உரம் விழுதல் சில உண்மைகள்!!(மருத்துவம்)
சில நேரங்களில் கைக்குழந்தை எதற்கு அழுகிறது என்றே தெரியாது. பெரிய பிரச்னை என்று நினைப்போம். எறும்புதான் கடித்திருக்கும். ஒன்றும் இருக்காது என நினைக்கையிலோ விஷயம் விபரீதமாகி விடும். “பச்சிளம் குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு, அதை உடனடியாக கவனிக்காமல் இருந்துவிடக்கூடாது. அதனால் உண்டாகும் பின்விளைவுகள் எதிர்பாராத நேரத்தில் ஆபத்தான கட்டத்துக்குப் போகலாம்’’ என்கிறார் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம். பச்சிளம் குழந்தைகளுக்கு உரம் விழுவதும் இதற்கு ஒரு காரணம் என்கிறவர், உரம் விழுதல் என்றால் என்ன, அதை குணப்படுத்தும் சிகிச்சைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறார்.
‘‘பச்சிளம் குழந்தைகளுக்கு கழுத்தின் Sternomastoid தசையில் கட்டி ஏற்படும். இந்தக் கட்டியினால் பச்சிளம் குழந்தைகளுக்கு சதை ஒரு பக்கமாக அழுத்திக் கொள்கிறது. அதன் வெளிப்பாடாக, பச்சிளம் குழந்தைகளுக்கு தலை ஒரு பக்கமாகவும், தாடை மற்றொரு பக்கமாகவும் திரும்பிக் கொள்கிறது. அதன் காரணமாக இவர்களுக்கு டார்டிகோலிஸ் (Torticollis) என்ற ‘உரம் விழுதல்’ பிரச்னை ஏற்படுகிறது. வேறு பிரச்னை காரணமாகவும் இவர்களுக்கு உரம் விழுதல் ஏற்படலாம்.
இந்தப் பிரச்னை பச்சிளம் குழந்தை தொடங்கி 12 வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் வரலாம். தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு டிராக்ஷன், ஸ்ட்ரெச்சிங் செய்வதன் மூலம் இதை குணப்படுத்தி விடலாம். அரிதாக, ஏதாவது ஒரு குழந்தைக்குத்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். கழுத்து எலும்பில் பிரச்னை இருந்தால், எலும்பு முறிவு மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
உரம் விழுதல் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளதை அறிய பல அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக, உரம் விழுதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தாடை ஒரு பக்கமாகவும் பின்னந்தலை இன்னொரு பக்கமாகவும் சாய்ந்து காணப்படும். இரு கண்களாலும் ஒரே திசையில் கோர்வையாக பார்க்க முடியாது. உடல் வளர்ச்சி, மற்றும் பரிணாம வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகும். அதேவேளையில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்றாக இருக்கும். தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் கழுத்தில் ஏதேனும் சிறிய பிரச்னை இருப்பது தெரிந்தால், பிரசவத்தை கவனமாக கையாள வேண்டும்.
அதற்குப் பிறகும் பச்சிளம் குழந்தையின் கழுத்தில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், முதலில் எலும்பு முறிவு மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டு செல்ல வேண்டும். அவருடைய ஆலோசனைப்படி பிசியோதெரபிஸ்ட்டிடம் காட்டி முறையான சிகிச்சை பெற வேண்டும். அப்படியும் உரம் விழுதல் பச்சிளம் குழந்தைகளுக்கு குணமாகவில்லை என்றால் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணரிடம் குழந்தையை அழைத்துச் சென்று அதற்குரிய மருந்துகள் கொடுக்க வேண்டும். கழுத்தில் உரம் விழுவதற்கும், உணவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. உரம் விழுதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எல்லாவிதமான உணவுகளையும் தொடர்ந்து கொடுக்கலாம். சுளுக்கு எடுப்பது, ஒத்தடம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்…’’
Average Rating