தமிழர் தேசிய உணர்வுடன் கிழக்கில் ஓரணிக்கான வாய்ப்பு?(கட்டுரை)
அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதுபோல், கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை, இட்டுக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வோம்.
எவ்வாறிருந்தாலும், வடக்கில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும், அங்கு தற்போதைய முதலமைச்சரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதா, அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதா, இல்லாவிட்டால் புதியவர் ஒருவரைக் கொண்டு வருவதா என்கிற போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால், கிழக்கின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், 2008ஆம் ஆண்டு, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை.
அந்தச் சாத்தியத்தின் காரணமாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் ‘பிள்ளையான்’ என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு, முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதன் மூலமாக அவர் மேற்கொண்ட அபிவிருத்திகள், அதனோடிணைந்த வேலைத்திட்டங்கள், அவருக்கென்று ஒரு நிரந்தர வாக்கு வங்கியை ஏற்படுத்திக் கொடுத்தது. அது இப்போதும் பயன்படுகிறது.
2012இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், ஆட்சியமைப்பது பிரச்சினையாக எழுகையில், ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவால் திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த நஜீப் அப்துல் மஜித், முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.
பின்னர், 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியானதன் பின்னர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து, முன்னுதாரணமான மாகாண அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
அதற்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நசீர் அஹமட் முதலமைச்சராக்கப்பட்டார். இரண்டு அமைச்சுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டன.
இந்த ஆட்சியமைப்பில், இரண்டு வருடங்களே மிஞ்சியிருந்த நிலையில், ஒருவருடத்துக்குத் தமிழர்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று குறிப்பிட்டளவு தமிழர்கள் நம்பியிருந்தனர்; அது நடைபெற்றிருக்கவில்லை. 2017 செப்டெம்பர் மாதத்துடன் மாகாண சபை கலைக்கப்பட்டது.
தற்போது, கிழக்கில் அரசியல் ரீதியாகக் காணப்படும் வெளியைச் சீர் செய்து, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில், அதி உச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில், சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின்கீழ் ஒன்றிணைந்து, ஓர் அணியில் போட்டியிடவேண்டும். இதைச் சாத்தியப்படுத்தும் வகையில் மக்களைத் தயார்படுத்தவேண்டும் என்ற கோசம் முன்வைக்கப்பட்ட வண்ணமிருக்கிறது.
1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ், தற்காலிகமாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டிருந்தன. ஆனால், வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு இடம்பெறவில்லை.
தற்காலிக இணைப்பு, ஒவ்வோர் ஆண்டும் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது. அத்துடன், இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு, எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த எதிர்ப்பு, 2006 ஜூலை 14இல் மக்கள் விடுதலை முன்னணியின் வழக்காக உருவெடுத்தது. கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாண சபை நிறுவப்பட வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கு விசாரணையை அடுத்து, 2006 ஒக்டோபர் 16இல் உயர்நீதி மன்றம், முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனாவால் அறிவிக்கப்பட்ட இணைப்பு, சட்ட விரோதமானது எனத் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, 2007 ஜனவரி முதலாம் திகதி, வட- கிழக்கு மாகாண சபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபைக்கு 2008 மே 10 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் அதிகாரப் பலம், குறைவடைந்திருப்பதாகவே கொள்ள வேண்டும்.
சமூக, பொருளாதார, அரசியல் இருப்பு என்பது, இன்றைய கால கட்டத்தில் கட்டாயமான நாளாந்தம் தேவையானதொன்றாகவே காணப்படுகிறது. இவ்விடயம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றமையானது அரசியல் இயலாமையையே காட்டி நிற்கும்.
இந்த இடத்தில் தான், இவ்வாறானதொரு நிலையைத் தடுத்து நிறுத்தும் அல்லது மாற்று வழியைத் தேடும் முயற்சிகள் கிழக்கில் தொடங்கப்பட்டு வருகின்றன. இது எவ்வகையில், வெற்றியைத் தரப்போகிறது என்பது, காலத்தின் பதிலுக்கானது.
