சூரிய நமஸ்காரம்!!( மகளிர் பக்கம்)
உடலுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ, யோகாவிற்கு அவ்வளவு ஆதாரமானது ‘மூச்சு’. ‘இதென்ன பெரிய விஷயம்?’ என அதை அலட்சியப்படுத்தும் ஒருவருக்கும், மூச்சுக்கு உரிய முக்கியத்துவம் தரும் மற்றொருவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதைப் பல நிலைகளில் காணலாம். நாம் மூச்சு விடுவது என்பது இயல்பாக தானாகவே நடைபெறும் ஒரு செயல். வாழ்வில் மூச்சுக்கான இடத்தை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.
ஆனால் எல்லா நேரங்களிலும் அது சீராக இருப்பதில்லை. நின்றால், நடந்தால், ஓடினால், ஆடினால், சிரித்தால், அழுதால்… மூச்சில் மாற்றங்களைக் காணலாம். மூச்சு சீராக இருக்கும்போது எல்லாமே நன்றாக இருப்பதை உணர முடியும். மூச்சு தாறுமாறாக ஆனால், நம்மால் அமைதியாக இருக்க முடியாது. கோபத்தில் கொந்தளிப்பவர்களிடமும், அவசரக்காரர்களிடமும் இதைப் பார்க்க முடியும்.
உணர்வுகளுக்கு மட்டுமல்லாமல், நாம் உயிர் வாழவும், அந்த வாழ்வு ஆரோக்கியமாக அமையவும் மூச்சுதான் காரணமாக இருக்கிறது. இப்படி எல்லா நிலைகளிலும் நம் வாழ்வின் உயிராக இருக்கும் மூச்சு பற்றி சிறிதாவது அறிவது நல்லது. குறிப்பாக யோகம். சூரிய நமஸ்காரத்தின் எந்த மாதிரியான பயிற்சிக்கும் இது மிக முக்கியம்.
சூரிய நமஸ்காரப் பயிற்சிக்குப்பின் பொதுவாக சவாசனத்தில் ஓய்வெடுப்பது என்பது வழக்கத்தில் உள்ளது. சில மரபுகள் கடைசியில் பிராணாயாமத்தை ஆலோசிக்கின்றன. சில மரபுகள் இறுதியில் தியானம் மாதிரி அமைதியாக இருப்பதை வலியுறுத்துகின்றன. இப்படி பல வேறுபாடுகள் உண்டு.
சமீபத்தில் சுதர்சன் அவர்களிடம் உடலியல் பற்றி நானும் எனது யோகா நண்பர்கள் சிலரும் வகுப்புகள் எடுத்துக் கொண்டோம். அவர் முறைப்படி உடல் பற்றி வெளிநாட்டில் படித்து, சென்னையில் சில ஆண்டுகள் விளையாட்டு மருத்துவத்தில் ஈடுபட்டவர். தற்போது கனடாவில் வசிக்கிறார்.
அவரது ஒரு வகுப்பில் மூச்சு பற்றி விரிவாக பார்க்கப்பட்டது. ‘மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளிவிடும்போதும் நம் உடலில் என்ன நடக்கிறது, மிக முக்கியமாய் செயல்படும் உறுப்புகள் எவை, இரண்டாம் நிலையில் செயல்படும் உறுப்புகள் எவை, அவற்றோடு இணைந்த பிற உறுப்புகள் எவை’ என்று எங்களை மூச்சு விடச் சொல்லி தொட்டுக் காட்டினார்.
மூச்சு மெதுவாக எடுத்தால் என்ன நடக்கிறது, வேகமாக எடுக்கும்போது என்ன நடக்கிறது, இயல்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது என்றும் விவரித்தார். ‘நமது உடலில் மூச்சு இயல்பாகவும் சரியாகவும் இயங்கினாலே நோய்கள் வர வாய்ப்பில்லை. மூச்சு நுரையீரலுக்குப் போவது ஒரு செயல், அங்கிருந்து உடல் முழுவதும் பரவுவது இன்னொரு செயல். மூச்சு உள்ளே வரும்போதும் வெளியே போகும்போதும் நடக்கும் இயக்கம் மற்றும் அசைவுகள் மூலம் பல உறுப்புகள் செயல்படுகின்றன; ஆரோக்கியமடைகின்றன. ஆகவே மூச்சின் ஆரோக்கிய செயல்பாடு மிகமிக முக்கியம்’ என்பது அவர் கருத்து.
