மஹிந்த தோற்றால், அடுத்து என்ன? சிறிசேனவின் Plan – B!!(கட்டுரை)

Read Time:17 Minute, 15 Second

பூனைகளை விடவும் சிங்கங்கள் பலம் மிக்கவை என்று சொன்னால், அதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஒரு பழமொழி உள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தை, ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்பவே விளங்கி வைத்துக் கொண்டு, வியாக்கியானம் செய்து வருகின்றனர். சிலவேளைகளில், உண்மை நிலைவரம் இவற்றுக்கு அப்பாலும் இருக்கக் கூடும்.

மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தமை ஜனாநாயக மீறலாகும் என்று, சிலர் வாதிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அரசமைப்புக்கு இணங்கவே அதைச் செய்ததாக, ஜனாதிபதி கூறுகிறார். அப்படியென்றால், சட்டத்துக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை, எவ்வாறு ஜனநாயக மீறலாகும் என்கிற கேள்வி இங்கு முக்கியமானது. இன்னொருபுறம், மஹிந்த ராஜபக்‌ஷவின் நியமனம் தொடர்பில் மாற்றுக் கருத்துகளைக் கொண்டோர், ஏன் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை என்கிற கேள்விக்கு, இதுவரை பதில்களில்லை.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவும் பதவியிழந்த ரணில் விக்ரமசிங்கவும், நாடாளுமன்றில் தங்களுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றனர். இதற்காக, மாற்று அணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, தனக்கு ஆதரவாக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் மஹிந்த தரப்பு மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. இந்தப் பத்தி எழுதப்படும் போது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மட்டும், 07 உறுப்பினர்களை, தனது பக்கம் மஹிந்த ராஜபக்‌ஷ “கழற்றி” எடுத்துள்ளார். அணி மாறுகின்றவர்களுக்கு, அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுகின்றன. கூடவே, பணமும் கைமாறுகிறதென, ரணில் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், ரணில் தரப்புத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்கே, ரணில் தரப்புக்கு மூச்சு வாங்குகிறது. தங்கள் தரப்பில் எப்போது எந்த “விக்கெட்” விழுந்து விடுமோ என்கிற அச்சத்துக்குள், ரணில் தரப்புச் சிக்குண்டு கிடக்கிறது. இதனால், அரசியலரங்கில் மஹிந்த தரப்பு, “அடித்து” விளையாடுகின்ற போதெல்லாம், “தற்காப்பு” ஆட்டத்தில்தான், ரணில் தரப்புக் கவனஞ்செலுத்தி வருகிறது.

தமது அணியில் 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு, பிரதமர் பதவியேற்ற மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, தற்போது 105 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 7 பேரும், டக்ளஸ் தேவானந்தா, எஸ். வியாழேந்திரன் ஆகியோரும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, மாற்று அணியிலிருந்து ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். அதேபோல், ஐ.தே.கவில் போட்டியிட்டாலும் சுயாதீனமாக இயங்கிவந்த அத்துரலியே ரத்தன தேரரும், மஹிந்தவுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.

உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு “விலை” உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் “பாய்ச்சல்”, இதற்குச் சிறந்த உதாரணமாகும். இறுக்கமான ஒரு கோட்டைப் போல் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து, வியாழேந்திரனை, மஹிந்த ராஜபக்‌ஷ தன் பக்கம் எடுத்திருப்பது, அரசியல் ஆச்சரியமாகும். அதுவும் தமிழ்த் தேசியம் பற்றி, கொஞ்சம் உரத்த குரலில் பேசி வந்த வியாழேந்திரனின் இந்தத் “தாவுதல்”, சாதாரண மக்களுக்குச் சற்று அதிர்ச்சியான விடயம்தான்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறிவந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், சனிக்கிழமையன்று ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதற்கு முன்னதாக, அன்றைய தினம் அவரின் கட்சியைச் சேர்ந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில், அரசாங்கத்தில் தனியாக இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இதனை அறிந்து கொண்ட ரிஷாட் பதியுதீன், உடனடியாக மேற்கொண்ட அரசியல் காய்நகர்த்தல் மூலம், இஸ்மாயிலின் முயற்சி தடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தை அடுத்துத்தான், ஜனாதிபதியை ரிஷாட் பதியுதீன் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர், மு.காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும், ரிஷாட் பதியுதீன் பேசினாரென அறிய முடிகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, ஹக்கீமும் பதியுதீனும் இணைந்து, ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினார்கள்.

இதனையடுத்து, மு.காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ரிஷாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ், அரசாங்கத்தில் இணைவதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், மஹிந்தவுடன் இணைந்து ஆட்சியொன்றை அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸும் பெரிதாகக் கூச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்காக, மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுனவிலிருந்து தெரிவான உறுப்பினர் ஒருவரின் ஆதரவை, முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. இதற்காக, மஹிந்த தரப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறெல்லாம் பெரும் பிரயத்தனங்களை எடுத்துவரும் மஹிந்த ராஜபக்‌ஷ, தனக்குரிய பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்கிற கேள்விகளும் உள்ளன. அதனை, நாடாளுமன்றுதான் தீர்மானிக்கும்.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பிரதமர் பதவியை வழங்கிய மறுநாள், நாடாளுமன்றத்தை நவம்பர் 16ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்த ஜனாதிபதி, தற்போது 14ஆம் திகதி, நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜக்‌ஷவுக்குப் பெரும்பான்மை ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே, ஜனாதிபதி இவ்வாறு நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தாரென, எதிரணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அவற்றில் உண்மைகள் இல்லாமலுமில்லை.

இத்தனைக்குப் பிறகும் நாடாளுமன்றில் தனக்குரிய பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்‌ஷ நிரூபிக்கத் தவறினால், அடுத்து என்ன நடக்கும் என்பதுதான், இப்போதுள்ள ராட்சதக் கேள்வியாகும்.

