அழகான கூடு!!( மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 11 Second

வீட்டிற்கு தேவையான சோஃபா செட் அமைப்பு என்று எடுத்துக் கொண்டால் இன்று எத்தனையோ விதவிதமான செட்டிங்குகள் வந்து விட்டன. முழுவதும் தோல் மூலம் செய்யப்பட்ட சோஃபாக்கள் உறுதி வாய்ந்தவை. விலையும் அதற்குத் தகுந்தாற்போல் அமையும். அதிலும் பாதி லெதர், சிந்தடிக், சாட்டின் வெல்வெட் குஷன் என பல வகைகள் வந்து விட்டன. அவரவர் பட்ஜெட்டுக்கு தகுந்த படி வாங்க வசதி கொண்டதாய் கிடைப்பது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம்.

அது போல் ஃபர்னிச்சர் ஷோரூம் போனால், டிராயிங் ரூம் ஃபர்னிச்சர், டைனிங் ஹால் ஃபர்னிச்சர், பெட்ரூம் ஃபர்னிச்சர் என தனித்தனியாக ரெடிமேடாக கிடைக்கின்றன. அவற்றிலும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தரம், உறுதி, நீண்ட உழைப்பு இவற்றைப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இவற்றை விட எளிமையான பாரம்பரிய பொருட்களாலும் வீட்டை அழகாக்கலாம். அது தான் மூங்கில் ஃபர்னிச்சர்.

சில பெண்கள் விலையுயர்ந்த பட்டுப்புடவை உடுத்தியிருப்பர். ஆனால் அதைவிட அருகில் பருத்திப் புடவை உடுத்தியிருப்பவர் அழகாக தெரிவார். இங்கே புடவையின் விலை முக்கியமில்லை. உடுத்தும் விதத்தில் அது பட்டுப்புடவையை விட நன்றாக இருந்திருக்கிறது. அதுதான் விஷயம். அப்படிப்பட்டவைதான் பிரம்பு நாற்காலிகளும். அந்தக் காலம் முதல் இப்பொழுது வரை பிரம்பினாலான (மூங்கில்) ஃபர்னிச்சர்களுக்குத் தனி மகத்துவம் உண்டு.

அதனால்தான் பெரிய விருந்தினர் மாளிகைகள், பீச் ரிசார்ட்ஸ், வீட்டுத் தோட்டங்கள் போன்ற இடங்களில் நிறைய பிரம்பினாலான ஃபர்னிச்சர்கள் காணப்படுகின்றன. கைகளால் இறுக்கமாகப் பின்னப்படுவதால், இதன் உறுதி அதிகம். நாற்காலிகள் மட்டுமல்லாது, சோஃபா, ஊஞ்சல் முதல் ஸ்டூல் வரை பிரம்பினால் செய்யப்படுகின்றன. மூங்கில் நாற்காலிகள் உறுதியானவை, அழகானவை, பார்வைக்கும் பந்தாவாகத்தான் இருக்கும். பெரிய ஆடம்பரமான பொருட்கள்தான் அழகு என்பதில்லை.

நெருக்கமாக கட்டப்படுவதால் பார்க்கவும் அழகு. வயரால் நெய்யப்பட்ட அல்லது கட்டப்பட்ட சோஃபா செட்டுகளை இன்றும் நிறைய வீடுகளில் காண முடியும். ஒரே ஒரு தடவை வாங்கினால் போதும். ஏதேனும் இழைகள் அறுந்தால்கூட சுலபமாக கட்டித் தருவர். மேலே நம் இஷ்டத்திற்கு அழகிய குஷன்கள் போட்டு அலங்கரித்துக் கொள்ளலாம். இதை இடம் மாற்றிப் போடுவது சுலபம். அதிகம் கனமில்லாதது.

ஹாலில் போடாவிட்டாலும், சிட் அவுட், பால்கனி போன்ற இடங்களில் இடவசதியைப் பொறுத்து இரண்டு அல்லது நான்கு நாற்காலிகள் போடலாம். அமர்ந்து பேப்பர் படிக்க வசதியாய் இருக்கும். நடுவில் கண்ணாடி டாப் ெகாண்ட பிரம்பு சென்டர் டீப்பாய் போடலாம். அதன் மீது மலர்க்கொத்து வைக்கலாம். பழமையில் ஆர்வம் கொண்ட பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் இன்றும் பிரம்பு ஃபர்னிச்சர்களை பார்க்க முடியும். நிறைய தனி பங்களாக்களில் வீட்டின் வாயிற்புறம் அல்லது வராண்டாக்களில் இவற்றை நாம் பார்க்கலாம். சாதாரண சோஃபா செட்டிங் போன்றே இவற்றையும் நம் இட வசதிக்கேற்றபடி 3 + 2 மற்றும் 2 + 2 என எப்படி வேண்டுமோ அப்படிப் போட்டுக்

கொள்ளலாம். சுவர் நிறம் மற்றும் தரை நிறங்களுக்கேற்ப குஷன் போட்டு பார்க்க சாதாரண மூங்கில் சோஃபாகளையும் ரிச்சாகக் காட்டி விடலாம். டைனிங் டேபிள் கூட அதிக கனமேயில்லாமல் பார்க்க நேர்த்தியான முறையில் பின்னப்பட்டு மிக அழகாகக் கிடைக்கின்றன. நல்ல விசேஷ நாட்களில் வாழை இலை போட்டு கூட சாப்பிடும் அளவுக்கு பாந்தமாகக் காணப்படுகின்றன.

