வீடு வாங்க ஆசையா? (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 14 Second

ஊருக்கு ஊர் எல்லா வங்கிகளும் இப்போது வீட்டுக்கடன் மேளாவை நடத்தி வருகின்றன. இங்கு உரிய ஆவணங்களுடன் சென்றால் உடனடி வீட்டுக்கடன் கிடைக்கும் என்று அறிவிக்கின்றன. வீட்டுக்கடன் வாங்குவது என்றால் ஒரு நேரத்தில் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் வைத்திருந்த வங்கி கள் இப்போது கூவிக் கூவி அழைக்கின்றன.எத்தனை நாளைக்குத்தான் வாடகை வீட்டிலேயே வசிப்பது, கடன் வாங்கியாவது சொந்த வீட்டுக்குப் போயிடணும் அப்பதான் நிம்மதி’’ என்கிற எண்ணத்தில்தான் நாமும் இருக்கிறோம். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களில் இருப்பவர்கள்கூட இந்த ஓட்டு வீட்டை மாத்தி தளம் போட்ட வீடா மாத்திட்டா தேவலை’’ என்றுதான் உள்ளனர்.

சிறுநகரங்களிலும் புறநகர்ப் பகுதிகள் விரிவாகிக் கொண்டுதானே உள்ளன? மக்களின் மனநிலையில் உருவான இந்த மாற்றம்தான் வீட்டுக் கடன் அளிக்கும் நிறுவனங்கள் தேடி வருவதற்கும் காரணம். ஆனால் இதற்கான வாய்ப்பு அனைவருக்கும் சாத்தியமாவதில்லை என்றுதான் அரசு பல வகைகளிலும் வீடு கட்டுபவர்களுக்கு உதவுகிறது. வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசே இலவச வீடுகளை கட்டித் தருகிறது. ஆனால் நடுத்தர மக்களுக்கு..? இந்தக் குறையை போக்கும் விதமாகத்தான் மத்திய அரசு நடுத்தர வருவாய் பிரிவினர் மற்றும் உயர் நடுத்தர வருவாய் பிரிவினருக்காக ஆவாஸ் யோஜனா என்கிற அனைவருக்கும் வீடு திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தில் வாங்கும் வீட்டுக்கடனில் 4 சதவீத வட்டி சலுகையை மத்திய அரசு அளிக்கிறது. சாதாரணமாக எல்லா வங்கிகளும் 9 சதவீதம் அல்லது 10 சதவீதம் கணக்கிடுகின்றன என்றால் இதில் 4 சதவீத தள்ளுபடி என்பது இவர்களுக்கு சிறந்த வாய்ப்புதானே… இது தொடர்பாக ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வரதராஜன் நம்மிடம் விளக்கினார். அனைவருக்கும் வீடு என்கிற ஆவாஸ் யோஜனா திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் வீடு கட்ட கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 2022-ம் ஆண்டுக்குள் நகர்ப்புற ஏழை மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான சொந்த வீடு அளிக்கும் திட்டம் என்று அரசு அறிவித்தது.

ஆவாஸ் யோஜனா திட்டப்படி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (Economically Weaker Section – EWS), குறைந்த வருவாய்ப் பிரிவினர் (Lower Income Group – LIG)ஆகியோர் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் நடுத்தர வருமான பிரிவினரும் (Middle income Group) பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு கடனோடு இணைந்த வட்டி மானியம் (Credit linked subsidy scheme- சிஎல்எஸ்எஸ்) என்கிற வட்டிச் சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இது நடைமுறையில் இருக்கிறது. திட்ட காலம் முதலில் ஓர் ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது 2019-ம் ஆண்டு மார்ச் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீடுகளை வாங்கினாலும், நாம் புதிதாக கட்டினாலும் இந்த சலுகை பெறலாம். குறிப்பாக ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நடுத்தர வருமான பிரிவினர் வாங்கும் வீட்டுக்கடனில் அதிகபட்சம் ரூ.2.30 லட்சம் ரூபாய் வரை வட்டி மானியம் கிடைக்கிறது வழக்கமாக பொதுமக்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கான நடைமுறைகள்தான் இதற்கும் கடைப்பிடிக்கப்படும். இதில் நடுத்தர வருமான பிரிவினரை இரண்டு பிரிவாக பிரித்துள்ளது. முதலாவது பிரிவில், கடன் வாங்குபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருக்க வேண்டும்.

