செல்லுலாய்ட் பெண்கள்!!(மகளிர் பக்கம்)

Read Time:25 Minute, 36 Second

அதிக உயரம் கொண்டவரில்லை. அழகான உருண்டை முகம், பளீர் என்ற சிரிப்பு. 50களில் அம்மாவாகவே இவரைத் திரையில் பார்த்திருக்கிறோம். தமிழ்த் திரையுலகின் பெரும் புகழ் பெற்ற ஆரம்ப கால நட்சத்திரங்கள் பலரும் ஐம்பது படங்களைத் தாண்டி நடித்தவர்களில்லை. ஆனால், வரலாறு காணாத வெற்றியையும் புகழையும் ஒருசேரப் பெற்றனர். அதற்குக் காரணம் வெள்ளித்திரையை மக்கள் ஒரு பேரதிசயமாகப் பார்த்தனர்.

வெள்ளித் திரையில் தாங்கள் கண்டுகளித்த கதை நாயக, நாயகி பிம்பங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டனர். புனைவுதான், மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்கள்தான் என்றாலும் அனைத்தையும் மெய்மறந்து ரசித்தனர். கூட்டம் கூட்டமாகச் சினிமா கொட்டகைகளை நோக்கிப் படையெடுத்தனர். திரைப்படங்கள் ஆண்டுக்கணக்கில் ஓடின. இன்றளவும் அதன் கதாநாயகர்களும் கதாநாயகிகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் நடித்திருந்தாலும் மறுக்க முடியாத உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளனர்.

அப்படி மறக்க முடியாத ஒரு நடிகைதான் எஸ்.டி.சுப்புலட்சுமியும். அவர் கதாநாயகியாக நடித்த படங்கள் என்று பார்த்தால் ஆறிலிருந்து எட்டு படங்கள் மட்டும்தான். ஆனால் அவை திரையுலக வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மறக்க முடியாத படங்கள். இவரும் தொடக்க காலத் தமிழ் சினிமாவின் மாற்ற முடியாத விதிகளின்படி நாடகங்களின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர்தான்.

நாடக மேடையில் மெருகேறிய நடிப்பு

1918 ஆம் ஆண்டு துரைசாமி – ஜானகியம்மாள் தம்பதியின் மகளாக நெல்லைச்சீமையின் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். ஸ்ரீவைகுண்டம் துரைசாமி என்பதன் சுருக்கமே எஸ்.டி. சுப்புலட்சுமி. சிறு குழந்தையாக இருந்தபோதே எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு நாடகம், இசை, நடனம் போன்ற கலைகளின் மீது அதீத ஆர்வம் இருந்ததால் குடும்பமே மதுரைக்கு குடிபெயர்ந்தது. அவரது தந்தை சுப்புலட்சுமியைப் பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து பல நாடகக் கம்பெனிகளுக்கும் சென்று வாய்ப்புக் கேட்டிருக்கிறார்.

மிகச் சிறு வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. வெகு விரைவில் நாடக மேடைகளில் முக்கிய நாடகங்களில் முன்னணிப் பாத்திரங்களில் சிறந்து விளங்கினார். ஆரம்பத்தில் டி. ஆர். மகாலிங்கம், கே.பி. சுந்தராம்பாள் ஆகியோருடன் நடித்த அவர் 1925 வாக்கில் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் முதலில் நடித்த நாடகம் ‘வள்ளித் திருமணம்’. அப்போது பாகவதருக்கு வயது 18; எஸ்.டி. சுப்புலட்சுமிக்கு வயது 15. பாகவதருடன் நாடகங்களில் இணைந்து நடித்த காலத்தில்தான் அவருக்குத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.

எம்.கே.டி பாகவதருடன் ‘பவளக்கொடி’, ‘சாரங்கதரா’, ‘வள்ளித் திருமணம்’ உள்ளிட்ட நாடகங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். பாகவதர் தொடக்கம் முதலே ஸ்பெஷல் நாடகங்களில் ராஜபார்ட் வேடங்களில் நடித்து வந்தவர். அபாரமான இசை ஞானம், தங்கம் போன்ற நிறம், உருக்குப் போன்ற உடற்கட்டு, திருத்தமான முகம், பாகவதர் கிராப் இவையனைத்தும் சேர்ந்து அவருக்குச் சென்ற இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பைக் கொடுத்தது. அவரோடு சரிக்குச் சமமாக ஈடு கொடுத்து பிரதான பாத்திரங்களில் எஸ்.டி. சுப்புலட்சுமி நடித்தார்.

