கத்தோலிக்கத் திருச்சபையும் பாலியல் குற்றங்களும்!!(கட்டுரை)

Read Time:13 Minute, 57 Second

நகைச்சுவைகளில், கரும் நகைச்சுவை (dark comedy) என்றொரு பிரிவு இருக்கிறது. அந்நகைச்சுவையைப் பார்ப்போர் அல்லது கேட்போரை, சங்கடப்படுத்தும் வகையிலான நகைச்சுவையாக அது அமையும். அப்படியான நகைச்சுவை வகைகளுக்குள், கத்தோலிக்கத் திருச்சபையின் கீழுள்ள தேவாலயங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களைப் பயன்படுத்தி, நகைச்சுவைகளைக் கூறுவோர் இருக்கிறார்கள்.

நகைச்சுவை என்று வரும்போது, இருக்கும் விடயத்தை மிகைப்படுத்துவது தான் நகைச்சுவை. ஆகவே, கத்தோலிக்கத் திருச்சபை தொடர்பான கரும் நகைச்சுவைகளில், தேவாலயங்களுக்குச் செல்லும் ஒவ்வொரு சிறுவனும், பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகிறான் என்ற வகையிலேயே, அந்நகைச்சுவைகள் அமைந்திருக்கும்.

கரும் நகைச்சுவைகளை விரும்பாதோர், “ஒவ்வொரு சிறுவனும் அவ்வாறு பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகிறான் என்று சொல்வது, தவறுகளே செய்யாத பாதிரியார்களைப் பிழை சொல்வது போன்றாகும்” என, விமர்சனங்களை முன்வைப்பதுண்டு. நகைச்சுவை என்றாலே, மிகைப்படுத்துவது தான் அதன் முக்கிய கூறு என்றாலும், இப்போது திரும்பிப் பார்க்கும் போது, அந்நகைச்சுவைகளில் உண்மையிலேயே மிகைப்படுத்தல் காணப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது.

ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பாதிரியார்கள், 1,000க்கும் மேற்பட்ட சிறுவர்களை, பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியிருந்தனர் என, அண்மையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அம்மாநில சட்டமா அதிபரால், 18 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்தத் துன்புறுத்தல்களை மறைத்து வைப்பதற்கு, கத்தோலிக்கத் திருச்சபையின் பிரிவுகள் பணியாற்றின என்பது, முக்கியமான குற்றச்சாட்டாகும்.

திருச்சபை மீது முன்வைக்கப்படும், முதலாவது பாலியல் குற்றச்சாட்டு இதுவன்று; இதுவே கடைசியானதாகவும் இருக்கப் போவதில்லையென்பது தெளிவு.

கத்தோலிக்கத் திருச்சபையின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள், பல்வேறு தடவைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 2000களில், இது தொடர்பான செய்திகள் அதிகரித்திருந்தன. அத்தசாப்தத்தின் ஆரம்பத்தில், ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகையின் தொடர்ச்சியான செய்தி வெளியீடுகள், பின்னர் ‘பொஸ்டன் குளோப்’ பத்திரிகையால் புலிட்ஸர் விருது வெற்றிகொள்ளப்பட்ட செய்தியறிக்கைகள், அதன் பின்னர் பி.பி.சி ஊடகத்தின் புலனாய்வு அறிக்கைகள் ஆகியன, முக்கியத்துவமிக்கன. இதில், பி.பி.சி தவிர்ந்த ஏனைய இரண்டும், ஐ.அமெரிக்காவை மய்யப்படுத்திய அறிக்கைகளாகும். இந்தியாவைப் பற்றிய செய்தியிடல்கள் அவ்வப்போது வெளிவந்திருந்தாலும், மேலே குறிப்பிட்ட 3 சந்தர்ப்பங்கள் போன்று, உலகளாவிய கவனத்தை அவை ஈர்த்திருக்கவில்லை.

எனவே தான், கத்தோலிக்கத் திருச்சபை தொடர்பான விமர்சனங்கள், மேற்கத்தேய நாடுகளில் எழுமளவுக்கு, இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் எழுவது குறைவானது. கிறிஸ்தவ மதக்குழுக்கள் மீது, இலங்கை போன்ற நாடுகளில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, சலுகைகளுக்காக மதமாற்றத்தில் ஈடுபடுமாறு ஏனையோரைத் தூண்டுதல் ஆகும்.

