முக்கிய சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு!!(கட்டுரை)
அரச கட்டமைப்பின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் கிடைக்கப்பெற்றுவரும் முரண்பாடான தகவல்களுக்கு மத்தியில், குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (சி.ஐ.டி) பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த சில்வாவை விலக்குவதற்கும், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் அவரை இடமாற்றம் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பான தெளிவான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. “அவசியமான சேவைத் தேவைப்பாடுகள்” என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடமிருந்து, நவம்பர் 18, 2018இல் வெளியாகியிருந்தது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவைக் கலந்துரையாடாமல், இடமாற்றத்துக்கான இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவு எடுக்கப்படுவதற்குச் சில நாள்கள் முன்னர் வரை, ஏன், சில மணித்தியாலங்கள் முன்னர் வரை, நிஷாந்த சில்வாவை இடமாற்றுமாறு, ஜனாதிபதியிடமிருந்தும் படைப்பிரிவுத் தரப்புகளிடமிருந்தும், பொலிஸ்மா அதிபருக்கு அழுத்தங்கள் வழங்கப்பட்டிருந்தன. இப்பத்திரிகையின் வசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில், நிஷாந்த சில்வாவின் தொழில் வாழ்க்கையில் தலையிட வேண்டாமென, சி.ஐ.டியின் தலைமைப்பீடத்திலிருந்து, அதேயளவிலான அழுத்தங்கள் வழங்கப்பட்டன என்பதையும் காண முடிகிறது.
நவம்பர் 13, 2018இல் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முகவராக நிஷாந்த சில்வா இருந்தாரென, பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றஞ்சாட்டினார் என, சி.ஐ.டியின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு எழுதிய கடிதமொன்றில், பொலிஸ்மா அதிபர் குறிப்பிடுகிறார். இந்தக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர், பொலிஸ்மா அதிபரை அலைபேசியில் தொடர்புகொண்ட அட்மிரல் விஜேகுணரத்ன, இந்த “பாதுகாப்பு அச்சுறுத்தல்” தன்னால் வெளிப்படுத்தப்பட்ட பின்னரும், நிஷாந்த சில்வா, சி.ஐ.டிக்காகப் பணியாற்றத் தொடர்ந்தும் ஏன் அனுமதிக்கப்பட்டார் என்று கேள்வியெழுப்பினார் என, அக்கடிதம் தெரிவிக்கிறது.
நவம்பர் 16, 2018இல் அட்மிரல் விஜேகுணரத்னவிடமிருந்து பெறப்பட்ட இந்த அழைப்பின் பின்னர் தான், சி.ஐ.டியின் பொறுப்பாளராக இருந்த ரவி செனவிரத்னவுக்குக் கடிதமொன்றை எழுதி, மேற்படி விடயங்களைக் குறிப்பிட்டு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகள் அல்லது குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் பங்கெடுப்பு ஆகியன உள்ளனவா என, நிஷாந்த சில்வா பற்றிய அறிக்கையொன்றை வழங்குமாறு, பொலிஸ்மா அதிபர் கோரினார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்குப் பொலிஸ்மா அதிபர் எழுதிய இரகசியமான இந்தக் கடிதம் (Ref: SD/ IG/ OUT/ S-04/ 5745/ 2018), “தமிழீழ விடுதலைப் புலிகளுடன், பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த சில்வா தொடர்புபட்டுள்ளார் என்பது, நவம்பர் 13, 2018 அன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் தொடர்புகளைக் கொண்ட பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த சில்வா, சி.ஐ.டிக்காகப் பணியாற்றுவதற்கு ஏன் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, என்னுடன் அலைபேசி மூலம் தொடர்புகொண்ட, பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, என்னிடம் கேட்டார்.
“எனவே, குறித்த அதிகாரி தொடர்பில், இன்று – நவம்பர் 16 – மாலை 3 மணிக்கு முன்னதாக, கீழ்வரும் விடயங்கள் தொடர்பில் அறிக்கையொன்றைத் தருமாறு நான் கோருகிறேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் குறித்த அதிகாரி தொடர்புபட்டுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் உள்ளனவா?
ஏதாவது குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் குறித்த அதிகாரி ஈடுபட்டுள்ளாரா?