நாடக நடிப்பென்பது எந்திரத்தனமானதல்ல. சமயோசிதமும், கற்பனையும் இருந்தால் ஒவ்வொரு மேடையேற்றத்திலும் நடிப்பை மெருகேற்றிக் கொள்ளலாம். சில நேரங்களில் இது போட்டியாகவும் வெளிப்படுவதுண்டு. போட்டியும் மோதலும் மேடையோடு மறைந்துவிடும். எதிர்பாராமல் சில நேரங்களில் பகையாகி யாராவது ஒருவர் நாடகத்தை விட்டே வெளியேற நேர்வதும் உண்டு. பாகவதர் – எஸ்.டி.எஸ். இணையில் ‘பவளக்கொடி’யும், ‘வள்ளித்திருமணமும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தன.

‘குட்டிச்சுவரை நோக்கி எது வரும்? நாடக மேடையில் குறும்பு

ஒருமுறை கேரளத்தின் கொல்லம் நகரில் ‘வள்ளித் திருமணம்’ நாடகம். பாகவதர் மேடையில் தோன்ற, எஸ்.டி.எஸ். வள்ளியாகத் தினைப்புலம் வந்து ஆலோலம் பாடுகிறார். நாரதர் பேச்சால் வேடன் உருக்கொண்ட வேலன் அங்கு வந்து வள்ளி மீது காதல் அம்பை வீசுகிறார். எவ்வளவு முயன்றும் அவள் மசியவில்லை. ‘உன் மனம் இரும்போ? கல்லோ? பாறையோ?’ எனப் பாட வேண்டும். பாகவதர் குறும்புடன் ‘உன் மனம் இரும்போ? கல்லோ? பாறையோ? குட்டிச் சுவரோ?’ என குட்டிச்சுவரையும் தன் கற்பனையில் சேர்த்துக் கொள்கிறார். குட்டிச்சுவர் நாடகப் பாடத்தில் கிடையாது.

இது பாகவதரின் குறும்புதான் என்பதை அறிந்து ரசிகர்களும் ஆரவாரம் செய்கிறார்கள். ஒரே விசில் சத்தம். ‘ஒன்ஸ் மோர்.’ பாகவதர் மீண்டும் பாடுகிறார்: ‘உன் மனம் இரும்போ? கல்லோ? பாறையோ? குட்டிச்சுவரோ?’ மீண்டும் ரசிகர்கள் கொண்டாட்டம். முதல்முறையாகக் குட்டிச்சுவர் வசனத்துடன் சேர்க்கப்பட்டபோதே அதிர்ச்சியான எஸ்.டி.எஸ். அதிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் அதே வரிகள். நிலை குலைந்து நிற்கிறார். பாகவதர் மீண்டும் பாடுகிறார்: ‘உன் மனம் இரும்போ? கல்லோ? பாறையோ? குட்டிச்சுவரோ?’ ‘சபாஷ்!’ ‘வொண்டர் ஃபுல்’ ‘ஒன்ஸ் மோர்.’ மீண்டும் பாடுகிறார்.

அதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் 15 வயதுக் குழந்தை எஸ்.டி.எஸ். வெட்கித் தலைகுனிந்து நிற்பது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. ‘வள்ளித்திருமணம்’ கதையினை குட்டிச்சுவரை விட்டுத் தாண்ட விடவில்லை ரசிகர்கள். இப்போது எஸ்.டி.எஸ். முறைக்கிறார். நாடகக் கொட்டகைக்காரர்கள் வந்து ஆரவாரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். அடுத்த நாடகம் விருதுப்பட்டியில் (தற்போதைய விருதுநகரில்). இதற்குள் ‘குட்டிச்சுவர்’ விவகாரம் பிரபலமாகி விடுகிறது. இதனால் இந்த உள் சண்டையைப் பார்க்கக் கொட்டகை கொள்ளாத கூட்டம்.

