அரசியல் மிதவாதத்தின் நெருக்கடி!!( கட்டுரை)
எதிரிக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என்பார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஓர் ஆயுதத்தை அல்ல; ஆயுதக் களஞ்சியம் ஒன்றையே, எதிரியின் கையில் கொடுத்துவிட்டார் போலும்.
உத்தேச புதிய அரசமைப்பு தொடர்பாக, காலியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், அவர் உரையாற்றும் போது தெரிவித்த ஒரு கருத்தை, வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், அவரை மட்டுமல்லாது, கூட்டமைப்பையே தாக்குவதற்காகப் பாவிக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தின் பின்னர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் சென்ற சுமந்திரன், தமது காலி உரை குறித்து அளித்த விளக்கத்தை, கூட்டமைப்பின் போட்டியாளர்கள் எவரும் ஏற்கவில்லை.
அவர்கள் இன்னமும், அவரை விட்டுவிடவில்லை. சுமந்திரனும் தொடர்ந்து விளக்கமளித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அகலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற, புதிய அரசமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்றின் போதும், அவர் தமது காலி உரையைப் பற்றி, விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.
“தமிழர்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை; பிரிந்து செல்லும் உரிமையையும் கேட்கவில்லை; மாகாண சபை முறையில், சில மாற்றங்களை மேற்கொண்டால் போதுமானது” என்று சுமந்திரன், காலியில் கூறியதாகவே சில ஊடகங்கள் தெரிவித்தன. அதுவே, இந்தச் சர்ச்சைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, சுமந்திரன் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்களுக்குப் பிடிக்காது. அவ்வாறிருக்க, சமஷ்டி தேவையில்லை என்று, அவர் கூறியதாகச் செய்தி வெளிவந்தால், அவர்கள் விட்டுவிடுவார்களா?
இந்தச் செய்தி வெளியானதன் பின்னர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், சுமந்திரனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினர்.
“தமிழர்களுக்கு, சமஷ்டி தேவையில்லை என்று, சுமந்திரன் எவ்வாறு கூற முடியும்” எனக் கேள்வி எழுப்பினர். “இது சுமந்திரனின் கருத்தா, அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா?” என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுமந்திரன், “தாம் கூறியது, திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது” எனக் கூறினார். சமஷ்டி அமைப்பு முறையைத் தாம் நிராகரிக்கவில்லை என்றும், அந்தச் சொல்லால் அழைக்கப்படாத, ஆனால், சமஷ்டி அமைப்பு முறையின் அம்சங்களைக் கொண்ட அரசமைப்பொன்றையே தாம் வலியுறுத்தியதாக அவர் அப்போது கூறியிருந்தார்.
உத்தேச புதிய அரசமைப்பு விடயத்தில், இந்த அளவில் இல்லாவிட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த ஒக்டோபர் மாதம் முதல், வடக்கில் தமது போட்டியாளர்களின் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அதற்குக் காரணம், புதிய அரசமைப்பு தயாரிப்பு விடயத்தில், ஆவணமொன்று முதன் முதலாக, அந்த மாதத்தில் வெளியிடப்பட்டமையாகும்.
புதிய அரசமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக, நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டதன் பின்னர், அதன் கீழ் நியமிக்கப்பட்ட ஆறு உப – குழுக்களும் தமது அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தன.
அந்த ஆறு குழுக்களுக்கும் மேலாக, நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் தலைவராக, பிரதமர் செயற்படுவதே அதற்குக் காரணமாகும். வழிநடத்தல் குழு, அவ்வறிக்கைகளை ஆராய்ந்து, அதன் இடைக்கால அறிக்கையை, அக்குழுவின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவால், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், அரசாங்கத்தின் தன்மையை விளக்குவதற்காக, இதுவரை பாவிக்கப்பட்ட ‘ஒற்றையாட்சி’ என்ற சொல் இடம்பெறவில்லை; மாறாக, அரசாங்கத்தின் தன்மையை விளக்க, ஒரு சிங்களச் சொல்லோடு, ஒரு தமிழ்ச் சொல் இணைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ‘ஏக்கீய ராஜ்ஜிய’ – ‘ஒருமித்த நாடு’ என்றே, அதில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த, ‘ஒருமித்த நாடு’ என்ற பதம், சமஷ்டியைக் குறிப்பதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதை ஏற்றுக் கொண்டது.
இந்த அடிப்படையில் தான், “சமஷ்டி தேவையில்லை” என்று, சுமந்திரன் காலியில் உரையாற்றும் போது கூறியதாகச் செய்திகள் கூறின.
ஆனால், ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தோடு, இணைக்கப்பட்டுள்ள சிங்களச் சொல்லான, ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்பது, ஒற்றையாட்சியை குறிப்பதால், “இது அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை” எனத் தமிழ்த் தீவிர போக்குடையவர்கள் கூறுகின்றனர்.
