முத்துக்கு முத்தாக!!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 32 Second

மனிதர்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ வேண்டுமானால் பற்களையும், நாவையும், வாயையும் எப்போதும் சுத்தமாக வைத்து இருக்கப் பழக வேண்டும். பற்கள் உணவுப் பண்டங்களை அரைத்துத் தள்ளும் போது பற்களின் இடுக்குகளின் உள்ளே உணவுத் துண்டுகள் ஈறுகளில் ஏறிப் பதிந்து விடும். அந்த ஈறுகளின் உள்ளே பற்களின் நரம்புகளும் குருத்துகளும் இருப்பதால் உணவுப் பண்டங்களின் மாவுகள் தங்கி அழுகி விட்டால் அழுகலில் இயற்கையாகவே பூச்சிகள் உண்டாகி ஈறுகளில் பல் நரம்பு குருத்துக்களை அரித்து பற்களுக்குத் தீமையை உண்டாக்கி விடும்.

இதனால் பல்லரணை, ஈறுவீக்கம், சீழ், ரத்தம் வருதல் போன்றவைகளால் பற்களுக்கு ஆட்டம் கொடுத்து நாளடைவில் பற்கள் ஆடி விழ ஏதுவாகும். ஒரு பல் ஆட்டம் கண்டு விழுந்து விட்டால் அடுத்த பற்களுக்கும் இப்படியே அசைவு உண்டாகி பற்கள் ஒவ்வொன்றாக விழுந்து கடினமான பொருள்களை அரைக்க முடியாமல் உள்ளே விழுங்க, செரிப்பு சக்தி குறைந்து இரைப்பைக்கு அதிக வேலையாகி அஜீரணத் தொல்லைகள் உண்டாகி வயிற்றுக்கோளாறுகளை உண்டு பண்ணி விடும். அதோடு ஆகாரம் செரிக்காமல் அதனால் பற்பல நோய்கள் உடலில் உண்டாகி நாளடைவில் உடல் கெட்டு ஆயுளும் குறைந்து விடுகிறது.

நவீன பற்பசைகள்

ஒரு சிலருக்கு பற்களைச் சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தவறான கருத்து உண்டாகிறது. நாகரிக வாழ்க்கையில் பற்கள் வெண்மையாக இருந்தால் போதும் என்ற மேலெழுந்த போக்கால் பலவிதமான ரசாயனக் கலவையால் பற்களை வெண்ணிறமாக்க நவீன பற்பசைகளை (விளம்பரங்களைப் பார்த்து) உபயோகிக்கிறார்கள். இதனால் பற்களுக்கு ஒருவித நற்பயனும் விளைவதில்லை. மாறாக அந்த நவீன பற்பசைகளால் பற்களை பிரெஷ் கொண்டு அடிப்பதால் பற்களின் ஈறுகள் தேய்ந்து, பற்களின் இடைவெளிகளில் எல்லாம் சந்து விட்டு ஆட்டம் கொடுத்து விடுகின்றன. பிறகு பல் டாக்டரிடம் போய் ஆலோசனை கேட்க, அவர்களும் பற்களைப் பார்த்து விட்டு, இருக்கும் பற்களை எடுத்து விட்டு ஒரு செட் பொய் பற்களைக் கட்டிக் கொள்ள ஆலோசனை கூறுவார்.

பற்களைச் சுத்தம் செய்வது எப்படி?

பற்கள் வெண்ணிறமாக இருந்தால் மட்டும் போதாது. கடைசி வரையில் பற்கள் ஆட்டம் கண்டு விழக்கூடாது என்று விரும்பும் அன்பர்கள் கீழ்கண்டபடி செய்து வந்தால் பற்களுக்கு அசைவு ஆட்டம் எதுவுமே வராது. ஒவ்வொரு தடவையும் நாம் ஆகாரத்தை மென்று தின்ற பிறகு வாயைக் கொப்பளித்து சுத்தம் செய்கிறோம். இப்படி வாயை நீர் விட்டுக் கொப்புளித்து உமிழும் போது ஆள்காட்டி விரலை உள்ளே விட்டு இருபக்கங்களில் கீழ்தாடை பற்களின் அடியில் உள்ள ஈறுகளை நன்றாக அழுத்தி மேலுக்கு விட்டால் மென்று தின்ன ஆகார மாவுகள் ஈறுகளின் உள்ளிருந்து வெளிப்பட்டு விடும்.

இது போலவே மேல் தாடை வெளிப்புறம், உள்புறம், முன் பற்கள், மேல் கீழ் கடவாய் பற்களின் இருபுறங்களின் உட்பக்கம் இவைகளை அழுத்தி விட்டு, பிறகு இரண்டு, மூன்று தடவை நீர் விட்டு வாய் கொப்புளித்து விட வேண்டும். இப்படிச் செய்ய 2 நிமிடம் முதல் 3 நிமிடம் ஆகும். இப்படி ஒவ்வொரு தடவையும் ஆகாரம் எடுத்துக் கொள்ளும் போதெல்லாம் சோம்பல் இல்லாமல் செய்து வருபவர் யாராயினும் சரி, அவர்களுக்கு ஆயுள் பூராவும் பல் தொந்தரவு நிச்சயமாக வராது. இப்படி பற்களைச் சுத்தம் செய்வதுடன், காலையில் மூலிகைகளைக் கொண்டு பற்களைத் துலக்குவது நமது பண்டைய முறை.

