விலைபேசும் காலம்!!(கட்டுரை)
நாட்டில் இரண்டு விதமான பருவகாலங்கள் நடைமுறையில் இருப்பதை, இப்போது காணக் கூடியதாக இருக்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய பருவகாலம் நிலவிக் கொண்டிருக்கின்றது.
அதேபோன்று, தேசிய அரசியல் அதிகாரப் போட்டிச்சூழலில் பேரம், விலைபேசல், விலைபோதல் ஆகியவற்றுக்கான ஒரு பருவகாலம் நிலைகொண்டுள்ளது.
மேற்படி இரு பருவகாலங்களும் மிகத் தீவிரமடைந்திருப்பதுடன், இவ்விரண்டாலும் உண்மையில், சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமாகின்றது.
இலங்கையில் அதிகார யுத்தமொன்று உருவெடுத்திருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அதிரடியாக நியமித்துவிட்டு, அவ்வேளையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை அந்தப் பதவியிலிருந்து நீக்கியதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர், ஆட்சியை நிலைநிறுத்தும் போட்டியானது, புதிய உத்திகள் என்ற பெயரில், மிக மோசமான அரசியல் கலாசாரங்களை, நமக்கு நாளாந்தம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்றுதான், அரசியல்வாதிகள் பேரம் பேசப்படுகின்ற ‘டீல் அரசியல்’ ஆகும்.
எல்லாக் காலத்திலும் பேரம்பேசல்கள் இருந்திருக்கின்றன. ஆனால், முன்பெல்லாம் சமூக நலன், கொள்கை, அரசியல் சூழ்நிலைகள், தூரநோக்கு போன்ற காரணங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. அல்லது, அவ்வாறு பொய்யான தோற்றமொன்று மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. வெகுமதிகளும் மற்றைய கொடுக்கல்வாங்கல்களும் திரைக்குப் பின்னால் இடம்பெற்றன. அதுபற்றிய ஊகங்களே பொதுவாக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.
ஆனால் இன்று, இலங்கையின் ஆட்சியதிகாரத்தை, எப்படியாவது நிலைநாட்டிவிட வேண்டும் என்ற பேரார்வத்தில், பதவிகளுக்காகவும் வெகுமதிகளுக்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசப்படுவதாக ஊடகங்களில் குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற தகவல்கள், நமது நாட்டின் மிகத் தொன்மையான அரசியலைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பேரங்களின் பருமன்தான் வித்தியாசமே தவிர, மற்றப்படி இது எல்லாப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு இடையிலும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசில் நடக்கின்ற இப்படியான புதினங்களை, உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு எம்.பிக்கள், ஏதாவது ஒரு கைமாறு அடிப்படையில் விலை பேசப்படுதல், ‘அரசியலில் சகஜம்’ என, ஒரு சிலரால் கருதப்படுகின்றது.
ஆனால், ஒரு குறுகிய காலத்துக்குள் எல்லா எம்.பிகளுக்கும் ‘கிராக்கி’ எழுவதும், அதன்நிமித்தம் ‘அதைத் தருவோம் இதைத் தருவோம்’ என்று பேரம் பேசுவதும், சகஜமானது என ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். அந்த அடிப்படையில், இதைப் “பகிரங்க இலஞ்சம்” என்று, ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். “இல்லையில்லை, இது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஒரு பரிசே’ என்று, இன்னுமொரு தரப்புச் சொல்கின்றது.
கட்சி மாறுகின்ற அரசியல்வாதிகளுக்கு, ஏதாவது வெகுமானங்கள், குறிப்பாக ஓர் அமைச்சு, பிரதியமைச்சு பதவி கொடுக்கப்படுவதென்பது இயல்பானது. ஆனால், முன்னொருபோதும் இல்லாத வகையில் இப்போது ‘கோடிகள்’ பற்றிய கதைகள், பகிரங்கமாகவே எல்லா மட்டங்களிலும் பேசப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான பாலித ரங்கே பண்டார, “தனக்கு குறிப்பிட்ட தொகை தருவதாகப் பேரம் பேசப்பட்டதாக” நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், வெளிப்படையாகவே சொல்லி இருக்கின்றார்.
