திம்புப் பேச்சுவார்த்தை!!(கட்டுரை)
1956இல், தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரிலிருந்து, இலங்கை அரசாங்கம், தமிழ்த் தரப்பினரிடையே பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன; ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகி இருக்கின்றன.ஆனால், திம்புப் பேச்சுவார்த்தைகள் என்பது, இவை எல்லாவற்றையும் விடச் சற்றே வேறுபட்டது.
இதுவரை காலமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், ஜனநாயக அரசியல் கட்சிகளிடையே, அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சி (பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி) ஆகியவற்றுக்கு இடையேதான் இடம்பெற்றிருக்கிறது. அதுவும் நேரடியாக, எதுவித மூன்றாந்தரப்பு மத்தியஸ்தமுமின்றி.
ஆனால், திம்புப் பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரையில், முதன்முறையாக இலங்கை அரசாங்கத்தரப்புடன், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் பங்குபற்றும் பேச்சுவார்த்தையாக அமைந்தது.
அத்துடன், மூன்றாம் தரப்பான இந்தியாவின் ஏற்பாட்டின் பேரில், அவர்களுடைய மத்தியஸ்தத்துடன், இன்னொரு மூன்றாம் தரப்பான பூட்டானில் இடம்பெற்றது. ஆகவே, வௌித்தோற்றத்தில் இது மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு பேச்சுவார்த்தையாகிறது.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு, அதற்குரிய முக்கியத்துவத்தை இதன் முக்கிய இருதரப்புகளும் வழங்கினவா என்றால், அது ஐயத்துக்குரியதே.
ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அரசாங்கமாகட்டும், மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களாகட்டும், தமது சுயவிருப்பத்தின் பேரிலன்றி, தெற்காசியப் பிராந்தியத்தின் ‘பெரியண்ணா’ ஆன, இந்தியாவின் அழுத்தத்தின் பேரிலேயே இதில் பங்குபற்றியிருந்தன. போரொன்றின் மூலமான வெற்றியிலேயே, இருதரப்பின் எண்ணமும் குறியாக இருந்தது.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில், ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கையை அது, முற்றாக இழந்துவிட்டிருந்தது. மறுபுறத்தில், தமிழர் அரசியல் பரப்பில், அவர்களுடைய செல்வாக்குக் குறைந்து வருவதையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் செல்வாக்கு வளர்ந்து வருவதையும் அவர்கள் நன்கு அறிந்தும், உணர்ந்தும் இருந்தனர். ஆகவே விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை அரவணைத்தே, தமது அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், அவர்களுக்கு இருந்தது. அவர்களுடைய ஒரே நம்பிக்கையாக, இந்தியா மட்டுமே இருந்தது.
ஆகவே, பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கை என்பதை விட, அதைவிட வேறு அரசியல் வழியில்லை என்ற காரணத்தாலும், இந்தியா மீது கொண்டுள்ள, நம்பிக்கையின் காரணத்தாலும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டிருந்தது.
ஓர் எளிய உதாரணத்தைச் சொல்வதானால், ஆசிரியரின் வற்புறுத்தலின் காரணத்தால் மட்டும், ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட மாணவர்களைப் போலவே, இருதரப்புகளும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தன எனலாம்.
முதல்நாள் சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இரண்டாவது நாள், 1985 ஜூலை ஒன்பதாம் திகதி, திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானபோதே இருதரப்பும், குறிப்பான தமிழ்த்தரப்பு, இந்தப் பேச்சுவார்த்தைகள் மீது, நம்பிக்கையற்றிருந்த நிலை திட்டவட்டமாக வௌிப்பட்டது.
தமிழர் தரப்பின் அதிருப்தி
1985 ஜூலை ஒன்பதாம் திகதி, ஒரு நீண்ட மேசையின் இருபுறத்திலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் வகையில், இலங்கை அரசாங்கத் தரப்பும், தமிழர் தரப்பும் அமர்ந்திருந்தனர். தமிழர் தரப்புச் சார்பாகப் பேச்சுவார்த்தைகளை அமிர்தலிங்கம் ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை அரசாங்கம் சார்பில், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ள இந்தக் குழு தொடர்பிலான தமது அதிருப்தியையும் அரசாங்கத்தில் எதுவித பதவியும் வகிக்காதவர்கள் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பிலும், அதன் பின்னால் இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஜே.ஆர் அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவம் தொடர்பிலும் தமிழ்த்தரப்பு, தனது ஐயத்தையும் கேள்வியையும் பதிவு செய்தது. இது தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்காக ஜே.ஆர். நேரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் கையாளும் தந்திரோபாயம் என்பதையும் தமிழ்த் தரப்பு, கோடிட்டுக் காட்டியது என்று, தனது நூலொன்றில் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.
