தாய்லாந்தில் புரட்சி நடத்திய ராணுவ தளபதி, தற்காலிக பிரதமர் ஆனார்
தாய்லாந்தில் புரட்சி நடத்திய ராணுவ தளபதி தன்னை தற்காலிக பிரதமராக அறிவித்துக்கொண்டார். ” 2 வாரத்தில் மக்களிடம் ஆட்சி பொறுப்பு ஒப்படைக்கப்படும்” என்றும், அவர் அறிவித்தார். தாய்லாந்து நாட்டு பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் தெருமுனை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில், பிரதமர் தக்சின் ஷினவத்ரா, ஐ.நா.பொதுச்சபை மாநாட்டில் பங்கேற்பதற்காக நிïயார்க் சென்று இருந்தபோது, அந்த நாட்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டு, தலைமை தளபதி சோந்தி பூன்ய ரத்லின் ஆட்சியை கைப்பற்றினார்.
ரத்தம் சிந்தாமல், துப்பாக்கி ஓசையின்றி நேற்று முன்தினம் ஒரேநாள் இரவில் இந்த புரட்சி அமைதியாக நடந்து முடிந்தது. தளபதி பூன்ய ரத்லின் தன்னை தற்காலிக பிரதமராக அறிவித்துக்கொண்டார். ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்காக, நிர்வாக சீர்திருத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ராணுவம் ரோந்து
தலைநகர் பாங்காக்கில் உள்ள மன்னரின் அரண்மனை, பிரதமர் அலுவலகம் போன்ற முக்கிய இடங்களில் ராணுவ டாங்கிகள் முற்றுகையிட்டு உள்ளன. முக்கிய தெருக்களிலும் டாங்கிகளுடன் ஆயுதம் தாங்கிய வீரர்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
புதிய நிர்வாக குழு அமைக்கப்பட்டு இருப்பதன் மூலம் தாய்லாந்தின் அரசியல் சட்டம் ரத்து செய்யப்பட்டு ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக, தளபதி அறிவித்து இருக்கிறார். உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. நாட்டின் 4 பிராந்தியங்களில் உள்ள ராணுவ தளபதிகளிடம் அந்தந்த பிராந்தியங்களின் சிவில் நிர்வாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
2 வாரத்தில் மக்களாட்சி
தாய்லாந்து நாட்டு மன்னரின் பிரமாண்ட ஓவியத்தின் முன்பு, முப்படை தளபதிகள் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரி புடைசூழ நின்றபடி, தலைமை ராணுவ தளபதி பூன்ய ரத்லின் டெலிவிஷனில் உரையாற்றினார். அப்போது அவர், “இந்த புரட்சி ஒரு தற்காலிக ஏற்பாடுதான். ஆட்சி அதிகாரத்தில் எங்களுக்கு ஆசை இல்லை. அரசியல் சட்டரீதியான முடியாட்சியின் கீழ், விரைவில் மக்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும்.” என்று உறுதி அளித்தார்.
“மக்கள் அமைதிகாத்து புதிய ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படியும்” அவர் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இன்னும் 2 வாரத்தில் நாங்கள் பதவி விலகி, மக்களிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்போம். ஜனநாயகத்தையும் அரசியல் சட்டரீதியான முடியாட்சியையும் நேசிக்கும் ஒருவர் ஆட்சியில் அமரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று அறிவித்தார்.
முஸ்லிம் தளபதி
தாய்லாந்தில் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றிய 59 வயது ராணுவ தளபதி பூன்ய ரத்லின் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டுதான் அவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். தெற்கு தாய்லாந்தில் முஸ்லிம் இன தீவிரவாதத்தால் கடந்த 2 ஆண்டுகளில் 1,700 பேருக்கு மேல் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு தீவிரவாதத்தை அடக்கும் நோக்கத்தில் முஸ்லிமான ரத்லின் அந்த பதவியில் அமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து பிரதமர் தக்சினை குண்டு வைத்து கொல்வதற்கு சமீபத்தில் முயற்சி நடைபெற்றது. இந்த சதிக்கு மூத்த ராணுவ அதிகாரிகளே காரணம் என்று அவர் குற்றம் சாட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து ராணுவ அதிகாரிகளின் நம்பிக்கையை பிரதமர் இழந்துவிட்டார்.
பிரதமர் எங்கே?
தாய்லாந்தில் புரட்சி ஏற்பட்ட தகவல் அறிந்ததும் நிïயார்க்கில் பேட்டி அளித்த பிரதமர் தக்சின் இந்த புரட்சி செல்லாது என்று அறிவித்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்ற இருந்ததை திடீர் என்று அவர் ரத்து செய்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.
அவர் எங்கு சென்றார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் தக்சின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தகவல் தொடர்பு தொழில் துறையில் பெரும் கோடீசுவரராக விளங்கினார். 2001-ம் ஆண்டு முதல் நடந்த 3 தேர்தல்களில் வெற்றி பெற்று அவர் பிரதமராக பதவி வகித்து வந்தார்.
ஊழல் குற்றச்சாட்டு
மருத்துவ சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் ஏழைகள் மத்தியில் பிரபலமாக விளங்கினார். ஆனால், அவருக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டார்.
தாய்லாந்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ராணுவ புரட்சி ஏற்பட்டு உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டில், சுசிந்தா கரப்ரயோன் தளபதியாக இருந்தபோது இதேபோல் ரத்தம் சிந்தாமல் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றினார். ஆனால், அடுத்த ஆண்டே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.