‘அடி மடியில் கை’!!(கட்டுரை)
மாகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்த வேண்டுமென்று, சிறுபான்மைக் கட்சிகள் முனைப்புடன் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக ‘கண்களைப் பொத்திக் கொண்டு’ கையை உயர்த்தியவர்கள்தான், இப்போது பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கடுமையாக வலியுறுத்துகின்றனர் என்பது கவனத்துக்குரியதாகும்.
மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு, புதிய முறைமை உருவாக்கப்பட்டுள்ளமை பற்றி நாம் அறிவோம். அந்த வகையில் மூன்று முக்கிய திருத்தங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவையாவன:
1. மாகாணசபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்படும் நியமனப்பத்திரத்திலுள்ள மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில், 30 சதவீதத்துக்கும் குறையாத பெண்கள் இருத்தல் வேண்டும்.
2. குறித்த திகதியிலிருந்து ஒரு வார காலத்துக்குள், எல்லா மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துதல் வேண்டும்.
3. தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையிலான கலப்பு முறையில் தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் மேற்படி திருத்தங்கள் கொண்டுவரப்பட்டபோது, இவற்றிலுள்ள சாதக பாதகங்கள் குறித்து, சிறுபான்மைக் கட்சிகள் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.
குறிப்பாக, முஸ்லிம் கட்சிகள் இந்த விடயத்தில் மிகவும் பொடுபோக்குத்தனத்துடன் நடந்து கொண்டன. மிக அவசரமாகக் கொண்டு வரப்பட்ட மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு, அதை விடவும் அவசரமாக முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தன.
மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு முஸ்லிம் கட்சிகள் வழங்கிய ஆதரவு தொடர்பில், எந்தவிதமான நியாயங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதனால்தான் முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இது விடயத்தில், ‘தவறு நடந்து விட்டது’ எனக் கூறிக் கொள்கின்றன.
மாகாண சபைகளில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவங்களில் மிக மோசமான வீழ்ச்சியை ஏற்படுத்தும் திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கிய பின்னர், ‘தவறு நடந்து விட்டது’ என்று சொல்லி, தலையைச் சொறிவதில் எந்தவித மாற்றங்களும் ஏற்பட்டு விடப் போவதில்லை.
உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள், கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையாகும். இந்த நிலையில், புதிய முறைமையின் கீழ் அண்மையில் நடத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலானது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
நடந்த தேர்தலில் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள் என்பதில் இன்றுவரை பொதுமக்களில் ஒரு பகுதியினருக்குத் தெளிவுகளில்லை. தேர்தலில் நேரடியாக அதிக உறுப்பினர்களை வென்றெடுத்த கட்சிகள், சில உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க முடியாமல் போனமை, மேற்படி புதிய தேர்தல் முறைமையின் விசித்திரங்களில் ஒன்றாகும். இதனால், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியமான சில சபைகளை இழந்தது.
இது இவ்வாயிருக்க, புதிய முறையின் கீழ், மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்காக தொகுதிகளை நிர்ணயிக்கும் வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கையும் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதனால், பழைய விகிதாசார முறையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
‘பொல்லைக் கொடுத்து, அடிவாங்குதல்’ என்பதற்கு, இது மிகச் சிறந்த உதாரணமாகும். முன்பின் யோசியாமல், மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு முஸ்லிம் கட்சிகள் வழங்கிய ஆதரவுதான், தற்போது முஸ்லிம் சமூகத்துக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்னொருபுறம், மாகாணசபைத் தேர்தல்களைப் புதிய முறைமையின் கீழ்தான் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருக்கின்றார் என்று கூறப்படுகிறது.
அமைச்சர் பைசர் முஸ்தபாவும் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுக்க உள்ளதாகவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஆட்சியமைப்பதற்காகச் சிறுபான்மைக் கட்சிகளிடம், சிங்களப் பெருந்தேசியக் கட்சிகள் ஆதரவு கேட்டுக் கெஞ்சிக் கூத்தாடும் நிலையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில், சிங்களப் பெருந்தேசியக் கட்சிகள் ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான புதிய முறைமையானது, சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவங்களில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலைவரமானது சிங்களப் பெருந்தேசியக் கட்சிகளுக்கு சந்தோசமானதாகவே இருக்கும். அதனால்தான், பெரிய கட்சிகளின் தலைவர்கள் புதிய முறைமையின் கீழ், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் உறுதியாக இருக்கின்றனர் போல்த் தெரிகிறது.
இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்து, சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும் வகையிலான புதிய தேர்தல் முறைமைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றமையாகும்.
சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகளான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், எம்.ஏ. சுமந்திரன் போன்றோர், பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றபோதிலும், புதிய முறையில் நடத்துவதிலேயே ஜனாதிபதி ஆர்வம் காட்டி வருகின்றார் என்பதை வைத்தே, ஏராளமான விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆயினும், இந்த விடயத்தில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி நழுவல் போக்கு ஒன்றைக் கைக்கொள்வது போல் தெரிகிறது. மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு, அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் ஐ.தே.கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேரடியாகக் களமிறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதாவது, மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான புதிய முறைமையொன்றை உருவாக்குவதில் ரணில் விக்கிரமசிங்க தீவிர ஈடுபாடு காட்டியிருந்தார்.
