பேரவையை அலைக்கழிக்கும் முன்னணி!!(கட்டுரை)
தேர்தலைப் பிரதானப்படுத்திய அரசியல் கூட்டணிகள், இலாப நட்டக் கணக்கின் அடிப்படையில் தோற்றம் பெறுபவை. அங்கு கொள்கை, கோட்பாடுகளுக்கான இடம் என்பது, இரண்டாம் பட்சமானதே.
அதனால்தான், முன்னாள் வைரிகளான சந்திரிகாவும் ரணிலும், தமது பொது வைரியான மஹிந்தவை எதிர்கொள்வதற்கான கூட்டணியை, 2014இல் அமைக்க முடிந்தது. இப்போது, மைத்திரியும் மஹிந்தவும், ரணிலை எதிர்கொள்வதற்காகப் புதிய உடன்பாட்டுக்கு வந்திருப்பதும் அதன்போக்கிலானதுதான்.
அப்படியான நிலையொன்று, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியலிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தேர்தல் கூட்டணியும் அதன் போக்கிலானதே.
தேர்தல் அரசியலுக்கு அப்பால் நின்று, மக்கள் இயக்கமாக ஒழுக வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் போக்கில், தோற்றுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, இன்றைக்குத் தேர்தல் இலாப நட்டக் கணக்குப் பார்த்து, ‘யாரை வைத்துக் கொள்வது, யாரை விலக்குவது’ என்று சிந்தித்துச் செயற்படத் தொடங்கிவிட்டது.
பேரவையின் ஏற்பாட்டில், தமிழ் மக்கள் கூட்டணி என்கிற கட்சியை, விக்னேஸ்வரன் ஆரம்பித்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனால், அந்தக் கட்சியின் நிர்வாகக் குழுவிலோ, பொறுப்பிலோ யார் யார் இருக்கிறார்கள் என்கிற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
கட்சியின் செயலாளர் நாயகமாகத் தான் பதவி வகிப்பதாக, அண்மைய உரையொன்றின் போது, விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியிருந்தார். அதைத் தவிர்ந்து, அந்தக் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், அதன் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில், எந்தவொரு வெளிப்படுத்தலும் இதுவரை செய்யப்படவில்லை.
அப்படியான கட்டத்தில், பேரவையின் செயற்குழுவேதான், தமிழ் மக்கள் கூட்டணியின் அனைத்து நிர்வாக விடயங்களையும் கையாள்கிறதா என்கிற கேள்வி எழுகின்றது. ஏற்கெனவே, பேரவை அலுவலகத்துக்கான வாடகையைச் செலுத்துவது சார்ந்த, நெருக்கடிகளைச் சந்திக்கும் சூழலொன்று நிலவுவதாகக் கூறப்படுகின்றது.
அப்படியான நிலையில், விக்னேஸ்வரனின் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான ஆளணி, நிதியை யார் வழங்கப்போகிறார்கள், எவ்வாறு பெற்றுக்கொள்ளப் போகிறார்கள்? என்கிற கேள்வியும் எழுகின்றது. அதன்போக்கில்தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்த்த கூட்டணியை, பேரவையால் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்கின்றது.
பேரவை உருவாக்கப்படும் போது, அதற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், வைத்தியர்களின் கடந்த கால வரலாறு, பெரியளவில் நோக்கப்படவில்லை.ஒரு விடயத்தை முன்னிறுத்தி, அவர்கள் அனைவரும் இணைக்கப்பட்டார்கள். அதன்மூலம், தமிழ்த் தேசிய அரசியலில், அழுத்தம் கொடுக்கக் கூடிய தரப்பாகத் தம்மை உருவாக்க நினைத்தார்கள். ஆனால், தற்போது, தேர்தலை முன்னிறுத்திய கூட்டணியை அமைக்க நினைக்கும் போதுதான், கட்சிகளினதும், நபர்களினதும் கடந்த கால வரலாற்றை முன்னிறுத்தி, தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அது, உண்மையில் அரசியல் அறம் சார்ந்ததுதானா? என்கிற கேள்வி எழுகின்றது.
