பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா ?

Read Time:7 Minute, 39 Second

உலகிலேயே பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா என தொம்ஸ்ன் ரொய்டர்ஸ் ஃபவுண்டேஷன் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை தன்னால் ஒப்புக் கொள்ள முடியாது என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தேசிய வீட்டுப் பணியாளர்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வளர்மதி.

இருப்பினும் சில சமயங்களில், குறிப்பிட்ட அளவில் பெண்களுக்கு வழங்கப்படக் கூடிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மேலும் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார் வளர்மதி.

பாதுகாப்பு இன்மையினால் சில இடங்களில் பெண்கள் தனியாக பயணம் செய்ய முடியாத நிலையே இன்றளவும் இங்கு இருப்பதாகவும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையே நிலவுவதாகவும் தெரிவிக்கிறார் வளர்மதி.

இந்தியா பெண்களுக்கான நாடாக இருந்தால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும் கூறினார் அவர்.

இந்த ஆய்வு எடுக்கப்பட்ட முறை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்த, மனித உரிமை செயற்பாட்டாளர் சுதா ராமலிங்கம், அந்த ஆய்வில் குறிப்பிட்ட அளவுக்கு இந்தியா பாதுகாப்பற்ற நாடு என்று தான் உணரவில்லை என்று கூறுகிறார்.

“இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமையால் பிரச்சினைகளை வெளியே கொண்டு வருகின்றனர்.”

காலம் காலமாக பெண்கள் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டும் வருகின்றனர். எனவே அது இன்றைய சூழலில் திடீரென அதிகரித்துவிட்டதாக கூறுவதை தான் கேள்விக் குறியுடன் பார்ப்பதாகவும், தற்போது பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்ல அதிகமாக முன்வருவதாகவும் தெரிவித்தார்.

ஊடகங்கள், அனைத்து மகளிர் பொலிஸ் நிலையங்கள், பெண்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் படிப்பறிவு ஆகிய காரணங்களால் சின்ன பிரச்சினைகளாக இருந்தாலும் அதற்கான நிவாரணத்தை பெண்கள் நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சுதாராமலிங்கம்.

தற்போது இருக்கக் கூடிய சட்டங்களை சரியாக பயன்படுத்தினாலே குற்றங்களை நிச்சயமாக குறைக்கலாம் என்றும் கூறுகிறார் சுதாராமலிங்கம்.

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகவே உள்ளது என்கிறார் எழுத்தாளர் தமயந்தி.

பெண் பாதுகாப்பு என்பது மனரீதியான பாதுகாப்பு என்பதையும் குறிக்கும் எனத் தெரிவிக்கும் தமயந்தி, இங்கு ஒன்றோடு ஒன்றோடு தொடர்புடையதாகவே உள்ளது என்கிறார். கலையின் பிரதிப்பலிப்பு அரசியலிலும், அரசியலின் பிரதிப்பலிப்பு சமூகத்திலும், சமூகத்தின் பிரதிப்பலிப்பு தனி மனித வாழ்க்கையில் வெளிப்படும். எனவே அனைத்திலும் பெண்களின் இருப்பு என்பது மேம்பட வேண்டும் என்று கூறும் தமயந்தி, சக மனிதர்களை மதிக்காமல் சமூக வளர்ச்சி என்பது ஏற்படாது என்கிறார்.

இந்த ஆய்வை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா போன்ற மிகப்பெரிய ஒரு நாட்டில் இந்த ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பெண்கள் இதற்கு முன்பு இருந்த காலங்களை காட்டிலும், சட்ட உரிமைகள் மற்றும் சட்ட அமைப்பை அணுகும் நடைமுறைகள் குறித்து நன்கு அறிந்துள்ளனர் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியாவுக்கு அடுத்து இடம்பெற்றுள்ள சில நாடுகளில் பெண்கள் பொதுவெளியில் பேசுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை”

மேலும் தேசிய பெண்கள் ஆணையம், மாநில மகளிர் ஆணையம், பல்வேறு அமைப்புகள், மற்றும் ஊடகங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதனை தொடர்பு கொண்ட போது, தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்த கருத்தை அவரும் முன்மொழிந்தார்.

மிகச் சிறிய எண்ணிக்கையிலான நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வைக் கொண்டு இந்தியா ஆபத்தான நாடு என்று கூற இயலாது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் தற்போதுதான் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையே வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் என்று கூறப்படும் நாடுகளில் குற்றங்கள் எந்தளவுக்கு வெளியில் காட்டப்படுகின்றன என்பது தெரியவில்லை என்றும் கூறுகிறார் அவர்.

ஊடகங்களில் விழிப்புணர்வுக்காக குற்றங்கள் அதிகமாக காட்டப்படுகின்றன. ஆனால் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக அதற்கு அர்த்தமில்லை. குற்றங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெற்றாலும் தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த கண்ணகி பாக்கியநாதன், விரைவில் அரசுடன் கலந்தாலோசித்து பெண்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்படும் என்றும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் முறையாக நடைபெறவுள்ள டிரம்ப் – புதின் சந்திப்பு!!
Next post அமெரிக்காவை அலறவிட்ட கொல்லிமலை சித்தர் ! பலரும் அறியாத திடுக்கிடும் ரகசியம்!!(வீடியோ)