உயிர் காக்கும் சிகிச்சைக்குப் பணமில்லையா? வந்துவிட்டது ஆன்லைன் க்ரவுட் ஃபண்டிங்!!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 15 Second

இன்றையச் சூழலில் மனிதர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது புற்றுநோய் எனும் கொடூரம். குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையுமே இந்நோய் அதிகம் தாக்கி வருகிறது. உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சூழலியல் மாற்றத்தால் இந்நோய் அதிகமாகப் பரவி வருகிறது. இந்நோய்க்கான மருத்துவச் செலவு பல லட்சங்களை விழுங்கிவிடும். ஏழை எளிய மக்களால் இச்செலவை தாக்குப்பிடிக்க முடியாமல் பலர் மரணித்துப் போய்விடுகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகவே ஆன்லைன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது மிலாப் என்னும் கூட்டு நிதித் திரட்டும் தளம். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு எவ்வாறு ஆன்லைன் மூலம் உதவுகிறார்கள் என்பது குறித்து விளக்குகிறார் அத்தளத்தின் தலைவர் அனோஜ் விஸ்வநாதன்.

‘‘ இந்திய மருத்துவ ஆய்வு அமைப்பு வெளியிட்ட புற்றுநோய் பதிவுகளின்படி இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2020ல் 25% அதிகரிக்கும் என்று தெரிகிறது. நாட்டில் அதிக இறப்புகளுக்கான முக்கியக் காரணியாகப் புற்றுநோய் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியடைந்து வருகின்றனர். சராசரியாக ஒவ்வொரு நாளும் 1300 இந்தியர்கள் புற்றுநோயால் இறக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகத்தான் புற்றுநோய் பாதுகாப்பு ஒரு காப்பீட்டுப் பொருளாக உருவெடுத்துள்ளது. இதற்கு முன்பு புற்றுநோய்ச் சிகிச்சைக்கான செலவுகளுக்கு நோயாளிகள் முதலில் தங்கள் சேமிப்புகளையும், பிறகு சொத்துக்களை விற்றும் சமாளிப்பார்கள். அதுவும் போதவில்லை என்றால், கடன் அல்லது நிதி உதவிக்கு சமூகங்கள், குழுக்கள், நண்பர்கள் மற்றும் உறவுகளை நாடுவார்கள். இருப்பினும் மருத்துவச் செலவுகளுக்குப் போதிய நிதி இல்லாத காரணத்தால் சிகிச்சையைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிர்பந்தமும் பலருக்கு ஏற்படுவதுண்டு.

எதுவும் செய்ய இயலாமல் கண் எதிரிலேயே நமக்கு வேண்டியவர் வலியில் துடித்துக் கொண்டு இறப்பை நோக்கிச் செல்வதைக் காண்போரும் உண்டு. இந்தியச் சுகாதாரப் பாதுகாப்புத் துறை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 பில்லியன் டாலர் செலவு செய்கிறது. இவற்றில் 60 பில்லியன் டாலர் சிறுசேமிப்பு, கடன், சொத்துக்களை விற்றல், நண்பர்கள், குடும்பத்தினர் நிதி உதவி ஆகும். இந்த இடைவெளியை நிறைவு செய்யத் தற்போது கூட்டமாக நிதி திரட்டுதல் (Crowd Funding) என்ற நோக்கம் முக்கியப் பங்களிக்கிறது. இதன் மூலம் நிதி உதவி கேட்பதும், கொடுப்பதும் எளிதாக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, பேக்கரியில் வேலை பார்க்கும் பிரசன்னாவின் மாதச் சம்பளம் பன்னிரண்டாயிரம் ரூபாய் மட்டுமே.

திடீரெனப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது 7 வயது மகன் தன்வந்தின் உயிரைக் காப்பாற்ற பிஎம்டி, கீமோதெராபி ஆகியவை அவசியமெனக் கூறினர். இதற்கான சிகிச்சை செலவு 32 லட்சம் ரூபாய் ஆகும் என்றனர். ஏற்கனவே வேறொரு மருத்துவமனையில் 6 லட்சம் ரூபாய் செலவு மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் என தத்தளித்த நிலையில் க்ரவுட் ஃபண்டிங் முறையை மருத்துவமனை பரிந்துரைத்து நோய் குறித்த முழு விவரங்களையும், ஆவணங்களையும், மிலாப் (Milaap) தளத்துக்கு அனுப்பச் சொன்னார்கள்.

அவனது நல்ல காலம் உலகிலுள்ள சுமார் 1000 நபர்கள் அவனுடைய துன்பத்தில் பங்கேற்றுத் தங்களாக இயன்ற உதவியை வழங்க முன்வந்தனர். சரியான நேரத்தில் கிடைத்த இந்த உதவி காரணமாக தன்வந்த் புற்றுநோயிலிருந்து மீண்டு இன்றைக்கு மகிழ்ச்சியாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். உலகெங்குமுள்ள ஆயிரக் கணக்கானோர் இவனது சோகக் கதையைப் படித்து உரிய நேரத்தில் அவர்களாக முடிந்த நிதி உதவியை வழங்கினார்கள்.