‘ஒருமித்த நாடு’ என்றால், சமஷ்டியைக் குறிப்பதாகக் கூறி, சிங்களத் தீவிர போக்குடையவர்களும் அரசாங்கத்தின் இந்தப் பதப் பிரயோகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் – சிங்கள இனங்களில் உள்ள, தீவிர போக்குடையவர்களைச் சமாளிக்க எடுத்த இந்த முயற்சியால், அரசாங்கம் அவ்விருசாராரையும் மேலும் பகைத்துக் கொண்டது.
இந்தநிலையில் தான், சுமந்திரன் காலியில் உரையாற்றியிருந்தார். அவர், காலியின் சூழலுக்கு ஏற்ப உரையாற்றி இருக்கிறார் போலும். அதனாலேயே, “சமஷ்டி தேவையில்லை” என்று கூறியிருக்கிறார். சமஷ்டி தேவையில்லை; ஒருமித்த நாடு என்பதே போதுமானது என்பது, அவரது வாதமாக இருந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் கூறியதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே, வடபகுதியில் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், அதனைப் பிடித்துக் கொண்டனர். சுமந்திரன், யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது, இதற்கு விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் அவர், “சமஷ்டி என்ற எமது கொள்கையில் மாற்றம் இல்லை; ஆனால், சமஷ்டி என்ற பெயர்ப் பலகை தேவையில்லை. உள்ளடக்கத்தில் சமஷ்டி இருந்தால் போதுமானது” என்று கூறினார். அதை, வடபகுதி மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ தெரியாது. ஆனால், அந்தச் செய்தி, தென்பகுதியை வந்தடைந்தால், அங்கு மற்றொரு சர்ச்சையை சுமந்திரன் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
அதாவது, “காலியில் சமஷ்டி தேவையில்லை என்று கூறியவர், யாழ்ப்பாணத்துக்குச் சென்று, சமஷ்டி வேண்டும் என்கிறார். அதுவும், சமஷ்டியை மூடி மறைத்து, ‘லேபில்’ இல்லாமல் வேண்டும் என்கிறார்” என்று தென்பகுதித் தீவிர போக்காளர் கூறக்கூடும்.
இதுதான், வடக்கிலும் தெற்கிலும் அரசியல் மிதவாதம் எதிர்நோக்கும் பிரச்சினை. இனப்பிரச்சினைத் தீர்வதாக இருந்தால், அதன் பிரதான அம்சமான தமிழ், சிங்கள முரண்பாட்டின் போது, ஒன்றில் தமிழர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது சிங்களவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும், அல்லது இரு சாராரும் விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஆனால், எந்த இனத் தலைவர்களுக்கும் விட்டுக் கொடுக்க, அந்த இனத்தைச் சேர்ந்த தீவிரபோக்காளர்கள் இடமளிக்க மாட்டார்கள். இன்று, அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை இதுவே.
இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையின் போது, அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிகாரப் பரவலாக்கலை நடைமுறையில் ஏற்றுக் கொள்கின்றன. ஏன், தென்பகுதி பேரினவாத தீவிர போக்காளர்களும் தான், அதிகாரப் பரவலாக்கலை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் தான் அவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகிறார்கள்.
அவர்கள் அதிகாரப் பரவலாக்கலை எதிர்ப்பதாக இருந்தால், வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததைப் போல், மாகாண சபை முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்றே கோஷமெழுப்ப வேண்டும்.
உத்தேச அரசமைப்பிலும் சில மாற்றங்களுடன் அதிகாரப் பரவலாக்கல் ஓரங்கமாக அமையப் போகிறது. அதைத் தான் சுமந்திரன், “மாகாணசபை முறையில், சில மாற்றங்கள் செய்தால் போதும்” எனக் காலி கூட்டத்தின் போது கூறியிருக்கிறார் போலும்.
ஆனால், அந்த அதிகார பரவலாக்கல் அமைப்பை, என்னவென்று அழைப்பது என்பதிலேயே, அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதிகாரப் பரவலாக்கல் என்றால், அடிப்படையில் சமஷ்டி முறை என்பதால், அதை சமஷ்டி என்று அழைக்கலாம். அப்போது, தென்பகுதித் தீவிரபோக்காளர் துள்ளிக் குதிப்பார்கள்.
ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்ததைப் போல், பண்பில் சமஷ்டியாக இருந்தாலும், தென்பகுதியைச் சமாளிப்பதற்காக, அதனை ஒற்றையாட்சி என அழைக்கலாம். அப்போது, வட பகுதி தீவிரவாதிகள் குழம்பிவிடுவார்கள்.