வேலன் வந்து செல்கிறான். வள்ளி ஆலோலம் பாடுகிறாள். பின் வேடன் வேடத்தில் வந்து காதல் பாணம் விடுகிறான். அவள் மசியவில்லை. இப்போது பாகவதர் மீண்டும் பாடுகிறார்: ‘உன் மனம் இரும்போ? கல்லோ? பாறையோ? குட்டிச்சுவரோ?’ ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள். இம்முறை எஸ்.டி.எஸ். வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவில்லை. அவரும் சுதாரித்துக் கொண்டு ‘குட்டிச்சுவரை நோக்கி எது வரும் தெரியுமா?’ என்கிறார். ‘கழுதை!’ என்கிறார் பாகவதர் தன்னை மறந்து..உடனே ரசிகர்கள் எஸ்.டி.எஸ்.ஸுக்கு ஆதரவாகக் கரகோஷம், விசில். ஒன்ஸ் மோர்.

பாகவதர் சமாளித்துக்கொண்டார். ‘அழகான பெண்தானே என்னைக் கழுதை என்றாள்…’ மறுநாள் காலை செய்தித்தாள்களில் இதுவும் பரபரப்புச் செய்தியாகிறது. இதே போல கோவலன் நாடகத்தில் மாதவியாக எஸ்.டி.எஸ்., கோவலனாக பாகவதர். இந்த மேடைச் சண்டைகளே இந்த இணையை ரசிகர்கள் மத்தியில் மேலும் மேலும் பிரபலமாக்கியது. பாகவதர் குறும்பும், எஸ்.டி.எஸ். துடுக்குத்தனமாகப் பதிலடி கொடுப்பதும், சில நேரங்களில் எஸ்.டி.எஸ். முந்திக்கொண்டு பாகவதரை அசடு வழியச் செய்வதும் அவர்கள் பாணியாகவே ஆயிற்று. அவர்கள் சென்ற இடமெல்லாம் மாநாடு போலக்
கூட்டம் கூடியது.

நாடக மேடையிலிருந்து வெள்ளித்திரை நோக்கி….

பாகவதர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பின்னர் இன்னமும் பிரபலமானார் என்றாலும் அவரது பிரபலம் நாடகத்தில் நடித்த காலத்திலேயே பிரமாதமாகத் தொடங்கிவிட்டது. இந்த வெற்றியின் பின்னணியில் எஸ்.டி.எஸ்.ஸுக்கும் பெரும் பங்குண்டு. அதேபோல எஸ்.டி.எஸ். வெற்றியில் பாகவதரின் பங்கும் அபாரம். சினிமாவிலும் இந்த இணை இதே பாணியைப் பின்பற்றியது. கதாநாயகியே வெட்கப்படும் அளவுக்குக் கிண்டல் செய்வது இன்றளவும் விமர்சகர்களால் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

கும்பகோணம் பிரபல வழக்கறிஞரும், காங்கிரஸ் தொண்டருமான கே. சுப்பிரமணியத்துக்கு சினிமா பேசாத காலத்தில் இருந்தே அதன் மீது ஒரு ஈடுபாடு உண்டு. ஆங்கிலேய அரசு அமைத்த சினிமா ரிவியூ கமிட்டி போன்றவற்றில் அவர் உறுப்பினராக இருந்துள்ளார். மௌனப்பட காலத்தில் ராஜா சாண்டோ போன்றோருக்கு உதவியாகவும் இருந்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்றுக்கொண்டிருந்த ‘பவளக்கொடி’ நாடகத்தைப் பார்ப்பதற்கு ஆர்.ஆர். அழகப்பச் செட்டியாரும், லேனா செட்டியாரும் திடீர் அழைப்பு விடுத்தனர்.

நாடகத்தைப் பார்த்துக் கதை பிடித்திருந்தால் அப்படியே சினிமாவாக எடுக்கலாம் என்றும் யோசனை. மூவரும் நாடகத்தைப் பார்த்தனர். கே. சுப்பிரமணியத்துக்குக் கதை பிடித்திருந்தது. அதோடு பாகவதர் & எஸ்.டி.எஸ். இருவரின் நடிப்பு இன்னும் பிரமாதமாகப் பிடித்திருந்ததால், இவர்கள் இருவரையுமே அர்ஜுனன், பவளக்கொடியாக நடிக்க வைத்துப் படம் எடுக்கலாம் என்றார்.

அந்தப் படத்தில் நடிக்க பாகவதருக்கு ரூ. ஆயிரம் ஊதியம்; ஆனால், எஸ்.டி.எஸ்.ஸுக்கு ரூ. 2 ஆயிரம்; இயக்குநர் கே. சுப்பிரமணியத்துக்கோ ரூ. 750 மட்டும்தான். இதற்கு பாகவதரோ, இயக்குநரோ அந்தக் காலத்தில் எந்த ஆட்சேபமோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை; ஆச்சரியம்தான்! கதாநாயகனை விட கதாநாயகிக்குச் சம்பளம் அதிகம் என்பதை இப்போதும் கூட நினைத்துப் பார்க்க முடியுமா?