பெரும்பான்மையைப் பெறுவதில் மஹிந்த ராஜபக்‌ஷ தோற்றுவிட்டால், “பிறகென்ன ரணில்தான் பிரதமர்” என்கிற பதிலுக்கு அப்பால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், வேறோரு திட்டம் இருப்பதாக “கொழும்பு டெலிகிராப்” எனும் ஆங்கில இணையத்தளம், தகவலொன்றை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் அந்தத் திட்டத்துக்கு, “பிளான் – பி” (Plan – B) என்று பெயர்.

இந்தத் திட்டம் குறித்து கொழும்பு டெலிகிராப் வெளியிட்டுள்ள தகவல் இதுதான்:

நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையொன்று உருவாகுமானால், ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து, புதிய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதுதான் “பிளான் – பி” (Plan – B) ஆகும். அந்தப் புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணி ஆகியவை அங்கம் வகிக்கும். ஆனால், ரணில் விக்கிரமசிங்க அந்த அரசாங்கத்தில் இருக்க மாட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ஜோன் அமரதுங்க ஆகியோர், கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமாகச் சந்தித்துள்ளனர். அதன்போது “பிளான் – பி” (Plan – B) குறித்து ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை உடைப்பது பற்றி, இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது. அதன்போதே, “பிளான் – பி” (Plan – B) பற்றி, ஜனாதிபதி விவரித்துள்ளார். புதிய தேசிய அரசாங்கத்தில் பங்கெடுக்கும் மூன்று தரப்பினருக்கும், அமைச்சர் பதவிகள் சமமாக வழங்கப்படும்.

இதேவேளை, புதிதாக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்தில், ரணில் விக்ரமசிங்க அல்லாத ஐக்கிய தேசியக் கட்சிக்காரர் ஒருவரை, பிரதமராக நியமிப்பதற்கும், இந்தப் பேச்சுவார்தையின் போது, ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குப் பிரதமர் பதவியை வழங்குவதற்கு, ஜனாதிபதி விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

“பிளான் – பி” (Plan – B)இன் படி புதிதாக அமையும் தேசிய அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அமைச்சுப் பதவிகளைப் பெறக் கூடிய 10 பேருடைய பெயர்கள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த நபர்கள் அனைவரும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், பெருளவான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் உள்ளவர்களாவர்.

ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பின் பின்னர், சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ஜோன் அமரதுங்க ஆகியோர், ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்துள்ளனர். இதன்போது, அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான மாற்று வழிகள் குறித்து பேசப்பட்டுள்ளது. மேலும் இடைக்காலத் தீர்வொன்றுக்கான தேவையை ராஜிதவும் ஜோன் அமரதுங்கவும், ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை, புதிய ஏற்பாடொன்று குறித்துப் பேசுவதற்காக, ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபடுமாறும், ரணில் விக்கிரமசிங்கவை அவர்கள் கேட்டுள்ளனர்.

ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஒதுக்கி விட்டு, அடுத்த பொதுத் தேர்தல் வரை, புதிய தேசிய அரசாங்கமொன்றை அமைத்து, அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ஒருவரை நியமிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் மற்றோர் இலக்கு, மஹிந்த ராஜபக்‌ஷவைப் புதியதொரு நெருக்கடிக்குள் தள்ளுவதாகும். அதாவது மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் பதவியை இழப்பார். அதேவேளை, ஓர் அமைச்சர் பதவியை அவர் ஏற்க வேண்டியேற்படும். அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ஒருவருக்கு, மஹிந்த வழிவிட வேண்டியேற்படும்.

இதுதான் ஜனாதிபதி மைத்திரியின் “பிளான் – பி” (Plan – B) என, கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது.

இதன்படி பார்த்தால், ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில், ஜனாதிபதி இப்போதைக்கு இல்லை என்பது தெளிவாகிறது. ஜனாதிபதியைத் தாண்டி, பிரதமராக ரணில் பதவி வகிப்பதென்பதும் சாதாரண காரியமல்ல.

எனவே, நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்‌ஷ பெரும்பான்மையைப் பெறத் தவறினாலும், ரணிலுக்கு “பிரதமர்” அதிர்ஷ்டம் அடிக்குமா என்பது கேள்விக்குரியதாகும். இன்னொருபுறம், ரணிலைத் தவிர்த்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாற்றுத் தலைமை ஒன்று உருவாகுமானால், அந்தக் கட்சி தொடர்ந்தும் பிளவுபடுவதைத் தவிர்க்க முடியும் என்கிற கருத்துகள், அந்தக் கட்சிக்குள்ளேயே இருப்பதும் இங்கு கவனத்துக்குரியது.

இது எல்லாவற்றுக்கும் அப்பால், மாற்றுத் தரப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த தரப்புக் கழற்றியெடுக்கும் வேகத்தைப் பார்க்கையில், ஜனாதிபதியின் “பிளான் – பி” (Plan – B)க்கு வேலையில்லாமலும் போய் விடலாம்.

நாடாளுமன்றம் கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள 14ஆம் திகதிக்கு, இன்னும் 9 நாள்கள் இருக்கின்றன. அதாவது, 12,960 நிமிடங்கள் இன்னும் உள்ளன. இதற்குள் ஏராளமான கட்சி மாற்றங்களும் காட்சி மாற்றங்களும் ஆச்சரியப்படுத்தும் வகையில் நிகழலாம்.

“த்ரில்லர்” படங்களில் வருகின்ற திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது நாட்டு அரசியல்; ஆனால், இரசிக்கத்தான் முடியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கும்பகாசனம்!!( மகளிர் பக்கம்)
Next post போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா?(அவ்வப்போது கிளாமர்)