லைஃப்ல ஏமாந்துட்டீங்களா…இந்த கட்டுரை உங்களுக்குத்தான்!(மருத்துவம்)
மாற்றங்கள் ஏமாற்றங்களிலிருந்துதான் பிறக்கின்றன. தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், எதார்த்த வாழ்வில் நம்முடைய எதிர்பார்ப்பு களுக்கு மாறாக ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள நம்மால் முடிவதில்லை. அதைக் கடந்து வர முடியாமலும் அவதிப்படுகிறோம்.
அத்தகைய சிக்கலான சூழலில் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான உளவியல் அறிஞர்களின் ஆலோசனைகள் இவை. பின்பற்றுங்கள்… ஏமாற்றங்களைக் கடந்து சென்று வெற்றிப் படியேறுங்கள்!
மனநிலையை சமன்படுத்துங்கள்
முதலில் கொந்தளிப்பான மனநிலையில் இருந்து மாறி சமநிலையாக மனதைக் கொண்டு வாருங்கள். பிரச்னையின் தீவிரம், கால அளவை கணக்கில் கொண்டு அதற்கான வழிமுறைகளை யோசியுங்கள். குறிப்பிட்ட கால அளவில் தானாகவே சரியாகிவிடக்கூடிய பிரச்னை என்றால் அதன் வழியில் விட்டுவிடலாம். பிறரிடம் சொல்வதால் தீரக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் நெருங்கியவரிடம் பகிர்ந்துகொள்ளலாம். வெளியில் காட்ட முடியாத உணர்வுகள் என்றால், ஒரு வெள்ளைத் தாளில் எழுதி வைக்கலாம்.
இதன்மூலம் கோபம், இயலாமை மற்றும் விரக்தியை குறைத்துக் கொள்ள முடியும். அதேநேரம் சமூக வலைதளங்களில் உங்களின் ஏமாற்றங்களைக் கொட்டுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஏமாற்றம் நிகழ்ந்த கணத்தில் உங்களது வாழ்வில் கிடைத்த நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றுக்கு நன்றி சொல்லுங்கள்.
எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளவும் இதன்மூலம் உளவியல்ரீதியாக பயிற்சி பெற்றுக் கொள்வது எதிர்கால ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவும். பாதகம், சாதகம் இரண்டு சூழலுக்கும் தயாராக இருக்கும்போது நல்லது நடந்தால் கூடுதல் மகிழ்ச்சிதானே!
நோ ரிப்பீட்…
வாழ்வில் எதிர்மறையாக நடந்தவற்றையே மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்காத ஒரு படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பீர்களா என்ன? எனவே, எத்தனை விரைவாக அதிலிருந்து மீள முடியுமோ முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு பிடிக்காத அல்லது சௌகரியக் குறைவாக நினைக்கும் இடத்திலிருந்து உடனடியாக விலகுங்கள்.
சோகமான மனோநிலையிலிருந்து மனதை மாற்ற நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் நம் கவனத்தை திசை திருப்பலாம். நெருங்கிய நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ நேரத்தை செலவிடுவதும் ஏமாற்றங்களை மறக்க உதவும்.
தவறு என்பதும் நிகழக்கூடிய ஒன்றுதான் வாழ்வில் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை. எல்லா நேரங்களிலும் ஒருவர் புத்திசாலித்தனமாக செயல்படுவது சாத்தியமும் இல்லை. அதனால், தவறு என்பது நாம் செய்த தவறை நினைத்து வெட்கப்பட்டும், வருத்தப்பட்டும் பயனில்லை. அதற்கு மாறாக, இந்த சூழலில் இருந்து மீள்வது எப்படி? அடுத்த முறை இதைவிட சிறப்பாக எப்படி செய்ய முடியும்? என சிந்தித்துப் பார்ப்பதுதான் ஆக்கப்பூர்வமான வழி. அப்போதுதான் மீண்டும் அந்த தவறு நடக்காது பார்த்துக் கொள்ள முடியும்.
நடைமுறைக்கு ஒத்துவராத எதிர்பார்ப்புகளை தவிர்க்கவும், அடுத்தவர் மீது பழி சுமத்துவதால் பலனில்லை என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆமாம்… தவறு என்பதும் நிகழக் கூடிய ஒன்றுதான். ஏற்றுக் கொள்வதே சரியானதுஎரிச்சலூட்டும் நபர்களையோ, சூழலையோ நம்மால் மாற்ற முடியாது எனும்போது, அதற்கேற்ப நாம் மாறிக்கொள்வதே நம் மனதுக்கும், உடலுக்கும் நல்லது. ஏமாற்றம் இல்லாமல் யாராலும் வாழ்க்கையை கடத்திவிட முடியாது.
ஒவ்வொருவருமே எதிர்கொள்ளும் விஷயங்கள் இவை என சூழலை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்?
ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டால் அதிலிருந்து வெளிவருவது மிக எளிது. நேர்மறையான பார்வையை வளர்த்துக் கொண்டு, எதிர்கால நடவடிக் கைகளை திட்டமிடத் துவங்கலாம். இந்த திட்டமிடல் உங்கள் நேரத்தையும், நிலைமையையும் மதிப்பிடுவதற்கான வாய்ப்பைத் தருகிறது. அதன்மூலம் ஒரு முன்னோக்கு பார்வையைப் பெறுவது முக்கியம்.
கத்துக்கங்க பாஸ்…
புதிதாக ஒரு கலை, மொழி ஏதேனும் ஒன்றை கற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் மனநிலையை திசை திருப்பலாம். தன்னம்பிகை தரும் கட்டுரைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றில் கவனத்தை செலுத்தலாம். அதன்மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்க முயற்சியுங்கள். பல வாய்ப்புகள் நம் முன்னே கொட்டிக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு, இடையில் குறுக்கிடும் தடைகளைத்தாண்டிய உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்.
Average Rating