சாரங்கதராவுடன் மூவர் வெற்றி இணை பிரிந்தது

அடுத்த படம் ‘நவீன சாரங்கதரா’. இதே இணை. இயக்குநரும் கே. சுப்பிரமணியன். நாடகச் செம்மல் பம்மல் சம்பந்த முதலியார் அப்போது சாரங்கதரன் கதையை வெற்றிகரமான நாடகமாக நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. அதனால் அதே கதையைப் படமாக எடுக்க முடிவு செய்தனர். ஆனால் இது ‘நவீன சாரங்கதரா’. பம்மலின் சாரங்கதராவில் கதாநாயகி சித்ராங்கி இளவரசன் சாரங்கதரன் மீது வீண் பழி சுமத்தி, அதனால் அவன் கடும் தண்டனை அனுபவிக்க நேர்வதைக் காணச் சகிக்காமல் தற்கொலை செய்து கொள்வாள்.

ஆனால் ‘நவீன சாரங்கதரா’வில் சித்ராங்கி நல்லவள். அவளுக்கு சாரங்கதரன் மீது உண்மையான ஆத்மார்த்தமான காதல். ஆனால், தோழிதான் இளவரசன் மீது வீண் பழி சுமத்துவாள். இப் படத்தில் இளவரசன் சாரங்கதரனாக பாகவதர்; சித்ராங்கியாக எஸ்.டி.எஸ். இதில் தனது அபிமானப் பாடலான ‘ஞானகுமாரி நளின சிங்காரி..’ பாடலைப் படத்தில் சேர்த்துக் கொள்ளும்படி பாகவதர் வற்புறுத்தியுள்ளார். ஆனால், கதைக்குச் சற்றும் பொருத்தமில்லாத அப் பாடலைச் சேர்க்க மறுத்து விட்டார் கே. சுப்பிரமணியம். இருந்தாலும் பாகவதரின் பிடிவாதம் இதில் வென்றது.

இதனால் இயக்குநருக்கும் பாகவதருக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்பட்டது. ‘பவளக்கொடி’, ‘நவீன சாரங்கதரா’ படத்துடன் இந்த மூவர் இணை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு பாகவதர் & எஸ்.டி.எஸ் இணை தொடரவில்லை. பாகவதர் வெளியேறுகிறார். எஸ்.டி.எஸ். – கே.சுப்பிரமணியம் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. முதல் மனைவி பெயர் மீனாட்சி அம்மாள், அவரின் சம்மதத்துடன் எஸ்.டி. எஸ்ஸைத் திருமணம் செய்து அனைவரும் ஒரே வீட்டிலேயே கடைசி வரை வாழ்ந்தனர். இசைக்கலைஞர் ‘அபஸ்வரம்’ ராம்ஜி எஸ்.டி.எஸ்.ஸின் ஒரே மகன்.

ஆண் வேடத்திலும் அசத்திய நடிகையர்

அடுத்த படம் எஸ்.டி.சுப்புலட்சுமி பெயரைப் பயன்படுத்திப் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது ‘பக்த குசேலா‘. இந்தப் படத்தில் அவர் கிருஷ்ணனாக ஆண் வேடமிட்டு நடிக்கிறார் என இப்படத்தின் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அறிவித்தார். அக்காலத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘ஒரு பொம்மனாட்டியாவது ஆம்பளையா நடிக்கறதாவது’ என பொதுமக்கள் மூக்கில் விரல் வைக்கத் தூண்டும் வகையில் பத்திரிகைகளும் எழுதின. கல்கியும் இது குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.

ஒரு பெண், ஆணாக நடிப்பது அதிலும் கிருஷ்ணன் வேஷம் போடுவது சரியல்ல என்ற முடிவில் அவர் தீர்மானமாக இருந்தார். கே.சுப்பிரமணியம், எஸ்.டி. எஸ். இருவரும் கல்கியின் வீடு தேடிச் சென்று படத்தின் பிரத்யேகக் காட்சிக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கல்கி தன் மூன்று வயது மகள் ஆனந்தியுடன் சென்று படம் பார்த்தார். படத்தில் வருவது அசல் கிருஷ்ணன்தான் என்று மகள் ஆனந்தி ஆச்சர்யப்பட்டுப் பேசியதைக் கண்டு கல்கியும் தன் மனதை மாற்றிக் கொண்டு படத்துக்கு முன்னோட்டம் எழுதினார்.

