ஜனாதிபதி தேர்தலில் கலாம் 2 வது முறை போட்டியிடாதது ஏன்? ( உலக செய்தி)
‘மக்கள் ஜனாதிபதி’ என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாம், நாட்டின் 11 வது ஜனாதிபதியாக (2002-2007) பதவி வகித்தார். அவருக்கு பின்னர் 12 வது ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் இருந்தார்.
நாட்டின் 13 வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு 2012 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிடுவார் என ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் போட்டியிடவில்லை.
இதன் பின்னணி என்ன என்பது குறித்து மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரனான ராஜ்மோகன் காந்தி (வயது 83), தனது ‘நவீன தென் இந்தியா: 17 ஆம் நூற்றாண்டு முதல் நமது காலகட்டம் வரையிலான சரித்திரம்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:- 2007 ஆம் ஆண்டு அப்துல் கலாமின் பதவி காலம் முடிந்தது. அதன்பின்னர் அவர் இந்தியாவின் கலாசாரம் மீது கொண்டிருந்த ஆர்வம், இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீதான அவரது தாராளமான பாராட்டு, இந்திய பாதுகாப்புக்கு அவர் ஆற்றிய சேவைகள் என அனைத்தும் இந்திய இந்துக்களுக்கு பிடித்தமான முஸ்லிமாக அவரை ஆக்கியது.
2012 ஆம் ஆண்டு அப்துல் கலாம் 2 வது முறையாக ஜனாதிபதி ஆவதற்கு பாரதிய ஜனதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் முன்மொழிந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.
தான் வெற்றி பெறுவதற்கு தேவையான எண்ணிக்கை (ஓட்டுகள்) கிடைக்காது என்று உணர்ந்துதான், அவர் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார். பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி ஆனார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அப்துல்கலாம் முதல் முறை ஜனாதிபதி ஆனது எப்படி என்பதையும் ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ 2002 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் பெயரை முதலில் முன்மொழிந்தது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்தான். தேவே கவுடா, ஐ.கே. குஜ்ரால் மந்திரிசபைகளில் ராணுவ மந்திரியாக திகழ்ந்த முலாயம் சிங் யாதவ், டி.ஆர்.டி.ஓ. (ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு) தலைவராக இருந்த அப்துல் கலாமை நன்றாக தெரிந்து வைத்திருந்ததுடன், அவரை விரும்பவும் செய்தார். 2002 ஆம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒருவரை ஜனாதிபதியாக தன் சுய பலத்தில் தேர்வு செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. அப்போது அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்குவதில் வாஜ்பாய் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தார், சோனியா காந்தியும் அப்துல் கலாமுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தார். அதனால் அவர் ஜனாதிபதி ஆக முடிந்தது” என கூறி உள்ளார்.
அப்துல் கலாமுக்கு ராஜ்மோகன் காந்தி புகழாரம் சூட்டவும் தவறவில்லை.
“அப்துல் கலாம் அணுகக்கூடிய ஜனாதிபதியாக விளங்கினார். மக்களின் ஜனாதிபதி என்ற சிறப்பு பெயரையும் பெற்றார். அவர் புத்திசாலியான ஜனாதிபதியாகவும் இருந்தார். அவர் மிகச்சிறப்பான ஆலோசனைகளையும் நினைவுகூரக்கூடிய வகையில் வழங்கினார். மாணவர்கள் அவரை மிகவும் நேசித்தார்கள்” என ராஜ்மோகன் காந்தி கூறி உள்ளார்.
Average Rating