கண்டிஷனர் பயன்படுத்துவது அவசியமா!!(மருத்துவம்)
உச்சந்தலையில் சுரக்கும் ‘சீபம்’ என்ற எண்ணெய் இயற்கையாகவே நம் உடம்பில் உருவாகி நம் முடியை பாதுகாக்கும். நாம் தலைமுடியை சீவும்போது அது உச்சந்தலையிலிருந்து முடியின் நுனி வரை சமமாக பரவும். முடி நேராக உள்ளதா அல்லது சுருண்டு உள்ளதா என்பதை பொறுத்து இந்த எண்ணெய் பரவும். நேரான முடியில் சீபம் நுனிவரை நன்றாக பரவும், அதனால் முடி பளபளப்பாக இருக்கும். சுருண்ட முடியில் சீபம் நுனி வரை பரவாது. அதனால் வறண்டு இருக்கும். ஆனால், அதே சீபம் அதிகமானால் தலைமுடியில் பிசுபிசுப்பை ஏற்படுத்தி சுத்தமில்லாத முடியாக மாற்றிவிடும்.
Surfactants உடைய ஷாம்பூ உச்சந்தலையை நன்றாக சுத்தம் செய்யும்போது முடியை வறண்டுபோகச் செய்கிறது. இதனால் முடியில் நெகடிவ் சார்ஜ் அதிகமாகி, ஒன்றோடொன்று சேராமல் தள்ளிச்சென்று, பறக்கக்கூடிய, படியாத வறண்ட முடியாக மாறுகிறது. இதை தவிர்ப்பதற்குத்தான் கண்டிஷனர் தேவைப்படுகிறது. அதாவது, ஒரு ஷாம்பூவின் முதன்மையான வேலை என்பது சுத்தம் செய்வது… அதுபோல ஒரு கண்டிஷனரின் முதன்மையான வேலை சேதப்பட்ட முடியை சரி செய்வது.
சரி… ஒரு நல்ல கண்டிஷனர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
* தலைமுடியில் உள்ள சிக்கை (சிடுக்கை) நீக்கி, முடியை மென்மையாக்க வேண்டும்.
* ஈர முடியைக்கூட எளிதாக வார உதவ வேண்டும்.
* முடிக்கு பிசுக்கில்லாத ஈரப்பதத்தை கொடுக்க வேண்டும்,.
* Static Electricity-யை குறைக்க வேண்டும்.
* முடியை எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக்கொள்ள ஏதுவானதாக மாற்ற வேண்டும்.
* முடியின் பளபளப்பை அதிகரிக்க வேண்டும்.
* முடியில் பிளவு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
* முடியின் பலத்தை அதிகரிக்க வேண்டும்.
* முடி உடைவதை தவிர்க்க வேண்டும்.
* சேதப்பட்ட முடியை பாதுகாக்க வேண்டும்.
பொதுவாக என்னென்ன காரணங்களால் முடி சேதப்படும்?
* அடிக்கடி முடியை முரட்டுத்தனமாக சீவுவது அல்லது ஃப்ரெஷ் செய்வது முடியை சேதப்படுத்தும். ஆனால், முடியைப் பற்றி வரும் அழகு குறிப்புகள் பெரும்பாலானவற்றில், முடியை அடிக்கடி ஃப்ரெஷ் செய்தால் முடி நன்கு வளரும் என்று குறிப்பிடுவார்கள். உண்மை அதுவல்ல. மாறாக அப்படி செய்வது, முடியை சேதப்படுத்திவிடக் கூடும்.
* அடிக்கடி வேதியியல் மாற்றத்திற்கு முடியை உட்படுத்துவது… எ.கா: ஸ்ட்ரைட்டனிங்
* டிரையர் ப்ளீச்சிங் ஹாட் அயர்ன், ஹாட் Combing. சூடான அயர்னிங் போன்றவைகளை செய்யும்போது அதிக சேதம் ஏற்படும்.
* உப்புத் தண்ணீரில் குளிப்பது. எ.கா: கடல் தண்ணீர்.
* குளோரின் சேர்க்கப்பட்ட நீச்சல் குளத்தண்ணீரில் அடிக்கடி குளிப்பது.