பற்கள் உறுதியாக

ஆலமரத்தின் விழுதுகளை துண்டு செய்து கொண்டு காலையில் அந்தக் குச்சியால் பல் துலக்கி வர, பல் ஆட்டம், அசைவு எல்லாம் நீங்கி கெட்டிப்பட்டுப் போகும்.

ஈறுகள் கரையாதிருக்க…

வேல மரத்தின் பட்டையைத் தூள் செய்து வைத்துக் கொண்டு சிறிது உப்பு சேர்த்து துலக்கி வர ஈறுகள் கரையாமல் பற்களை பாதுகாக்கும்.
பற்களைப் பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்பமரத்தின் பட்டை அல்லது குச்சியால் பற்களை துலக்கி வர பூச்சி, பல்லரணை, சீழ், ரத்தம் வருதல் ஆகியவை தடுப்பதுடன் பித்தத்தால் வரும் நோய்கள் எல்லாம் நீங்கி வாய் நாற்றமடிப்பதையும் தடுக்கும்.

நுணுக்காய் பொடி

நுணு மரத்தின் காயை இடித்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து அடை போல் தட்டி காயவைத்து, காய்ந்த பின்பு விராட்டியின் மத்தியில் வைத்து தீயிட்டு புடம் போட்ட நுணுக்காயை நன்கு அரைத்து பொடியாக்கி பல் துலக்கி வர பற்கள் பற்றிய நோய்கள் எல்லாம் நீங்கும்.

வில்வக்காய் பொடி

வில்வக் காய்களையும் உடைத்து காயவைத்து சுட்டு கரியாக்கி பற்பொடி செய்து உபயோகிக்க இனம் தெரியாத பல் நோய்கள் எல்லாம் பறந்து போகும்.

வெள்ளை எருக்கன் பூ பற்பொடி

பூக்களை மட்டும் எடுத்து அரைக்கால் பங்கு உப்பு சேர்த்து அரைத்து அடை தட்டி உலர்த்தி விராட்டியில் புடமிட்டு பொடி செய்து கருவேலம்பட்டைத் தூளுடன் சேர்த்து பல் துலக்கி வர, பல் நோய்கள் தீராமல் வாழ்நாள் பூராவும் தொல்லை படுவோர்களுக்கு சிறந்தது இம்முறை.

மூலிகை வேர்கள்

பசுமையான நாயுருவி வேர், கரிசலாங்கண்ணி வேர் ஆகியவைகளால் பற்களைச் சுத்தம் செய்வோர்களுக்கு பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் மட்டுமல்லாமல், மூளை, கண் நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் யாவும் நீங்கும் என்று பண்டைய சித்தர் நூல்களில் காணலாம்.

கடுக்காய் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய்

இவை மூன்றையும் சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து பற்களை துலக்கி வர பற்களுக்கு ஆரோக்கியம் காண்பதுடன் மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு, அஜீரணம், பேதி போன்ற நோய்களும் விலகி விடும்.

புளியங்கொட்டை தோல் பொடி

புளியங்கொட்டை தோலைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வர உஷ்ண சம்பந்தமான நோய்கள், சிறுநீர் தாரை எரிச்சல், ரணம் இவைகளும் நீங்கி பற்கள் சுத்தமாகும்.

பசுஞ்சாணச் சாம்பல்

எல்லோருக்கும் எளிதான முறை இது. சுத்தமான பசுஞ்சாணத்தை கல் மண் தூசி இல்லாமல் எடுத்து எரித்து சாம்பலாக்கி ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்துக் கொண்டு காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாவதுடன் எந்தவிதமான பூச்சிகளும் பற்களைத் தாக்காமல் பாதுகாக்கக்கூடியது. கிராமங்களிலுள்ள பெரியோர்கள் இம்முறையை கையாண்டு கடைசி வரை பற்களை விழாமல் பாதுகாத்து வருவதை இன்றும் காணலாம்.இயற்கை அன்னை தந்த எளிய பற்பொடி வகைகளை நீங்களே உங்கள் கைபட செய்து வைத்துக் கொண்டு பற்களைப் பாதுகாத்து வாருங்கள். மற்றவர்களுக்கும் இதன் பலனை எடுத்துக் கூறி நன்மை செய்யுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்பு மஜ்ஜையையும் தானம் அளிக்கலாம்!( மருத்துவம்)
Next post சிறப்பு தினங்கள்… சிறப்பு கட்டுரைகள்…!( மருத்துவம்)