வாழ்வென்பது பெருங்கனவு!!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 8 Second

மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல… –அது ஒரு சேவை. ஆனால், இன்றைக்கு பெரும்பாலும் தொழிலாகவே பலர் செய்து பணம் சம்பாதிக்கும் காரியத்தை மட்டுமே செய்து வருகிறார்கள். மருத்துவத்தைச் சேவையாகச் செய்து தனது வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரிபப்ளிகா ஸ்ரீதர்.

“வாழும் வாழ்க்கைக்கு இடையில் வந்துபோகும் ஆயிரம் கனவு. அதில் நாம் வாழவேண்டிய வாழ்க்கையின் அர்த்தம் வந்து வந்து ஞாபகப்படுத்தும் வாழ்வின் பெருங்கனவு… அதுதான் நம்முடைய லட்சியக் கனவு. கனவு காணாத மனிதரில்லை. காணும் கனவை நிஜமாக்க முயற்சிப்பதில் வலியும் வேதனையும் வந்து வந்து போகும். காண்… கனவு காண்… கனவு காண்! இந்நாள் கனவுகளை எண்ணங்களாக்கி பிறகு செய்கையாக்கு.

சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை 100 கோடி. ஆகவே, உன் சிந்தனைகள் 100 கோடி மக்களுக்கு தகுதிப் பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும். எனது தந்தை ராம் துபே சுதந்திரப் போராட்ட வீரர். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் சென்னையின் ஷெரீப்பாக இருந்தார். கர்மவீரர் காமராஜரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

எனவே, நாட்டுப்பற்று எனது உணவுடன் ஊட்டி வளர்க்கப்பட்டதாலும், மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற தேடல் சிறு வயது முதலே எனக்கு இருந்து வந்தது. எனது தாய் பிரபாவதி. ஒரு தமிழ்ப்பெண். மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். எனது தந்தையும், தாயும் அன்பால் இணைந்து குடும்பமானவர்கள். அன்றைய பழமை மிகுந்த குடும்பத்தில் பிறந்தவள் என்பதால் என்னை பெண் குழந்தை படிக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

எனது தாய் முற்போக்கு சிந்தனை உடையவராதலால் ‘எனது குழந்தை யாரையும் சார்ந்து நிற்காமல், சுயமாக இருக்க வேண்டும் ’ என்று அனைவரையும் எதிர்த்துப் போராடி என்னைப் படிக்க வைத்தார். அப்படி ஒரு தாய் எனக்கு அமைந்ததாலேயே நான் கனவு கண்ட எனது இலக்கை அடைவதற்கான முதல் படிக்கட்டை எட்டினேன். மருத்துவத்தில் காலடி எடுத்து வைத்தபோது அதன் முக்கியத்துவத்தை பெரிய அளவில் அறிந்திருக்கவில்லை.

ஆனால், படிக்கும் காலத்தில் எத்தனை உயிர்களுக்கு நாம் மறுவாழ்வு கொடுக்கிறோம் என்று உணர ஆரம்பித்தேன். மருத்துவச் சேவையோடு சமூக சேவையும் செய்ய வேண்டும் என்ற உணர்வு மேலும் ஆழமாக என் மனதில் பதிந்தது. கனவுகளோடு வலம் வந்தேன். இறுதியாண்டு படிக்கும்போதே எனக்கு திருமணம் நடைபெற்றது. எனது கணவரும் என்னை புரிந்துகொண்டவராக அமைந்தது எனக்கு கடவுள் கொடுத்த வரம்.

நீ என்ன நினைக்கிறாயோ அதை உன் விருப்பப்படி செய் என்றார். கனவுகள் மெய்ப்பட எனது குடும்ப சூழ்நிலையையும் தாண்டி சென்னை தி.நகரில் ஒரு நர்ஸிங் ஹோம் ஆரம்பித்தேன். நல்ல நிலையில் அமைந்து மக்களுக்கு ஒரு தரமான சிகிச்சையை அளித்துவந்தபோதிலும், எனக்குள் ஒரு தேடல் இருந்துகொண்டே இருந்தது. இந்த மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற தேடுதல் தீவிரமடைந்து இருந்தது.