இந்த அதிகாரிக்கு, எவ்வாறான உத்தியோகபூர்வக் கடமைகள் வழங்கப்பட்டுள்ளன?” என, அக்கடிதத்தில் கேள்வியெழுப்பப்படுகிறது.
இதற்குப் பதிலளித்து, நவம்பர் 18ஆம் திகதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன எழுதிய கடிதத்தில் (Ref: S/DIG/CID/IGP/3303/18), பயங்கரவாத நடவடிக்கைள் அல்லது குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கையிலோ நிஷாந்த சில்வா ஈடுபட்டார் என்பது தொடர்பாக, தானோ அல்லது சி.ஐ.டி பணிப்பாளர் ஷானி அபேசேகரவோ அறிந்திருக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட கடமைகளை, அவரது திறமைக்கு ஏற்றவாறு அவர் சிறப்பாகச் செய்துள்ளார் எனவும், போர்க் காலத்தில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் பலரைக் கைதுசெய்து, அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளார் எனவும், அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டார். அத்தோடு, தற்போது நீதிமன்றங்களின் முன்னாலுள்ள, பல்வேறு உணர்மிகையான விசாரணைகளை, பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த சில்வா எவ்வாறு மேற்கொண்டார் எனவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, அக்கடிதத்தில் மேலும் விளங்கப்படுத்தினார்.
பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் பிரதானியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில், நிஷாந்த சில்வாவுக்கு எதிராக, எந்தவோர் ஆதாரமும் கிடையாது என, இப்பத்திரிகையின் உடைமையில் இருக்கும் அக்கடிதத்தில், அவர் குறிப்பிடுகிறார். அட்மிரல் விஜேகுணரத்ன, சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள, 11 இளைஞர்களின் கடத்தல் தொடர்பான விசாரணைகளை, நிஷாந்த சில்வாவே முன்னெடுக்கிறார் என, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சுட்டிக்காட்டினார். குறித்த இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்தார் என்று, பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் பிரதானி மீது குற்றச்சாட்டு இல்லாவிடினும் கூட, குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான நேவி சம்பத் என்று அழைக்கப்படுகின்ற லெப்டினன் கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சியைக் காப்பாற்றி, அவரை சி.ஐ.டி விசாரணை செய்யவோ அல்லது கைதுசெய்யவோ விட முடியாமல் தடுத்தார் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. நேவி சம்பத்தை, சி.ஐ.யில் முன்னிறுத்துமாறு மீண்டும் மீண்டும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டமைக்கு மத்தியில் இது இடம்பெற்றிருந்தது. நேவி சம்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என, விஜேகுணரத்ன தெரிவித்து வந்த போதிலும், கடற்படை அதிகாரிகளின் ஓய்விடத்தில், நேவி சம்பத்தை, விஜேகுணரத்ன ஒளித்து வைத்திருந்தார் என, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், சி.ஐ.டி தெரிவித்தது. இது சம்பந்தமாக, நேரில் கண்டவர்களையும் ஆவணங்களையும், சி.ஐ.டி சமர்ப்பித்தது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் நிஷாந்த சில்வா ஈடுபட்டுள்ளார் என, விஜேகுணரத்ன அவரை மாட்டிவிட முயல்கின்ற போதிலும், எந்த புலனாய்வுச் சேவைகளும் சட்ட அமுலாக்கல் பிரிவுகளும், அவ்வாறான எந்தவிதத் தகவல்களையும் உத்தியோகபூர்வமாகப் பெற்றிருக்கவில்லை என, அக்கடிதத்தில் சிரேஷ்ட டி.ஐ.ஜி செனவிரத்ன விளங்கப்படுத்தினார். பதினொரு இளைஞர்களின் கடத்தல் வழக்கை, நிஷாந்த சில்வா விசாரித்து வருவதன் காரணமாகவே, அவர் மீது இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என, சிரேஷ்ட டி.ஐ.ஜி குற்றஞ்சாட்டினார்.