இவர்கள் வாங்கும் வீட்டுக் கடனில், ரூ.9 லட்சம் வரை 4 சதவீத வட்டி மானியம் கிடைக்கும். ரூ.9 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை மட்டும் வழக்கமான வட்டி விகிதம் இருக்கும். உதாரணமாக ஒருவர் ரூ.12 லட்சம் வீட்டுக்கடன் வாங்குகிறார் என்றால், இந்தத் திட்டத்தின் கீழ் மானிய கடன் ரூ.9 லட்சத்துக்கு 4 சதவீத வட்டி கிடைக்கும். இதை 20 ஆண்டுகளுக்கு கழித்தால் ரூ.2.35 லட்சம் மானியம் கிடைக்கும். இந்த ரூ.2.35 லட்சத்தை நாம் திருப்பி செலுத்த வேண்டிய அசலில் கழித்துக் கொள்ளலாம். அதாவது பயனாளி ரூ.9.65 லட்சத்துக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். இதனால் மாதத் தவணையில் ரூ.2,268 குறையும். அதேபோல இரண்டாவது பிரிவின், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை வரையறுத்துள்ளது.

இவர்களுக்கான கடனில் ரூ.12 லட்சத்துக்கு 3 சதவீத வட்டி மானியம் பெறலாம். இதன் மூலம் இவர்களுக்கும் திருப்பி செலுத்த வேண்டிய அசலில் ரூ.2.35 லட்ச ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, ரூ.12 லட்சத்துக்கு மேல் வாங்கும் தொகைக்கு வழக்கமான வட்டியும், ரூ. 12 லட்சம் வரை 3 சதவீத வட்டி மானியமும், 20 ஆண்டுகளுக்கு கணக்கிடப்பட்டு கழித்துக்கொள்ளப்படும். இதனால் மாதத் தவணை ரூ.2,200 வரை மிச்சமாகும். அதாவது இந்த இரண்டு திட்டங்களிலும் 20 ஆண்டுகளுக்கான வட்டி மானியம் அசல் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். இதில் கடன் அளவு நிர்ணயம் செய்யவில்லை என்றாலும், குறிப்பிட்ட கடன் தொகைக்கு மட்டுமே வட்டிச் சலுகை கிடைக்கும். அதற்கு மேல் உள்ள தொகைக்கு வட்டி மானியம் கிடைக்காது.

இதேபோல, கடன் தொகைக்கு ஏற்ப வீட்டின் அளவும் உள்ளது. குறிப்பாக முதல் பிரிவில் சலுகை பெற வீட்டின் கட்டுமான பரப்பளவு 90 சதுர மீட்டராக (968.67 சதுர அடி) இருக்க வேண்டும். இரண்டாவது பிரிவினர் சலுகை பெற வீட்டின் கட்டுமான பரப்பளவு 110 சதுர மீட்டராக (1184 சதுர அடி ) இருக்க வேண்டும்’’ என்றார். ஏற்கெனவே தனிநபர்களுக்கான வருமான வரி விலக்கில் வீட்டுக்கடனுக்கு திரும்ப செலுத்தும் வட்டியை கழித்துக் கொள்ளலாம் என்கிற சலுகை இருக்கும் நிலையில், அரசே வழங்கும் வட்டி மானியத்தையும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் சொந்த வீடு சாத்தியமாகாதா என்ன? அதே நேரத்தில் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் பெயரில்தான் கிடைக்கும் என்பதில்லை. அவரை முன்வைத்து குடும்பத் தலைவிகள் பெயரிலும் வாங்கும் வசதியையும் இந்த திட்டம் அளிக்கிறது. கடன் மேளா எங்கே நடக்கிறது என்று விசாரிக்க கிளம்பி விட்டீர்களா? மகிழ்ச்சி!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடேய் இப்படியுமா Dubsmash பண்ணுவாங்க :D :D!!(வீடியோ)
Next post சிரிப்பு அடக்கமுடியலடா சாமி!!(வீடியோ)