மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்!!(கட்டுரை)
வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர், அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருடன், கலந்துரையாடல்களை நடத்தினார்.
இந்தச் சந்திப்புகளில், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை, நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஆனால், இந்தக் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாண முதலமைச்சர்
சி.வி. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற எந்தவொரு நிகழ்விலும், முதலமைச்சர் பங்கேற்பதைத் தவிர்த்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளைப் புறக்கணிப்பதாக முதலமைச்சர் அறிவிக்காவிடினும், கிட்டத்தட்ட அதேபாணியில் தான் அவர் நடந்து கொண்டார்.
ஆனாலும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியமர்வு, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய நீண்ட கடிதம் ஒன்றை, முதலமைச்சர் தனது செயலாளர் மூலமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வில், பங்கேற்காதது ஏன் என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னமும் வெளிப்படுத்தாத நிலையில், பல்வேறு ஊகங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள அரசாங்கம், இத்தகைய சந்திப்புகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதால் தான், இந்தக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்தார் என்பதும் அத்தகைய ஊகங்களில் ஒன்று.
ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இதுபோன்ற நிலை தோன்றுவது, இதுதான் முதல்முறை என்றில்லை. ஏற்கெனவே, தற்போதைய கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலும், இருவருக்கும் இடையில் அறிக்கைப் போர்கள் நடந்தன.
அதனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான சில பயணங்களின் போது, முதலமைச்சர் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். எனினும் ,பிறகு ஒரு கட்டத்தில், இருவரும் கசப்புணர்வுகளை மறந்து, நிகழ்வுகளில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.
ஆனால், இப்போது திடீரென, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்வுகளை முதலமைச்சர் திட்டமிட்டே புறக்கணித்திருந்தார் என்றால், அதற்கான காரணங்களை அவர், தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அதை அவர், அடுத்தடுத்த தனது கேள்வி -பதில் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்.
இந்தநிலையில், ஜெனீவா காரணங்களை முன்னிறுத்தியோ, அல்லது, வேறு அரசியல் காரணங்களின் நிமித்தமோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களை முதலமைச்சர் புறக்கணித்திருப்பது சரியானதா என்ற கேள்விகள் உள்ளன.
ஜெனீவாவில் இந்தமாதம் நடக்கப்போகும் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கியத்துவம் பெறப்போவதில்லை. அது சூடுபிடிக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன.
இம்முறை கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் குறித்த விவாதம் ஏதும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, அரசாங்கம் அங்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான நிகழ்வுகளைப் புறக்கணிப்பதன் மூலம், ஜெனீவாவில் எதையும் சாதித்து விட முடியாது. அது வேறொரு களம்.
அரசாங்கம், ஜெனீவாவில் போய் இந்தக் கூட்டத்தை, தனக்கான கேடயமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று முதலமைச்சர் அஞ்சுவது சரியானால், அவர் ஏன், இதுவரை ஜெனீவா சென்று உண்மையை உரைக்கத் தயாராக இருக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பலாம். இங்கு, முதலமைச்சரின் புறக்கணிப்புக்கு, ஜெனீவா என்பது சரியான காரணமாகத் தென்படவில்லை.
ஒருவேளை, ஜெனீவாவை உண்மைக் காரணமாக எடுத்துக் கொண்டாலும், முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற விடயத்துக்கும், இப்போதைய நடவடிக்கைக்கும் அது தொடர்பற்றதாக இருக்கும்.
அதாவது, வடக்கில் முன்னெடுக்கப்படும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்களில், மாகாண அரசாங்கத்தையும் பங்காளியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார்.
அப்படியான நிலையில், மத்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து ஆராயும் கூட்டத்தை, முதலமைச்சரே புறக்கணித்துக் கொண்டு, அத்தகையதொரு வாய்ப்பைத் தருமாறு கேட்பது அர்த்தமற்றது,
அரசாங்கமே இதை ஒரு காரணமாகக் கூறி, முதலமைச்சரின் கோரிக்கையைத் தட்டிக்கழிக்க முற்படும் என்பதை மறந்து விடலாகாது.
அபிவிருத்தி என்பது, வடக்குக்கு முக்கியமானது. அதை முன்னெடுப்பதில் அரசியல் இலாப – நட்டங்களை எதிர்பார்க்க முனைந்தால், அது ஆபத்தான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.
போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அபிவிருத்தி அரசியலை, ஓர் உபாயமாக அரசாங்கம் முன்னெடுத்தது. அப்போது அதைத் தமிழர் தரப்பு, தீவிரமாக எதிர்த்து வந்தது.
ஆனாலும், அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, டக்ளஸ் தேவானந்தாவையும் ஆளும்கட்சியையும் பலப்படுத்திக் கொள்வதில், ஆட்சியில் இருந்த தரப்புகள் வெற்றி கண்டன.
