பழங்குடியின முதல் ஜர்னலிஸ்ட்!(மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 22 Second

கல்வி ஒருவருக்கு தரும் தன்னம்பிக்கை என்பது தற்காலிக சந்தோஷங்களான உடை, தோற்றம் என்பதைக் கடந்தது. இதற்கான வாழும் சாட்சி, ஒடிஷாவைச் சேர்ந்த ஜெயந்தி பருடா. மால்கங்கிரி மாவட்டத்திலுள்ள கோயா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர், கல்வி கற்க பள்ளி வாசலைத் தொட்டு பட்டம் பெற்று அம்மக்களின் முன்னேற்றத்திற்காக அங்கேயே பணியாற்றியும் வருகிறார். ‘‘எங்கள் சமூகத்தில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை பதினைந்து சதவிகிதத்துக்கும் குறைவுதான்…’’ என வேதனையான குரலில் பேசும் ஜெயந்தி, கல்வியின்மையால் நிகழும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க தன்னார்வ அமைப்பைத் தொடங்கி உழைத்து வருகிறார்.

ஏழை விவசாயியான தந்தையின் ஊக்கத்தால் ஜெயந்தி உட்பட அக்குடும்பத்தின் நான்கு சகோதரிகளும் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். ‘‘குறைந்தபட்சம் அடிப்படை கல்வி கற்றால் மட்டுமே நகரில் ஏதேனும் வேலை கிடைக்கும் என்ற நிலையில் படிக்காதவர்களின் நிலை குறித்து யோசித்துப் பாருங்கள்… மால்கங்கிரியில் வாழும் பழங்குடிகளில் நாங்கள் மட்டுமே கல்வி கற்ற முதல் குடும்பம்…’’என்று சொல்லும் ஜெயந்தி, 40 கி.மீ. தொலைவிலுள்ள சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிக்க விரும்பினார். வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தினசரி வாழ்வை நடத்த தடுமாறும் பெற்றோரிடம் எப்படி உதவி கேட்பது? தயங்கியவருக்கு தோழியின் பெற்றோர் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள்.

‘‘படிப்பதற்கான பணத்தை திரட்டிவிட்டாலும் ஹாஸ்டலில் தங்க பணமில்லை. அப்போது தோழியின் குடும்பம்தான் தங்கள் வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதித்து உதவினார்கள்…’’ என்று நெகிழும் ஜெயந்தி, படிப்பு முடிந்ததும் புவனேஸ்வருக்கு இன்டர்ன்ஷிப்புக்காக சென்றார். திரைப்பட இயக்குநர் பைரன்தாஸ், தேவையான பயிற்சி களையும் தங்குமிடத்துக்கான உதவிகளையும் செய்திருக்கிறார். இன்று நக்சலைட்டுகளின் ஊடுருவல் கொண்ட மால்கங்கிரி மாவட்டத்தில் செயல்படும் கலிங்கா தொலைக்காட்சி செய்தியாளராக பல்வேறு சவால்களைச் சந்தித்து பணியாற்றி வருகிறார் ஜெயந்தி. இப்பகுதியின் தனித்துவத்தை புரிந்துகொண்டால்தான் இவரது பணியின் நெருக்கடி புரியும்.

1965ம் ஆண்டு தண்ட காரண்யா திட்டத்தின் கீழ் வங்கதேச அகதிகளுக்கும், 90களில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் இங்கு வசிக்க அரசு குடியிருப்புகள் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு எல்லா நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. ‘‘இப்பகுதியின் ஒரே பெண் செய்தியாளர் நான்தான் என்பதால் ஆண் நிருபர்களுடன் போட்டியிட்டு என்னை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்க வேண்டிய நிலையிலிருக்கிறேன். ஆங்கிலம் அறிந்த பழங்குடிப்பெண்ணான என்னை மாவோயிஸ்ட்டாகக் கருதி விசாரிக்கும் போலீசின் மனப்போக்கை சமாளிக்கும் சிக்கல்களும் இதில் உள்ளது…’’ என்கிறார்.

போலீஸ் மற்றும் நக்சலைட் தாக்குதலால் பெற்றோர்களை இழந்த பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி ஆகியவற்றை தனது தன்னார்வ அமைப்பின் வழியாக உருவாக்கித் தந்துள்ளார் ஜெயந்தி பருடா. ‘‘ஆங்கிலம் நன்றாகப் பேசுவதால் என்னை நகரத்துக்கு சென்று பணிபுரியலாமே என்று பலரும் கேட்கிறார்கள். உண்மைதான். இங்குள்ளதை விட வசதிகளும் பணமும் அங்கு கிடைக்கும்தான். ஆனால், இது என் தாய்நிலம். என் வேர்கள் இங்குதான் உள்ளன. நான் படித்த படிப்பு என் மக்களுக்காக பயன்படாதபோது அதற்கு என்ன மதிப்பிருக்கிறது?’’ கம்பீரமாகக் கேட்கிறார் ஜெயந்தி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதய நோய் வராமல் இருக்கணுமா?(மருத்துவம்)
Next post பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது!!(அவ்வப்போது கிளாமர்)