குறித்த வழக்கில், விஜேகுணரத்னவைக் கைதுசெய்து, நீதிமன்றின் முன்னால் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், மூன்று தடவைகள் உத்தரவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
“முன்னைய சந்தர்ப்பத்தில் நான் உங்களுக்குக் குறிப்பிட்டதைப் போன்று, பாரதூரமான குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், விஜேகுணரத்னவைக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டுமென்ற நிதிமன்ற உத்தரவொன்று உள்ளது. எனவே, பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் பிரதானியாகப் பணியாற்றுவதற்கு அவர் பொருத்தமற்றவர். இவ்விடயத்தை, பாதுகாப்புச் செயலாளருக்கு நீங்கள் அறிவித்துள்ளீர்கள் என நான் புரிந்துகொள்கிறேன். விசாரணையொன்றில் தலையிடவும், விசாரணை செய்யும் அதிகாரியைக் குழப்புவதற்கும் முயலும் வகையில் சந்தேகநபர் செயற்படுவதால், சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் அடிப்படையில், அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியும்” என, அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்தார்.
நிஷாந்த சில்வாவை நியாயப்படுத்தி, அட்மிரல் விஜேகுணரத்ன மீது, விசாரணைக்கான குற்றவியல் தடையை ஏற்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டும் வகையில் எழுதப்பட்ட, சிரேஷ்ட டி.ஐ.ஜி செனவிரத்னவின் கடிதம் கிடைக்கப்பெற்ற பின்னர், நவம்பர் 18, 2018இல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க வருமாறு, பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மறுநாள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு, பொலிஸ்மா அதிபர் எழுதிய கடிதத்திலேயே இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
பரந்தளவிலான கண்டனம்
ஞாயிற்றுக்கிழமையொன்றின் இரவு நேரத்தில் வந்த குறித்த உத்தரவு, உலகம் முழுவதிலும், உடனடியானதும் கடுமையானதுமான கண்டனத்தை ஏற்படுத்தியது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட “வெள்ளை வான்” கடத்தல்கள் பல, ஊடகவியலாளர்களின் கொலைகள் ஆகியன தொடர்பான விசாரணைகளை முன்னின்று வழிநடத்திய விசாரணையாளர் என்ற வகையில், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகக் குழுக்கள் ஆகியவற்றிடையே, நிஷாந்த சில்வா, பெரிதும் அறியப்பட்டவர். லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொட காணாமற்போனமை, கீத் நொயாரின் கடத்தலும் சித்திரவதையும், உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல்கள், நாமல் பெரேராவைக் கடத்த முயன்றமை ஆகியன, இவற்றில் உள்ளடங்குகின்றன.
இந்த உத்தரவு பகிரங்கமாக அறிவிக்கப்படுவதற்கு வெறுமனே ஒரு மணித்தியாலத்துக்கு முன்னராக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், டி.என்.எல் தொலைக்காட்சி அலைவரிசையின் விசேட “ஜனஹந்த” நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பில், இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடினார். “மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பிரிவினரும், அவர்களது குற்றங்களையும் கொள்ளைகளையும் மறைக்க விரும்புகின்றனர். இப்போது தான், இந்த விசாரணைகள் எல்லாவற்றையும் கையாளுகின்ற பிரதான அதிகாரி, நீர்கொழும்புக்குத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்?” என, அவர் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “மஹிந்த ராஜபக்ஷ வேண்டுவது இதைத் தான். அவரது விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகத் தான், பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த, சி.ஐ.டியிலிருந்து நீக்கப்படுகிறார். சி.ஐ.டியில் நிஷாந்த சில்வா தொடர்ந்து இருந்தால், நாடாளுமன்றத்தில் சபாநாயகரைத் தாக்க முயன்ற தனது நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசி அல்லது அரைவாசிக்கு அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்தாண்டின் நடுப்பகுதிக்கு முன்னராக, வெலிக்கடைச் சிறையில் இருப்பார்கள் என்பதை, மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்திருந்தார். இந்த வெலிக்கடைப் பயங்கரவாதக் குழுவின் காரணமாகத் தான் இவை எல்லாமே” என அவர் சாடியிருந்தார்.
