பரவ வேண்டியது விழிப்புணர்வுதான்…பதற்றம் அல்ல!(மருத்துவம்)
Nipah feverமனித வாழ்க்கையில் எப்போதும் நோய் நொடிகளுக்குப் பஞ்சம் இல்லை. காடு, மலை மற்றும் மணல்வெளியில் இயற்கையோடு ஒன்றி வசித்த காலத்திலும் சரி… அறிவியல் யுகத்தில் நாகரிகம் என்ற பெயரில் மரபை மீறி வாழும்போதும் சரி… புதுப்புது நோய்கள் மனித சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.
பழங்காலத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், நோயின் சுவடு அறியப்படாமலே பல உயிர் இழப்புகள் நிகழ்ந்தன. இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கும் மருத்துவ வளர்ச்சியின் காரணமாக நோயின் பெயரையும், அதன் காரணத்தையும் கண்டறிந்துவிட முடிகிறது.
அந்த வரிசையில் தற்போது நிபா வைரஸ் ஜூரம் இடம் பிடித்து இருக்கிறது. பொதுமக்களுக்கு நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுதான் இப்போதைய தேவை. அதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை. நிபா பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளைப் பார்ப்போம்…
*மலேசியாவில் உள்ள சுங்காய் நிபா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 1998-ல் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். அவரது உடலைப் பரிசோதித்தபோது, பன்றிகள் மூலமாக பரவிய வைரஸ் காரணமாக அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
சுங்காய் நிபா என்ற இடத்தில் முதன்முதலாக இந்த வைரஸ் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டதால், அவ்விடத்தின் பெயரே நோயின் பெயராகவும் வைக்கப்பட்டது. முதன்முதலில் பன்றிகளிடம் இருப்பதாக கண்டறியப்பட்ட இவ்வைரஸ் பின்னர் நாய், பூனை, ஆடு, குதிரை போன்ற செல்லப் பிராணிகளிடம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
*பழம்தின்னி வெளவால் உடம்பில் காணப்படுகிற ஒரு வகையான கிருமிதான் நிபா வைரஸ் ஆகும். வெளவால் கடித்த பழத்தை நாம் சாப்பிடுவதன் மூலமாகவும், அவற்றின் உடலில் இருந்து வெளியேறுகிற சிறுநீர், மலம் மற்றும் எச்சில் படிந்த மரம், செடிகளைத் தொடுவதன் காரணமாகவும் இந்த நோய் நமக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
*மலேசியாவில் நிபா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷ், சிலிகுரி(மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் இந்த நோய் காணப்பட்டதை உறுதி செய்தனர். சிலிகுரியில், இந்த நோய் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கும், அவர்களைப் பார்க்க வந்த உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
*நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து, அடுத்தவர்க்கு எளிதாக பரவும் என்பதற்கு சிறந்த உதாரணம் செவிலியர் லினி. 31 வயதான இவர் தன்னலம் கருதாமல் கோழிக்கோடு பெரம்பரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை தந்து உடனிருந்து கண்காணித்தார். இவருக்கு நிபா தொற்று ஏற்பட்டதன் காரணமாக இவரும் உயிரிழந்தார். மேலும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறையினரே இவரது உடலை எரித்து இறுதிச்சடங்கினை செய்தனர்.
*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்குத் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் காய்ச்சல் இருக்கும். மேலும், குழப்பமான மனநிலையுடன் காணப்படுவார்கள். ஒரு சிலர் நினைவு பிறழ்ந்து, கோமா நிலைக்குச் செல்ல நேரிடலாம்.
*நிபா காய்ச்சலால் நுரையீரல் பாதிப்பு அடைவதற்கான ஆபத்து உள்ளது. ஆனாலும் இது பெரிய பிரச்னை இல்லை. குணமாக்கிவிட முடியும்.
*நிபா வைரஸால் மூளைக்காய்ச்சல் ஏற்படும்போது உயிரிழப்பு அபாயம் ஏற்படலாம். மலேசியாவில் இந்த வைரஸால் காய்ச்சல் வந்து பாதிக்கப் பட்டவர்களில் 40 சதவீதம் பேர் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தனர் என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
*நிபா வைரஸால் ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் வந்து குணமானாலும், அதனால் ஏற்படுகிற பின்விளைவுகள் பல வருடங்களுக்கு நீடிக்கும். இவர்களுடைய தோற்றத்தில் வித்தியாசம் ஏற்படலாம். இழுப்பு நோய் வரலாம்.