இதேவேளை, “ஒரு தரப்புக்கு ஆதரவளிக்கும் போது, கொடுக்கப்படுகின்ற சன்மானத்துக்கு, இலஞ்சம் என்று சொல்ல முடியாது” என்று ஒரு வியாக்கியானத்தையும் இன்னுமோர் அரசியல்வாதி சொல்லி இருக்கின்றார்.
இந்தஇந்த அரசியல்வாதிகளுக்கு, இந்தஇந்த வெகுமதிகள், கொடுப்பதற்கான பேரங்கள் பேசப்படுகின்றன என்று, அரசியல் வட்டாரங்களில், பலரின் பெயர்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஆதாரமாகத் தொலைபேசி உரையாடல் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அது உண்மையா, பொய்யா? என நமக்கு உறுதியாகத் தெரியாது.
ஆனால், இலங்கை ரூபாயிலும் டொலரிலும் தொகைகள் சொல்லப்படும் அளவுக்கு, நமது அரசியல் கலாசாரம் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கின்றது என்பதே, இங்கு கவனிப்புக்குரியது.
‘அரசியல்’ பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், ஏற்பட்டிருக்கின்ற இந்தப் பேரங்கள் தமிழர்களின், முஸ்லிம்களின் அரசியலையும் ஆட்கொண்டுள்ளன என்பதே கவலைக்குரியது.
தமிழ் அரசியல்வாதிகள் சிலர், தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்ட போது, பேசப்பட்டது போலவே, முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இரண்டொருவர், இப்போது வெகுமானங்களுக்கு விலைபோய்விட்டதாக, அவர்கள் சார்ந்த கட்சிக்குள்ளும், மக்கள் மன்றத்திலும் பரவலாகப் பேசப்படுகின்றது.
இந்த இடத்தில்தான், முஸ்லிம்களின் அரசியல், நின்றுநிதானித்து முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளும், ஏனைய தனித்தியங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்முடைய நிலைப்பாடுகளை, மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் தருணத்தில் தடுமாறக் கூடாது.
சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்கப்படுவதும், கூறுகளாகப் பிரித்தாளப்படுவதுமான உலகப் பொது நியதிகளுக்கு அமைவாக, முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், இலங்கையில் நிறுவப்படக் கூடிய யாருடைய ஆட்சியும் ஒன்றுதான்.
மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும், நிலைமைகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படப் போவதில்லை.
60 வருடங்களாகப் போராடுகின்ற சமூகத்துக்கே இன்னும் சிறு தீர்வுப்பொதியையாவது கொடுக்காமல் மெத்தனமாகச் செயற்படும் பெருந்தேசியம், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதரவளித்தார்கள் என்பது போன்ற காரணங்களுக்காக, முஸ்லிம் மக்கள் நினைப்பதை எல்லாம் நிறைவேற்றித் தரப் போவதில்லை.
நமது அனுபவப்படி, ‘எல்லோரும் ஒன்றுதான்; எல்லோரது ஆட்சியிலும் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கும். இதில் மிகச் சிறந்த தெரிவு என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான், சிங்களத் தேசியத்தின் மனப்பாங்கைக் கருத்தில் கொண்டும், முஸ்லிம்களின் இருப்பு, வாழ்வுரிமை, அவர்களின் அபிலாஷைகள், பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை, கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாணயம், முஸ்லிம்களின் இனமத அடையாளத்தைக் கொஞ்சமேனும் மதிக்கும் பாங்கு, ஜனநாயகத்தையும் சட்டத்தையும் மதிக்கும் ஆட்சி போன்ற முக்கிய விடயங்களை ஒப்பிட்டுப் பார்த்தே, யாரை ஆதரிப்பது என்ற முடிவை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்க வேண்டும்.