இந்தக் கண்டனத்தைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரின் பெர்ணான்டோ, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொலைக்காட்சியில் நேரடியாகக் கண்டனங்களை வழங்கினர். நிஷாந்த சில்வாவை நீக்குவதன் மூலமாக, சி.ஐ.டியை முடக்குவதற்கு முயல்கின்றனர் என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக, அதன் தலைவர் துமிந்த சம்பத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த இடமாற்றம், மேலே குறிப்பிடப்பட்ட வழக்கு விசாரணைகளைத் தாமதப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டது என நாம் நம்புகிறோம். இந்தச் சூழ்நிலைகளின் கீழ், ஊடக சுதந்திரமும் ஊடகவியலாளர்களும் ஆபத்திலிருக்கின்றனர் என்பதால், நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டது.
ஊடகவியலாளர்களுக்கான சர்வதேசப் பேரவை, இவ்விடயம் தொடர்பில் பாரதூரமான கவலையை வெளிப்படுத்தியதோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், ஊடகவியலாளர்கள் மீதான பல பாரிய தாக்குதல்களை, நிஷாந்த சில்வா விசாரித்து வந்தார் எனச் சுட்டிக்காட்டியது.
நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் தொடர்பில், சர்வதேச மன்னிப்புச் சபையும் தன் பங்குக்கு, அறிக்கையொன்றை வெளியிட்டது: “ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள், அவர்கள் காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், அதிகாரிகள் தலையிட்டுள்ளனர் எனத் தென்படும் இவ்விடயம் தொடர்பில், நாங்கள் கவலையுடன் கவனமெடுத்துள்ளோம்.
இந்த வழக்குகள் தொடர்பில் தொடர்ந்து நடைபெறும் குற்றவியல் விசாரணைகள், எந்த விதத்திலும் தாமதப்படுத்தப்படக்கூடாது என்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த வழக்குகள் தொடர்பான நீதி, நீண்டகாலமாகக் கிடைக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தது.
திங்கட்கிழமை காலையில், இவ்வாறான அறிக்கைகளைத் தொடர்ந்து, முக்கியமமான பல நாடுகளின் தூதுவர்கள், குறித்த இடமாற்றம் தொடர்பான விளக்கத்தை ஏற்படுத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற பதிலாக, சேவைக்கான தேவைப்பாட்டைக் கருத்திற்கொண்டு, குறித்த முடிவு, பொலிஸ்மா அதிபரால் தனித்து எடுக்கப்பட்டது என்பதே காணப்பட்டது என, பல இராஜதந்திரத் தகவல்மூலங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுவிட்டார் என்பது, தெளிவாகத் தெரிந்தது.
இதேவேளை, நவம்பர் 19, அதே திங்கட்கிழமை, நிஷாந்த சில்வாவின் இடமாற்றத்துக்கு எதிராக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மேன்முறையீடொன்றை முன்வைத்தார்.
உணர்மிகை மிக்கதும் முக்கியமானதுமான பல விசாரணைகள், முடிவடையும் தருணத்தை எட்டியுள்ள நிலையில், நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டால், அவ்விசாரணைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என, தனத மேன்முறையீட்டில், சிரேஷ்ட டி.ஐ.ஜி ரவி குறிப்பிட்டார். சி.ஐ.டி விசாரணைகளுக்கு இந்த அதிகாரியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, இடமாற்ற உத்தரவை உடனடியாக மீளப்பெறுமாறு, ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
குறித்த கடிதத்தில், “சி.ஐ.டியின் கூட்டுக் கொள்ளைப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த சில்வா, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு, பொலிஸ்மா அதிபரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
“பொலிஸ் திணைக்களத்தில் அவரது 25 ஆண்டுகாலச் சேவையில், இந்த அதிகாரி, சி.ஐ.டியில் 20 ஆண்டுகளாக இருந்து வந்ததோடு, மிகவும் உணர்மிகையான பல விசாரணைகளை மேற்கொண்டு, அனைத்துச் சந்தேகநபர்களுக்கும் எதிராக, அச்சமின்றிச் செயற்பட்டார். இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோரினதும் அவர்களது குடும்பங்களினதும், பிரதான இலக்காக இவர் மாறியுள்ளார். அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அவருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சி.ஐ.டிக்குப் பணிப்புரை விடுத்திருந்தது. பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அவரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை, சி.ஐ.டி எடுத்துள்ளது. இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, அவரது இடமாற்ற உத்தரவை இரத்துச் செய்து, அவரது விசாரணைகளை எவ்விதத் தடைகளும் இன்றி மேற்கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பளிக்குமாறு, உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த சில்வா, தனது இடமாற்றத்துக்கு எதிராக, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், நவம்பர் 19, திங்கட்கிழமையன்று, தானும் மேன்முறையீடு செய்தார். தன் மீது, பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் பிரதானியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன்னால் நிறுத்துவதற்காக, தனது இடமாற்றத்தை இல்லாது செய்யுமாறு கோரினார்.
