மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்!(மருத்துவம்)

Read Time:13 Minute, 45 Second

‘விளையாட்டு என்பதனைப் படிப்பை கெடுக்கக்கூடிய விஷயமாகவும், பொழுதுபோக்குக்கான அடையாளமுமாகவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், விளையாட்டு என்பது மிகப்பெரிய உடற்பயிற்சி. அதுவும் எண்ணற்ற பலன்களைக் கொண்ட மனமகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி’’ என்கிறார் உடற்பயிற்சி மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தி. உடற்பயிற்சியின் பலன்களையும், அவசியத்தையும் தொடர்ந்து விளக்குகிறார்.

உடல்நலன் மற்றும் மனநலன்

விளையாட்டு என்பது மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனை படைத்தல், பதக்கங்கள் வெல்வதன் மூலமாக இலக்கை அடைதல் ஆகியவற்றுக்கானது மட்டுமே அல்ல. அதேபோல் பலத்த காயங்கள் ஏற்படல், கவனச்சிதறல் போன்றவற்றால் கல்வி தடைபடுவதாக பெற்றோர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான முடிவு. விளையாட்டால் அனைத்து உடல் உறுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, உடல் மற்றும் மனநலன் பேணப்படுகிறது.

நோய்களைத் தடுக்கும் காரணி

தனி நபர் விளையாட்டு, குழு விளையாட்டு ஆகியவற்றில் கலந்து கொள்ளல், ஜிம், யோகாசனம் முதலான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடல் என எதுவாக இருந்தாலும் நம்முடைய உடல் தகுதிக்கு ஏற்ப, பாதிப்புகள் வராமலும், விரைவில் நோய்கள் ஏற்படாமலும் தவிர்ப்பதற்கான முதல் காரணிதான் விளையாட்டுகளும், பயிற்சிகளும் என்பதை அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயம்.

நமது நாட்டில் பெரும்பாலானோர் விளையாட்டுக்களில் பங்கேற்றால் காயங்கள் உண்டாகும் என்ற மனநிலையில்தான் காணப்படுகின்றனர். ஆனால், எல்லா நாடுகளிலும், போட்டிகள் அதிகம் உள்ள, காயங்கள் ஏற்படுவதற்கான விளையாட்டுக்களில் கலந்து கொள்பவர்கள் 5 அல்லது 10 சதவீதம்தான் இருப்பார்கள் என புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

ஓடி விளையாடு பாப்பா

20, 25 வருடங்களுக்கு முன்னர், ஓய்வு நேரம் என்றால் வீட்டிலுள்ள பெரியவர்கள் மகாகவி பாரதியாரின், ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற அறிவுரைக்கு ஏற்ப சிறுவர், சிறுமியரை ‘வெளியே சென்று விளையாடுங்கள்’ என்று அனுப்புவது வழக்கமாக இருந்தது. இன்றைய தலைமுறையினரிடம், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தும் விதம் மாறிவிட்டது. விளையாடுவதால் உடல் நலம் பேணப்படுவதோடு, அறிவாற்றல் வளர வழிவகுக்கும்.

அது மட்டுமில்லாமல் கை, கால்கள், கண், காது போன்ற உறுப்புக்களை ஒருங்கிணைக்கவும் விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் உதவுகின்றன. இயற்கையோடு இணைந்த விளையாட்டுக்கள் மற்றும் பயிற்சிகள் இல்லையென்றால் நம்முடைய மூளை வளர்ச்சி மெல்லமெல்ல பாதிப்புக்கு உள்ளாகும்.

வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொள்ளலாம்

ப்ளே-கிரவுண்டில் ஓடிக்கொண்டிருக்கும் நாம் பந்து எந்த திசையில் வந்து கொண்டிருக்கிறது அதற்கும் நமக்கும் எவ்வளவு தூரம் உள்ளது, எவ்வளவு விரைவாக ஓட வேண்டும், அதை கையால் பிடிக்க வேண்டுமா அல்லது காலால் தடுக்க வேண்டுமா அல்லது எகிறி தடுக்க வேண்டுமா, பால் போகும் திசை, அதை பிடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதையெல்லாம் கண் சிமிட்டும் நேரத்திலோ, இதயம் துடிக்கும் பொழுதினிலோ(Split Second)-டில் முடிவு பண்ண கற்றுக் கொண்டுவிடுவோம்.