அதாவது சுருங்கக் கூறின், தனிப்பட்ட நலன்கள், வெகுமதிகளைக் கருத்தில் கொள்வது யதார்த்தமானது. இருந்தபோதிலும், எல்லாத் தருணங்களிலும் சமூக நலனை முதன்மைப்படுத்தியே, முக்கியமான அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். உண்மையாகப் பார்த்தால், தேர்தலின் போது, குறிப்பிட்ட கட்சி, அரசியல்வாதி எடுக்கின்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே மக்கள் வாக்களிக்கின்றனர்.
எனவே, அதில் ஏதாவது மீள்பரிசீலனையோ, மாற்றமோ செய்ய வேண்டி ஏற்பட்டால், மக்களிடமிருந்து பொதுசன அபிப்பிராயத்தை, முஸ்லிம் கட்சிகள் பெறுவதே, மிகச் சிறந்தது. ஆனால், இலங்கையில் முஸ்லிம் கட்சிகளிடம் மட்டுமல்ல, வேறு எந்தக் கட்சிகளிடமும் கூட, அவ்வாறான ஒரு கட்டமைப்போ, ஏற்பாடோ கிடையாது.
இவ்வாறான சூழலில், தீர்மானமெடுக்கும் முழு அதிகாரமும் கட்சித் தலைமைக்கு, நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒப்படைப்பக்கப்பட்டு இருக்கின்றது. எனவே, தங்களதும் தங்களைச் சுற்றியிருக்கின்ற ‘ஜால்ரா’ கூட்டத்தினதும் தீர்மானங்களை, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தீர்மானங்கள் போலக் காண்பிக்க, எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் முனையக் கூடாது. இரு பிரதான முஸ்லிம் கட்சிகளின் 12 எம்.பிக்கள் மட்டுமன்றி, ஏனைய ஒன்பது முஸ்லிம் எம்.பிக்களுக்கும் இது பொருந்தும்.
மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதா? ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா? என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. முஸ்லிம் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாரை ஆதரித்தாலும், அது பெரும்பாலும் சமூகத்தின் நலனைச் சார்ந்த, தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதாகும்.
சன்மானங்களுக்காகவும் தரப்படுகின்ற வெகுமதிகளுக்காகவும் முடிவுகளை எடுக்கின்ற, எடுத்த தீர்மானங்களை மாற்றுகின்ற, ஒரு கீழ்நிலை அரசியல் கலாசாரத்தை, முஸ்லிம் சமூகம் விரும்பவில்லை.
‘மதில்மேல் பூனை’யாக இருப்பது ஒருபுறமிருக்க, ‘கறுப்புஆடுகளாக’ச் செயற்பட்டு, கட்சிகளின் கட்டுக்கோப்பை உடைத்துக் கொண்டு, தனியே இரைதேடி ஓட முனைகின்ற, ஓர் அரசியலை முஸ்லிம் சமூகம் முன்மொழியக் கூடாது.
ஏற்கெனவே பொருளாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்து விட்ட இலங்கை அரசியலில், யார் ஆட்சிப் பலத்தை நிலைநாட்டுவது என்ற விடயத்தில், கடுமையான தடுமாற்றம் நிலவுகின்றது.
நாடாளுமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபித்தல் என்பதற்கும் அப்பால் சென்று, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அரசமைப்பு ஏற்பாடுகள் அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்கான சாத்தியப்பாடுகள் என, தமக்கிருக்கின்ற மாற்றுத் தெரிவுகள் குறித்தும் பேசப்படுகின்றது. இதற்கிடையில் தொடர்ச்சியாக எம்.பிக்களைத் தம்பக்கம் கவர்ந்திழுக்கும் கைங்கரியங்களை, இரு தரப்பும் சூட்சுமமான முறையில் செய்து கொண்டிருக்கின்றன. அதற்கான ‘டீல்’களும் பேசப்பட்டு வருகின்றன.