ஆனால், படம் வெளிவருவது தாமதமானது. இத் தாமதத்தை அஸன்தாஸ் பயன்படுத்திக் கொண்டு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து கே.பி.சுந்தராம்பாளை நந்தனாராக நடிக்க வைத்து ‘நந்தனார்’ படத்தை எடுத்து வெளியிட்டு முந்திக் கொண்டார். எஸ்.டி.எஸ். இப்படத்தில் கிருஷ்ணன் வேடத்துடன், குசேலரின் மனைவி சுசீலை வேடத்தையும் ஏற்றிருந்தார். இதன் மூலம் இரட்டை வேடமேற்ற முதல் நடிகை என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஒரு மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக அனைவரும் அதை ஏற்பது தமிழ்த்திரைக்கு வாடிக்கைதானே!

கே.பி.சுந்தராம்பாள், எஸ்.டி. சுப்புலட்சுமியைத் தொடர்ந்து டி.பி.ராஜலட்சுமி, எம்.ஆர்.சந்தான லட்சுமி, எம்.எஸ். விஜயாள், குமாரி ருக்மணி ஆகியோர் கிருஷ்ணனாகவும், எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்தகோகிலம், யூ.ஆர். ஜீவரத்தினம் போன்றோர் நாரதராகவும் ஆண் வேடமிட்டுப் படங்களில் நடித்துள்ளனர். சமூகமும் பெண்கள், ஆண் வேடமேற்று நடிப்பதை ஏற்றுக்கொண்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமியை திரைப்படங்களில் நடிப்பதற்கு அழைத்து வந்ததில் பெரும் பங்கு இவருக்குண்டு.

பிரிட்டிஷ் ஆட்சியில் புரட்சி படைத்த தியாக பூமி

விடுதலை இயக்கத்தையும் காந்தியின் அகிம்சை, சீர்திருத்தக் கருத்துகளையும் இணைத்து கல்கி எழுதிய தொடர்கதை ‘தியாக பூமி’. கே. சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கினார். பாபநாசம் சிவன், எஸ்.டி.எஸ், பேபி சரோஜா என அருமையான கூட்டணியில் கதை. தமிழ்நாட்டில் வெளிப்படையான அரசியலை முதன்முதலாகத் திரையில் முன் வைத்த படைப்பு ‘தியாக பூமி’. இப்படத்தின் கதை மிகவும் விரிவானது. தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டுப் போன கணவன், இப்போது தன்னை அவருடன் சேர்ந்து வாழும்படி வற்புறுத்த உரிமை இல்லை என கதாநாயகி நீதிமன்றத்தில் வாதாடுகிறார்.

சட்டத்தின் மூலம் கணவன் வாதாடி வெற்றி பெற்றாலும், மனைவியோ நடைமுறை வாழ்க்கையில் அவனுடன் இணைந்து வாழ மறுத்து விடுகிறாள். தர்க்கப்பூர்வமாக அவள் பேசும் வசனங்கள் 1939 ஆம் ஆண்டுகளில் நிச்சயமாக இந்தச் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அத்துடன் அக்ரஹாரத்துப் பெரியவர் சேரிக்கு வருவதையும் அங்கேயே வாழ்க்கை நடத்துவதையும் அன்றை நிலையில் ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்ன? அத்துடன் மனம் திருந்திய கணவன், தன் மனைவியுடன் இணைந்து வந்தே மாதரம் முழக்கமிட்டவாறே வீதிகளில் ஊர்வலமாகச் செல்வதும் அன்றைக்கு சட்ட விரோதம். புரட்சிகரப் பாத்திரங்களை உலவ விட்ட இப்படம் தமிழ்நாடு முழுவதும் ஓஹோ என 12 வாரங்கள் ஓடியது.

அதற்குள் படத்தை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. நாளை முதல் படத்துக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற செய்தி தெரிந்ததும் சென்னை கெயிட்டி தியேட்டரின் கதவுகள் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டு ‘இலவசமாக, இரவு முழுதும் இடை வெளியின்றித் தியாகபூமி‘ திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. இடையில் ‘அனந்த சயனம்’ என்ற படத்தில் கே. சுப்பிரமணியம், எஸ்.டி.சுப்புலட்சுமி இருவரும் இணைந்தே நடித்தனர். ஆனால், படம் பெரிதாகப் பேசப்படவில்லை. அடுத்து அவர் தயாரித்த இரண்டாம் உலகப் போருக்கான ஆதரவுப் பிரசாரப் படம் ‘மானசம்ரக்ஷணம். இதில் ஜப்பானியக் கப்பற்படைத் தாக்குதலிலிருந்து சென்னையைக் காக்கும் தமிழ்ப்பெண் வேடத்தில் நடித்தார்.