புளொட் அமைப்பின் பிரதிநிதிகளைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றும் போது, வைத்தியர் லக்ஷ்மனிடம் அந்த அரசியல் அறம் இருந்ததா? அல்லது, தேர்தல் அரசியலுக்காகச் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்கு அவர் வந்தாரா?
அடிப்படையில், பேரவைக்காரர்களுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில், செயற்பாட்டு அணுகுமுறையில் பாரிய முரண்பாடுகள் உண்டு. பேரவைக்காரர்கள் அரசியல் பத்தியாளர்கள், கல்வியாளர்களை மூளையாகக் கொண்டு இயங்கும் அமைப்பு. அது, எந்தவொரு தருணத்திலும் அரசியல் கட்சிகளின் செயற்பாடு, தங்களை மீறிச் சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றது. அதற்காக, தம்மோடு இணக்கமாகப் பயணிக்கக்கூடிய அரசியல் கட்சிகளைத் தக்க வைப்பது சார்ந்து, அதிக கரிசனை கொள்கிறது.
சுரேஷ் பிரேமசந்திரனையும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பையும் தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்கிற நிலையில்தான், விக்னேஸ்வரனின் கூட்டணிக்குள், அவர்களைப்பேண பேரவைக்காரர்கள் முயல்கிறார்கள்.
ஆனால், முன்னணியைப் பொறுத்தவரை, தம்முடைய செயற்பாடுகளின் மீது, அழுத்தங்களை வழங்கும் தரப்புகளை ஓர் இடைவெளியில் கையாளவே விரும்புகின்றது. அதன்மூலம், தம்முடைய தனி அடையாளத்தை, தேர்தலுக்கான கூட்டணி தோல்வியடைந்தாலும் பேண முடியும் என்று நம்புகிறது.
இன்னொரு வகையில் சொல்வதானால், மாற்று அணி என்பது, விக்னேஸ்வரனை வெளிமுகமாகக் கொண்டிருந்தாலும், அதன் உண்மையான முகமாகவும், அதன் பங்களிப்பாளர்களாகவும் முன்னணியினரே இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு, கஜேந்திரகுமாருக்கு உண்டு.
அதற்கு, பேரவையின் புலமைத்தரப்பும்(?), ஏனைய கட்சிகளும் தடையாக இருக்கும் கட்டத்தில், அவர்களோடு இணைந்து பயணிப்பது எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர் கருதுகிறார்.
ஆனால், பேரவைக்காரர்களைப் பொறுத்தவரை, கஜேந்திரகுமாரும் முன்னணியும் பேச்சுவார்த்தைகள் மூலம் கட்டிமேய்க்க முடியாத தரப்பு; ஆகவே, விக்னேஸ்வரன் இருக்கும் காலத்தில் எப்படியாவது ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, ஒப்பந்தமொன்றின் ஊடாக அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். அது, இரண்டு நோக்கங்களின் போக்கில் வருவது. முதலாவது, வாக்கு வங்கி; இரண்டாவது, நிதித்தேவை.
1. வாங்கு வங்கி அரசியல்:
பேரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் ஓரளவுக்கு வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் ஒரே தரப்பு முன்னணியே.
புளொட் அமைப்பு, எந்தவொரு காரணங்கொண்டும் கூட்டமைப்பிலிருந்து தற்போதைக்கு வெளியில் வராது என்கிற நிலையில், முன்னணியைத் தவிர்த்துவிட்டு, புதிய கூட்டணி என்கிற சிந்தனையைப் பேரவையால் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவே முடியாது.