போர் முடிவுக்கு வந்த பின்னரும், அபிவிருத்தி அரசியல் உபாயத்தைக் கையாண்டு, தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை நசுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
போரால் சீரழிந்திருந்த வடக்கை அபிவிருத்தி செய்வதன் மூலம், தமிழ் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, அவர்களை அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் இருந்து அகற்ற, மஹிந்த அரசாங்கம் முனைப்புக் காட்டியது.
ஆனாலும், 2013 மாகாணசபைத் தேர்தல் மூலமும், 2015 ஜனாதிபதித் தேர்தல் மூலமும், தமிழ் மக்கள் அதற்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தனர்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், அபிவிருத்தி அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. பேரினவாதக் கட்சிகளை வடக்கில் பலப்படுத்திக் கொள்வதற்கு இது கையாளப்படுவதுடன், வடக்கு மாகாணசபையின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கும் இதை ஓர் ஆயுதமாக அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. இத்தகைய கட்டத்தில், வடக்கு மாகாணசபை, தனக்கான உரிமையையும் இடத்தையும் தக்கவைத்துக் கொள்ள மத்திய அரசாங்கத்துடன் போராட வேண்டிய நிலையில் உள்ளது.
இழுபறிப் போராட்டங்களை நடத்தியே, அபிவிருத்தி சார் விடயங்களில் மாகாண அரசாங்கத்தின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.
அரசியல் உரிமை தான் முக்கியம்; அபிவிருத்தி எல்லாம் அதற்கு அப்புறம்தான் என்று நீண்டகாலம் பயணிக்க முடியாது. வடக்கின் அபிவிருத்திக்காக, பெறும் நிதி உதவிகளை, மத்திய அரசாங்கம் வேறு தேவைகளுக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் பயன்படுத்துவதாக அண்மையில்கூட முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அப்படியான நிலையில், அபிவிருத்தி சார்ந்த கூட்டங்களை அவர் புறக்கணிப்பதால், வடக்கின் அபிவிருத்தியில் பங்காளர் என்ற நிலையில் இருந்து, வடக்கு மாகாணசபை ஒதுக்கப்படும் நிலையே ஏற்படும். கடந்த காலங்களில், இத்தகைய அபிவிருத்திக் கூட்டங்களைக் புறக்கணிக்க, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் எடுத்த முடிவு, எதையும் சாதிக்கவில்லை.
மஹிந்த அரசாங்கமாயினும் சரி, ரணில் அரசாங்கமாயினும் சரி, வேறு எந்த அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தாலும் சரி, வடக்கின் கோரிக்கைகளை முழுமையாக, செவிமடுக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அதில் அவர்கள் அரசியல் நலன்களை எதிர்பார்ப்பார்கள்.
இப்படியானதொரு நிலையில் மாகாணசபை தான், மத்திய அரசாங்கத்தை இழுத்துப் பிடித்து வழிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளது. அப்படியான பொறுப்பை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தட்டிக் கழிக்க முற்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.
இன்னமும், மாகாணசபை ஆட்சியில் இருக்கப்போவது ஐந்து மாதங்கள் தான், மத்திய அரசாங்கத்துடன் முட்டி மோதி, எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க முதலமைச்சர் உத்தேசித்திருக்கலாம்.
புதிய கட்சி பற்றிய திட்டங்களில் இருக்கும் அவர், அரசாங்கத்துக்கு எதிரான போக்கைத் தீவிரப்படுத்துவதன் மூலம், தனது ஆதரவாளர்களை உசுப்பேற்றுவதற்கு முயல்கிறாரா என்றும் தெரியவில்லை.
எது எவ்வாறாயினும், வடக்கு மாகாணசபை, தனக்கான உரித்துகளை மத்திய அரசாங்கத்திடம் விட்டுக் கொடுக்கக் கூடாது. மத்தியில் உள்ள அரசாங்கமும் ஆட்சியாளர்களும், எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள். ரணில் ஒன்றும் அதற்கு விதிவிலக்கானவர் அல்லர். அத்தகைய போக்குக்கு விட்டுக் கொடுக்காமல் எதிர்த்து நிற்பதன் மூலம் தான், அவர்களைக் கட்டுப்படுத்த முடியும்.
மாறாக, புறக்கணிப்பு என்ற பெயரில் ஒதுங்கிப் போகும் போது அல்லது அதைவிட்டு ஓடும் போது, மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள், இன்னமும் தமது திட்டங்களைச் சுலபமாகச் செயற்படுத்தி விடுவார்கள். இது கடந்த காலம் கற்றுத் தந்த பாடம்.
Average Rating