சொந்த வீடாக இருந்தால், கனமான பர்னிச்சர்களை ஒரே இடத்தில் நிரந்தரமாகப் போட முடியும். அடிக்கடி வேலை மாற்றி வெளியூர் செல்பவர்களுக்கும், வீடு மாற்றுபவர்களும் சுலபமான முறையில் எடுத்துப் போட வசதியானவை பிரம்பு நாற்காலிகள் மற்றும் சோஃபா செட்டுகள். குழந்தைகள் அறையில்கூட மோடா என்று சொல்லப்படும் ஸ்டூல் போன்ற இருக்கைகளை பயன்படுத்தலாம். அதிக இடம் அடையாமல் இருக்கும். குழந்தைகள் அதனை பாழ்படுத்திவிட்டாலும் கூட, மீண்டும் பின்னிக் கொள்ளலாம்.

நிறைய ரிசார்ட் ஹோட்டல்களில் கூட பலவிதமான பிரம்பினாலான பொருட்களை பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். இன்று கூட சிலர் பாரம்பரியம் மாறக்கூடாது என்பதற்காக பிரம்பு கூடைகள், பிரம்பு தட்டுகள் பயன்படுத்துவதை காணலாம். விசேஷ நாட்களில் மற்றும் வீட்டில் நடைபெறும் சடங்கு, சம்பிரதாயங்கள் போன்றவற்றிற்கு பிரம்பிலான தட்டு, கூடைகளை பயன்படுத்துவதை காணலாம். எத்தனையோ ஆடம்பரப் பொருட்கள் தினம் தினம் வந்தாலும், பாரம்பரியம் மாறாத பொருட்கள் பிரம்பினாலானவை.

அதற்கென தனி மகத்துவமும் உண்டு. நல்ல வண்ணம் பூசப்பட்டு அழகான டிசைன்களில் பிரம்பு கூடைகள், கப் போன்ற வடிவில் bowl போல பல மாடல்களில் கிடைக்கின்றன. பழங்கள், காய்கள் காற்றோட்டமாக வைக்க ஏதுவாகக் கிடைக்கின்றன. இதை வாங்கி நாம் பரிசுப் பொருளாகக் கூட தர முடியும். வெளிநாடுகளில் தங்கள் செல்லப் பிராணிகள் படுக்க ஒரு சாதாரண கூண்டை தயார் செய்யாமல் அதிலும் கலா ரசனையுடன் அமைப்பார்கள்.

அது போல இப்போது நம் நாட்டிலும் கிடைக்கிறது. பிரம்பில் அழகிய மரம் போன்ற அமைப்பு. 2 அடி உயரத்திற்கு நெருக்கமாக பின்னப்பட்டிருக்கும். வட்டவடிவில் நடுவில் அழகிய குஷன், மீண்டும் நடுபாகத்திலிருந்து தண்டுபோல் பின்னப்பட்டு மீண்டும் ஒரு அடிக்கு மேல் கூடை போன்று இருக்கை. அந்த இருக்கையும் குஷனால் மூடப்பட்டிருக்கும். ஜோடிப்பூனைகள் போன்றவற்றிற்கும் இந்த அமைப்பு உகந்ததாக இருக்கும்.

குழந்தைகள் அறைக்கு இடம் மிச்சப்படுத்துவதற்காக நாம் பங்க் பெட் அமைப்பை (Bunk Bed) பயன்படுத்துவோம். அதேபோல, நம் செல்லப் பூனைகளுக்குக் கூட இப்படியொரு அமைப்பு என்று யோசித்தால் எவ்வளவு ஆச்சரியம் பாருங்கள். இதை பிளாஸ்டிக் அல்லது ேவறு மெட்டலில்கூட செய்யலாம். ஆனால் பிரம்பினால் செய்யப்பட்டவை என்றால் அவ்வளவு நேர்த்தியாகவும், உறுதியாகவும் இருக்கும்.

நம் பாரம்பரியம் தெரிந்தோ, தெரியாமலோ வெளிநாட்டினர் நிறைய பிரம்பினாலான நாற்காலிகளை மிகுதியாக பயன்படுத்துகின்றனர். வீட்டின் முன்பக்கம் தோட்டத்தில் அங்கங்கே பிரம்பு நாற்காலிகளைப் பார்க்கலாம். ஒரு மடக்கி மூடும் குடை போன்ற அமைப்பையும் தந்திருப்பார்கள். மாலை நேரங்களில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி உண்டு மகிழ்ந்திருப்பர். விடுமுறை நாட்களில் விருந்தினருடன் பொழுதைக் கழித்து மகிழ்வர்.

