வட கொரியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா!!(உலக செய்தி)
முழுமையாக அணு ஆயுதங்களை கைவிடாமல், வட கொரியா மீதான தடைகள் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அவர், அணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளதை குறிப்பிட்டார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பெரிய அளவில் இராணுவ நடவடிக்கைகளையும் ஆயுதங்களையும் குறைத்துக் கொள்ளும் என்று அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 12 ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோரின் சந்திப்பை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.
கொரிய தீபகற்கத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், எப்போது மற்றும் எவ்வாறு அணு ஆயுதங்கள் கைவிடப்படும் என்ற எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், தென் கொரியாவில், சிங்கப்பூர் உச்சி மாநாட்டின் விளைவுகள் குறித்து விவாதித்த மைக் பாம்பேயோ, “வட கொரியாவுடன் இன்னும் அதிக பணிகள் செய்ய இருப்பதாக” கூறினார்.
“அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் அணு ஆயுதங்களை கைவிடும் இலக்கை அடைந்து விடலாம்” என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அணு ஆயுத திட்டங்களை தகர்ப்பதை, உறுதிபடுத்த வேண்டிய அவசியத்தை வட கொரியா புரிந்து கொண்டுள்ளது என்று நம்புவதாகவும் மைக் கூறினார்.
உறுதிப்படுத்தப்படும் விவகாரங்கள் குறித்து ஆவணங்களில் ஏன் ஏதும் குறிப்பிடப்பவில்லை என்று ஊடகவியலாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மைக் பாம்பேயோ, அக்கேள்விகள் “அபத்தமாகவும்”, “அவமதிக்கும் வகையிலும்” இருப்பதாக கூறினார்.
முன்னதாக, இனி வட கொரியா அணுசக்தி அச்சுறுத்தல் தரும் நாடாக இருக்காது என்று அறிவித்த டிரம்ப், “அனைவரும் இனி பாதுகாப்பாக உணரலாம்” என்றார்.
சிங்கப்பூர் உச்சி மாநாட்டின் முக்கிய பிரகடனங்கள்
1. அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.
2. கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.
3. ஏப்ரல் 27, 2018 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.
4. அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.
Average Rating