ஆனால், தற்போது ஐ.தே.கட்சி இது விடயத்தில் வேறொரு முகத்தைக் காட்டுவது போல்த் தெரிகிறது. “புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியாது விட்டால், பழைய முறையிலாவது தேர்தலை உடனடியாக நடந்துங்கள்” என்று, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளமை இங்கு கவனத்துக்குரியதாகும்.
இவ்வாறானதொரு நிலையில், புதிய முறைமையின் கீழ்த்தான் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதென இறுதித் தீர்மானமொன்றை ஆட்சியாளர்கள் எடுப்பார்களாயின், அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் கட்சிகள் என்ன முடிவை எடுக்கும் என்பது கேள்விக்குரியதாகும்.
மாகாணசபைத் தேர்தலுக்கான புதிய முறைமையானது, தமிழர்களை விடவும் முஸ்லிம்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
அப்படியாயின், முஸ்லிம்களின் அரசியல் அடி மடியில் கையை வைக்கும் ஆட்சியாளர்களின் திட்டத்தைத் தோற்கடிக்க வேண்டியது, ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் பொறுப்பாகும். ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொண்டாயினும், இதைச் செய்தே ஆகவேண்டும். ஆனால், அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ளும் தீர்மானங்கள் எதையும், இந்த விடயத்தில் எடுப்பார்களா என்பது சந்தேகம்தான்.
இதேவேளை, மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக, நாளை புதன்கிழமை அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இதன்போது, புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கான ஆதரவை கட்சிகளிடம் பெற்றுக் கொள்வதற்கே அமைச்சர் முஸ்தபா முயற்சிப்பார். காரணம், புதிய முறையில் தேர்தலை நடாத்துவதுதான் ஜனாதிபதியின் விருப்பமாக உள்ளது. இருந்தாலும், முஸ்லிம் கட்சிகள் இது தொடர்பில் தமது விடாப்பிடியான தீர்மானத்தைத் தெரிவிக்க வேண்டும்.
புதிய தேர்தல் முறைமை முஸ்லிம் சமூகத்துக்குப் பாதகமானது என்றால், அதை எதிர்த்தே ஆகவேண்டும். புதிய முறைமையைக் கொண்டுவருவதற்கு ஆதரவு வழங்கிய ‘பாவம்’ ஏற்கெனவே முஸ்லிம் கட்சிளைச் சுற்றிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், அந்தப் ‘பாவத்தை’க் கழுவுவதற்கான சந்தர்ப்பமொன்று, முஸ்லிம் கட்சிகளுக்கு கிடைத்துள்ளதாகவே தற்போதைய சூழ்நிலையைப் பார்க்க முடிகிறது.
புதிய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்த பிறகும், அரசாங்கம் அதைக் கணக்கில் எடுக்காமல், தேர்தலை நடாத்துவதற்கான முடிவை எடுத்தால், ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் முடிவொன்றை, முஸ்லிம் கட்சிகள் எடுக்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது சமூகத்தின் அபிலாஷைகளை விடவும் தமது அபிலாஷைகளுக்கு முன்னுரிமை கொடுத்துக் கொண்டு, தமது அரசியலை மேற்கொண்டு வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை அதிகமான சந்தர்ப்பங்களில் கேட்கக் கிடைத்துள்ளது.
அரசியல் என்பது வியாபாரமாகிப் போனமைதான் இந்த நிலைவரங்களுக்குக் காரணமாகும். நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்ற அநேகமான தருணங்களில், தமது ஆதரவைத் தெரிவிப்பதற்காக, முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டார்கள் எனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு கவனத்துக்குரியதாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்காகவும், சிலர் பணம் பெற்றுக் கொண்டதாக, நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையும் நினைவுகொள்ளத்தக்கதாகும்.
இவ்வாறான பல காரணங்களால், முஸ்லிம் கட்சிகள் மீது, முஸ்லிம் மக்களுக்குள்ள நம்பிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது என்பதை, இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
சமூக அக்கறையோடு முஸ்லிம் கட்சிகள் செயற்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளில் உண்மைகள் இல்லாமலுமில்லை. அப்படி அக்கறை இருந்திருந்தால், எடுத்தேன் – கவிழ்த்தேன் எனும் மனநிலையில், மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு, முஸ்லிம் கட்சிகள் கைகளை உயர்த்தி, ஆதரவை வழங்கி இருக்க மாட்டா.
எது எப்படியோ, தாங்கள் செய்த பாவத்தைக் கழுவுவதற்குக் கிடைத்துள்ள தற்போதைய சந்தர்ப்பத்தையாவது, முஸ்லிம் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றவா என்று பார்ப்போம்.
Average Rating