எனவே, இரண்டு சாராரையும் சமாளிப்பதற்காக, வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இரண்டையும் இணைத்து ‘ஏக்கீய ராஜ்ஜிய-ஒருமித்த நாடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்கள் ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தையும் சிங்களவர்கள் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்ற பதத்தையும் கண்டு, இதனை ஏற்றுக் கொள்வார்கள் என இதை வரைந்தவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இரு தீவிரவாதக் குழுக்களும் நேர் மாறானதையே செய்தார்கள்.
தமிழ்த் தீவிரபோக்காளர்கள் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்பதைப் பிடித்துக் கொண்டு, வரப்போவது ஒற்றையாட்சி எனக் கூச்சலிடுகிறார்கள். சிங்களத் தீவிர போக்காளர், ‘ஒருமித்த நாடு’ என்பதைப் பிடித்துக் கொண்டு, வரப்போவது சமஷ்டியே என ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
பெயர் எதுவாக இருந்தாலும், நடைமுறையில் என்ன நடக்கப் போகிறது என்பதை, இரண்டு தீவிர போக்குடைய குழுக்களும் ஆராய விரும்பவில்லை. அது, அவர்களது அரசியல் இருப்பைப் பாதிக்கும் என்பதே அதற்குக் காரணமாகும். உண்மையில், நடைமுறையில் என்ன நடக்கப் போகிறது என்பது, எவருக்கும் தெரியாது. அது, இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றே தெரிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், தற்போதைய அரசமைப்புப் பணிகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா என்பதேயாகும்.
கூட்டமைப்பு, அரசமைப்புப் பணிகள் மீதே, தமது முழு நம்பிக்கையையும் வைத்திருக்கிறது போல் நடந்து கொள்கிறது.
எனவே, தீர்வு இன்று வரும் நாளை வரும் எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறி வருகிறார். அதேவேளை, தாம் விரும்பும் தீர்வு கிடைக்குமா என்பதில், சில சந்தரப்பங்களில் அவர், சந்தேகத்தையும் வெளியிட்டு வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்த சம்பந்தன், “சமஷ்டி தான், எமக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளோம்; ஆனால், கிடைக்குமா இல்லையா என்பதைக் கூற முடியாது” என்றார். அவ்வாறாயின், கூட்டமைப்பினருக்கும் அவர்களது போட்டியாளர்களுக்கும் இடையில், அரசியல் நிலைப்பாட்டில் என்ன வேறுபாடு இருக்கிறது?
ஒரு சாரார், அரசாங்கத்தோடு நெருக்கமாக இருந்து, சமஷ்டியைக் கேட்கிறார்கள். மற்றைய சாரார், பொது மேடைகளில் அரசாங்கத்துக்கு எதிராகக் கர்ஜித்து, அதையே கேட்கிறார்கள்.
ஒரு சாரார், ‘லேபிள்’ எதுவாக இருந்தாலும், நடைமுறையில் சமஷ்டி இருந்தால் போதும் என்கிறார்கள். மற்றைய சாரார், நடைமுறையைப் பற்றிப் பேசாது, லேபிளில் சமஷ்டி இருக்க வேண்டும் என்கின்றனர்.
இவற்றில் லேபிலில் சமஷ்டி இருக்க வேண்டும் என்பதில், ஈர்ப்புச் சக்தி அதிகமாகவே தெரிகிறது. மக்கள் அதையே விரும்புவார்கள்.
வடக்கிலும் தெற்கிலும் தலைவர்கள், மிகவிரைவில் தேர்தல்களை எதிர்நோக்கப் போகிறார்கள். அது, இந்த அரசமைப்பு விவகாரத்தையும் பாதிக்கக்கூடும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்த் தோல்வியை அடுத்து, எதிர்வரும் பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலை எதிர்ப்பார்த்து, அரசாங்கம் பொருளாதார திட்டங்களை முன்வைத்துள்ளது.
இந்தநிலையில், தென்பகுதி தீவிரபோக்காளர்களுக்குத் தீனி போட, அரசாங்கம் விரும்பாது. எனவே அரசமைப்புப் பணி முன்னெடுக்கப்படுமா என்பதும் முன்னெடுக்கப்பட்டாலும் சமஷ்டிக் கோரிக்கை ஏற்கப்படுமா என்பதும் சந்தேகத்துக்குரியவையே.
அதேவேளை, வடமாகாண சபையின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அத்தோடு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகளின் காரணமாக, கூட்டமைப்பின் கீழ், அடுத்தமுறை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.
இந்த நிலையில், அவர் மேலும் தீவிர போக்கைக் கடைபிடித்து, கூட்மைப்பை மேலும் அசௌகரித்துக்கு உள்ளாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, தமிழர் அரசியலில் மிதவாதம், மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது.
Average Rating