மருத்துவமனைக்கு அழைத்துவர இயலாத நோயாளிகளுக்காக அவர்களது வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்தேன். ஒரு கோயிலுக்கு சென்றிருந்தபோது அங்கே ஒரு மூதாட்டி பராமரிப்பின்றி படுத்த படுக்கையாக இருந்தார். அவர் என்னை வாஞ்சையுடன் உற்று நோக்கி ‘என்னைக் காப்பாற்றும்மா’ என்றார். அவரை அழைத்து வந்து நர்ஸிங் ஹோமில் வைத்து கவனித்து வந்தேன்.

ஆதரவற்ற அவர்தான் இன்று நான் பலபேரை கடைசிவரை சிகிச்சை அளித்து காப்பாற்றி வருவதற்கான அடித்தளமாக அமைந்தவர். அவர் தன்னை பார்த்துக்கொள்ளும்படி வைத்த வேண்டுகோள்தான் எனது தேடலுக்கான பதிலாகவும் அமைந்தது. மருத்துவ சிகிச்சையோடு இதனையும் சேர்த்து ஏன் செய்யக்கூடாது என்ற எனது கேள்விக்கான பதில்தான் ஆர்எம்டி வலிநிவாரண மற்றும் நலவாழ்வு மையம்.

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்” என்பதற்கு ஏற்ப எனது பெற்றோருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எனும் கனவும் தந்தை பெயரில் துவங்கியதால் நிறைவேறியது . பிறகொருநாள் ஓர் ஏழைப் பெண்ணைச் சந்தித்தேன். நான் வலியால் மிகுந்த துன்பப்படுகிறேன், மருத்துவ சிகிச்சைக்குக்கூட பண வசதி இல்லை, எனவே என்னைக் கொன்றுவிடுங்கள் என்று அழுதார்.

அப்போதுதான் எனக்குள் ஓர் எண்ணம் தோன்றியது, வசதியற்றவர்கள் என்ன செய்வார்கள்? எங்கே செல்வார்கள்? என்று சிந்தித்ததின் விளைவே ஓர் அறக்கட்டளை உருவாக காரணமாயிற்று. மதுரவாயல், மதுரை போன்ற இடங்களில் அறக்கட்டளை மூலம் நன்கொடை வசூலித்து நோயாளியின் இறுதிக்கட்டம் வரை பராமரித்து வருகின்றேன். அறக்கட்டளை ஆரம்பிப்பது சரியா, தவறா என்றுகூட யோசிக்காமல் ஆரம்பித்தேன்.

ஆனால், உள்ளுணர்வு சரியாகத்தான் இருக்கும் என்ற எனது நம்பிக்கையின் அடிப்படையில்தான் இதனை ஆரம்பித்தேன். ஸ்ரீபெரும்புதூரில் ஆரம்பிக்கப்பட்ட மாதிரி மருத்துவமனை 120 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சை, வலிநிவாரணி மையம் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பு மையம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்டிஸம் உள்ள குழந்தைகளுக்கும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், எச்.ஐ.வி. நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் கவுன்சிலிங்கும் வழங்கி வருகிறேன். என்னைப் பெற்று வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கிய எனது தாயின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு கனவு இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், மதுரை எல்லீஸ் நகரில் எனது தாய் பிரபாவதியின் பெயரில் பிரபா மருத்துவ விடுதி நடத்தி வருகிறேன். மறுமை என்ற யூனிட்டின் மூலம் நடுத்தரவசதி உள்ள மக்களுக்கும் தரமான ஐசியூ சிகிச்சை ஏற்பாடு செய்துள்ளேன்.

ஒரு நோயாளியின் ஒரு வருட செலவு இருபத்தைந்தாயிரம் வரை ஆகிறது. இந்த உலகத்தைவிட்டு போகும் போது யாரும் எதையும் கொண்டு போகப்போவது இல்லை. இருக்கும் வரையில் ஏழை, எளியோர், முதியோர்களுக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற எனது கனவுப் பயணத்தில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பால் வேனுமா? யாரு குடிக்க வரீங்க!!( வீடியோ)
Next post நீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்!!( வீடியோ)