இடமாற்றத்துக்கு எதிரான மேன்முறையீடுகளைத் திங்கட்கிழமை பெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள தங்களது அலுவலகத்தில், விசேட அவசர கூட்டமொன்றை நடத்தி, முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டது. இந்தக் கூட்டத்தின் போது, இரண்டு மேன்முறையீடுகளும் அவற்றுக்கான ஆதார ஆவணங்களுக்கும் கருத்திற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, முக்கியமான குறித்த அதிகாரியை, நீர்கொழும்புக்கு இடமாற்றம் செய்வதற்கான முடிவு குறித்து, பொலிஸ்மா அதிபரிடம் விளக்கமொன்றைக் கோருவதற்கு, ஆணைக்குழு தீர்மானித்தது.
நவம்பர் 19ஆம் திபதி பிற்பகலில், ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, நிஷாந்த சில்வாவின் விவகாரம் தொடர்பில், விசேட ஊடகவியலாளர் சந்திப்பையொன்றை நடத்தியது. “சடுதியான இந்த இடமாற்றத்துக்குப் பின்னால், அரசியல் உள்ளது என நாம் நம்புகிறோம்” என, அவ்வமைப்பின் ஏற்பாட்டாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜே.சி. வெலிமுன, வெளிப்படையாகவே தெரிவித்தார்.
“இந்த இடமாற்றம், சட்டத்துக்கு எதிரானது என்பதோடு, அது சவாலுக்கு உட்படுத்தப்படும். அவரது விசாரணைகளை முடக்குவதற்காகவே அவர் இடமாற்றப்பட்டார் என, நாம் உறுதியாக நம்புகிறோம். ஒக்டோபர் 26, 2018க்குப் பின்னர் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களோடு, இவ்விடமாற்றமும் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது எனத் தெரிகிறது.
“சட்டத்தரணிகளாக, மிகவும் மதிக்கப்படுபவரும் திறமையைக் கொண்டவருமாகவும், தனது கடமைகள் தொடர்பில் உயர்ந்த அர்ப்பணிப்பைக் கொண்ட ஒருவராகவும், நிஷாந்த சில்வாவை நாம் அடையாளம் காண்கிறோம். யாழ்ப்பாணத்தில், வித்தியா சிவலோகநாதன் மீதான வன்புணர்வு, அவரின் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில், நிஷாந்த சில்வா வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை, 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் பாராட்டியிருந்தது” என, சிரேஷ்ட சட்டத்தரணியான வெலிமுன தெரிவித்தார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் விசாரணையொன்று நடத்தப்பட்டு, புனையப்பட்ட வதந்திகளான விடுதலைப் புலிகளுடனான தொடர்பு என்பதைப் பயன்படுத்தி, முக்கியமான அதிகாரியான நிஷாந்த சில்வாவை நீக்கி, நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட “சேவைத் தேவைப்பாடு” என்ற விடயத்தை வெளிப்படுத்த வேண்டியேற்படும் என்ற நிலை காணப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குக் கடிதமெழுதிய பொலிஸ்மா அதிபர், நிஷாந்த சில்வா விடயத்தில் தன்னுடைய பங்கை மட்டுப்படுத்தும் வகையில் முயன்றார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு, நவம்பர் 19, 2018இல் எழுதிய கடிதத்தில், நிஷாந்த சில்வா விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதி, பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் பிரதானி, சி.ஐ.டி தலைமைத்துவம் ஆகியோருடன் தான் கொண்டிருந்த கலந்துரையாடல்களை, பொலிஸ்மா அதிபர் மீள ஞாபகப்படுத்தினார். நவம்பர் 13, 2018 அன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உறுதியான தொடர்புகளை நிஷாந்த சில்வா கொண்டிருக்கிறார் எனவும், இதன் காரணமாக, சி.ஐ.டியில் அவரைத் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது எனவும், பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் பிரதானி அட்மிரல் விஜேகுணரத்ன குறிப்பிட்டாரென, பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
அட்மிரல் விஜேகுணரத்ன, நவம்பர் 16ஆம் திகதி, தனக்கு அழைப்பெடுத்து, விடுதலைப் புலிகளுடனான தொடர்புகளைக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியிலும், சி.ஐ.டியில் நிஷாந்த சில்வா தொடர்ந்தும் பணியாற்றுவது தொடர்பில் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார் என, பொலிஸ்மா அதிபரின் கடிதம் தெரிவிக்கிறது. இந்த அழைப்பின் பின்னரேயே, நிஷாந்த சில்வா தொடர்பிலான அறிக்கையைக் கோர வேண்டியேற்பட்டது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கான கடிதத்தில், பொலிஸ்மா அதிபர் குறிப்பிடுகிறார்.