கிழக்குத் தமிழ் மக்களின் மீதான அக்கறையும் அவர்களுடையஅரசியல் வல்லமையைத் தூக்கி நிறுத்துகின்ற நெஞ்சுரம், அதிகார பலத்தைத் தமிழர் தம் அரசியல் தலைமை, அடைந்து கொள்வதே இதற்கு மாற்றீடாகும். அதன் சாத்தியமானது, இவ்வருடத்தின் இறுதிவாக்கில் நடைபெறவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலில் நிரூபிக்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் தொகுதிகளில் நேரடித் தெரிவும், மாவட்ட மட்டத்திலான விகிதாசாரமும் 50:50 கலந்த கலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், மக்கள் மயப்பட்ட அரசியலோடு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார, கல்வி, பண்பாடு உட்பட ஏனைய துறைகளுக்கும் அவசியமேற்படின் நிலப் பாதுகாப்புக்கான சட்ட நடவடிக்கைகளுக்கும் இந்தத் தேர்தல், இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது.
இதற்குக் கிழக்கு மாகாணத் தமிழர்கள் அனைவரும், கட்சி அரசியலுக்கு அப்பால், ஓரணியின் கீழ் ஒன்றிணையும் வண்ணம், அடிமட்டம் வரை மக்களைத் தயார்படுத்தல் அவசியம் என்பது உணரப்பட்டிருக்கிறது.
இருந்தாலும், வடக்கு மாகாணத்துக்கான அரசியல் சமன்பாடு, கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குப் பொருந்தாது. எனவே, கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியான அரசியல் வியூகமும் அணுகுமுறையும் உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோசம், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் சில முக்கிய மட்டங்களில் உருவாகியிருக்கிறது.
எவ்வாறானாலும், கிழக்கு மாகாணத் தமிழ்ப் பிரதேசங்களில், சமூகநலன் சார்ந்து ஏற்கெனவே இயங்கி வருகின்ற பொது அமைப்புகளை உள்வாங்கியதாக, எதிர்கால வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, தேர்தல்களில் வினைதிறன்மிக்க திறமையான வேட்பாளர்கள் நிறுத்தப்படல் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும்.
அடுத்து, உணர்ச்சி மய அரசியலிலிருந்து விடுபட்டு, அறிவுபூர்வமான அரசியலை நோக்கி, மக்கள் அரசியல் மயப்படுத்தப்படல் அவசியம்.
அரசியலில் அமுக்கக் குழுக்கள் முக்கியத்துவம் பெறுகிற தன்மையில் மாற்றம் இன்றைய ஜனநாயகச் சூழலில் உருவாக்கப்படுவதும், ஒரு வலுவான, பலம் மிக்க தமிழ் அரசியல் கட்சிகளின் மீது, அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தக்கவகையில், பலம்மிக்க மக்கள் அமைப்பாக அது கட்டியெழுப்பப்படல் சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது.
இவ்வாறான படிநிலைகளில், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில், அதி உச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில், சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின்கீழ் ஒன்றிணைந்து, ஓரணியில் போட்டியிடுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாகும்.
இதைச் சாத்தியப்படுத்துத்துவதற்கு மக்களைத் தயார்ப்படுத்த முடியுமா? மக்களால், வேட்பாளர்கள் உருவாக்கப்படுகிற தன்மை தோன்றுமா அல்லது, “ஒருவரைத் தேர்வு செய்து விட்டோம்; இனி அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்” என்கிற சாதாரண மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படுமா? அல்லது இவ்வாறான கேள்விகளையே நமக்குள் கேட்டுக் கொண்டே, காலத்தைக் கடத்திச் சென்றுவிடுவோமா? தமிழர் தேசிய அரசியல் உணர்வுகளுடன் ஓரணியில் திரளும் தேடலுடன் காத்திருப்போம்.
இந்த இடத்தில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் ‘நெருக்கடிக்குள் உள்ளதா தமிழ்த் தேசியம்’ என்ற தலைப்பில் 2005ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘தமிழ்த் தேசியமானது, தமிழ் பேசும் சமூகத்தின் அகமுரண்பாடுகளைத் தீர்த்து, அதைச் சரியான அரசியல் பாதையில் அணிதிரட்டிடக்கூடிய, ஒரு கருத்தியலாக வளர்த்தெடுக்கப்படாமல், அதன் பாட்டிலேயே விடப்படுமானால், சந்தர்ப்பவாதிகளின் நுனி நாவில் புரட்டப்படும் ஒரு வெற்றுச் சொற்றொடராக அது இருக்குமாயின் – எதிர்காலத்தில் மீண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படப்போகும் இன அழிப்புப்போர் அச்சுறுத்தல் கூட, எமது சமூகத்தை ஒன்று திரட்டுவதற்கு போதாததாகிவிடும்’ இந்த ஆழமான கருத்தை மீளவும் நினைவு படுத்திக் கொள்வோம்.
Average Rating