முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம்!!(மருத்துவம்)
‘‘முடி ஏன் உதிர்கிறது என்பதற்கு பல காரணிகள் உண்டு. அவற்றில் Hair root fungus என்கிற பூஞ்சைக்காளான் பிரச்னையும் மிக முக்கியமானது. எனவே, கூந்தல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்த கோணத்திலும் யோசித்து, உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்கிறார் சரும நல மருத்துவர் ரவிச்சந்திரன்.
கூந்தலில் ஏற்படும் பூஞ்சைக்காளான் பற்றியும், அவற்றைக் கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளும் முறை பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.
‘‘நம்முடைய தலையில் முடியின் வேர்க்கால் பகுதிகளில் பூஞ்சைக்காளான், ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று ஏற்படுகிறது. இந்த நோய்த்தொற்றுக்கு நீண்டநாள் சிகிச்சை அளிக்கவில்லையெனில், அதுவே முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாகிவிடக் கூடும்.
ஸ்கால்ப் இன்ஃபெக்ஷனால் முடி கொட்டுவது அதிகரித்து நாளடைவில், 20, 30 வயதிலேயே ஆண், பெண் இருபாலருக்கும் தலையில் வழுக்கை விழுந்துவிடுகிறது. இப்படி முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் தொற்று நோய்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதில், Seborrheic Dermatitis dandruff எனப்படும் தோல்நோயானது வளர்நிலை பருவத்தில் இருக்கும் ஆண், பெண் இரு பாலரிடத்திலும் முடிவேர்க்கால்களில் பொதுவாக காணப்படக்கூடியது. பூஞ்சைக் காளான் கிருமியால் உண்டாகும் அழற்சியால் இந்த நோய் வருகிறது. தொற்று பாதித்த இடத்தில் அரிப்பு, தோல் சிவத்தல், உரிதல் மற்றும் முடிகொட்டுதல் ஏற்படும்.
பருவ வயதில் முகப்பருவோடு சேர்ந்து இந்த பொடுகுத்தொல்லை வருகிறது. சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிவதால் ஏற்படும் பொடுகு Oily Seborrheic dandruff வகையாகும். எண்ணெய்ப்பசை அதிகம் உள்ள இடங்களான மூக்கின் இரு பக்கங்கள், புருவங்கள், காதுமடல்கள், கண் இமைகள் மற்றும் மார்பின் மேல்பகுதிகள் பாதிப்படையும். இன்னொரு வகை வறட்சியான Dry Seborrheic dandruff எந்த வயதினருக்கும் வரக்கூடியது. குறிப்பிட்ட இந்த தொற்று நோய்க்கு, Anti Fungal Shampoo போட்டு வாரம் இருமுறை முடியை அலச வேண்டும்.
அதிக எண்ணெய் தடவக் கூடாது. தலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் முகத்திலும் எண்ணெய் வடியாமல் அவ்வப்போது மெல்லிய சோப் கொண்டு, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவலாம். வேறு சிகிச்சை தேவைப்படாது. கடுமையான பாதிப்பு இருந்தால் தோல் மருத்துவரை அணுகலாம்.
பூஞ்சைக்காளான் பாதிப்பில் மூன்று வகைகள் உண்டு.Tinea Capititis எனப்படும் காளான் வகையான படை தொற்று சாதாரணமாக குழந்தைகளுக்கு வரக்கூடியது. கிராமப் பகுதிகளில் கோவிலில் மொட்டை போடும்போது மற்றவருக்கு உபயோகப்படுத்திய அதே கத்தி, பிளேடுகளை உபயோகப்படுத்துவதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இந்த தொற்று பரவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளிடையே ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவக்கூடும். தலையில் வட்ட, வட்டமாக ஆங்காங்கே படைபோல் இருக்கும்.
மற்றொரு வகையான Kerion என்னும் காளான் தொற்று சீழ் பிடித்த கட்டி போல இருக்கும். அந்த இடத்தில் முடி அப்படியே கொத்தாக கையோடு வந்துவிடும். கழுத்தில் நெறி கட்டிக்கொள்ளும். ஆங்காங்கே திட்டுத்திட்டாக சொட்டை ஏற்பட்டு பார்ப்பதற்கு அருவெறுப்பாக இருக்கும். இதற்கு தலைப்பகுதியில் உள்ள தோல்பகுதியை எடுத்து சோதனைக்குட்படுத்தி, எந்த காளானால் தொற்று ஏற்பட்டுள்ளது என்று கண்டறிந்து சிகிச்சை செய்வோம்.
ஒருவருடைய சீப்பு, டவல், தலையணை, ஹெல்மெட் போன்றவற்றை மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவாமல் பார்த்துக் கொள்ளலாம். வீட்டில் தோல்நோயால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகள் மூலமும் இந்த தொற்று பரவும் என்பதால், கவனமாக இருக்க வேண்டும்.
தலைமுடி கொத்து கொத்தாக உதிரும்போது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு Anti Fungal Shampoo மற்றும் Anti Fungal மாத்திரைகள் கொடுப்போம். மூன்று மாதம் வரை சிகிச்சை எடுத்துக் கொண்டால் பூரணமாக குணமடைய முடியும்.
Alopecia areata வகையில் புழுவெட்டு, கரப்பான் என்பார்கள். தலையில் அங்கங்கே வட்ட வட்டமாக இருக்கும். அந்த இடத்தில் உள்ள முடி கொட்டிவிடும். இது பூஞ்சையால் ஏற்படுவதல்ல. தைராய்டு பிரச்னை, மன அழுத்தம், சொத்தைப்பல், காது தொற்று மற்றும் ஆர்த்தரைடிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இது வரக்கூடும். வீட்டு சிகிச்சை, மாற்று மருத்துவ சிகிச்சைகள் செய்து பார்த்து முடியாமல் காலம் கடந்து எங்களிடம் சிகிச்சைக்கு வருவார்கள். காலம் கடத்தாமல், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம். குறைந்த பட்சம் 3 மாதங்களாவது சிகிச்சை எடுக்க வேண்டும்.
மருத்துவ வசதியில்லாத இடங்களில் அரசின் உதவியோடு இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பள்ளிகளிலும் இந்த நோயை கண்டறிவதற்கான சோதனைகளை செய்வது முக்கியம்.தலையில் தோல் நோய்கள் வராமலிருக்க, வீட்டில் உள்ள அனைவரும் சீப்பு, டவல், சோப்பு, ஹெல்மெட் போன்றவற்றை தனக்கென்று வைத்து பயன்படுத்துவது நல்லது. ஹெல்மெட், சீப்பு இரண்டையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சாதாரணமாக தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடித்தாலே ஸ்கால்ப் தொற்றுக்களிலிருந்து நம் தலைமுடியை பாதுகாத்துக் கொள்ள முடியும்”
என்கிறார்.
Average Rating