் எங்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களை தாக்குகின்றார்கள். இதுதான் இந்த நாட்டின் சோகம்´´ என்று தெரிவித்தார்.
Average Rating