* வெயிலின் புற ஊதா கதிர்கள் தலையில் எப்பொழுதும் பட்டுக்கொண்டே இருப்பது.
* காற்றிலுள்ள மாசு முடியில் படிவது.
கண்டிஷனர் எதனால் செய்யப்படுகிறது?
ஒரு கண்டிஷனரில் Fatty Alcohols, Cationic Detergents, Polymers, Silicones போன்றவைகள் உள்ளன. அதைத்தவிர, புரோட்டீன்கள், வைட்டமின்கள், மினரல்கள், வெஜிடபிள் ஆயில் போன்ற இயற்கை பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. பொதுவாக நம்முடைய முடி நெகடிவ் சார்ஜ் உடையது. முடியை ப்ளீச் செய்தாலோ அல்லது ஸ்ட்ரைட்டனிங் செய்தாலோ முடியில் உள்ள டைஸல்ஃபைட் பாண்ட்கள் உடைந்து முடி சேதம் அடைந்துவிடும். இதனால் நெகடிவ் சார்ஜ் இன்னும் அதிகமாகிவிடும்.
இந்த நெகடிவ் சார்ஜ், பாசிட்டிவ் சார்ஜ் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. கூந்தலுக்கு மாறுபாடான தன்மையுடன் இருக்க வேண்டும். இன்னும் அதில் நெகட்டிவ்வான விஷயங்கள் சேரக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டால் போதும். அதனால் ஒரு கண்டிஷனரில் பாஸிடிவ் சார்ஜ் தேவை. அப்படி இருந்தால்தான் முடியின் Triboelectric தன்மை குறையும். முடியின் மீது உள்ள நெகடிவ் சார்ஜ் மற்றும் கண்டிஷனரில் உள்ள பாஸிடிவ் சார்ஜ் சட்டென்று இணைந்து முடியின் மீது சிலிக்கான்கள் மற்றும் பாலிமர்கள் படிந்து முடியை மென்மையாக்கும்.
ஷாம்பூவில் Anionic Surfactants இருக்கும். அப்படி உள்ள ஷாம்பூவில் Anionic Surfactants ஆன கண்டிஷனரை சேர்க்க முடியாது. ஆகையால், அவ்வகை ஷாம்பூவை உபயோகிக்கும்போது கண்டிஷனரை தனியாக உபயோகிக்க வேண்டும். 2 in 1 ஷாம்பூ அல்லது ஷாம்பூ வித் கண்டிஷனரில், Cationic Polymer கண்டிஷனர் சேர்க்கப்படும். ஷாம்பூ அழுக்கை நீக்கியபின் நாம் ஷாம்பூவை நீக்க, தலையை அலசும்போது கண்டிஷனரை தலைமுடியில் படிய விடும்.
இது தலைமுடியில் படிவதனால், தொடர்ந்து உபயோகப்படுத்தி வரும்போது தலைமுடியில் கனம் அதிகமாகி முடியை புஷ்டியாக வைக்காமல், சூம்பிப் போனதுபோல் ஆக்கிவிடும். இந்த பிரச்னையை சமாளிக்க பிறந்தது சிலிக்கான்ஸ் இந்த கண்டுபிடிப்பு, ஷாம்பூ உலகின் ஒரு புரட்சி எனலாம். Dimethicone, Simethicone போன்ற சிலிக்கான்கள் இப்போது கண்டிஷனிங் ஷாம்பூவில் மற்றும் கண்டிஷனரில் சேர்க்கப்படுகிறது. இவை முடிகளில் மிக நுண்ணிய துளிகளாக படிகின்றன.
மெலிதாகவும் எளிதாகவும் நன்றாகவும் சமமாகவும் இவை படர்ந்து, முடியை வழவழப்பாகவும் பளபளப்பாகவும் மாற்றி, அதேசமயம் புஷ்டியாகவும் வைக்கின்றன. இதனால் முடியில் உராய்வு குறைந்து முடி பராமரிப்பை எளிதாக்குகிறது. முடியில் கனம் அதிகமாகாததனால் முடி சூம்பிப் போனதுபோல் ஆகாது. ஆகையால் முடி குறைவாக உள்ளவர்களும் உபயோகிக்கலாம். ஷாம்பூவில் உள்ள புரோட்டீன்கள் சேதப்பட்ட க்யூட்டிக்கள் பிரிந்து இருக்கும் இடங்களில் உள்ள ஓட்டையினை அடைத்து முடியை சரி செய்யும்.