எப்பொழுதெல்லாம் நாம் இயல்பாக இல்லையோ, அப்போதெல்லாம் நம் மூச்சும் இயல்பாக இருப்பதில்லை. மூச்சை இயல்பாக்குவதன் மூலம் நாம் இயல்பாகலாம். சிலருக்கு இயல்பு நிலையை எட்ட சில காலம் ஆகலாம். பாதை மாறி நீண்ட தூரம் வேறெங்கோ போனவர்கள் திரும்பி வருவதற்கு நேரமும் காலமும் தொடர் பயிற்சியும் தேவைதானே?
நமது வாழ்வில் மூச்சுதான் எல்லாம். சில நொடிகள் மூச்சு தன் வேலையைச் செய்யாவிட்டால் என்ன நடக்குமென நினைத்துப் பாருங்கள்! இறந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் மூச்சுதானே?நாம் வாழ்வில் மூச்சுக்கென பிரத்யேகமாகப் பயிற்சி ஏதாவது செய்கிறோமா? வாழ்க்கையை மிக ஆழமாய் உணர்ந்த நமது முன்னோர்கள் – சித்தர்கள்- முனிவர்கள் – யோகிகள் மூச்சுக்குப் பெரிய இடம் தந்து பயிற்சிகள் செய்துள்ளனர். அதன் அருமையை ஆழமாய் நன்கு உணர்ந்து, பல பயிற்சிகளைத் தந்து விட்டுப் போயிருக்கின்றனர்.
‘‘வெறுமனே வாழ்வதற்கு மட்டும்தான் மனிதன் சுவாசித்தலை-மூச்சைச் சார்ந்திருக்கிறான் என்றில்லை. நீண்ட ஆயுளோடும், மாறாத இளமையோடும், நோய்களிலிருந்து விடுதலையடைந்து வாழ்வதற்கு அவன் சரியான, முறையான சுவாசிக்கும் முறைகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
நம் மூச்சின் ஆற்றலை விவேகமாகக் கட்டுப்படுத்தி சீராக்கினால், நோய் எதிர்ப்பு சக்தி பெறுவோம்; ஆயுளும் கூடும். சரியான பயிற்சி இல்லாமல், ஏனோதானோவென்று மேற்கொள்ளப்படும் சுவாசம், நோய்களுக்குள் நம்மை ஆழ்த்தி ஆயுளைக் குறைத்து விடும்’’ என்பார் யோகி ராமசரக்கா.
மூச்சுப் பயிற்சி என்பது வேறு; பிராணாயாமப் பயிற்சி என்பது வேறு. ஆரம்பம் கவனமான மூச்சில் தொடங்கும்; அதன் வளர்ச்சியில் பிராணாயாமம் வரும். அதற்கு மேலும்… மூச்சை உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு செல்லுதல், உடலுறுப்பை நலமாக்குதல், மூச்சை நிறுத்துதல் என்று போய், இதயத்துடிப்பையும் நிறுத்துவது சாத்தியமாகி உள்ளது. கிருஷ்ணமாச்சாரி அவர்கள் இதயத்தையும் நாடித்துடிப்பையும் இரு நிமிடங்கள் நிறுத்தி, வெளிநாட்டு மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மன ஈடுபாட்டோடு மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதே இதில் துவக்கப் பயிற்சி. இதுவேகூட நல்ல மாற்றங்களைத் தரத் தொடங்கி விடுகிறது. இதை ‘கான்ஷியஸ் ப்ரீத்திங்’ என்பார்கள். இப்படிச் செய்யும்போதே மனம் மூச்சில் இருக்கும். மூச்சின் ஓட்டத்தில் நமது உடலின் நிலை தெரிய வரும். நிதானம் வரத் தொடங்கும். இதயத்துடிப்பு மற்றும் உடலினுடைய உள் ஓட்டங்களின் வேகம் குறையும்.
மூச்சை எப்படி முறையாக உள்ளிழுத்து வெளியே விடுவது?இயற்கையாக மூக்கின் வழியேதான் எடுக்க வேண்டும். யோகாவிலும் ஓரிரு சந்தர்ப்பங்கள் தவிர மூக்கின் வழிதான் மூச்சுப்பயணம் இருக்கிறது; கவனம் தொண்டை மீது இருக்கும்போதுகூட. மூக்கு வழியே மூச்சு உள்ளே போவதிலும் வெளியாவதிலும் உள்ள பலன்களை நீங்கள் தெரிந்து கொள்வது, மூச்சின் முக்கியத்துவத்தை மேலும் அறிய உதவும்.
