வீட்டுத் தோட்டத்தை இப்படித்தான் அமைக்கணும்!!(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 52 Second

நம்மிடம் இருக்கக்கூடிய தோட்டத்துக்கான இடத்தின் அளவு; தோட்டம் இடுவது தரையிலா, மொட்டை மாடியிலா; நாம் தினசரி எவ்வளவு நேரமும் உடலுழைப்பும் செலவிட முடியும்; என்னென்ன பயிரிடப் போகிறோம்; கிடைக்கும் நீரின் அளவு / தரம்; நாம் இருக்கும் இடத்திலுள்ள இடுபொருட்களின் விலை மற்றும் தரம்; வசிக்கும் இடத்தின் தட்பவெப்ப நிலை; தோட்டமிட்டு பராமரிப்பதற்கான ஆர்வம் தற்காலிக மானதா அல்லது நீடித்து நிலைக்கக் கூடியதா..? இக்கேள்விகளுக்கு முதலில் நமக்கு நாமே விடையளிக்க வேண்டும்.

ஏனெனில் தோட்டம் அமைத்து பராமரிப்பது என்பது ஒரு செல்லப் பிராணியை / குழந்தையை வளர்ப்பது போன்றது. அவை நம் ஈடுபாடு / அக்கறை / அன்பைப் பொறுத்துத்தான் வளர்ந்து பலன் தரும். தேவையான ஊட்டத்தையும், நீரையும் கொடுத்தால் மட்டுமே செடிகள் வளராது. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் என்று ஒரு திருக்குறள் இருக்கிறது. சரியாக அன்பு செலுத்தாத, கவனிக்காத கணவனிடம் ஒரு மனைவி எவ்வாறு பிணக்கத்துடன் நடந்து கொள்வாளோ அதுபோலத்தான் தினமும் கவனிக்கப்படாத பயிர்களும் நடந்து கொள்ளும் என்கிறது அந்தக் குறள்.

சில ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் வந்த ‘மர்ம தேசம்’ தொடரில் ஒரு கதாபாத்திரம் வரும். அவர் செடி, மரங்களுடன் உரையாடி உறவாடுவார். அவையும் அவரது பேச்சைக் கேட்கும். இதில் மர்மம் ஏதும் இல்லை. பரிவும் பாசமும் காட்டப்படும் தாவரங்கள் அதற்கேற்றபடி தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆக, நிலையான ஆர்வம் உள்ளவர்களுக்கே இந்த முயற்சிகள் பலன் தரும். முதலில், தரைப்பகுதியில் தோட்டமிடுவதற்கான திட்டமிடுதலைப் பார்ப்போம்.

மண் வகை / மண் வளம்:

மண் வளம் நாம் முதலில் பார்க்க வேண்டிய ஒன்று. வேதியியல் மண் பரிசோதனையைக் காட்டிலும் நாமாகச் செய்து பார்க்கக்கூடிய சில எளிமையான பரிசோதனைகள் மூலமாக மண் வளத்தை நன்கு தெரிந்து கொள்ளலாம். இந்தப் பரிசோதனைகள் வீட்டுத்தோட்டத்துக்கு பொருந்து மேயன்றி, தொழில்ரீதியான விவசாயத்துக்கு பொருந்தாது. மண்ணில் போதுமான அளவு மக்கிய இயற்கைப் பொருட்கள் இருக்கவேண்டும். இவைதான் மண்ணில் நுண்ணுயிர்கள் வாழ வழி செய்கின்றன. மண்ணில் நீரைப் பிடித்து வைத்துக்கொள்ளும் தன்மையும் அதை வடித்துவிடும் தன்மையும் இருக்க வேண்டும்.

குப்பை போன்ற இயற்கையான பொருட்கள் நீரைப் பிடித்து வைத்துக்கொண்டு மண்ணை குளிர்ச்சியாகவும், தேவையான போது செடிகளுக்கு வழங்கியும் பயிர் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும். மண் மிகச்சிறியதாக இருக்கும் பட்சத்தில், களி போன்று நன்றாக நீரைப் பிடித்து வைத்துக் கொள்ளும். ஆனால், வடித்து விடாது. அதனால் நமக்கு பொல பொலவென்று நீரை நன்றாகப் பிடித்து வைத்துக்கொண்டு மெதுவாக வடித்து விடும் தன்மை கொண்ட மண் பொருத்தமாக இருக்கும். இதை இரண்டு சோதனை முறைகளில் தெரிந்து கொள்ளலாம். இலேசாக நனைக்கப்பட்ட மண்ணை (அதாவது, மண்ணைத் தொடும்போது நீர் கையில் ஒட்டக்கூடாது; ஆனால், ஈரப்பதத்தை உணரும்படி இருக்க வேண்டும்), கொழுக்கட்டை போல் பிடிக்க வேண்டும்.

