குழந்தையை கொல்வோர் மன நோயாளிகளே!!(மகளிர் பக்கம்)
சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியில் அபிராமி என்கிற பெண் தான் விரும்பிய வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி,பெற்ற குழந்தைகளையே கொலை செய்ததாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் மற்றும் அவருடைய டப் ஸ்மாஷ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பரவின. இந்த சம்பவங்களை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பெண்ணியத்திற்கு எதிரான கருத்துகளும் பரப்பப்பட்டன. ஒரு தனிநபர் செய்த குற்றச் சம்பவத்தை பெண்ணியத்தோடு ஒப்பிட்டு கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து இந்திய மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் பேசினேன்.
“தனி நபர் செய்திருக்கக்கூடிய சட்டப்படியான குற்றத்திற்கு அவர் பெண் என்பதாலேயே பெண்ணிய கருத்துகளோடு சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. அவதூறு கருத்துகளை பரப்புகிறவர்கள் பெண்ணியம் வலியுறுத்துகிற கருத்துக்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் வேண்டும், எல்லாத் துறைகளிலும் சம வாய்ப்பும், உரிமையும் வேண்டும். பெண் என்பதால் எந்த விதத்திலும் பாகுபாடு காட்டக்கூடாது. இந்திய அரசியல் சாசனம் சொல்லியிருக்கின்ற விஷயங்கள் அன்றாட வாழ்க்கையில் நடைமுறை ஆகவேண்டும் என்பதைத்தான் பெண்ணியம் வலியுறுத்துகின்ற கருத்துகள். இந்த கருத்துகளுக்கும் குன்றத்தூர் அபிராமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அபிராமி செய்திருப்பது சட்டப்படியான குற்றம். இதே குற்றத்தை ஓர் ஆண் செய்திருந்தால் எப்படி பார்ப்பீர்களோ அப்படித்தான் பார்க்க வேண்டும் குழந்தைகளை யார் கொலை செய்தாலும் அது எளிதில் மன்னிக்க முடியாத பெருங்குற்றம். இதில் பாகுபாடு இல்லை.
பெண்ணியக் கருத்துகளோடு உடன்படாதவர்கள், பெண்ணியத்தை அவதூறு பேச வேண்டும் என்று காத்திருப்பவர்கள்தான் இந்த சம்பவங்களை இணைத்து தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அடிப்படையிலே இந்த சமூகம் ஆணாதிக்கம் நிறைந்த சமூகமாக இருக்கிறது. பாலியல் வன்முறை நிகழ்ந்தாலும் மிகச்சுலபமாக பாதிக்கப்பட்ட பெண்ணையே நீ அணிந்திருக்கும் உடை சரியில்லை, இரவு 10 மணிக்கு மேல் பொது இடத்திற்கு ஏன் தனியாக போக வேண்டும் என்று குற்றம் சுமத்தும் ஒரு சமூகமாக இருக்கிறது. இப்படியான விஷயங்களை ஆணாதிக்கக் கருத்தியலோடு இணைத்துப் பேசுவது பொருத்தமானது. நீ பெண் என்பதற்காக எந்த தவறையும் செய்யலாம் என்று எந்த இடத்திலும் பெண்ணியம் கூறவில்லை. அபிராமி என்கிற தனிநபர் செய்த குற்றத்தை பெண்ணியம் ஆதரிக்கிறது அல்லது தூண்டிவிடுகிறது என்று கூறுவது அவதூறுதானே ஒழியே அதில் எள்ளளவும் உண்மை இல்லை” என்கிறார் உ.வாசுகி.
அபிராமி வழக்கில் உள்ள உளவியல் பிரச்சனைகள் குறித்து பேசுகிறார் மனநல ஆலோசகர் வந்தனா.“தான் பெற்றெடுத்த குழந்தையை கொல்லக்கூடிய செயலில் ஒருவர் ஈடுபடுகிறார் என்றால் அவருக்கு மன நோய், மன அழுத்தம் தொடர்பான பிரச்சனை இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயல்பாக இருப்பவர்கள் நிச்சயமாக இப்படியான கொடூரச் செயலைச் செய்ய வாய்ப்பே இல்லை. இப்படியான கொலைபாதக செயலில் ஈடுபடுகிறவர்களுக்கு Maternal filicide டிஸ்ஆர்டர் என்று சொல்லக்கூடிய மனநோய் இருக்கக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மூன்று வகைகள் உண்டு.
