எதனோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?(மருத்துவம்)
“தற்கால மனிதர்களின் இயந்திரத்தனமான வாழ்க்கை நடைமுறையில் உணவு வகைகள் மற்றும் உணவு அருந்தும் நேரம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உணவு என்பது உடலைக் காக்கவும், வளர்க்கவும், பல்வேறு தொழில் புரியவும் அவசியம். எனவே முரண்பாடான உணவு முறை மற்றும் காலந்தவறி உண்ணுவதால் பல நோய்கள் உண்டாகும் நிலை ஏற்படலாம். உணவு நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் நோய்கள் வராமல் தவிர்க்கலாம்’’ என்கிறார் சென்னை சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை மருத்துவர் பிரீத்தா.
உணவு உண்ணும் நேரம் உழைப்பாளிகளும் உடல் திடகாத்திர சரீரமுள்ளவர்களுக்குமான 3 வேளை உணவை…
* காலை உணவை 7 முதல் 10 மணிக்குள்ளும்,
* மதிய உணவை 12 மணி முதல் 1 மணிக்குள்ளும்,
* இரவு உணவை 7 மணி முதல் 9 மணிக்குள்ளும் உண்ண வேண்டும்.
மாலை நேரத்தில் தானிய வகைகள் கொண்ட சிற்றுண்டிகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு அறுசுவையுடைய உணவுகளை நன்றாக சமைத்து அளவுடன் அருந்தினால் ஏழரை மணி நேரத்திற்குள் பூரணமாக ஜீரணமாகும். அவ்வாறு ஜீரணமாகும் சமயத்தில் எளிதில் ஜீரணமாகாத மந்தத் தன்மை உண்டாக்கும் பல்வேறு துரித உணவுகளை (ஃபாஸ் புட்) அருந்தினால் அஜீரணம் ஏற்படும்.
எனவே, உணவு உண்ணும் காலத்தை அறிந்து அதனை சரியாக பின்பற்றினால் நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம். தினசரி வாழ்க்கையில் திடீரென தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும். நமக்கு காரணம் புரியாது. நன்றாக யோசித்துப் பார்த்தால், உடலுக்கு ஒத்துக் கொள்ளாத எதையாவது சாப்பிட்டிருப்போம். ஏனெனில், நாம் உண்ணும் உணவு அனைத்துமே மூலிகை வகையைச் சேர்ந்தது. இதில், எதனோடு எதைச் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.
ஒரு சில உணவுகளோடு ஒருசிலவற்றைச் சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை மற்றும் விஷத்தன்மையை ஏற்படுத்தும். அவற்றிற்கு சில உதாரணங்கள்… இவற்றை சேர்த்து உண்டால் விஷமாக மாற அதிக வாய்ப்புள்ளது. எனவே, நீக்கிக் கொள்ளு தல் நன்மையை தரும். அனைத்துப் பொருட்களிலும் சிறிதளவு நஞ்சும் உண்டு. அதனை நீக்குவதன் பொருட்டு அதனுடைய எதிர் பொருட்களால் நஞ்சினை நீக்கி நற்குணமுள்ள பொருட்களோடு உண்ண வேண்டும்.
உதாரணமாக… குறிப்பிட்ட சில உணவு பொருட்களை உண்ணும்போதுமயக்கம், வயிற்றுவலி, ஒவ்வாமை போன்ற குறிகுணங்கள் ஏற்படலாம். இதனை தவிர்க்க அதன் எதிர் பொருட்களை அறிந்து சேர்த்து சாப்பிட வேண்டும். நிலக்கடலையை வெல்லம் (கருப்பட்டி) சேர்த்து சாப்பிட வேண்டும். அதுபோல பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யுடனும், கரும்புச் சாறை சிறிதளவு மிளகாய்ச் சாறுடன் அருந்த வேண்டும்.
மேலும் உணவின் குணங்களையும் நன்மைகளையும் ஆராய்ந்தவர்கள், உணவின் தன்மைகள் மாறுபட்டு தீங்கு விளைவிக்காமல் இருக்க உணவுப் பொருட்களுடன் மிளகு, மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு, ஏலம், வெந்தயம், பூண்டு முதலிய உணவுப் பொருட்களை முறைப்படி சேர்த்து சமைத்து உண்டு நலம் பெறுவார்கள் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
* ஏலம் – இனிப்பு வகைகளுக்கும் சேர்க்கலாம்.
* மஞ்சள் – இனிப்பு தவிர மற்ற அனைத்துப் பொருட்களிலும் பொடித்து சேர்க்கலாம்.
* சீரகம் – முக்கனிகளாலும் பிறவற்றாலும் ஏற்படும் மந்தம் நீக்கும்.
* பெருங்காயம் – பருப்பு வகைகளின் குற்றங்களை நீக்கப் பயன்படுத்தப்படும்.
* சுக்கு – எருமைத் தயிர், கிழங்கு வகைகள் இவற்றின் குற்றங்களை நீக்கப் பயன்படுத்தப்படும்.
* வெந்தயம் – கார்ப்பு சுவையுள்ள வைகளின் குற்றங்களை நீக்கும்.
* பூண்டு – கிழங்கு, பருப்பு வகைகளின் குற்றங்களை நீக்கப் பயன்படுத்தப்படும். (உபயோகப்படுத்தும் முன் தோலையும் முளையையும் நீக்க வேண்டும்.)
* மிளகு – எல்லாப் பொருட் களின் தீங்குகளை நீக்கக் கூடியது.
* பச்சை மிளகாயை பயன் படுத்தும்போது கொத்துமல்லிக் கீரையை சம அளவு சேர்ப்பது நலம் தரும்.
* தேனையும், நெய்யையும் சம அளவில் கலந்து சாப்பிட்டால் நஞ்சாகிவிடும். எனவே, இவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் சாப்பிட வேண்டும்.
* தயிர், மோர் சாப்பிட்ட உடனேயே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது, சேர்த்தும் சாப்பிடக்கூடாது.
* பழங்களை எப்போதும் கடித்து சாப்பிட வேண்டும். சாப்பாட்டோடு சேர்த்து சாப்பிடும்போது முழுப் பலனும் கிடைக்காது.
* காய்கறிகளுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடக்கூடாது.
* அசைவ உணவான மீன், இறைச்சி, கருவாடு சாப்பிடும்போது பால், தயிர், மோர் சாப்பிடக்கூடாது, மீறி சாப்பிட்டால் வெண்மேக நோய் போன்ற நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.
* உடல் பருமனானவர்கள் கோதுமை உணவையும், உடல் மெலிந்தவர்கள் புழுங்கல் அரிசி சாதத்தையும் சாப்பிடுவது நல்லது.
* மூச்சிரைப்பு, அதாவது ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் மற்றும் சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி போன்றவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது.
* காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கக்கூடாது. குளிர்ந்த தண்ணீர் அல்லது சாதம் வடித்த நீர் குடித்துவிட்டு பின்னர் குடிக்கலாம்.
* மாதவிலக்கு நேரங்களில் கத்திரிக்காய், எள், அன்னாச்சிப்பழம், பப்பாளிப்பழம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.
* கோதுமையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. மேற்கூறிய உணவு முறைகளை பின்பற்றுவதனால் பல்வேறு நோய்கள் மற்றும் உணவினால் வரும் நஞ்சு நிலைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
Average Rating