அப்படி பிடிக்கும் போது மண் அமுங்குகிறதா என்று பார்க்க வேண்டும். பிறகு அமுக்குவதை நிறுத்தினால் சிறிது விரிய வேண்டும். இப்படி இருந்தால் இந்த மண் நீரைத் தேவையான அளவு பிடித்து வைத்துக் கொள்ளும். மண்ணும் குளிர்ச்சியாக இருக்கும். இந்தத் தன்மை இல்லாவிட்டால், எரு இட்டு, இத்தன்மையை வரவைக்க வேண்டும். கரம்பை / செம்மண் இரண்டுக்குமே குப்பை / எரு இட்டால்தான் இந்தத் தன்மை வரும் மண் கலவையை ஒரு தொட்டியில் விட்டு, ஒரு லிட்டர் நீர் விட வேண்டும். இந்த நீர் 5 நிமிடத்துக்குள் முழு மண்ணையும் நனைத்து, கீழே வடிகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் இந்த மண் நாளடைவில் கட்டிப்பட்டு வேர் எளிதில் வளரமுடியாத படி ஆகிவிடும்.

ஆற்று / ஓடை மணல் சேர்ப்பதன் மூலமாக நீர் வடியும் தன்மையை மேம்படுத்தலாம். வீட்டுத் தோட்டத்தைப் பொறுத்தவரை மண் வகையை மாற்றுவது தேவையில்லாத ஒன்று. மண் வகை எப்படி இருந்தாலும் அதில் நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான வழிவகைகளை நாம் செய்து விட்டால் அந்த மண் பயிரிட தகுந்த நிலமாக மாறும். பொதுவாக சுக்கான் மண்ணைத் தவிர, மற்ற எல்லா மண் வகையையும் வளமாக மாற்ற முடியும். சுக்கானாகவோ, நிரம்பவும் கல் நிறைந்ததாகவோ இருந்தால் மட்டும், வேறு மண் அடித்து மண்வளத்தை மேம்படுத்திக் கொள்ளவும். மண் வளம் சரியில்லை என்று நீங்கள் நினைத்தால், நன்றாக மக்கிய குப்பையை சற்று அதிகமாக சேர்த்துக் கொண்டு அதைச் சரி செய்யலாம்.

நிலம் தயாரித்தல்:

செடிகளுக்கு நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் தேவை. அதனால் நாம் தேர்வு செய்யும் இடத்தில் அதிகமான நிழல் இல்லாமல், மற்ற செடிகள் அடர்த்தியாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தரைக்கு மேல் எப்படி காற்றோட்டம் அவசியமோ அதைப்போலவே மண்ணுக்குள்ளும் காற்றோட்டம் அவசியம். எனவே மண்ணை உழுது புழுதியாக்குவது அவசியம். வீட்டுச் சூழலில் நாம் ஏர் கொண்டு உழ முடியாது என்பதால், மண்வெட்டி கொண்டு இரண்டு மூன்று முறை கொத்தி புழுதியாகும் வரை செய்ய வேண்டும்.

குறைந்தது முக்கால் அடியாவது மண்ணைப் புரட்டுமாறு கொத்த வேண்டும். புரட்டிப் போட்ட மண்ணை வெயிலில் காய விட வேண்டும். இப்படிச் செய்வதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள் அழிந்து போகும். பிறகு தேவையான அளவு குப்பை / எரு இட்டு மீண்டும் கொத்தி நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். எந்த இடத்தில் என்ன இடுகிறோம் என்பதைத் திட்டமிட்டு இடத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். சதுரம் / செவ்வகமான பகுதிகளுக்கு சிறு குச்சிகளை ஊன்றி நூல் கட்டி பிரிக்கலாம். வட்டம், நீள்வட்டம் போன்ற பகுதிகளுக்கு மொத்தமான கயிறையோ, ஹோஸ் பைப்பையோ உபயோகிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உருவாகிறான் புதிய மனிதன்!!(மருத்துவம்)
Next post சிரிக்காம பாருங்க செம்ம காமெடி வீடியோ !!!