ஆனால் அதன் அளவு < 1000 Da-ஆக இருந்தால்தான் அதனால் முடியின் உள்ளே செல்ல முடியும். அதிகமாக சேதப்பட்ட முடியில், அதிக அளவு புரோட்டீன்கள் ஊடுருவ முடியும். ஆனாலும் அதிகபட்சம் 10%-தான் பலத்தை அதிகப்படுத்த முடியும். அப்படி உள்ளே சென்ற புரோட்டீனும் ஷாம்பூ போட்டு அலசியவுடன் திரும்பவும் வெளியே சென்றுவிடும். இந்த புரோட்டீன்களால் தற்காலிகமாக மட்டுமே முடியின் விட்டத்தை அதிகப்படுத்த முடியும். குட்டை முடி வைத்திருப்பவருக்கும், ஆண்களுக்கும் முடியின் நீளம் குறைவாக இருப்பதால் சேதம் மிகக் குறைவு. அதனால் கண்டிஷனர் உபயோகம் மிக குறைவாகத்தான் தேவைப்படும். ஆனால், நீளமுடி வைத்திருப்பவர்களுக்கு முடியின் நுனியில் எளிதாக பிளவு ஏற்பட்டு, எளிதாக உடையலாம். அதனால் கண்டிஷனரை அவர்கள் தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும். வேதியியல் வைத்தியங்கள் செய்ததனால் சேதப்படுத்தப்பட்ட முடிக்கு Deep Conditioning தேவை. இதில் எண்ணெயோ அல்லது கிரீமோ அரை மணி நேரத்துக்கு முன்பு தலைமுடியில் தேய்த்து வைத்து, மிதமான சூட்டில் துண்டை நனைத்து தலையில் கட்டி வைப்பார்கள். அப்படி செய்யும்போது முடியின் உள்ளே கண்டிஷனர் நன்றாகச் செல்லும். Leave on Conditioners தலைமுடியை ஷாம்பூ போட்டு அலசிய பின்பு லேசாக தடவ வேண்டியவை. அவைகள் சூப்பராக முடியில் சிக்கை நீக்கி, முடியை சீவுவதற்கு எளிதாக இருக்கும். முடியின் பளபளப்பையும் அதிகப்படுத்தும். கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெயே சிறந்தது… எப்படி? காலம் காலமாக தேங்காய் எண்ணெயை முடியில் தேய்க்கும் வழக்கம் உள்ளவர்கள் நாம். கேரள மக்கள் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு நீள கூந்தல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒருவருக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் புதிதாக முடி முளைக்காது என்பது உண்மைதான். ஆனால், முடியை சீரமைப்பதில் கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெய்தான் ஆகச் சிறந்தது. இப்போது மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் என்று விற்கப்படும் பாட்டில்கள் பலவற்றிலும் மற்ற லைட் வெயிட் ஆயில்களும் மினரல் ஆயில்களும் சேர்க்கப்பட்டவை. மினரல் ஆயில்கள் தேங்காய் எண்ணெயைவிட மலிவு என்பதே அதற்கு காரணம். மினரல் ஆயில் முடிக்குள் ஊடுருவி செல்ல முடியாது. தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மினரல் ஆயில் ஆகியவற்றில் எது முடிக்கு நல்லது என்று ஆராய்ச்சியில், தேங்காய் எண்ணெய் என்பது Triglyceride of Lauric Acid. முடியில் உள்ள ப்ரோட்டீன்களுக்கு அதிக ஈர்ப்பு உடையது மற்றும் நேரான செயின் போன்ற அமைப்பு உடையது என்பதால், இந்த மூவகை எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயால் மட்டுமே முடியின் உள்ளே ஊடுருவ முடியும்’ என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில், தேங்காய் எண்ணெயை அதிகமாக உபயோகப்படுத்தினால் தலையில் பொடுகை உருவாக்கக்கூடிய முக்கிய பூஞ்சையான Malascezia Furfur அதிக அளவில் வளர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தினசரி தலையில் அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும் என்பதை உணர வேண்டும்.
Average Rating