ஆனால், ஏனைய மதங்களைப் போன்று (குறிப்பாக, இலங்கையில் பௌத்தம்; இந்தியாவில் இந்து), கிறிஸ்தவ மதமும், அரச, அரசாங்கக் கட்டமைப்புகளில் தாக்கம் செலுத்தியே வந்திருக்கிறது. இலங்கையில் இன்று காணப்படுகின்ற பழமைவாய்ந்த பாடசாலைகளில் அநேகமானவை, கிறிஸ்தவ மதம் சார்ந்த சபைகளாலேயே நிறுவப்பட்டிருந்தன. அவற்றில் அநேகமானவை, அரச கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், மிஷனரிகளின் தாக்கங்கள் இன்னமும் காணப்படுகின்றன என்பது உண்மையானது.

இப்படியான பின்னணியில் தான், கத்தோலிக்கத் திருச்சபையின் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய கவனம், இலங்கை போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படாமை வியப்புக்குரியது, அத்தோடு கவலைக்குரியது. இது, எந்தவொரு மதம் பற்றிய விமர்சனமும் கிடையாது. மாறாக, அந்த மதத்தைக் கொண்டுசெல்லும் நபர்கள் பற்றிய விமர்சனமே ஆகும். நாத்திகக் கொள்கைகளைக் கொண்டோர், “இயேசு கிறிஸ்துவைப் பற்றி எனக்குப் பிரச்சினையில்லை. அவரைப் பின்பற்றுபவர்கள் பற்றித் தான் எனக்குப் பிரச்சினை” என்று, நகைச்சுவை கலந்த விமர்சனத்தை முன்வைப்பார்கள்.

ஏனென்றால், நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் உருவாகும் போது தான், அவற்றால் உண்டாக்கப்படும் பிரச்சினைகளும் அதிகமாக எழுகின்றன. கத்தோலிக்கர்கள் பின்பற்றும் பரிசுத்த வேதாகமம் தொடர்பான விமர்சனங்களைப் பலரும் கொண்டிருந்தாலும், சிறுவர் பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் விதமான கருத்துகள் அதில் இருக்கின்றன என, எவருமே குறிப்பிடுவதில்லை. ஆகவே, கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் மேற்கொள்ளப்படும் இக்குற்றங்கள் அனைத்துமே, பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் அன்றி, கத்தோலிக்கத் திருச்சபை என்ற நிறுவனத்தால் ஊக்குவிக்கப்படும் வகையிலான குற்றங்களாகவே உள்ளன.

“திருச்சபை ஊக்குவிக்கிறது” என்ற வார்த்தைப் பிரயோகம், சிலருக்குக் கடினமானதாகத் தோன்றலாம்; சிலருக்குத் தவறானதாகத் தெரியலாம்; சிலருக்கு, அவர்களுடைய மதத்தை அவமானப்படுத்துகின்ற ஒன்றாகத் தெரியலாம். ஆனால், திருச்சபையின் கீழான பாலியல் குற்றங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்டனவாக இருக்கின்றன என்பது தான், இதுவரை காலமும் நாம் பார்த்துவந்த உண்மையாக இருக்கிறது.

காலங்காலமாக, திருச்சபை சம்பந்தமான பாலியல் குற்றங்கள், திருச்சபை என்கின்ற நிறுவனத்தின் உயர்மட்டத்தில், தொடர்ந்தும் மூடிமறைக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதை நாம் பார்க்கிறோம். அதேபோல், குறிப்பிட்ட பிராந்தியத்தில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட ஒருவர், திருச்சபையிலிருந்து வெளியேற்றப்படுவதில்லை. மாறாக, அவ்விடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மாற்றப்படுகிறார். இலங்கையின் வடக்குப் பகுதியில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை, தெற்கில் முக்கிய பொறுப்பில் அமர்த்துவது, எந்தளவுக்கு நியாயமானது? அது நியாயமற்றது என்றால், குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் ஒருவர், ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மாற்றப்படுவது மாத்திரம் எந்தளவுக்கு நியாயமானது?