சுதந்திரக் கட்சி, ஐ.தே.கட்சியில் நேரடியாக அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுவாகத் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிசார்பு நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றனர்.
ஐ.தே.க எம்.பிக்களை உள்ளடக்கிய முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகளும் உத்தியோகபூர்வமாக இதுவரை, ‘ஐ.தே.கவுக்கு ஆதரவு’ எனும் நிலைப்பாட்டையே அறிவித்துள்ளன. ஆனாலும் ஒரு சிலர், அந்தப் பக்கம் பாய்வதற்கு, ‘மதில்மேற் பூனை’யாக ஏறி நிற்பதாகப் பரவலாகப் பேசப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் நல்லது கெட்டதுகள் இருக்கின்றன. மஹிந்த – மைத்திரியின் ஆட்சியிலும் நல்லது கெட்டதுகள் இருக்கின்றன. இதேநேரம், ஒவ்வொரு முஸ்லிம் கட்சியினதும், அந்தக் கட்சியில் உள்ள ஒவ்வொரு எம்.பிக்களினதும் அபிலாஷைகள், கண்ணோட்டங்கள், தேவைகள் வேறுபட்டவையாக இருக்கலாம் என்பதே யதார்த்தம். எனவே, இந்தச் சூழலில், முஸ்லிம்களின் பார்வைக் கோணத்தில், எது சிறந்த ஒப்பீட்டுத் தெரிவு என்ற முடிவையே, எடுக்க வேண்டியுள்ளது. இன்றைய நிலையில் மஹிந்த, ரணில் என்ற இரண்டில் ஒன்றை, முஸ்லிம் எம்.பிக்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய இக்கட்டான நிலை இருக்கின்றது.
எனவே, முஸ்லிம் அரசியலின் கொள்கை – கோட்பாடுகள், முஸ்லிம்களின் நீண்டகால எதிர்பார்ப்புகள், இனப்பிரச்சினையில் முஸ்லிம்களுக்குரிய பங்கு, இனமத அடையாளத்தைத் தக்கவைத்தல், இனவாதத்தில் இருந்து விடுதலை, ஆட்சியாளர்களின் செயற்றிறன், முஸ்லிம்களின் விவகாரங்களில் உண்மையாக அக்கறை காட்டல் போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, ஒப்பீட்டளவில் முஸ்லிம்களுக்குச் சிறந்த தெரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
இதுதவிர, முஸ்லிம் கட்சிகள், எம்.பிக்களின் தீர்மானத்தில், அவர்களுடைய எதிர்கால வாக்கு வங்கி, இனிவரும் காலத்தில் அரசியல் இருப்பு, அரசியல்சார் பயம், விசுவாசம், எதிர்கால அரசியல் எதிர்வுகூரல், வெற்றிபெறும் அல்லது ஆட்சியமைக்கும் பக்கத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம், பதவியாசை போன்ற காரணிகளும் செல்வாக்குச் செலுத்தலாம்.
ஆனால், எக்காரணம் கொண்டும், பணம்சார் வெகுமதி, ஏதோவோர் அடிப்படையிலான கையூட்டலுக்காக, முஸ்லிம் கட்சிகளோ எம்.பிக்களோ, எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது. இந்த அரசியல் சுழிக்குள் சிக்கி, பேரம்பேசல் என்ற சாக்கடைகளுக்குள் விழுந்து, கொஞ்சமேனும் மீதமிருக்கின்ற அடையாள அரசியலை, முஸ்லிம் சமூகம் நாசமாக்கி விடக் விடக் கூடாது.
முன்பெல்லாம், ‘முஸ்லிம் அரசியல்வாதிகள் சோரம் போனார்கள்’ என்று விமர்சிக்கப்பட்டது. இனி, ‘விலைபோனார்கள்’ என்று, அடுத்த தலைமுறையினர் இழிசொல் கூறும் நிலைமைகளை உருவாக்கிவிட வேண்டாம்.
Average Rating