அந்த இயற்கையான பலன்களுக்கு மேல், யோகாவில் ஒரு மூக்கு வழியே மட்டும் மூச்சை உள்ளிழுப்பதோ, வெளிவிடுவதோ நடக்கும். அதிலும் மூச்சைக் கட்டுப்படுத்த ஒரு மூக்கை முழுதாய் மூடி, மற்றொரு மூக்கை பாதி மூடிய நிலையில் மூச்சின் நேரத்தை அதிகப்படுத்தலாம்.
அதாவது பாதி மூடிய மூக்கு வழியே மூச்சை உள்ளே இழுப்பதோ, வெளியே விடுவதோ செய்யும்போது அது சாத்தியமாகிறது. இந்த அம்சங்கள் பற்றி பின்னர் பிராணாயாமம் பகுதியில் விரிவாகப் பார்ப்போம். இப்போது மூச்சை சரியாக எடுத்து விடுவதைப் பேசுவோம்.
மூச்சு உடல் மற்றும் மனதோடு தொடர்புடையது. இது பற்றி பேசும் ‘ஹதயோகா பிரதிபிகா’ என்ற யோகா நூலில் ‘சலே வாதே சலம் சித்தம் நிஸ்சலே நிஸ்சலம் பவேத்’ என்ற சொற்றொடர் உண்டு. ‘எப்பொழுதெல்லாம் மூச்சு தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் மனமும் கூடவே தடுமாறுகிறது. மூச்சு நிலைப்படும்போது மனமும் நிலையாக இருக்கிறது’ என்பதே இதன் பொருள். ஆகவே நாம் மூச்சைப் பயன்படுத்தி மனதை அமைதியாக்கலாம்.
மூச்சுப் பயிற்சியில் உடலின் மேல் பாகங்கள் இரண்டு முக்கியமாக சம்பந்தப்பட்டுள்ளன. முதலாவது, மார்புப் பகுதி. இரண்டாவது, வயிற்றுப் பகுதி. மூச்சை உள்ளே இழுக்கும்போது மார்பு விரியும்; முதுகெலும்பு நேராகும். மூச்சை வெளியே விடும்போது அடி வயிறு சுருங்கும்; முதுகெலும்பு பழைய நிலைக்குத் திரும்பும்.
இந்த மாற்றங்களை, உட்கார்ந்தோ அல்லது படுத்தோ மூச்சுப் பயிற்சி செய்யும்போது நன்கு உணர முடியும். ஆசனங்கள் செய்யும்போது மூச்சுக்கு ஏற்றபடியே நிலைகள் அமையும். உதாரணத்திற்கு, உடல் மற்றும் கைகள் விரியும்போது – மூச்சை உள்ளே இழுக்கும்படி ஆசனங்கள் இருக்கும். உடல் வளையும் போதும், திருகும்போதும் மூச்சு வெளியே போகும்படி இருக்கும்.
ஆசனம் செய்யும்போது முதலில் மூச்சும் உடல் அசைவும் ஒன்றாக இருக்காது. அதாவது உடலின் ஓர் அசைவு முழுவதும் உள்மூச்சோ அல்லது வெளி மூச்சோ ஒரே சீராக இருக்கவேண்டும். அப்படி துவக்கத்தில் மூச்சு இருக்காது. அசைவு நீண்டாலும், மூச்சு உடனே முடிந்து விடும். தொடர்ந்து கவனமாகப் பயிற்சி செய்து இரண்டையும் ஒன்றாக்கலாம். பிறகு மூச்சை கூடுதலாக்கலாம். முதலில் மூச்சைத் தொடங்கி பிறகு உடல் அசைவைத் தொடங்குவது, முதலில் உடல் அசைவை நிறுத்தி அதன்பிறகு மூச்சை நிறுத்துவது என்பதுதான் சரியான மூச்சு மற்றும் உடல் அசைவின் ஒருங்கிணைவு என்பார்கள்.
மூச்சை அதற்குரிய முக்கியத்துவத்தோடு பாருங்கள். அதற்கு உரிய இடம் தாருங்கள் என்பதற்காகவே இந்த விளக்கம். யோக ஆசனங்களில், சூரிய நமஸ்காரத்தில், மூச்சு எல்லா நிலைகளிலும் பயன்படுத்தப்படுவதால் இது மிகவும் முக்கியமாகிறது. இதுபற்றியும் உங்களின் மூச்சைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள். அடுத்த வாரப் பயிற்சியில் நாம் பார்த்த மூச்சுப்பயிற்சியைப் பயன்படுத்தி விடுவோம்.
Average Rating