*கடந்த 20 வருடங்களாகத்தான் பழந்தின்னி வெளவாலால் ஏற்படுகிற இந்த நோயைப் பற்றி வெளியுலகத்துக்குத் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. எனவே, இதனுடைய வீரியம் பற்றி இன்னும் முழுவதும் அறியப்படவில்லை. இந்த நோய் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாதிக்கக் கூடியது. முழு உடல் ஆரோக்கியம் உள்ளவர்களும் நிபா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.
*வயது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடிப்படையில், நிபா ஜூரத்தை எதிர்கொள்வதில் வித்தியாசம் இருக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. சிறு குழந்தைகள் தொடங்கி நோயால் அவதிப்படுபவர்கள் முதுமைப் பருவத்தினர் என எல்லோருக்கும் இந்த வைரஸால் பாதிப்பு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. எனவே, இதைப்பற்றி நிறைய ஆய்வுகள் நடத்த வேண்டி உள்ளது.
*தற்போது கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருப்பதால் இந்த அபாயம் நமக்கு இல்லை. எனவே, நாம் பதற்றப்பட வேண்டியதும் இல்லை.
*கேரள மாநிலத்தில் வசித்தவர்கள் தமிழகத்துக்கு வந்தபிறகு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடி மருத்துவ நடவடிக்கை அவசியம். மருத்துவர்கள் காய்ச்சலுக்கான மாத்திரைகள் கொடுத்துவிட்டு, நிறைய தண்ணீர் குடிக்க சொல்வார்கள். இவர்கள் பல மணி நேரம் ஓய்வெடுப்பது நல்லது.
*தற்போதைய நிலையில் நிபா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகள் இல்லை. இந்நோயின் பாதிப்பு ஒருவருக்கு இருப்பது தெரிய வந்தால், அவரைப் பொது இடங்களுக்குச் செல்ல விடாமல் தனி அறையில் வைப்பது பாதுகாப்பானது. அந்த நபரை மற்றவர்கள் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்து வந்தால் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
*நிலவேம்பு கஷாயத்தினை டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தியதுபோல இயற்கை மருத்துவத்தில் பவழ மல்லியினை நிபா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். இதுபற்றியும் உறுதியான தகவல்கள் இல்லை.
*காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை பெறுவதும், காய்கறிகள், பழங்களை வெந்நீரில் கழுவி உண்பதும்தான் இப்போதைக்கு நிபா காய்ச்சலைத் தடுப்பதற்கான சிறந்த வழி.
நிபா காய்ச்சலுக்கும் வவ்வாலுக்கும் சம்மந்தமில்லை
இந்தியாவைப் பொறுத்தவரை புதிதாக எந்தவொரு நோய் வந்தாலும், மத்திய மருத்துவ குழுவினர் உடனே அது பற்றி ஆய்வு செய்வார்கள். புதிய நோய்க்கான காரணம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தருவார்கள்.
அந்த வகையில் கேரள மாவட்டங்களான கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் நிபா வைரஸ் பரவியதாக தகவல் வெளியானதை அடுத்து, மத்திய மருத்துவ குழுவினர் அம்மாவட்டங்களில் வவ்வால், பன்றி ஆகிய விலங்குகளின் உடம்புகளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தனர்.
போபால்(மத்திய பிரதேசம்), புனே(மராட்டிய மாநிலம்) ஆகிய இடங்களில் உள்ள தேசிய ஆய்வுக்கூடங்களுக்கு அவை எடுத்துச் செல்லப்பட்டன. பரிசோதனையின் முடிவில் வவ்வாலோ, பன்றியோ இதற்குக் காரணம் இல்லை என தெரிய வந்துள்ளது. அதையடுத்து, இக்குழுவினர் நிபா வ2ைரஸ் காய்ச்சலுக்கான காரணத்தை அறிய முயற்சியைத் தொடர்கின்றனர்.
Average Rating