எதிரணியினர் பந்தை உதைத்தவுடன், கோல் கீப்பர் இம்மி பிசகாமல் துல்லியமாக பந்தைப் பிடிப்பார். இதுபோன்ற விளையாட்டுப் பயிற்சிகள் எல்லாம் நடைமுறை வாழ்க்கையிலும் நமக்கு உதவி செய்யும். விளையாட்டில் மூளையின் பல பகுதிகளையும் பயன்படுத்தும் தேவை இருக்கிறது. இதனால் அறிவுத்திறன் வளர்ச்சி அடையும். அவற்றைப் பயன்படுத்த தெரிந்தவர்கள் எதிர்பாராதவிதமாக ஏற்படுகிற விபத்துக்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்து கொள்ள கூடிய வாய்ப்புக்களைத் தானாகவே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.

சமயோசித புத்தி

Presence of mind என்று சொல்லப்படுகிற இதனைப் பாடப்புத்தகத்தில் கற்றுக் கொள்ள முடியாது. ஆனால், விளையாடும்போது தானாகவே கற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து விளையாடுவதன் மூலமாக அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வர முடியும். விளையாட்டில் தங்களை நோக்கி வருகிற பந்து அல்லது பேட்டைக் கண்டு தலையை விலக்கி கொள்வோம். போட்டியில் இவ்வாறு நடைபெறுவது சகஜம்.

இதை தொடர்ந்து பயிற்சி செய்தவர்கள் நிஜ வாழ்க்கையில் தங்களை நோக்கி வரக்கூடிய ஆயுதங்களில் இருந்தும் ஒரு நொடியில் யோசிக்காமல் தங்களைக் காப்பாற்றி கொள்ள முடியும். இதை Reflex Action எனக் குறிப்பிடுவோம். விளையாடாமல் ஒருவர் Reflex Action-ஐ பழக்கத்திற்குக் கொண்டு வர முடியாது. இதில் தசைகளும் வலுவடையும், எலும்புகள் உறுதியாவதற்கும் விளையாட்டு பயிற்சிகள் அவசியம்.

காலமாற்றத்தின் கட்டாயத் தேவை

நாம் காட்டில் வாழ்ந்தபோது விலங்கு களைத் துரத்த வேண்டி இருந்தது. அவை நம்மைத் தாக்கும்போது, அவற்றிடம் இருந்து தப்பிக்க வேண்டி இருந்தது. இவை இரண்டும் கட்டாய தேவை. கால மாற்றத்தில் காடுகளை அழித்து, நாட்டை உருவாக்கியபோது உடல் உழைப்பு குறைந்து சுகமாக வாழ வேண்டும் என நினைத்தோம்.

அதற்கேற்றவாறு மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர் என நவீன சாதனங்கள் வந்துவிட்டன. நினைத்த இடங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்ல வாகன வசதிகள் வந்துவிட்டது. இதன் காரணமாக, நம்முடைய தசைகள் விரிந்து, சுருங்கி வேலை செய்வதைக் குறைத்ததுதான் இன்றைக்குப் பல நோய்கள் வருவதற்கு காரணமாகி விட்டது.

கல்வித்திறன் அதிகரிக்கும்

விளையாட்டு என்பது உடல் நலம் மட்டுமில்லாமல், மன நலமும் சார்ந்தது. விளையாடுதல் காரணமாக, மாணவ, மாணவியரின் உள்வாங்கிக் கொள்ளும் திறன் அதிகரிக்கும். விளையாடிய பின்னர் படிக்கும் மாணவ, மாணவியர் 3 மணி நேரத்தில் படிப்பதை அரை மணிநேரத்தில் படித்துவிடுவார்கள். மன அழுத்தத்தைக் குறைத்து ரிலாக்ஸ்சேஷனைத் தருவதால் எல்லோருக்கும் விளையாட்டு அவசியம்.

