திற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை!!
முற்காலத்தில் வீட்டிலிருந்து வெளியே வரும் பெண்கள் தலை குனிந்தபடி எதிரில் வரும் ஆண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எந்த சூழலிலும் நன்னடத்தைக்கு இழுக்கு ஏற்படாமல் பார்த்து கொள்வார்கள். தற்போது மேல்நாட்டு கலாசாரங்களின் ஊடுருவல், சமூக வலை தளங்களின் மூலம் பரவும் ஆபாசங்கள், சினிமாக்களில் வரும் நெருக்கமான கிளு கிளு காட்சிகள், உணவு முறைகளிலுள்ள மாற்றங்கள் போன்றவை சிறு வயதிலேயே எண்ணங்களை திசை திருப்பி விடுகிறது. ஆண்களும், பெண்களும் சகஜமாக பழகும் இக்காலத்தில் காதல் முதல் காமம் வரை கொண்டு செல்கிறது. இதன் விளைவு இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடுகிறது. படிக்க வேண்டிய பள்ளி பருவத்திலேயே காதலில் விழுந்து, கனவுகளில் மிதந்து வாழ்க்கையை இருட்டறையில் பலரும் துறந்து விடுகின்றனர். இவ்வாறான பள்ளி பருவ காதலர்களுக்கு பள்ளி மற்றும் வீடுகளில் கட்டப்பாடு இருக்கிறது.
இருப்பினும் சிறப்பு வகுப்புகள், நண்பர்களின் வீடுகள் என காரணம் கூறி பார்க், பீச் என்று சுற்றி பொழுதை களிக்கின்றனர். ஆரம்பத்தில் சில்மிசங்களோடு நிறுத்தி கொள்வார்கள். பின்னர் எல்லை மீறி அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு வழி தேடி அலைகின்றனர். இவர்களுக்கு சுற்றுலா தலங்களில் உள்ள விடுதிகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இதனால் பலரும் வாழ்க்கை என்னவென்று புரிவதற்குள்ளாகவே வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். இதேபோன்று குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் நவீன வசதிகளுடைய விடுதி ஒன்றில், 16 முதல் 17 வயதுடைய பள்ளி பருவ ஜோடிகள் சில தனி தனி அறைகளில் உல்லாசமாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விடுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கண்ட காட்சிகள் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. அந்த விடுதியில் இருந்து 3 ஜோடிகள் போலீசாரிடம் சிக்கி கொண்டன. இதில் இரண்டு ஜோடிகள் 17 வயதை கடக்காத பள்ளி மாணவ, மாணவிகள்.
ஒரு ஜோடி தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் திருமணமான ஜோடி. போலீஸ் விசாரணையில் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்ய இருப்பது தெரியவந்தது. மற்ற இரண்டு ஜோடிகளும் தாங்கள் முதல் முறையாக இப்படி வந்துள்ளோம். இனிமேல் படிப்பை தவிர வேறு தவறு எதுவும் செய்ய மாட்டோம் என்று போலீசிடம் கெஞ்சினர். இதையடுத்து இவர்களின் எதிர்காலம் கருதி ேபாலீசார் எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் திற்பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்காணிப்பு காமிரா அவசியம்: சுற்றுலா தலங்கள், காதலர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. காதலர்கள் காதலை வளர்ப்பதற்கும், பொழுதை போக்குவதற்கும் சுற்றுலா தலங்கள் புகலிடமாக உள்ளது. இயற்கை சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிபாலம் போன்றவற்றில் பரந்து விரிந்து காணப்படும் பகுதிகள், மறைவிடங்கள் போன்றவை காதலர்களுக்கு அடைக்கலமாக உள்ளது. இங்கு நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் எல்லை மீறும் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சுற்றுலா பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்க வேண்டும். இது சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த உதவும். இதேபோன்று விடுதிகளில் உரிய ஆவணமின்றி ஜோடிகளாக வருபவர்களை அனுமதிக்க கூடாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating