உங்கள் குழந்தைகளிடம் உரையாடுங்கள் !!(மகளிர் பக்கம்)
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதை அன்றாட செய்திகளில் பார்த்து வருகிறோம். சமீபத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகப்படியான குழந்தைகள் காணாமல் போவதாக பல்வேறு வழக்குகள் பதிவானது அதிர்ச்சியளித்தது. குறிப்பாக பெண் குழந்தைகள். இந்த சம்பவங்களை தொடர்ந்து குழந்தை கடத்த வந்ததாக வடமாநிலத்தை சேர்ந்த மூதாட்டியை பொதுமக்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் என்ன? குழந்தைகளுக்கான பாதுகாப்பு தமிழ் நாட்டில் இல்லையா? பொதுமக்களிடம் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது குறித்து பல்வேறு விஷயங்களை முன்வைக்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன். “அடிப்படையில் குழந்தையின் பாதுகாப்பு என்பது தனிப்பட்ட முறையில் குடும்பரீதியாக மட்டும் முடியாது. குடும்பம், சமூகம், அரசு எல்லோரும் சேர்ந்துதான் பாதுகாக்க முடியும்.எல்லோருக்கும் அந்தப் பொறுப்பு உண்டு.
குடும்ப அளவில் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. அம்மா மட்டும்தான் குழந்தையை பார்க்க வேண்டும் என்று நினைக்ககூடாது. “நல்லவராவதும் தீயவராவதும் அன்னையின் வளர்ப்பினிலே” என்பது எல்லாம் பொய்யான கருத்து. பெற்றோரின் வளர்ப்பினிலே என்பதுதான் உண்மை. ஆண்,பெண் இருபாலருக்கும் பொறுப்பிருக்கும்போது நாம் குழந்தைகளிடம் தரமான நேரத்தை செலவிடவேண்டும். அவர்களது கருத்துகளை கேட்க வேண்டும்.
குழந்தைகளை நாம் பொருளாக பார்க்காமல் சக மனிதராக பார்க்கவேண்டும்.
பள்ளிக்கூடம் விட்டு குழந்தைகள் வந்தபிறகு நீ வீட்டுப் பாடம் முடித்தாயா என்று கட்டளையிடுகிறவர்களாக இல்லாமல் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றவர்களாக நாம் இருக்க வேண்டும். நவீன உலகத்தில் குழந்தைகளும் நல்ல ஆளுமை பெற்று வளர்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் நம் மூலம் வந்தவர்களே தவிர நமக்கானவர்கள் இல்லை. நாம் அவர்களிடம் நண்பர்களாக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும்.
ஒரு வேளை நம் பிரச்சனையை சொன்னால் அப்பா அடித்துவிடுவாரோ என்கிற பயத்தை குழந்தைகளிடம் இந்த சமூகம் உருவாக்கி இருக்கிறது. அப்பா அம்மாவிடம் பயம் இருக்கிறது. அப்படியான சூழலில் அந்தக் குழந்தை தன்னுடைய கருத்துகளை யாரிடம் பகிர்ந்துகொள்ளும் பெற்றோர்கள் குழந்தைகளை நம்பாமல் சமூகத்தை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 2007ஆம் ஆண்டுதான் கடைசியாக குழந்தைகளுக்கான பாலியல் தீங்குகளின் மத்திய அரசின் ஆய்வறிக்கை வந்தது.
அதில் அடிப்படையில் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான் பாலியல் வன்முறை செய்கிறார்கள் என்கிறது. தெரியாத நபர் ஏதாவது கொடுத்தால் வேண்டாம் மாமா, வேண்டாம் அண்ணா, என்று சொல்லுவதை கலாச்சாரமாக குழந்தைகளுக்கு கற்றுத்தருவதற்கு யார் இருக்கிறார்கள்.குழந்தை வளர்ப்பு என்பது அற்புதமான கலை. நாம் அதை விட்டுவிட்டோம். ஒரு குழந்தையிடம் நீ இங்கெல்லாம் போகக்கூடாது என்பது மட்டுமல்ல, ஏன் போகக்கூடாது என்றும் சொல்ல வேண்டும். நாம் அதை சொல்வதே இல்லை.
இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாடு கடத்தலுக்கான மாநிலமாகவும், வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படும் குழந்தைகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுவரும் மாநிலமாகவும் இருக்கிறது. மத்திய,மாநில அரசின் ஆய்வறிக்கையிலே இது சொல்லப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் தத்தெடுப்பு முறையில் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தைகளை கடத்திச்செல்வது, சாலையில் படுத்திருக்கும் குழந்தைகளை கடத்திச்சென்று விற்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.
குழந்தையை விற்பனைப் பொருளாக பார்க்கின்ற மனநிலை இங்கு ஏற்பட்டிருக்கிறது. தத்தெடுப்பதற்கென்று முறையான சட்டம் இருக்கிறது. அதன் மூலம் தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தவேண்டும். சிலர் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு குழந்தைகளை தத்து கொடுக்கிறார்கள். இது தவறான முறை. தத்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படவேண்டும். தத்தெடுப்பதற்கு முக்கிய காரணம் குழந்தையின்மை. கடந்த முப்பது ஆண்டுகளில் நாம் பயன்படுத்திய ரசாயன உரங்கள், மருந்துகள் அடிப்படையில் குழந்தையின்மை அதிகரித்திருக்கிறது என்று ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.
குழந்தை இல்லாமைக்கு மருத்துவரிடம் போனால் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. அதற்கான சிகிச்சை அல்லது வாடகைத் தாய் போன்ற விஷயங்கள் எல்லாம் வசதிபடைத்தவர்களுக்கே வாய்க்கிறது.ஆனால் நடுத்தரமக்கள் குழந்தையின்மை பிரச்சனை காரணமாக தவறான முறையில் குழந்தையை தத்தெடுக்கிறார்கள்.ஏன் கருத்தரிப்பு குறைந்து விட்டது? அதற்கான காரணம் என்ன? ஏன் கருத்தரிப்பு சிகிச்சை மையம் ஊருக்கு ஊர் இருக்கிறது? இவற்றை கண்டறிந்து அதை சரிசெய்ய வேண்டும்.
மிகக்கொடுமையான விஷயம் கருத்தரிப்பு சிகிச்சைக்கு நாங்களே கடன் வாங்கி கொடுக்கிறோம் என்று விளம்பரப் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில். நான் என்ன மருத்துவம் பார்க்கிறேன் என்று யாருக்கும் தெரியக் கூடாது என்று சட்டம் சொல்கிறது.இங்கு அந்த மருத்துவத்திற்கு கடன் வாங்கி கொடுக்கிறோம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது.அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு சிகிச்சை முறைகளை நவீனப்படுத்த வேண்டும். அடுத்து நாம் பார்க்கவேண்டியது வறுமை. வறுமையின் காரணமாக குழந்தையை தத்து கொடுக்கிறார்கள்.
வறுமையை ஒழிப்பதற்கு அரசு திட்டங்களை வகுக்க வேண்டும். கடத்தலுக்கு ஆழமான விஷயங்கள் இருக்கிறது. எளிமையாக வெறும் கடத்தல் என்று கடந்து போக முடியாது. பெண் குழந்தை என்றால் அதற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு வரதட்சணை இல்லை. அப்படியானால் வரதட்சணை சட்டம் ஒழுங்காக இயங்கவில்லை. ஆண் குழந்தை என்றாலும் பெண் குழந்தை என்றாலும் சமம் என்கிற மனப்பான்மையை உருவாக்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். பாலின சமத்துவம் குறித்த புரிதலை ஏற்படுத்த இந்த அரசு என்ன செய்திருக்கிறது?
பாலின நீதி பற்றி நாம் பாடம் படிக்கின்றோமா? பாலின சமத்துவம் என்பது பண்பாடாக மாற வேண்டும். அதற்கான வழிமுறை கல்வி. அதை இந்த அரசு உருவாக்க வேண்டும். கடத்தப்படும் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். பாலியல் குறித்து புரிந்துகொள்வதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல் என்று பெண் குழந்தைகளுக்கு மட்டும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கு ஏன் கற்றுக்கொடுப்பதில்லை? பெண்களை சகோதரிகளாக பார்க்கும் வகுப்பறைகள் தமிழ்நாட்டில் எங்கிருக்கிறது?