மேற்கத்தேய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில், வன்புணர்வுகளை முறையிடுவது குறைவானது. அதனால் தான், கீழைத்தேய நாடுகளில் காணப்படும் வன்புணர்வு தொடர்பான தரவுகளைப் பெற்றுக் கொள்வதில், இன்னமும் சிரமம் நிலவுகிறது. அப்படியிருக்கும் போது, கத்தோலிக்கத் திருச்சபைகளின் கீழுள்ள நிறுவனங்களில், கீழைத்தேய நாடுகளில் எந்தளவுக்குத் தவறுகளும் குற்றங்களும் இடம்பெற்றிருக்கலாம் என்பதை, உறுதியாக எவ்வாறு கண்டுபிடிப்பது?

இதில் மேலும் கவலைதரும் விடயமாக, கீழைத்தேய நாடுகளில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் திருச்சபையின் நபர்கள், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கவலையடைவதாகவோ அல்லது அவற்றைப் பற்றிச் சிந்திப்பதாகவோ தெரியவில்லை.

கருக்கலைப்பு உரிமைகள் பற்றியோ அல்லது முன்னேற்றகரமான ஏதாவது விடயங்கள் தொடர்பிலோ கலந்துரையாடல்கள் இடம்பெறும் போதெல்லாம், உடனடியாகவே அவற்றைப் பற்றி அறிக்கை விடுகின்ற கர்தினால் மல்கொம் ரஞ்சித் போன்றவர்கள், தங்கள் நிறுவனக் கட்டமைப்பின் கீழ் இடம்பெறுகின்ற இவ்வாறான குற்றங்களைப் பற்றி வாய் திறப்பதில்லை.

இலங்கையில் மரணதண்டனையை மீளவும் அமுல்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் எழுந்தபோது, உடனடியாகவே, யாரும் கேட்காமலேயே, அதற்கான ஆதரவை, கர்தினால் ரஞ்சித் வழங்கியிருந்தார். இத்தனைக்கும், அண்மைக்காலப் பாப்பரசர்களில் ஓரளவுக்கு முற்போக்கானவராகக் கருதப்படும் பாப்பரசர் பிரான்ஸிஸ், மரணதண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டையே, தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார்.

அதேபோல், அண்மையில் கூட, “திறந்த பொருளாதாரம், இலங்கை விழுமியங்களை அழித்துவிட்டது” என, கர்தினால் ரஞ்சித் குறிப்பிட்டிருந்தார். வெளிப்படையாகப் பார்க்கும் போது, பொருளாதாரம் பற்றிய விமர்சனம் போல் காணப்பட்டாலும், “இரண்டு பெற்றோர்களும் பணிக்குச் செல்வதால், சிறுவர்கள் தனித்துவிடப்படுகிறார்கள்” என்று ஆரம்பித்து, தாய்மையைப் பற்றி வரைவிலக்கணம் கொடுத்து, அவரது விமர்சனம் சென்றிருந்தது.

கர்தினால் ரஞ்சித்தின் பிற்போக்கான கருத்துகளும் செயற்பாடுகளும் ஒருபக்கமாக இருக்க, தங்கள் நிறுவனக் கட்டமைப்புக்குள் காணப்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்குமளவுக்கு, இவர்களது செயற்பாடுகள் அமையுமா என்பது தான், இருக்கின்ற கேள்வியாக இருக்கிறது. எனவே, தங்களுடைய நிறுவனக் கட்டமைப்புக்கு வெளியே இவ்வாறானவர்கள் தெரிவிக்கின்ற கருத்துகள், எந்தளவுக்கு முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டியிருக்கின்றன என்பதையும் ஆராய வேண்டும். ஒரு பக்கமாக, மாபெரும் குற்றத் தொழிற்சாலையொன்றை நடத்திக் கொண்டு, மறுபக்கமாக, ஊருக்கு உபதேசம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதும், அவ்வுபதேசங்கள் முக்கியமானவையாக எடுத்துக் கொள்ளப்படுவதும், இவ்விடயத்தில் இன்னமும் ஆழமான சிந்தனையை நாம் செலுத்த வேண்டியிருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்மாவுக்கு ராக்கி கட்டிய மகள்… !!(சினிமா செய்தி)
Next post நகை மாட்டும் ஸ்டாண்டா பெண்?!!(மகளிர் பக்கம்)