ஏற்கெனவே, ஓராண்டுக்கும் மேலாக நடந்த சர்வகட்சி மாநாடு, எதுவித முடிவுமின்றித் தோல்வியில் முடிவடைந்த விரக்தியிலிருந்த அமிர்தலிங்கம், அதைச் சுட்டிக்காட்டி, “இது புதிய தந்திரோபாயம் அல்ல; கடந்த வருடமும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஒரு வருடத்துக்கு இழுத்தடித்தது; அதையே இந்த வருடமும் செய்ய முயல்கிறது” என்றார்.
மேலும், அரசாங்கத்தரப்பில் பங்குபற்றியுள்ள குழுவில், இலங்கை உளவுத்துறையைச் சார்ந்தவர்கள் இருந்தமை தொடர்பில், தமது எதிர்ப்பையும் தமிழர் தரப்புப் பதிவு செய்துகொண்டது.
அரசாங்கம் சார்பில், கலந்துகொண்டுள்ள பேச்சுவார்த்தைக் குழு தொடர்பிலான ஐயத்தையும் நம்பிக்கையீனத்தையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், ஏற்கெனவே இந்தியாவிடம் பதிவு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழர் தரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த இலங்கைப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரும், ஜே.ஆரின் சகோதரரும், பிரபலமான வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தன, “இலங்கை இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வொன்றை எட்டுவதற்காக, மிகத் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக, இலங்கை அரசாங்கம் வழங்கிய முழு அதிகாரத்துடன் வந்திருக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.
மேலும், பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்தால், இறுதி உடன்படிக்கையொன்றைச் செய்வதற்கு, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, திம்புவுக்கு வருவதற்குத் தயாராக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
ஆனால், அரசாங்கத்தரப்பு அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கான தம்முடைய தகுதி, அதிகாரம் பற்றிக் கேள்வி எழுப்பிய தமிழர் தரப்பின் தகுதி, அதிகாரம் பற்றி, எச்.டபிள்யூ.ஜெயவர்தன மறுகேள்வி எழுப்பினார்.
அரசாங்கத் தரப்பின் ஆட்சேபம்
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கு உள்ள தகுதி தொடர்பில் எச்.டபிள்யூ.ஜெயவர்தன கேள்வியெழுப்பினார். “நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்து–கிறீர்கள், நீங்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று குறிப்பிட்ட எச்.டபிள்யூ.ஜெயவர்தன, “தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தம்மைத் தாமே பிரதிநிதித்துவப்படுத்துகி–ன்றனவே அன்றி, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இலங்கையின் ஏனைய பாகங்களில் வாழும் தமிழர்களையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இலங்கை அரசாங்கத் தரப்பிலான நாங்கள்தான், தமிழர்களையும் சேர்த்தே பிரதிநிதித்துவம் செய்கிறோம்” என்று எச்.டபிள்யூ.ஜெயவர்தன குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தையின் ஆரம்பமே, ஒரு வழக்கின் ஆரம்பத்தைப்போல அமைந்திருந்தது. வழக்குரைஞர்கள், அதுவும் இலங்கையின் பிரபல வழங்குரைஞர்களான எச்.டபிள்யூ.ஜெயவர்தன, எச்.எல்.டி.சில்வா, எல்.சீ.செனவிரத்ன, மார்க் பெர்னாண்டோ, எஸ்.எல்.குணசேகர ஆகியோர் நிறைந்த இடத்தில், அவ்வாறு நடக்காதிருந்தால் தான், அது ஆச்சரியம்.
ஒரு வழக்கின் ஆரம்பத்தில், பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைப்பது போலவே, “தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல” என்ற ஆட்சேபத்தை, எச்.டபிள்யூ.ஜெயவர்தன முன்வைத்தார்.
அதாவது, அவரைப் பொறுத்தவரையில், இது அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அல்ல; மாறாக அரசாங்கத்துக்கும் – ஆயுத இயக்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை. இதில், இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களையும் அரசாங்கமே பிரதிநிதித்துவம் செய்கிறது, அந்த அரசாங்கம், ஆயுதம் ஏந்திய ,‘பயங்கரவாதிகளுடன்’ சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என்பதே, எச்.டபிள்யூ.ஜெயவர்தனவின் ஆட்சேபனையின் உள்ளர்த்தம். இதில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, இலாவகமாக அவர் தவிர்த்துக் கொண்டார்.