மைதானங்களே இன்று தேவை

உலக சுகாதார மையம்(World Health Organisation) நடத்திய ஓர் ஆய்வின் முடிவில், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் உடல் நலக் குறைபாட்டால் பெற்றோருக்கு முன்னர் இறப்பார்கள் எனக் கண்டறியப்பட்டது அதிர்ச்சி தந்தது. இதைத் தவிர்க்க, மருத்துவமனைகள் தேவையில்லை. விளையாட்டு மைதானங்கள்தான் இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. அதிலும், குறிப்பாக, உள்ளரங்கு விளையாட்டுத் திடல்கள்தான் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஏனென்றால், நகரங்கள் மட்டும் இல்லாமல், கிராமப்புறங்களிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

2020-ம் ஆண்டுக்குள் உலகளவில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களில், 60% இந்தியாவில் இருப்பார்கள்; சர்க்கரை நோயாளிகள் 50% இருப்பார்கள் என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இது மெத்தனப்போக்கால் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவு. இதைக் குறைக்காவிட்டால் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு மற்றும் உடல் பருமன் போன்றவை அதிகரிக்கும். இந்நிலை நீடித்தால் தற்போது உள்ள மருத்துவமனைகள் கண்டிப்பாக போதாது. இந்த நோய்கள் எல்லாம் போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தால், நாமே வரவழைத்துக்கொண்ட நோய்கள். இந்த ஆபத்தான அவல நிலையை நம்மால் நிச்சயம் தவிர்க்க முடியும்.

பெற்றோரே கவனியுங்கள்

‘பள்ளிக்குச் செல்லுங்கள்: டியூஷனுக்குப் போங்கள்’ எனக் குழந்தைகளை அறிவுறுத்துவதுபோல், ‘மாலை நேரங்களில் விளையாட செல்லுங்கள்’ எனவும் சொல்லித் தர வேண்டும். இன்றைய தலைமுறையினர், ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் போதும் எனக் கருதுகின்றனர். இது கொஞ்ச நேரம்தான் நீடிக்கும். இந்த நிலை மாறாவிட்டால், மருத்துவமனைகளில் நாமும் ஓர் அங்கமாக மாறிவிடுவோம்.

வாழ்க்கை முறை மாற்றங்களால், நமது உணவுப்பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. கார்போஹைட்ரேட், சர்க்கரை அதிகம் உள்ள அரிசி வகை உணவுகளைத்தான் அதிகளவில் உண்கிறோம். அதைத் தவிர்த்து குதிரை வாலி, கம்பு, கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பயன் தரும். பசித்த பின் சாப்பிட வேண்டும். இவ்விடத்தில், வள்ளலாரின் ‘பசித்திரு’ என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விவேகானந்தர் சொன்னது…

‘தோட்டத்தில் மண்வெட்டி, கடப்பாரைக் கொண்டு வேலை செய்பவர்களைவிட கால்பந்தாட்டம் ஆடுபவர்கள் நேரடியாக சொர்க்கம் அடைவார்கள்!’ – என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு; இதன்மூலம், ஆன்மிகமும் விளையாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை உணரலாம். நோய்கள் வராமல் தடுக்க ஃபிட்னெஸ் என்ற மெடிசின் அவசியம். இதை பின்பற்றாத இடத்தில் உலகப்போரில் உயிரிழந்தவர்களைவிட, அதிகமாக உயிரிழக்க நேரிடும்; இது அனைவருக்கும் மிகப்பெரிய சவால்.

நோய்கள் வந்த பின்னர், பார்த்து கொள்ளலாம் என்பது அறிவீனம். குழு மனப்பான்மை வளரும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் கையில்தான் உள்ளது. அதாவது, நோய் வராமல் தடுத்து, ஆரோக்கியமாய் வாழ்வதற்கு பிறரின் உதவி தேவையில்லை. உடலுக்குத் தேவையான உழைப்பு; மனதுக்குத் தேவையான அமைதி என ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத எல்லா மருந்துகளும் நமது உடலில் உள்ளன. விளையாட்டின் மூலம் குழு மனப்பான்மையும் வளரும். கிரிக்கெட்டோ, ஷட்டில்காக் நமக்குத் தெரிந்த, நமக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டு விளையாடுவதை வழக்கமாகக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு….!!(மகளிர் பக்கம்)
Next post உலகின் தலைசிறந்த சொல்!(மருத்துவம்)