விக்னேஸ்வரனை முகமாக முன்னிறுத்தினாலும், அவரின் அரசியல் என்பது, ஐந்து வருட அனுபவத்தைக் கொண்டதுதான். விக்னேஸ்வரனை வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதும், வாக்குகளைப் பெற்றுக்கொடுத்ததும் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பினரும் தான்.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அவர் வெளிப்படுத்திய கூட்டமைப்புக்கு எதிரான குரல், மக்களால் கண்டுகொள்ளப்படவில்லை. அதுபோக, விக்னேஸ்வரன் தேர்தல் அரசியலுக்கான உடல்மொழியையோ, வயதையோ கொண்டிருக்கவில்லை. ஒரே நாளில் நான்கு, ஐந்து மேடைகளில் பேசும் அளவுக்கான உடல்நிலையும் அவரிடத்தில் இல்லை.
அவர், இருதய நிபுணரான லக்ஷ்மனிடமே வைத்தியம் பெறுகிறவர். அப்படிப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை எதற்கு ஒத்துழைக்கும் எதற்கு ஒத்துழைக்காது என்பதெல்லாம், பேரவைக்காரர்களுக்குத் தெரியும்.
அப்படியான நிலையில், தேர்தல் வேலைகளைப் பார்ப்பதற்கான ஆளணி என்பது முக்கியமானது. அது, பேரவைக்குள் இருக்கும் தரப்புகளில் முன்னணியிடமே அதிகமாக உண்டு. சுரேஷைப் பொறுத்தளவில் வவுனியாவில் ஓரளவு பலம் உண்டு அவ்வளவுதான். இதிலும், இன்னொரு விடயமும் உண்டு. அதாவது, முன்னணியிடமும் யாழ்ப்பாணத்தைத் தாண்டினால் எந்தவொரு பலமும் இல்லை.
2. நிதி:
தேர்தல் அரசியலோ, கூட்டணியோ நிதித் தேவையை அதிகமாகக் கோரும். அப்படியான நிலையில், புலம்பெயர் தரப்புகளிடம் இணக்கமாக இருக்க வேண்டிய தேவையொன்று பேரவைக்கு உண்டு.
அதற்கான முன்னணியை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. முன்னணி ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்து, அதன் வளர்ச்சி என்பது புலம்பெயர் தரப்புகளின் ஆதரவோடு குறிப்பிட்டளவு நிகழ்ந்து வந்திருக்கின்றது.
எல்லாக் காலத்திலும் தூதுவராலயங்கள் நிதியுதவியையோ, வேறு அனுசரணைகளையோ செய்துவிடமாட்டா. அப்படியான நிலையில், ஓர் அமைப்பாக நிலைத்து நிற்பதற்கும், அதை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்கும் நிதித்தேவை என்பது தவிர்க்க முடியாது. தாயகத்திலுள்ள தனவந்தர்களாலோ, வைத்தியர்களாலோ தேர்தல் கூட்டணியொன்று கோரும் நிதித் தேவையைத் தற்போதைக்கு நிவர்த்திசெய்துவிட முடியாது.
இந்த இரண்டு விடயங்களையும் நன்றாகப் புரிந்து கொண்டுதான் கஜேந்திரகுமார் தக்க சமயத்தில் கடும் நிபந்தனைகளோடு பேரவைக்காரர்களை அலைக்கழிக்கிறார். அந்த அலைக்கழிப்பு என்பது, புதிய மாற்று அணி என்பது, விக்னேஸ்வரனை வெளிமுகமாக முன்னிறுத்தினாலும், அதன் ஒட்டுமொத்த ஆளுகையும் அக முகமும் தங்களிடம் இருக்க வேண்டும் எனும் போக்கிலானது. அது, விக்னேஸ்வரன் காலத்துக்குப்பின், ஒட்டுமொத்தமாக தங்களுடைய முகமாக, குறிப்பாக கஜேந்திரகுமாரின் முகமாக, முன்னணியின் முகமாக, சைக்கிளின் முகமாக மாற்று அணி, இருக்க வேண்டும் என்பது சார்ந்தது.
Average Rating