அதோடு இதுவும் இருந்தால் எதைத்தான் சாப்பிடுவது?(மருத்துவம்)
நீரிழிவுக்காகவே ஒரு டயட் எடுத்துக்கொள்கிறோம். ஓகே. நீரிழிவோடு சிலருக்கு அது சார்ந்த வேறு உடல்நலப் பிரச்னைகளும் இருக்கக்கூடும். அப்படியானால், என்ன டயட் எடுத்துக்கொள்வது? ரசித்து, ருசித்துச் சாப்பிட ஒன்றுமே இல்லையா? நிச்சயமாக நிறையவே உண்டு. நம் உணவு உலகம் அளிக்கிற அளவற்ற சாத்தியங்களில், அனைத்துப் பிரச்னைகளை தாண்டியும் கூட ருசியான உணவுகள் உண்டு. கவலை வேண்டாம்!நீரிழிவோடு கூடிய உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு / கொலஸ்ட்ரால், இதய நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றில் ஒன்றோ, பலவோ சிலருக்கு இருக்கக்கூடும். நாம் உட்கொள்ளும் உணவானது, நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க உதவ வேண்டும். அதோடு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், எலெக்ட்ரோலைட் ஆகியவற்றைத் தகுந்த அளவுகளுக்குள் இருக்கும்படி செய்ய வேண்டும். இவற்றோடு, எடை விஷயத்திலும் உதவ வேண்டும்.
மருந்துகளோடு சமச்சீர் உணவையும் எடுத்துக்கொள்வது ஆரம்பத்தில் சிரமமாகவே இருக்கக்கூடும். ‘எப்பவாவது பார்த்துச் சாப்பிடு என்றால் பரவாயில்லை… எப்பவுமே பார்த்துப் பார்த்துச் சாப்பிடு என்றால் எப்படி’ என்கிற அதிருப்தியும் கூட நமக்குள் உருவாகக்கூடும். இருப்பினும், இந்தக் குறைகளை எல்லாம் தாண்டி, நீரிழிவாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் உணவுத்திட்டம் நம் உடலை உறுதி செய்யும். நீரிழிவு மற்றும் அது சார்ந்த பிரச்னைகளின் வீரியத்தைக் குறைத்து, உடலைக் காக்கும். ஆகவே…
நீரிழிவோடு அதிக கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்தால்…
*குறை கொழுப்பு உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். உதாரணமாக… ஸ்கிம்மிட் மில்க்.
*நிறைவுற்ற கொழுப்பு(Saturated fat) உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக… வெண்ணெய், நெய், க்ரீம் போன்ற பால் பொருட்கள்…
*ட்ரான்ஸ்-ஃபேட்ஸ்(Trans-fats) உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக… வனஸ்பதி போன்ற ஹைட்ரோஜெனரேட்டட் வெஜிடபிள் ஆயில் வகைகள், கேக், பேஸ்ட்ரி, பிஸ்கட், குக்கீஸ்…
*கொலஸ்ட்ரால்/கொழுப்பு நிறைந்தவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக… அசைவ உணவு வகைகள், நெய்…
நீரிழிவோடு உயர் ரத்த அழுத்தம் இருந்தால்…
*பழங்கள், காய்கறிகள், குறை கொழுப்பு கொண்ட பால் பொருட்களை உட்கொள்ளலாம்.
*உணவில் சோடியம் அளவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். டேபிள் சால்ட், பேக்கேஜ்கு உணவுகள், உப்பு நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகள், `ரெடி டு ஈட்’ உணவுகள், சாஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக அளவு சோடியம் மறைந்திருப்பதை மறக்க வேண்டாம்.
*உணவில் பொட்டாசியம் அளவுகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்துக்கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் உதவும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு(அளவாக), வாழை, ஆப்ரிகாட் போன்ற பழங்கள், சிலவகை நட்ஸ், விதை மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் பொட்டாசியம் உள்ளது.
நீரிழிவோடு பருமனும் இருந்தால்…
*பிராசஸ் செய்யப்படாத (பதப்படுத்தப்படாத) உணவுகளிலிருந்து தேவையான நார்ச்சத்தைப் பெற்றுவிட வேண்டும். உதாரணமாக… காய்கறிகள், பழங்கள், முழுத் தானியங்கள், விதைகள், நட்ஸ் வகைகள், பருப்பு வகைகள்…
* முட்டையின் மஞ்சள்கரு, கொழுப்பு மாமிசம் போன்ற கொலஸ்ட்ரால் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* க்ரீம், சீஸ் போன்ற அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள், கொழுப்பு மாமிச
உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், பேக்கரி பொருள்கள், வெண்ணெய் போன்ற அதிக அளவு ட்ரான்ஸ்-ஃபேட் கொண்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
* சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரை நிறைந்த பானங்கள், பாஸ்தா, ஒயிட் பிரெட், அரிசி, நார்ச்சத்து அற்ற உணவுகள்,
உருளைக்கிழங்கு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
நீரிழிவோடு சிறுநீரக நோயும் இருந்தால்…
* பொட்டாசியம் குறைவாக உள்ள காய்கறிகள், பழங்களில் இருந்தே தினசரித் தேவைக்கான நார்ச்சத்தைப் பெற வேண்டும்.
* பாஸ்பரஸ் அதிகம் கொண்ட
உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக… முழுத் தானிய பிரெட், பேக்கரி உணவுகள், தானியங்கள் மற்றும் பாஸ்பரஸ் அல்லது பாஸ்பேட் உள்ளதாகக் கூறப்படும் உனவுகள்…
* பொட்டாசியம் அளவைக் கவனிக்கும் படி மருத்துவர் அறிவுறுத்தி இருந்தால், முழுத் தானியங்கள், பருப்புகள், ஆரஞ்சு, வாழை போன்றபழங்கள், உருளைக்கிழங்கு, தக்காளி, ஸ்பினச் கீரை போன்றவற்றையும் குறைக்க வேண்டும்.
நீரிழிவுடன் கூடிய இன்னபிற பிரச்னைகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள இதுபோன்ற டயட் மிக அவசியம். ஆரோக்கிய உணவுத் திட்டத்தை நாம் பின்பற்றாவிடில், பிரச்னைகளின் வீரியம் அதிகமாகும் என்பதே உண்மை. தவிர்க்க வேண்டிய உணவுப்பட்டியலே இவ்வளவு நீளமாக இருக்கிறதே என மிரள வேண்டாம். இதைக் காட்டிலும் மிகப்பெரிய உணவுப்பட்டியல் நாம் உண்பதற்காகக் காத்திருக்கிறது.
Average Rating