சிலர், இதற்கு இன்னொரு தந்திரோபாய காரணம் இருக்கலாம் என்றும் கருத்துரைக்கின்றனர். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கும் இடையில், நிறைந்த முரண்பாடுகள் உள்ளன என்பது, அனைவரும் அறிந்ததே. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் தமிழ் இளைஞர் ஆயுத இயங்கங்களையும் பிரித்தாள முடியுமென்றால், அது பேச்சுவார்த்தைகளில் ஒன்றாக, ஒற்றுமையுடன் களம் கண்டுள்ள தமிழர் தரப்பைப் பிரித்து, அதன் மூலம் அதன் வலுவைக் குறைக்கமுடியும்.
ஆகவே, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்ய, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்குத் தகுதியில்லை என்பதன் மூலம், மறுபுறத்தில், அந்தத் தகுதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இருக்கிறது என்று சொல்லாமற் சொன்னால், அது அவர்களிடையேயான முரண்பாட்டை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று, கருதியிருக்கலாம் என்றும் சிலர் கருத்துரைக்கிறார்கள்.
தமிழர் தரப்பின் விசனம்
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கு உள்ள தகுதி பற்றி, எச்.டபிள்யூ.ஜெயவர்தன எழுப்பிய கேள்வி, தமிழர் தரப்பை விசனமடையச் செய்ததுடன், கடும் அதிருப்திக்கும் உள்ளாக்கியது.
இது தொடர்பிலான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன. இலங்கை அரசாங்கத் தரப்பு, தாமே தமிழர்களின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டால், அவர்கள் ஏன் எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், நீங்களே உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று தமிழர் தரப்பிலிருந்து ஒருவர் விசனத்துடன் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தரப்பு, தம்மை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ளாவிட்டால், தாம் இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயாரில்லை என்று தமிழர் தரப்புக் குறிப்பிட்டதோடு, சிறு ஒத்திவைப்பொன்றையும் கோரியது. அதன்படி, பேச்சுவார்த்தைகள் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.
தமிழ்த் தரப்பின் கோரிக்கையில், ஒரு நியாயம் இருக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான, இறுதித் தீர்வொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை இதுவென்றால், அந்தப் பேச்சுவார்த்தைகள் இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இடம்பெற வேண்டும். அரசாங்கத்தரப்பு, மறுதரப்பைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்று குறிப்பிட்டால், அந்தப் பேச்சுவார்த்தையின் பயன்தான் என்ன?
மேலும், இந்த வாதம் இந்தப் பேச்சுவார்த்தைகளிலிருந்த இன்னொரு மிகப்பெரும் குறையையும் கோடிட்டுக்காட்டி நிற்கிறது. அதாவது, பேச்சுவார்த்தைகளுக்கு இருதரப்புகளையும் அழைத்துவருவதற்கு இந்தியா காட்டிய முனைப்பை, பேச்சுவார்த்தைகளின் உள்ளடக்கத்தையும் நிழ்ச்சி நிரலையும் தயாரிப்பதில், இந்தியா காட்டவில்லை என்பதன் விளைவுகள், ஆரம்பத்திலேயே வௌிப்படத் தொடங்கியிருந்தன.
பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், தமிழர் தரப்புத் தனியாகச் சந்திப்பொன்றை நடத்தியது. இந்தச் சந்திப்பில், பேச்சுவார்த்தைகளை முற்கொண்டு செல்வது தொடர்பிலான, தம்முடைய தந்திரோபாயத்தை அவர்கள் திட்டமிட்டுக் கொண்டனர்.
தமிழர் தரப்புக்குள் இருந்த ஜனநாயகத் தலைமைகளுக்கும் ஆயுதத் தலைமைகளுக்கும் இடையிலான பிளவொன்றை ஏற்படுத்த, இலங்கை அரசாங்கத் தரப்பு முயலும் தந்திரோபாயத்தை உணர்ந்து கொண்ட அவர்கள், இனித் தம்மை ஒன்றிணைத்து, ‘தமிழ் மக்களின் பிரதிநிதிகள்’ என்றே அழைத்துக் கொள்வதாகத் தீர்மானித்தார்கள்.
சிறு ஒத்திவைப்பைத் தொடர்ந்து, மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த போது, எச்.டபிள்யூ.ஜெயவர்தன, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தொடர்பான தம்முடைய நிலைப்பாட்டை விளங்கப்படுத்தினார்.
Average Rating