நீண்ட காலமாகவே மக்களுக்கு உதவுவதற்கான ஒரே வழி நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் நன்கொடை வழங்குவதுதான். ஆனால் தற்போது ஆன்லைனில் க்ரவுட் ஃபண்டிங் மூலம் நேரடியாகவே ஒருவர் மற்றொருவரின் தேவைகளை நிறைவு செய்ய உதவலாம். நன்கொடை அளிப்பதற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல், நம்பிக்கையின்மை மற்றும் நன்கொடையாளர்களுக்கு ஈடுபாடு குறைதல் ஆகிய பிரச்னைகளுக்கு கூட்டமாக நிதி திரட்டும் இணையதளம் தீர்வாக அமையும்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை நன்கொடை பெற உதவுவோருக்கும் நன்கொடை அளிப்போருக்கும் வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொள்வார்கள். தற்போது, நோயாளி குறித்த விவரங்களை அறிந்து பல்வேறு மருத்துவமனைகளும், மருத்துவர்களும், மக்களுக்கு சிகிச்சைக்காக வழிகாட்டுகின்றன. தான் நேசிக்கும் ஒருவரை குணப்படுத்த முடியவில்லையே, உரிய சிகிச்சை கிடைக்கவில்லையே என்று வருந்தத் தேவையில்லாத வகையில் தரமான மருத்துவ சிகிச்சை இனி அனைவருக்கும் கிடைக்கும்.

நோயாளிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடைக்கான இன்சூரன்ஸ் உருவாக்கப்படும். ஆன்லைனில் க்ரவுட் ஃபண்டிங் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டிஜிட்டல் பரிச்சயம் இல்லாத நோயாளிகளுக்கு உதவும் வகையில், அவர்கள் சார்பாக நிதி திரட்ட ஆட்களை நியமித்தல், தனிப்பட்ட முறையில் சிகிச்சைச் செலவில் ஒரு பகுதியைத் திரட்டுதல் எனப் பல்வேறு முயற்சிகளை மிலாப் மேற்கொள்ளும்.
நன்கொடை வழங்குவோர் நிதி ஆதரவுடன், மனதுக்கு ஆறுதலான செய்திகளையும், தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சிக்கலான தருணங்களைச்
சமாளித்த விவரங்களையும் இணைய தளத்தில் பகிர்ந்து கொள்வர்.

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் பட்சத்தில் மனநிறைவும், திருப்தியும் ஏற்படும். இன்றைய நவீன வாழ்க்கை முறையில் தனிமை மற்றும் ஒதுக்கப்படும் சூழலை இப்படித்தான் சமூகம் கடந்துவர முடியும். இதுவரை மிலாப் தளத்தில் மட்டுமே மருத்துவம் தொடர்பான பிரச்னைகளுக்கான நிதி ஆதாரத் தீர்வாக ரூ.150 கோடி திரட்டப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் மருத்துவத் தேவைகளுக்கான நிதி திரட்டுவோர் எண்ணிக்கை 14 மடங்கு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பொருளாதார ரீதியாகத் தங்களால் இயன்ற உதவியை வழங்கத் தயாராக உள்ளனர்.

இன்றைக்கு யார் வேண்டுமானாலும் கையிலுள்ள ஸ்மார்ட் போன் மூலம் இந்தப் புனிதப் பணியில் பங்கேற்று ஒரு மாற்றத்தை மிக எளிதாக ஏற்படுத்தலாம். டிஜிட்டல் மூலமாக நிதி திரட்டுதல் புதியது என்றாலும், புற்றுநோய் சிகிச்சை தொடர்பான அவசரத் தேவைகளுக்கு உதவும் உறுதியான வழி. தற்போது மேலும் மேலும் பல மக்கள் ஆன்லைன் மூலம் நிதி பெறுவதுடன் அவசர மருத்துவ சிகிச்சைகளையும் திறமையாகச் சமாளிப்பார்கள். அடுத்த சில ஆண்டுகளில் இந்த வாய்ப்பு தனிப்பட்ட கடன் பெறுவதுபோல் முக்கியத்துவம் பெறுவதுடன் நிதி வழங்குவதும், பெறுவதும் இனி வேகமாகவும் எளிதாகவும் அமைப்பு ரீதியாகவும் மாறும்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த பைக்க எல்லாம் பாத்தா அப்படியே ஆடி போயிருவீங்க ! (வீடியோ)
Next post மாடறுப்பு விவகாரம்: ஜீவகாருண்யம்?(கட்டுரை)