எளிமையாக கலந்துரையாடுவதற்காக இல்லை. இந்த மாதிரியான சிக்கல்கள் வரும்போது எதிர்கொள்வதற்கான வாழ்க்கைத் திறன் கல்வி இல்லை. இதை எதையும் செய்யாமல் இருப்பதன் விளைவுதான் சமூக சீர்கேடாக இருக்கிறது. குழந்தைகள் மீதான வன்முறைகள் நடப்பதற்கான காரணங்களாக உள்ளன.
காணாமல் போகும் குழந்தைகளும் கடத்தப்படுகின்ற குழந்தைகளாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று 11.05.2018 அன்று டி.ஜி.பி ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது வரவேற்கத்தக்க ஒன்று. அப்போதுதான் காணாமல் போகும் குழந்தைகள் வழக்கு விசாரணை தீவிரம் அடையும்.
கிராமங்கள்தோறும் குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் குழந்தை பாதுகாப்பு கொள்கைகள் இருக்கவேண்டும். வளர்ந்த நாடுகளில் இந்தத் திட்டங்கள் உள்ளன. அதனால்தான் இது போன்ற குற்றங்கள் அங்கு குறைவு. இங்கு ஒரு பிரச்சனை நடந்தால்தான் அதற்கான திட்டங்களை செய்கிறோமே தவிர முன்னேற்பாடுகளை இவர்கள் செய்வதில்லை. தண்டனை கொடுத்தால் குற்றங்கள் குறைந்து விடும் என்பது இல்லை. நிர்பயா வழக்கிற்கு பிறகு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அதன் பிறகுதான் பாலியல் குற்றங்கள் அதிகம் நடந்திருக்கின்றன.
பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டம் 2014ல் 1587 வழக்குகள் இருந்தது என்கிறார்கள். அப்படியானால் நாளொன்றுக்கு 4 வழக்குகள் வருகின்றது.இது மிகவும் ஆபத்தான விஷயம். வழக்கு பதிவு செய்யப்படாத சம்பவங்கள் எத்தனை இருக்கும் என்று யோசித்து பார்க்க வேண்டும். புகார் கொடுக்கப்பட்ட வழக்குகளில் 150 வழக்குகளில் கூட தண்டனை கிடைக்கவில்லை. கடத்தல் வழக்குகளில் தத்தெடுத்து கடத்துவது, குழந்தை தொழிலாளர்களை கடத்துவது, கொத்தடிமை குழந்தைகளை கடத்துவது, பாலியல் தொழிலுக்கு கடத்துவது, குழந்தை திருமணத்திற்காக கடத்தப்படுவது இவற்றையெல்லாம் தடுப்பதற்கு இந்த அரசு என்ன செய்திருக்கிறது?
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு வரை உதவி செய்வதாக சொல்கிறார்கள். பெண்களுக்கு உயர்கல்வி வரை உதவிசெய்ய வேண்டும். ஆனால் அரசே தாலிக்குத் தங்கம் என்று பெண்ணுக்கு திருமணம்தான் எல்லை என்று தீர்மானித்து விடுகிறது. இதைவிட கொடுமை வேறொன்றும் இல்லை. பெண்ணின் திருமண வயதை 21 ஆக மாற்ற வேண்டும். மாவட்டம் தோறும் குழந்தை திருமண தடுப்பு அலுவலர் என்று ஒருவர் இருக்கவேண்டும். ஆனால் மாவட்ட சமூக நல அலுவலர்தான் அந்த வேலையையும் சேர்த்து பார்க்கிறார்.அவருக்கு நலத்திட்ட உதவிகளை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். அடிப்படையில் இந்தப் பிரச்சனைகளை நாம் சரி செய்யாமல் குழந்தைகளுக்கான பாதுகாப்பை நாம் உறுதி செய்ய முடியாது” என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன்.
Average Rating