அன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை !!(மருத்துவம்)

Read Time:12 Minute, 50 Second

மனித உடலில் மிக அற்புதமான படைப்பு கால் பாதங்கள். நரம்புகள், தசைகள், எலும்புகள் போன்றவை எல்லாம் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு, அதன் மூலம் நம்மை நடக்க வைக்கின்றன பாதங்கள்.

நாம் எவ்வளவு எடை அதிகரித்துக் கொண்டிருந்தாலும் நம்மை தூக்கி சுமக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைப்பருவம் முதல் வயோதிகக் காலம் வரை பாதங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அத்தகைய சிறப்பு வாய்ந்த பாதங்களை நாம் சிறப்பாகப் பராமரிக்கிறோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வலியும், பிரச்னைகளும் தோன்றும்போதுதான் பலருக்கும் பாதங்களின் பயனே தெரிய வருகிறது.

‘பாதங்களைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், எல்லோருமே ‘செருப்பு அணிகிறோம்’ என்று சொல்வார்கள். ஆனால், அளவு சரி இல்லாத செருப்புகளை அணிந்துகொண்டு சிறிது தூரம் நடப்பதுகூட பாதங்களின் ஆரோக்கியத்தை பலமாக பாதிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை.

அளவு சரி இல்லாத செருப்புகளை அணிந்து நடந்தால் நரம்புகள், தசைகள், எலும்புகள் எல்லாவற்றுக்குமே நெருக்கடிகள் ஏற்படும். அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, அன்றாட வாழ்க்கையே முடங்கும் நிலைகூட ஏற்படலாம்.தற்போது கால் பாதங்களில் ஏற்படும் பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதிலும் High heels எனப்படும் உயர் குதிகால் செருப்பு அணிந்த பெண்களே, பாதிப்பின் உச்சத்தைத் தொடுகிறார்கள்.

குறிப்பாக 20 முதல் 30 வயது பெண்களே குதிகால் செருப்புகள் அணிவதால் பெருமளவு ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.
முதலில் இந்த உயர் குதிகால் செருப்புகள் பெண்களைக் கவர என்ன காரணம் என்று பார்ப்போம். அவைகளின் அழகும், வடிவமைப்பும் பெண்களை எளிதாக ஈர்த்துவிடுகிறது. எப்போதும் தட்டையான செருப்புகளை அணியும் பெண்கள், தங்களுக்கு உயர் குதிகால் செருப்புகள் கம்பீரத்தைத் தருவதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொன்று, தங்களை உயரம் குறைவாகக் கருதிக்கொள்ளும் பெண்கள், குதிகால் செருப்பு மூலம் தங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்குவதாகவும், தன்னம்பிக்கை மேம்படுவதாகவும் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட எண்ணங்களால் உயர் குதிகால் செருப்பு அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் பாதங்களில் ஏற்படும் பிரச்னைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

உயர் குதிகால் செருப்புகள் அணிந்துகொண்டு அன்ன நடை நடப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குதிகால் வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்கு அளவு சரி இல்லாத செருப்புகளும், தவறான வாழ்க்கை முறைகளும்கூட காரணமாக இருக்கின்றன. உயர் குதிகால் செருப்புகள் குதிகாலை பொதிந்திருக்கும் தசைகளில் கீறலை ஏற்படுத்தும். அதோடு கால் பாதங்களில் முறிவையும் ஏற்படுத்துகிறது. இதனை தொடக்கத்திலே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிக அவசியம்.

இத்தகைய பாதிப்பு கொண்டவர்கள் பாதத்தின் மிதிக்கும் பகுதி மென்மையாகக் கொண்ட செருப்புகளையும், அதிக ஹீல்ஸ் இல்லாத செருப்புகளையும் அணிய வேண்டும். அதோடு கால் பாதங்களுக்கும், மூட்டுக்கும் தேவையான பயிற்சிகளையும் அன்றாடம் செய்துவர வேண்டும். குறிப்பாக, பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பாதிப்படைபவர்களில் 5 சதவீதம் பேருக்கு Keyhole surgery தேவைப்படும்.

உயர் குதிகால் செருப்புகளை தொடர்ந்து அணியும்போது, விரல் பாதத்தோடு சேரும் பகுதி வளைந்துபோகும். அதோடு தசை அழுத்தத்தால் அந்தப் பகுதி கெட்டியாகி ஒருவித கட்டிபோல் தோன்றும். அதற்கு Bunion என்று பெயர். சிலருக்கு பெருவிரல் வளைந்து பக்கத்து விரலின் மேல் பகுதிக்கு போய்விடும். இதனால் பயங்கர வலி தோன்றும். குதிகால் உயர்ந்து, முனை கூர்மையாக இருக்கும் செருப்புகளை அணியும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

பல வருடங்களாக உயர் குதிகால் செருப்பு அணிந்து நடக்கும் பெண்கள் கணுக்கால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பாதங்களுக்குத் தேவையான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். அவர்கள் வலி ஏற்படும் பகுதியில் ‘ஐஸ் பேக்’ மூலம் ஒத்தடம் கொடுக்கலாம். வலி ஏற்பட்ட பகுதியில் சுடுநீரை ஊற்றுவதும், எண்ணெய் மூலம் ‘மசாஜ்’ செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

குதிகால் செருப்பணியும் பெண்களில் 60 சதவீதம் பேர் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுகிறார்கள். குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாவிட்டாலும் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம். இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி Neuroma எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.

இந்த வலி அவர்களது அன்றாட செயல்பாடுகளை முடக்கிப் போட்டுவிடும். ஹைஹீல்ஸ் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப்போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழுங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

அதனால் ஹைஹீல்ஸ் செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒரு சில மணிநேரம் மட்டுமே அணியுங்கள். ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிவதால் பாதிப்பு ஏற்பட்டால், கால தாமதம் செய்யாமல் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். ஆரோக்கியமான பாதங்களே அதிக அழகு தரும் என்ற உண்மையை உணருங்கள்.

உயர் குதிகால் செருப்புகள் அணிய விரும்பும் பெண்கள் கவனிக்க வேண்டியவை!

* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் சோல் என்கிற ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.

* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களில் லைனிங் செய்யப்பட்டிருக்கும். அது வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்
படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் கால்களுக்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

* அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்னைகளை ஏற்படுத்தும். 2 அங்குல உயரம் கொண்ட குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை,
பாதுகாப்பானவை.

* செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடி இருக்காமல் ஆங்காங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும். அதனையும் குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள்.

* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.

* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்கவேண்டும்.

* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏற வேண்டும். மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.

* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே, குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்திடுஙகள்.

* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடப்பவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.

* கால் அளவை சரியாகக் கணித்து அதற்குப் பொருத்தமான, அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.

* பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும்
வாங்காதீர்கள்.

* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே, நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் ஏற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா!!(வீடியோ)
Next post உறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)