50 சதவிகித மருத்துவர்களுக்கு இதய நோய்!!(மருத்துவம்)
தமிழகத்தில் உள்ள 50 சதவிகித மருத்துவர்கள் இதயநோய்களுக்கு ஆளாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில்தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. மக்களைக் காக்கும் மருத்துவர்களே இத்தனை பெரிய அபாயத்தில் இருக்கிறார்களா என்று அதிர்ச்சியோடு இதயநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜாய் தாமஸிடம் பேசினோம்…
“மருத்துவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான அலாரமாக இதை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர்கள் இத்தனை பெரிய சிக்கலுக்கு ஆளாகி இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. எல்லா துறைகளிலும் விடுமுறை என்று ஏதாவது ஒருநாளாவது இருக்கிறது. ஆனால், மருத்துவத்துறையில் எல்லா நாட்களும் வேலை நாட்கள்தான். தற்போது சில தனியார் மருத்துவமனைகள் ஞாயிறு அரைநாள் விடுமுறை அளிக்கின்றன. அந்த அரைநாளும் குடும்பத்தோடு செலவழிக்கவே சரியாக இருக்கிறது.
இளம் மருத்துவர்களின் நிலைமை இன்னும் மோசமானது. 30 வருடங்களுக்கு முன்பு, வருடத்துக்கு 400 ரூபாய் மட்டுமே மருத்துவப்படிப்புக்கான கட்டணமாக இருந்தது. ஆனால், இன்று லட்சங்களிலும், கோடிகளிலும் கல்விக்கட்டணம் செலுத்தி மருத்துவம் படிக்க வேண்டியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்விக்கடன் வாங்கித் தான் படிக்கிறார்கள். அந்தக் கடனை அடைப்பதற்காகவும், குடும்பச்சுமையைத் தாங்குவதற்காகவும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். பகல் டியூட்டி, நைட் டியூட்டி என இரண்டையும் சிலர் சேர்த்துப் பார்க்கிறார்கள். இரவில் எந்த நேரத்தில் அழைப்பு வந்தாலும் மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்.
போட்டிகள் நிறைந்த மருத்துவ உலகில் நவீன விஷயங்களைப் படித்துப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் வேறு. புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் போதிய இயக்கம் இருப்பதில்லை. இதனால் உடல் பருமன், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் வந்துவிடுகின்றன.
அடிக்கடி கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள நேரிடும்போது பலமான விருந்துகளாலும் மருத்துவர்கள் பருமனாகிவிடுகிறார்கள். மேலும், சரியான நேரத்துக்கு சாப்பாடு, தூக்கமின்றி மன அழுத்தம் அதிகரித்து காணப்படுவதும் அதிகமாகி வருகிறது. இது மட்டுமல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவம் பார்ப்பவர்கள் அதிக நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனாலும் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
இன்னொரு பக்கம் மருத்துவர்கள் எண்ணிக்கையிலும் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மாதாந்திர இலக்கு போன்ற வித்தியாசமான பணிச்சுமைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் போக, நோயாளிகளின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் மருத்துவர்களுக்கு கூடுதல் மனச்சுமை வேறு.
கடந்த நான்கைந்து வருடங்களில் 45-லிருந்து 60 வயதுக்குட்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பது அதிகரித்திருக்கிறது. மக்களைக் காப்பாற்றுகிறவர்கள் மருத்துவர்கள். இப்போது மருத்துவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசரம் ஏற்பட்டிருக்கிறது’’ என்கிறார் கவலையுடன்!
Average Rating