தோட்டத்திற்கு போடும் விளக்குகள் பல இடங்களிலும் செட் செய்திருப்பர். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை. மழையோ-வெயிலோ சமாளிக்கும் விதத்தில் அமைத்திருப்பர். கோடைகாலங்களில் பெரும்பாலும் இந்த அமைப்பினால் மிகவும் ரிலாக்ஸான மனநிலையை உணர முடியும். நிறைய பிரம்பினாலான பூந்தொட்டிகள் வைக்கக்கூடிய ஸ்டாண்டுகள் மற்றும் கூடைகள் போன்ற நிறைய வடிவங்கள் கிடைக்கின்றன. அதிலேயே பெயின்ட் செய்யப்பட்டவையும் கிடைக்கின்றன.

இல்லாவிட்டாலும் வாங்கிய பிறகு நம் சுவர், தரை இவற்றின் நிறத்திற்கேற்றவாறு பெயின்ட் செய்து கொள்ளலாம். கூடையின் அளவிற்கேற்றபடி பூந்தொட்டியை வாங்கி அதனுள் வைத்துவிடலாம். செயற்கைச் செடிகளோ, பூங்கொத்துக்களோ வைக்கப் போகிறீர்கள் என்றால் கூடைக்குள் அடியில் தெர்மகோல் வைத்து மேலே செயற்கை செடிகளை வைத்து செட் செய்து கொள்ளலாம் அல்லது பிளாஸ்டிக் கப் போல வைத்து அதனுள் தெர்மகோல் வைத்து, நம் இஷ்டத்துக்கு பல்வேறு வண்ணங்களில் பூக்களை சொருகலாம்.

இடையிடையே இலைக் கொத்துக்களை அல்லது செயற்கை கொடிகளை ெசாருகி வைத்து மிக அழகான ஒரு பூந்தொட்டி அமைப்பைத் தரலாம். நம் கற்பனைத் திறனை எங்கெங்கு காட்ட முடியுமோ, அங்கெல்லாம் செலுத்தி நம் இருப்பிடத்தை அழகாக்கலாம். அதிலும் பூக்களுக்குத்தான் எத்தனை மகத்துவம்! அறிந்தோ, அறியாமலோ இப்பொழுது நிறைய வீடுகளில் பிரம்பினால் பின்னப்பட்ட மூங்கில் ஊஞ்சல்கள் காணப்படுகின்றன.

மரத்தினாலான ஊஞ்சல் போடுவதானால், ஹால் ஓரளவு பெரியதாக, ஆடுவதற்கு போதிய இடம் இருக்கும் பட்சத்தில், மேற்கூரை மூலம் கொக்கிகள் பொருத்தப்பட வேண்டும். அருகில் இருக்கும் சுவற்றில் அடிபடாமல், பொருட்கள் மேல் படாதவாறு பயன்படுத்த முடியுமா என்று யோசித்துப் பொருத்த வேண்டும். ஆனால் மூங்கில் ஊஞ்சல் கூடை போன்றும், ஒரு ஓய்வெடுக்கும் நாற்காலி போன்றும் அமைவதால் சிறிய இடங்களில் கூட போடலாம்.

மேற்கூரையில் முன்பே கொக்கிகள் போடப்படாவிட்டால், துளையிட்டு (Drill) செய்து கொக்கி பொருத்திக் கொள்ளலாம். கனமில்லாமல் இருப்பதால், வேண்டாத பொழுது கழற்றி வைக்கலாம். ஹால், பால்கனி, வராண்டா, சிட் அவுட், பெட்ரூம் போன்ற இடங்களில் போடலாம். குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்.

பெரியவர்கள்கூட சிறிது நேரம் அமர்ந்து அன்றாட நிகழ்வுகளை அசை போடலாம். இதே போன்று இரட்டை அமைப்புக் கொண்ட, சோஃபா போன்று காணப்படும் அழகிய ஊஞ்சல்களும் உண்டு. இவற்றை பெரிய பங்களா தோட்டங்கள், பூங்காக்கள், மாடி வீடுகளில் போடலாம். நல்ல மெத்தை போன்று உட்புறம் அமைத்துவிட்டால், சுகமாக உட்கார்ந்து இளைப்பாற முடியும். பெட்ரூம் மிகப் பெரியதாக இருந்தால், அறையின் படுக்கையில்லாத பகுதியில் சிறிய ஊஞ்சல் போடலாம். சாய வசதியாக ஒரு குஷன் போட்டால் போதும். படுக்குமுன், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மன அமைதியோடு உறங்கச் செல்லலாம். எனவே இருப்பதில் மகிழ்ச்சி கொள்வோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்பை காட்டாதே! வரலட்சுமியை கண்டிக்கும் விஷால்!!(வீடியோ)
Next post வீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!!( மகளிர் பக்கம்)