சில தாய்மார்கள் பிறந்த 24 மணிநேரமே ஆன தன் குழந்தையை கொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். இதற்கு (Neonaticide) என்று கூறுவோம். குழந்தை பெற்றெடுக்கும் போது உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும். இதனால் உணர்ச்சியில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் காரணமாக நடைபெறக்கூடிய விளைவு என்று கூறுவோம். இரண்டாவதாக, குழந்தை பெற்றெடுத்து 1 ஆண்டிற்கு பிறகு தன் குழந்தையை கொல்ல நினைக்கும் மனநிலை என்பது (Infanticide) என்று கூறுவோம். மூன்றாவது 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தையை தாயே கொலை செய்வது என்பது (Maternal filicide) ஆளுமை தன்மை கோளாறு என்று கூறுவோம். இது தான் குன்றத்தூர் அபிராமி சம்பவத்தில் நடந்திருக்கிறது.
இந்த சம்பவம் பொதுச் சமூகத்தில் வியப்பை ஏற்படுத்தினாலும் ஒரு மனநல ஆலோசகருக்கோ, மனநல மருத்துவருக்கோ புதிதான ஒன்று இல்லை. ஏனெனில் 1960களிலே இது தொடர்பான ஆய்வு நடத்தி புத்தகமே எழுதி இருக்கிறார்கள். பெங்களூர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோ சயன்ஸ் & சைக்கார்ட்ரிக் நிறுவனம் இதே போன்ற ஒரு பிரச்சனை உள்ள நபர்களுக்கு சிகிச்சை அளித்து ஆய்வறிக்கை பதிவு செய்துள்ளனர். இதை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அபிராமிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளித்துதான் சிறையில் அடைப்பார்கள். அதே போன்று மனம் தொடர்பான பிரச்சனை உள்ளவருக்கும் சிகிச்சை அளிப்பது என்பதும் அவசியம்.
பொதுச் சமூகத்தில் அவர் நன்றாக இருக்கிறார், நன்றாகப் பேசுகிறார், காவல் துறையினரிடம் தெளிவாக வாக்குமூலம் கொடுக்கிறார் என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் மன நல மருத்துவரிடமோ அல்லது மனநல ஆலோசகரிடமோ அழைத்துச் சென்றால் நிச்சயமாக மென்டல் ஃபிட்னஸ் சான்று கொடுக்கமாட்டார்கள். ஏனென்றால் அபிராமி வழக்கில் அவர் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 8 ஆண்டுகள் வாழ்ந்து இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து இருக்கிறார். இப்படி இருக்க தன் குழந்தைகளை கொல்ல நினைக்கும் அளவிற்கு மன நிலை வந்திருக்கிறது என்றால் அதற்கு பின்னால் இருக்கும் உளவியலை நாம் கண்டறிந்தால்தான் இது போன்ற பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிய முடியும்.
கணவர் மனைவியோடு நேரம் செலவழிக்காமல் இருப்பதும்கூட மனச்சிக்கலுக்குக் காரணம் ஆகலாம். சம்பந்தப்பட்டவருக்கு சிறுவயதிலோ, இடையிலோ பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதற்கான சாத்தியங்களும் இருக்கலாம். இவற்றை எல்லாம் கடந்து கணவரை பழிவாங்குவதாக எண்ணி குழந்தைகளை துன்புறுத் துவது, இது என்னுடைய குழந்தையே இல்லை. இந்த குழந்தை எனக்கு இடையூறாக இருக்கிறது என நினைப்பதுதான் மனநோய் என்று கூறுகிறோம். அபிராமி வழக்கில் இதுதான் நடந்திருக்கிறது. இது போன்ற வழக்குகளில் பெரும்பாலும் அம்மாக்கள்தான் குழந்தைகளை கொன்று இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
ஆயிரம் காரணங்கள் சொல்லப் பட்டாலும் கொலை செய்வது தவறு. ஆனால் அதன் பின் இருக்கும் உளவியல் பிரச்சனையையும் சரி செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது.சில விஷயங்களை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. ஒரு நபரின் இயல்பான நடவடிக்கையில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார், அல்லது இயல்பான நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது என்றால் வீட்டில் இருப்பவர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். இது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை பொருந்தும். இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மன நோய்தான் காரணம். ஆரம்பத்திலே மனநல மருத்துவரை அணுகும்போது தாயிடம் இருந்து குழந்தையை பிரித்து வைத்து சம்பந்தப்பட்டவருக்கு உரிய சிகிச்சை அளித்து சரி செய்ய முடியும். மன நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஆலோசனை வழங்குவது போல அவருடன் இருக்கும் கணவருக்கும் நல்ல ஆலோசனை வழங்குவதும் முக்கியம்” என்கிறார்.
Average Rating