அதன் பின், நிஷாந்த சில்வா தொடர்பில், சி.ஐ.டியின் பொறுப்பதிகாரி ரவி செனவிரத்னவிடமிருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கை தொடர்பிலும், பொலிஸ்மா அதிபர் குறிப்பிடுகிறார். இந்த அறிக்கையின்படி, தமிழீழ விடுதலைப் புலிகளுடனோ அல்லது குற்றவியல் செயற்பாடுகளுடனோ, நிஷாந்த சில்வாவுக்குத் தொடர்புள்ளது என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்களோ அல்லது புலனாய்வுத் தகவல்களோ இல்லையென, பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கிறார். எனவே, நிஷாந்த சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றன எனவும் உறுதியற்றன எனவும், பொலிஸ்மா அதிபர் முடிவுசெய்கிறார்.
லசந்தவின் மகள்
இருந்த போதிலும், நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் தொடர்பில், தனக்கு வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என, பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கிறார். “விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில், ஜனாதிபதியின் பணிப்புரையினதும் ஆலோசனையினதும் அடிப்படையில், தொலைபேசிச் செய்தி இலக்கம் 128 மூலமாக, நவம்பர் 18, 2018 அன்று, சி.ஐ.டியிலிருந்து நிஷாந்த சில்வாவை, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு, சேவைத் தேவைப்பாடு அடிப்படையில் இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை வழங்கினேன்” என, பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
இந்தக் கடிதம் மூலமாக, தன்னை நிலைநிறுத்துவதற்கு, பொலிஸ்மா அதிபர் முயன்றார். இந்தக் கடிதம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு விநியோகிக்கப்பட்டு, பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்னவுக்கு வழங்கப்பட்ட சிறிது நேரத்தில், மாபெரும் அதிர்ச்சியொன்று ஏற்பட்டது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க, கொழும்பில் இடம்பெற்று வந்த நிகழ்வுகளைக் கவனித்து வந்ததோடு, நிஷாந்த சில்வாவைப் புகழ்ந்து, அவரது இடமாற்றத்தைக் கண்டித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதத்தை முடிக்கும் நிலையில் காணப்பட்டார்.
அஹிம்சாவின் கடிதம், நவம்பர் 20, 2018, செவ்வாய்க்கிழமை எனத் திகதியிடப்பட்டிருந்தது. அன்று காலையில், இலங்கை நேரப்படி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர், அக்கடிதத்தை அனுப்பினார்.
அக்கடிதத்தை எழுதும் முடிவுக்கு வந்தமை தொடர்பில், இப்பத்திரிகைக்குப் பிரத்தியேகமாகக் கருத்துத் தெரிவித்த அஹிம்சா, ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதும் அம்முடிவை எடுத்தமைக்கான காரணத்தை விளங்கப்படுத்தினார்.