50களின் நாயக, நாயகியரின் தாயாக உரு மாற்றம்

1950களில் பொருளாதார சிக்கல்களின் பொருட்டு மீண்டும் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பின் ‘அந்தமான் கைதி‘ படத்தில் நடிக்க வந்த அவருக்குத் திரையுலகின் நடைமுறைகளும் களமும் மிகவும் புதிதாகத் தோன்றின. ஒரே நேரத்தில் ஒரே நடிகர், நடிகைகள் பல படங்களில் பங்கேற்று நடிப்பது அவருக்கு அதிசயிக்கத்தக்க ஒன்றாக இருந்தது. இது குறித்து அவர் கூறியது: ’’அந்த நாட்களில் டைரக்டர் முதல் நடிகர்கள் வரை ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்தை ஒத்துக் கொள்வோம்!’’

இதுதான் எப்போதும் மாறாதது. ஒவ்வொரு பத்து அல்லது பதினைந்து ஆண்டு இடைவெளியில் ‘அம்மா‘ வேடத்துக்கு மாறும் கதாநாயகிகளால் சொல்லப்படும் வார்த்தைகள். நம் நினைவில் நிற்கும் பாத்திரங்கள் என்றால், ‘கல்யாணப்பரிசு’ பட நாயகிகள் சரோஜா தேவி, விஜயகுமாரியின் அம்மா, குலேபகாவலியில் எம்.ஜி.ஆரின் அம்மா, ‘பட்டினத்தார்’ படத்தில் சாமியாராகிப் போன தம்பி பட்டினத்தாருக்கு அப்பத்தில் விஷம் வைத்துக் கொல்ல நினைக்க, அவரோ அதை அறிந்து, ‘நஞ்சப்பம் வீட்டைச் சுடும்’ என அப்பத்தை வீட்டு ஓட்டின் மீது தூக்கி எறிய வீடு தீப்பற்றி எரியும்.

தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரும் அக்காள் பாத்திரம், சம்பூர்ண ராமாயணத்தின் கோசலை, பறக்கும் பாவையில் எம்.ஜி.ஆரின் அம்மா, எங்கிருந்தோ வந்தாள் படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவை வளர்க்கும் தாசிப்பெண் என்று பல பாத்திரங்களையும் ஏற்று நடித்தவர். 1971ல் கே.சுப்பிரமணியம் மறைவுக்குப் பின் கதாகாலட்சேபம் செய்வதிலும் முனைப்புடன் ஈடுபட்டார். பல படங்களில் அம்மாவாகவும் அவரைப் பார்க்க முடிந்தது. மொத்தமாகவெ 50 படங்கள்தான் நடித்திருப்பார். 1987 ஆம் ஆண்டு முதுமையின் காரணமாக மரணமடைந்தார். இந்த ஆண்டு எஸ்.டி. சுப்புலட்சுமிக்கு நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்த படங்கள்

பவளக்கொடி, நவீன சதாரம், நவீன சாரங்கதரா, உஷா கல்யாணம், பக்த குசேலா, பால யோகினி, மிஸ்டர் அம்மாஞ்சி, தியாக பூமி, அனந்த சயனம், மான சம்ரட்சணம், விகட யோகி, அந்தமான் கைதி, பணம், துளி விஷம், தூக்குத் தூக்கி, குலேபகாவலி, சம்பூர்ண ராமாயணம், ராணி லலிதாங்கி, ராஜராஜன், யானைப்பாகன், கல்யாணப்பரிசு, படித்தால் மட்டும் போதுமா?, பட்டினத்தார், சித்தி, பறக்கும் பாவை, பட்டணத்தில் பூதம், எங்கிருந்தோ வந்தாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஜா ரோலுக்கு தாஜா! (சினிமா செய்தி)
Next post நான் ஒழுக்கமானவ இல்லடா பச்ச பச்சையாதான் பேசுவேன் | உங்க அம்மாகிட்ட காட்டுங்கடா இந்த VIDEO