“எனது தந்தை தொடர்பான விசாரணைகளில், நிஷாந்தவையும் சி.ஐ.டியின் இன்னோர் அதிகாரியையும் சந்திக்கும் வரையில், எனக்கு நம்பிக்கையிருந்திருக்கவில்லை. எனது வாக்குமூலத்தைப் பெறும் போது அவர் (நிஷாந்த), மிகவும் பொறுமையாகவும் முழுமையாகக் கவனிப்பவராகவும் தீர்மானமிக்கவராகவும் இருந்தார்.
விசாரணையின் ஒவ்வொரு விடயத்தையும், தனது விரல் நுனிகளில் அவர் வைத்திருந்தார். அத்தோடு அவர், தீர்வுகளையும் வழங்கினார்” என, அஹிம்சா குறிப்பிட்டார்.
“எனது கடிதம், வேண்டுகோளாகவே அமையவிருந்தது. அவரது முடிவை மாற்றுமாறு, ஜனாதிபதியிடம் மன்றாடவிருந்தேன். ஆனால், அம்முடிவின் பின்னால் என்ன இருந்தது என்பதை நான் அறிந்த பின்னரும், நிஷாந்தவின் பின்னால் சுயாதீன நிறுவனங்கள் உறுதியான நின்றதன் பின்னரும், சரியானதைச் செய்வதற்கு மன்றாடத் தேவையில்லை என நான் உணர்ந்தேன்” என, அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு அஹிம்சா எழுதிய கடிதத்தில், தனது தந்தையின் கொலை தொடர்பான விசாரணையில், நிஷாந்த சில்வாவின் பங்கை, மிகுந்த கவனத்துடன் விவரித்தார். குறித்த இடமாற்ற உத்தரவு, பொலிஸ்மா அதிபரிடமிருந்து வந்திருப்பதாகக் கூறினாலும் கூட, “ஜனாதிபதியின் கோரிக்கையின் அடிப்படையில், தயக்கத்துடனேயே இந்த உத்தரவை வழங்கினார் என்பதை, அவர் (பொலிஸ்மா அதிபர்) வெளிப்படுத்தத் தவறியிருக்கவில்லை” எனக் குறிப்பிட்டார்.
“உயிரிழந்த எனது தந்தை லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான பிரதான விசாரணையாளராக, நிஷாந்த சில்வாவை எனக்குத் தெரியும். எனது தந்தை, ஜனவரி 8, 2009 அன்று — அதாவது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வகையில் நீங்கள் பதவியேற்பதற்குச் சரியாக 6 ஆண்டுகள் முன்பாக — அடித்துக் கொல்லப்பட்டார். எனது தந்தை உள்ளிட்ட மோசமான கொலைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதியளித்தே நீங்கள் வென்றீர்கள்” என, அஹிம்சாவின் கடிதம் தொடர்ந்திருந்தது.
பின்னர், நவம்பர் 20, 2018, செவ்வாய்க்கிழமை முற்பகல் வேளையில், ஏற்கெனவே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் விளக்கம் கோரப்பட்டிருந்த நிலையில், அஹிம்சாவின் கடிதம், ஊடகங்களைப் புரட்டிப் போட்டிருந்தது. பல அரசியல், சிவில் சமூகக் குழுக்களும், இந்த இடமாற்றத்துக்கான கண்டனத்தில் ஒற்றுமையாக இருந்தன. இந்நிலையில், பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திலிருந்து, ஒரு பக்கத்தில் அமைந்த கடிதமொன்று, சி.ஐ.டிக்கு வந்திருந்தது.
குறித்த அஞ்சலுறை, நவம்பர் 20ஆம் திகதி முற்பகலிலேயே வந்திருந்தாலும் கூட, அந்த ஆவணத்தின் உள்ளடக்கங்களை வைத்துப் பார்க்கும் போது, முன்னைய நாளில் அது தயாரிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்தது. அந்தத் திகதி, பல இடங்களில் கையால் எழுதப்பட்டிருந்தது.
குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்வதற்காகத் தன்னால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, மீளப்பெறுவதாக, அக்கடிதத்தில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார். இதற்காகக் குறிப்பிடப்பட்டிருந்த காரணம், மென்மையான ஒன்றாகவே இருந்தது: “சேவைக்கான தேவைப்பாடுகள் காரணமாக” என, அந்தக் காரணத்தை, பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருந்தார்.
Average Rating